படிப்போம் பகிர்வோம்: நூற்றாண்டு கடந்தும் மாறாத நிலை

By எல்.ரேணுகா தேவி

ஏழை - பணக்காரன், ஆண் - பெண் என எந்தப் பாகுபாடும் இல்லாமல் அனைவரும் சமமாக வாழ்வதற்கான சூழ்நிலையைப் பாட்டாளிவர்க்கப் புரட்சியால் சாத்தியப்படுத்த முடியும் என்பதை நிரூபித்தது 1917-ல் நடந்த ரஷ்யப் புரட்சி. இன்றளவும்  உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களுக்குப் பொதுவுடைமை மீதான நம்பிக்கையை நீர்த்துப்போகாமல் வைத்திருப்பதும்  இந்தப் புரட்சியே.

 

ரஷ்யப் புரட்சிக்கு முந்தைய ஜார் அரசின்கீழ் ரஷ்ய மக்கள் பட்ட துயரங்கள் ஏராளம். அதிலும் பெண்களின் நிலை இன்னும் மோசம். பொதுவாகப் போராட்டம், ஆர்ப்பாட்டம் என்றால் அவற்றில் ஆண்களே அதிக அளவு இருப்பார்கள் அல்லது அவர்கள் மட்டுமே இருப்பார்கள். பெண்களுக்கு எதற்குப் போராட்டம் புரட்சியெல்லாம் என்ற போக்குதான் புரட்சிக்கு முந்தைய சோவியத் ரஷ்யாவின் நிலையாக இருந்தது.

புரட்சியில் பெண்கள்

ஏன் பெண்கள் தங்கள் உரிமைக்காக ஒன்றிணைய வேண்டும், புரட்சியில் பெண்களுடைய பங்கு என்னவாக இருக்க வேண்டும், புரட்சிக்குப் பிந்தைய சோஷலிசச் சமுதாயத்தில் பெண்களின் நிலை எவ்வாறு மேம்பட்டிருக்கும் என்பதை ‘உழைக்கும் மகளிர்’ என்ற சிறு பிரசுரத்தின் மூலமாக  ரஷ்யப் பெண்கள் மத்தியில் தீயெனப் பரவச் செய்தவர் கான்ஸ்டாண்டினோவோ க்ருப்ஸ்கயா.

1901-ல் வெளியான இந்தச் சிறு பிரசுரம் 116 ஆண்டுகள் கழித்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. தற்போது இது ‘உழைக்கும் மகளிர்’ என்ற தலைப்பிலேயே தமிழில் வெளிவந்துள்ளது. ‘சிந்தன் புக்ஸ்’ வெளியிட்டுள்ள இப்புத்தகத்தைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் கொற்றவை.

க்ருப்ஸ்கயா, புரட்சிக்குப் பிந்தைய சோஷலிச அரசின் கல்வி வாரியத் தலைவராக இருந்தவர். இறக்கும்வரை துணைக் கல்வியமைச்சராகச் செயலாற்றினார். ரஷ்யப் புரட்சிக்குத் தொழிலாளர்களை அணிதிரட்டுவதில் முக்கியப் பங்காற்றினார். ஆனால், இவை எல்லாவற்றையும்விட ‘லெனினின் மனைவி’ என்ற ஒற்றை வரியால் மட்டுமே பலரால் அறியப்பட்டவர்.

சிறையில் மலர்ந்த எழுத்து

1896-ல் லெனினோடு கைதுசெய்யப்பட்டு சைபீரியாவுக்கு நாடு கடத்தப்பட்டார் க்ருப்ஸ்கயா. மூன்றாண்டுகள் ஷுசென்ஸ்கொயேவில் உள்நாட்டுச் சிறைத் தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்தபோதுதான் ‘உழைக்கும் மகளிர்’ என்ற சிறு பிரசுரத்தை எழுதினார். இந்நூலின் முதல் பகுதியான ‘உழைக்கும்  வர்க்க அங்கத்தினராக மகளிர்’ என்ற தலைப்பில் விவசாயம், தொழிற்சாலை, குடிசைத் தொழில், குழந்தை வளர்ப்பு, குடும்ப வேலை ஆகியவற்றில் ரஷ்யப் பெண்களின் உழைப்பு எந்த அளவு உறிஞ்சப்படுகிறது என்பதை விளக்கியுள்ளார்.

பெண்கள் பொருளாதாரரீதியில் மேம்படும்போதுதான் மனைவி, கணவனின் அடிமையாக இருப்பதிலிருந்து விடுபட்டு, குடும்பத்தில் ஒரு சமமான உறுப்பினராக ஆகிறார் என்பதை நூறு ஆண்டுகளுக்கு முன்பே கூறியுள்ளார் க்ருப்ஸ்கயா.

வேலைக்குச் செல்லும்  தாய்மார்கள் பற்றி விளக்கியிருப்பது இன்றைய மூன்றாம் உலக நாடுகளில் உள்ள உழைக்கும் மகளிரின் நிலையைப் பிரதிபலிக்கிறது. பெண்கள் தங்களுக்குத் தரப்படும் சொற்ப கூலிக்கு மலையளவு உழைக்க வேண்டியிருப்பதும் எப்போது வேண்டுமானாலும் வேலையிலிருந்து நீக்கும் போக்கு நிலவுவதையும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.   புரட்சிக்கு முந்தைய ரஷ்யப் பெண்களின் நிலையை இப்புத்தகம் பேசினாலும் அது இன்றைய இந்தியப் பெண்களின் நிலையோடும் பொருந்திப்போகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்