ஆடும் களம் 37: தேஜஸ்வினி 2.0

By டி. கார்த்திக்

துப்பாக்கிச் சுடுதலில் இரண்டாவது இன்னிங்ஸ் எல்லோருக்கும் அமைந்து விடாது. ஆனால், இந்திய துப்பாக்கிச் சுடும் வீராங்கனை ஒருவருக்கு அந்த அரிய வாய்ப்பு வாய்த்திருக்கிறது. 2010-ல் உலகத் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைத் தட்டிசென்ற அவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த ஆண்டு காமன்வெல்த் துப்பாக்கிச் சுடும் போட்டியில் புதிய மைல் கல்லை எட்டினார். அவர், மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த தேஜஸ்வினி சாவந்த்.

மகாராஷ்டிரத்தில் உள்ள கோலாப்பூரில் தேஜஸ்வினி பிறந்தார். அப்பா ரவீந்திர சாவந்த் கடற்படை அதிகாரி என்பதால், அவர் சாகச நிகழ்ச்சிகளுக்கும் ரைபிள் கிளப்புகளுக்கும் செல்லும்போது தேஜஸ்வினியும் உடன் சென்றார்.

அப்படிச் சென்றபோதுதான் துப்பாக்கிச் சுடுதல் மீது தேஜஸ்வினிக்குக் காதல் பிறந்தது. கோலாப்பூரில் துப்பாக்கிச் சுடும் பயிற்சியாளர் ஜெய்சிங் குசலே மூலம் பயிற்சி பெறத் தொடங்கினார் தேஜஸ்வினி. 13 வயதில் துப்பாக்கியைப் பிடித்த அந்தக் கைகள், 25 ஆண்டுகளாக இலக்கை அடைய முயன்று கொண்டிருக்கின்றன.

தந்தையின் தாராளம்

துப்பாக்கிச் சுடுதல், பொருட்செலவு அதிகம்கொண்டது. தேஜஸ்வினி நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இருந்தாலும் தன் மகளுக்குப் பிடித்த விளையாட்டு என்பதால் செலவைப் பற்றியெல்லாம் தேஜஸ்வினியின் தந்தை கவலைப்படவில்லை.

மகளின் ஆசைக்குத் தடைபோடாமல், வங்கியிலும் நண்பர்களிடமும் கடன் பெற்று, துப்பாக்கிச் சுடுதலுக்குத் தேவையான உபகரணங்களை வாங்கிக் கொடுத்தார். கடன் வாங்கி விளையாட்டுப் பொருட்களை வாங்கிக்கொடுப்பதை அவருடைய உறவினர்கள் விமர்சித்தார்கள். ஆனால், அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல், மகளின் தேவையைப் பூர்த்தி செய்தார். தேஜஸ்வினியின் துப்பாக்கிச் சுடுதலுக்குப் பக்கபலமாக இருந்தார்.

சர்வதேசப் பயணம்

துப்பாக்கிச் சுடுதலில் படிப்படியாக முன்னேறிவந்த தேஜஸ்வினி, 2000-க்குப் பிறகு மாநில அளவிலும் தேசிய அளவிலும் கால்பதித்து, கவனம் ஈர்க்கத் தொடங்கினார். அடுத்த சில ஆண்டுகளிலேயே சர்வதேசப் போட்டியில் காலடி வைக்கும் வாய்ப்பு தேஜஸ்வினிக்குக் கிடைத்தது. 2004-ல் இஸ்லாமாபாத்தில் நடந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்று தன் சர்வதேசப் பயணத்தை வெற்றிகரமாகத் தொடங்கினார்.

2006-ல் நடந்த மெல்போர்ன் காமன்வெல்த் போட்டி, அவரது திறமையை உலகறியச் செய்தது. அதில் மகளிர் தனி நபர் 10 மீ. ஏர் பிஸ்டல் பிரிவு, 10 மீ. ஏர் பிஸ்டல் மகளிர் இரட்டையர் பிரிவு என இரண்டு தங்கப் பதக்கங்களை தேஜஸ்வினி சுட்டார். தொடர்ந்து, துப்பாக்கிச் சுடுதலில் பிரகாசிக்கத் தொடங்கினார்.

தந்தைக்கு அர்ப்பணம்

தேஜஸ்வினியின் முன்னேற்றத்தைக் கண்டு அவருடைய தந்தை பெரும் மகிழ்ச்சியில் இருந்தார். ஆனால், அந்த மகிழ்ச்சி அடுத்த சில ஆண்டுகளிலேயே முடிவுக்கு வந்தது. 2010-ல் எதிர்பாராதவிதமாக அவரது தந்தை காலமானார். ஈடுசெய்ய முடியாத இந்த இழப்பால், தேஜஸ்வினி மன உளைச்சலுக்கு ஆளானார்.

எந்த வீரரோ வீராங்கனையோ தன் லட்சியத்தை வெல்லும்போது, தன்னுடைய கனவு நனவாகத் தோள் கொடுத்தவர்கள் இல்லாமல் போவது பெரும் துயரம். தேஜஸ்வினியும் அந்த நிலையில்தான் அப்போது இருந்தார். அடுத்த சில மாதங்களில் உலகத் துப்பாக்கிச் சுடும் சாம்பியன்ஷிப் போட்டி இருந்த நிலையில், அவர் தேறிவருவாரா என்ற சந்தேகம் எல்லோருக்குமே இருந்தது. ஆனால், போட்டியில் பங்கேற்பது தன் அப்பாவுக்குச் செய்யும் மரியாதை என்பதில் உறுதியாக இருந்த தேஜஸ்வினி, உலக சாம்பியன்ஷிப் போட்டிக்குத் தயாரானார்.

ஜெர்மனியில் நடைபெற்ற உலகத் துப்பாக்கிச் சுடும் போட்டியில் இந்திய வீராங்கனைகள் இதுவரை யாரும் செய்யாத சாதனையை தேஜஸ்வினி படைத்தார். அந்தத் தொடரில் தங்கப் பதக்கம் வென்று, அதைத் தன் தந்தைக்கு அர்ப்பணித்தார். துயரமான தருணத்திலிருந்து குறுகிய காலத்தில் மீண்டு, தங்கப் பதக்கம் வென்றது தேஜஸ்வினியின் மனஉறுதியைக் காட்டியது. இந்தத் தங்கப் பதக்கம் மூலம் உலகத் துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார்.

அதே ஆண்டில் டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் இரண்டு வெள்ளிப் பதக்கங் களையும் ஒரு வெண்கலப் பதக்கத்தையும் வென்று அசத்தினார். 2010-ல் அவர் செய்த சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் 2011-ல் மத்திய அரசு அவருக்கு அர்ஜூனா விருது வழங்கிக் கவுரவித்தது.

மறு வருகை

2010-ல் கிடைத்த தொடர் வெற்றிகளுக்குப் பிறகு ஒலிம்பிக், காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் எனத் தொடர்ந்து பல போட்டிகளில் தேஜஸ்வினி பங்கேற்ற போதும் பெரிதாக வெற்றிபெறவில்லை. 2016-ல் தேஜஸ்வினி திருமணம் செய்துகொண்ட பிறகு, துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளிலிருந்து விலகி விடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

திருமணத்துக்குப் பிறகு மீண்டும் துப்பாக்கிச் சுடுதலில் தீவிரமாகப் பயிற்சி எடுக்கத் தொடங்கினார். கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்ற காமன் வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று, எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றியோடு ரீஎன்ட்ரி கொடுத்திருக்கிறார் தேஜஸ்வினி.

துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் நீண்ட நாள் கழித்து மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியிருக்கிறார். எல்லோருக்கும் அமையாத இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள மீண்டும் தீவிரமான பயிற்சியில் அவர் களமிறங்கியுள்ளார். காமன்வெல்த் போட்டிகளில் மட்டும் ஏழு பதக்கங்களை வென்று அசத்தியுள்ள தேஜஸ்வினி, அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் நாளுக்காகக் காத்திருக்கிறார்.

(வருவார்கள் வெல்வார்கள்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: karthikeyan.di@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்