கால் நூற்றாண்டுக்கு முன்புவரை லட்சியவாதம் தமிழ் எழுத்துகளின் ஆதாரமாக இருந்தது. இந்திய சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்திலும் சுதந்திரம் அடைந்த தொடக்கக் காலத்திலும் லட்சியவாதம் இன்னும் திடமாக எழுத்துகளில் வெளிப்பட்டது. ஆனால், ஆண்டுகள் செல்லச் செல்ல முந்தைய காலகட்டம் முன்னிறுத்திய லட்சியவாதக் கருத்துகள் எல்லாம் கேள்விக்குள்ளாகின.
இன்னும் சொன்னால் அவற்றையெல்லாம் பின்னால் உருவான எழுத்துகள் கேலிசெய்தன. ஆனால், அன்றைய காலகட்டத்தின் எழுத்துகளுக்கு இந்திய சுதந்திரம், சுதந்திரத்துக்குப் பிறகான வர்க்கப் போராட்டம் போன்ற திடமான லட்சியம் இருந்தது. இவையே அந்தக் காலகட்ட எழுத்துகளுக்கு ஆதாரமாக இருந்தன. அம்மாதிரியான லட்சியவாத எழுத்துகளுள் ஒன்று, எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணனுடையது.
ராஜம் கிருஷ்ணன் காலத்தில் எழுதப்பட்ட வாசிப்பு சுவாரசியம் சார்ந்த எழுத்துகளில் இருந்து வேறுபட்டவை அவரது எழுத்துகள். சுவாரசியத்துக்கு அப்பாற்பட்டு சமூகக் கருத்துகளைத் தனது கதைகளின் மூலம் உருவாக்க நினைத்தார் அவர். மேலும் கதைகள் முழுக்க முழுக்க கற்பனையால் எழுதப்பட்ட காலத்தில் இவர், நிஜ மனிதர்களின் கதையை எழுதினார். இதற்காகத் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் கள ஆய்வு செய்துள்ளார்.
புரட்சியின் நாயகன்
‘அலைவாய்க் கரையில்’ நாவல் ஒரு மீனவக் கிராமத்தின் கதையைச் சொல்கிறது. இந்த நாவல் களத்தை உருவாக்க ராஜம் கிருஷ்ணன் தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டக் கடற்கரைப் பகுதிகளில் கள ஆய்வு செய்துள்ளார். மரியான் என்ற மீனவ இளைஞனைச் சுற்றிக் கட்டப்பட்ட இந்தக் கதையில் எண்ணற்ற கதை மாந்தர்களும் சமூகச் சூழலும் விவரிக்கப்பட்டுள்ளன. கடற்கரைப் பகுதியில் ஆதிக்கம் செலுத்திவரும் கிறிஸ்தவ மதம் தொடர்பான சித்தரிப்புகளும் உள்ளன.
அதே நேரம் திருச்செந்தூர் முருகன் மீது அவர்கள் கொண்டுள்ள நெருக்கத்தையும் நாவல் விவரிக்கிறது. இந்தக் கதையில் கணவனை இழந்த ஏலி என்ற குடும்பத்துப் பெண், எப்படிச் சமூகச் சூழலால் பாலியல் தொழிலாளியாக ஆகிறாள் என்பதையும் ராஜம் கிருஷ்ணன் சொல்கிறார். பிறகு அவளை மரியான் மணமுடிக்கிறான். அதிகார வர்க்கத்தால் ஏலி மீண்டும் வாழ்வு இழக்கிறாள். மரியான் ஒரு புரட்சி நாயகனாக இந்தக் கதையில் வருகிறான். ஆனால், அந்தப் புரட்சி இறுதியில் என்ன ஆனது, என்பதை மறைமுகமாகச் சித்தரிப்பதுடன் நாவல் முடிகிறது.
வர்க்கப் பாகுபாட்டின் கதை
‘சேற்றில் மனிதர்கள்’ நாவல் கீழ்த் தஞ்சை விவசாயத் தொழிலாளர்களைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டது. சுதந்திரத்துக்குப் பிறகும் அந்தப் பகுதியில் தொடர்ந்த நிலவுடைமையாளர்களின் ஆதிக்கத்தை இந்த நாவல் சித்தரித்துள்ளது. சண்முகம் என்ற ஒரு தொழிலாளிக் குடும்பத்தில் காலையில் தொடங்கும் இந்த நாவல் வர்க்கப் பாகுபாடுகளை மையமாகச் சித்தரிக்கிறது.
இன்றைக்குப் பெரிய அளவில் நடைபெற்றுவரும் குடிசைப் பகுதி அப்புறப் படுத்து தலையும் இந்த நாவல் சொல்கிறது. தெய்வத்தைக் காரணம் காட்டி நடக்கும் இந்தச் செயலை, ராஜம் கிருஷ்ணன் தனது கதாபாத்திரமான வடிவின் வழியாகக் கேள்வி கேட்கிறார்; “வாழுறவங்க வூட்டப் பிரிச்சிப்போட்டு சாமி உங்களைக் கும்பிடச் சொல்லிச்சா? அந்த சாமிக்கு கண்ணில்ல?”
சண்முகத்தின் மகள் காந்திமதியின் தொழில்நுட்பக் கல்வி பயிலும் கனவு தகர்ந்துபோவதைக் கொண்டு, தொழிலாளிகளின் பிள்ளைகளின் கல்வி, வேலைவாய்ப்பிலும் தொடரும் வர்க்கப் பாகுபாடுகளை ராஜம் கிருஷ்ணன் சொல்கிறார். இந்தப் பிரச்சினைகளுக்குப் போராட்டத்தைத் தீர்வாக முன்வைத்து இந்தக் கதையை முடிக்கிறார் அவர்.
மானுடவியல் நாவலின் முன்னோடி
வேறுபட்ட களங்களை மையமாகக் கொண்டு எழுதியதைப் போல் நிஜமான மனிதர்களையும் ராஜம் கிருஷ்ணன் தன் கதைகளின் மூலம் சுவீகரித்துக்கொண்டுள்ளார். அவர்களில் முக்கியமானவர் பொதுவுடமை இயக்கப் போராளி மணலூர் மணியம்மாள். இதற்காக முறையான ஆய்வு மேற்கொண்டு இந்த நாவலை அவர் எழுதியுள்ளார்.
தனது மற்றொரு ஆய்வுக்கான தேடலின்போது மணியம்மாள் குறித்துக் கேள்விப்பட்டு, அவர் ஆளுமை மீது கொண்ட ஈர்ப்பால் அவரை நாயகியாக்கி, ‘பாதையில் பதிந்த அடிகள்’ என்னும் நாவலை 1991-ல் எழுதினார். சுதந்திர காலகட்டத்துக்கு முன்பு தொடங்கும் இந்த நாவல் அதன் தொடக்க காலகட்டம் வரையிலான சமூக வரலாற்றையும் சொல்லிச்செல்கிறது.
கடுமையான சடங்குக் கட்டுப்பாடுகள் உள்ள பிராமணக் குடும்பத்தில் பிறந்து, அதிலிருந்து வெளியேறி பொதுவுடைமைப் போராளியாக ஆன மணியம்மாளின் பரந்துபட்ட வாழ்க்கையை விவரிக்கிறது இந்த நாவல். பால்ய விவாகத்தால் கைம்பெண்ணான மணியம்மாள் எப்படி அந்தக் கட்டுப்பாடுகளைத் தகர்த்து முன்னேறினார் என்பதை ராஜம் கிருஷ்ணன் ஒரு முன்னுதாரணமாக வைக்கிறார். அத்துடன் அந்தக் காலகட்டத்தில் காங்கிரசின் செயல்பாடுகள், சமூகச் சீர்திருத்தத்தில் காந்தியின் பங்களிப்பு, வர்க்கப் போராட்ட வரலாறு எனப் பல தளங்களில் நாவல் விரிந்துசெல்கிறது.
ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’ நாவல் தூத்துக்குடி உப்பளத் தொழிலாளர் களை மையமாகக் கொண்டது. இப்படிக் கதைக்குக் கதை புதிய களங்களை ராஜம் கிருஷ்ணன் தேர்ந்தெடுத்து எழுதினார். மானுடவியல் சார்ந்த நாவல் பிரபலமாகிவரும் இன்றைய காலகட்டத்திலிருந்து பார்க்கும்போது ராஜம் கிருஷ்ணனை இதன் முன்னோடி எனலாம். தமிழ்நாட்டு நிலம் மட்டுமல்லாது கோவா விடுதலைப் போராட்டத்தை மையமாகக் கொண்டு, ‘வளைக்கரம்’ என்ற நாவலையும் எழுதியிருக்கிறார். சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளைக்காரர்களைச் சந்தித்து அந்தப் பின்னணியில் ‘முள்ளும் மலரும்’ என்ற நாவலை எழுதியுள்ளார்.
ராஜம் கிருஷ்ணனின் கதை மொழி தனித்துவம் அற்றது. நாவல் களமாக எடுத்துக்கொண்ட பகுதியின், குறிப்பாக அந்த மக்கள் குழுவின் மொழியைக் கொண்டே கதைகள் எழுதினார். இம்மாதிரிக் கதைகள் எழுதும்போது உரையாடல் மொழி, அந்த மக்களின் புழங்குமொழியாக இருக்கும். அதேநேரம் கதையை விவரிப்பது எழுத்தாளரின் தனித்த மொழியில் இருக்கும்.
ஆனால், ராஜம் கிருஷ்ணன் விவரிப்பு மொழியையும் கூடியவரை மக்களின் உரையாடல் மொழிக்கு அருகிலே வைத்திருந்தார். ஒருவகையில் தனது மொத்த எழுத்தையும் எளிய மக்களுக்கு அருகிலே வைக்க விரும்பியவர் அவர் எனச் சொல்லலாம்.
ராஜம் கிருஷ்ணன், 1925-ல் திருச்சிக்கு அருகே முசிறியில் பிறந்தவர். சாகித்ய அகாடமி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
40-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவர் வாழ்ந்த காலகட்டத்திலேயே இவரது படைப்புகள் நாட்டுடமையாக்கப்பட்டன.
தமிழ் இணையப் பல்கலைக்கழக இணையப் பக்கத்தில் இவற்றை இலவசமாகத் தரவிறக்கம் செய்து படிக்கலாம். இவர் 2002-ல் சென்னையில் ஒரு முதியோர் இல்லத்தில் உடல்நலக் குறைவால் மரணமடைந்தார்.
(பாதைகள் நீளும்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: jeyakumar.r@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago