இன்றைக்கு இந்திய அறிவியல் துறையில் பெண்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. ஆனால், 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பள்ளிகளுக்குச் சென்ற பெண்கள் அறிவியல் பாடம் என்ற ஒன்று இருப்பதே தெரியாமல்தான் கல்வி பயின்றுள்ளனர். ஆங்கிலம், கணிதம், வரலாறு, புவியியல் போன்ற பாடங்கள்தாம் கற்பிக்கப்பட்டன. பள்ளிவரை அறிவியல் பாடங்கள் குறித்துப் போதுமான அளவு அறியாத பல பெண்கள், கல்லூரியில் அறிவியல் பயின்று பின்னாளில் நாட்டின் சிறந்த அறிவியல் ஆய்வாளர்களாக விளங்கினார்கள்.
பெண்களின் அறிவியல் கனவை அந்நாளில் சாத்தியப்படுத்த உதவியாக இருந்தது பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம். இங்கு தங்களுடைய அறிவியல் கனவை நனவாக்கிக் கொண்டவர்களில் ஒருவர் வயலட் பஜாஜ். நுண்ணுயிர்த் தொழில்நுட்பவியல் துறையில் முதுகலை பயின்ற வயலட்டுக்குத் தற்போது 102 வயதாகிறது.
பசுமை நிறைந்த நினைவுகள்
தெற்கு டெல்லியில் மகளுடன் வசித்துவரும் அவர் இந்த வயதிலும் படிப்பு, வாசிப்பு எனப் பயனுள்ளவகையில் பொழுதைக் கழிக்கிறார். 100 வயது நிறைவடைந்த நிலையிலும் கல்லூரி நாட்களின் பசுமையான நினைவுகளை மறக்கவில்லை. “எனக்கு மருத்துவம் படிக்கத்தான் ஆசை. ஆனால், ஜான்சியில் அப்போது மருத்துவக் கல்லூரிகள் இல்லை.
இதனால், லக்னோவில் உள்ள இசபெல்லா கல்லூரியில் பிஎஸ்சி படித்தேன். அங்குதான் எனக்கு இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்ற பாடங்கள் அறிமுகமாயின. அதற்கு முன்புவரை ஆங்கிலம், வரலாறு, கணிதம் போன்ற பாடங்களே பள்ளியில் கற்றுத்தரப்பட்டன. அறிவியல் பாடங்களைப் படிப்பது ஆரம்பத்தில் கடினமாக இருந்தது.
தெரியாத ஒன்றைக் கற்றுக்கொள்வதில் உள்ள ஆர்வம், அறிவியல் பாடங்கள் மீதான ஈடுபாட்டை அதிகரித்தது. அதன் பின்னர் லக்னோ பல்கலைக்கழகத்தில் முதுநிலை வேதியியல் படித்தேன். அப்போது பெற்றோருக்கு பெங்களூருவுக்கு இடமாறுதல் கிடைத்தது. மேற்படிப்பைத் தொடரலாமா கைவிடலாமா எனக் குழப்பமாக இருந்தது.
இந்திய அறிவியல் நிறுவனத்தில் மேற்படிப்பைத் தொடரும்படி என் கல்லூரிப் பேராசிரியர் வலியுறுத்தினார். 1942-ல் அங்கு சேர்ந்து நுண்ணுயிர் தொழில்நுட்பவியல் படித்தேன்” என்கிறார் வயலட்.
அன்னா மணியின் தோழி
வயலட் பஜாஜ் படித்த காலத்தில் நாட்டின் முக்கியமான பெண் விஞ்ஞானிகளான இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் முதல் பெண் துணைத் தலைமை இயக்குநர் அன்னா மணி, கர்நாடக மாநிலத்தின் முதல் பெண் பொறியாலாளர், நுண்ணலை ஆராய்ச்சியாளர் ராஜேஸ்வரி சாட்டர்ஜி, அறிவியல் பாடத்தில் முனைவர் பட்டம்பெற்ற முதல் பெண் கமலா சோஹோனி ஆகியோருடன் அவர் படித்துள்ளார்.
“அன்னா மணி ஆச்சாரம் நிறைந்த மலையாளக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரிடம் யாரும் அவ்வளவு எளிதில் நட்புகொள்ள முடியாது. படிப்பில் கவனமாக இருப்பார். விஞ்ஞானி சி.வி. ராமன் தலைமையின் கீழ்தன் ஆய்வுகளை மேற்கொண்டார். கல்லூரி நாட்களிலும் அதன் பிறகும் நாங்கள் இருவரும் நெருங்கிய தோழிகளாக இருந்தோம். இன்றைக்கு விடுதியில் தங்கும் பெண்களுக்குப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகக் கேள்விப்படுகிறேன்.
ஆனால், உண்மையில் அந்தக் காலத்தில் எங்கள் கல்லூரியில் ஆண்களும் பெண்களும் நல்ல நண்பர்களாக இருந்தோம். கல்லூரியில் பாட்டுப் போட்டி நடத்துவது, சுற்றுலா செல்வது எனப் பொழுதுகளைக் கழித்தோம். அதேநேரம் சுதந்திரப் போராட்டத்துக்கான எழுச்சியும் மாணவர்களிடம் தீயைப்போல் பரவியிருந்தது. சுதந்திரம், படிப்பு என இரண்டு தளங்களிலும் அன்றைய மாணவர்கள் கவனம் செலுத்தினார்கள்” என்கிறார் அவர்.
முதல் தலைமுறை மாணவிகள்
வேதியியல், உயிரியல் பாடங்களைப் படித்திருந்த காரணத்தால் அப்போது அறிமுகமாகியிருந்த நுண்ணுயிர்த் தொழில்நுட்பவியல் பாடத்தை வயலட் பஜாஜ் ஆர்வமாகப் படித்துள்ளார். பெரும்பாலான நேரத்தைப் பரிசோதனைக் கூடத்தில் கழித்துள்ளார். வயலட் பஜாஜ் படித்த காலத்தில் ஹோமி பாபா, விக்ரம் சாராபாய் போன்ற விஞ்ஞானிகள் இந்திய அறிவியலின் நிறுவனத்துக்கு வருகைதந்து அறிவியலின் முக்கியத்துவம் குறித்து சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளனர்.
நான்கு ஆண்டுகள் இந்திய அறிவியல் நிறுவனத்தில் படித்த வயலட், முனைவர் பட்ட ஆய்வை புனேயில் உள்ள தேசிய வேதியியல் ஆய்வகத்தில் மேற்கொண்டார். பிறகு சிஎஸ்ஐஆர் நிறுவனத்தில் உயிர் வேதியியல் துறையில் தரநிர்ணய அதிகாரியாகப் பணியாற்றினார். “அந்தக் காலத்தில் பெண்கள் வேதியியல் துறையில் பணிபுரிவது சவாலாக இருந்தது.
அறிவியல் துறையில் பெண்கள் படிக்க வந்தாலும் அங்கு ஆண்களுக்கே அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டது. இதனால் பல பெண்களால் அறிவியல் துறையில் முனைவர் பட்டம் பெறமுடியவில்லை. அதேநேரம் அறிவியல் துறையில் எங்களைப் போன்ற முதல் தலைமுறைப் பெண்களின் வருகை மற்றவர்களுக்கு ஊக்கம் அளிப்பதாக இருந்தது. அதனுடைய வெளிப்பாடாகத்தான் இன்றைக்குப் பல பெண்கள் அறிவியல் துறையில் கால்பதித்துள்ளனர்” என்று சொல்கிறார் வயலட் பஜாஜ்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago