தொடக்க காலத் தமிழ் இலக்கியம் அதிகம் கற்பனைமயமாக இருந்தது. யதார்த்தமற்ற லட்சியத்தைக் குறிக்கோளாகக்கொண்ட கதைகள் எழுதப்பட்டன. சில கதைகள் சுவாரசியத்தை மட்டும் இலக்காகக்கொண்டு எழுதப்பட்டன. வாழ்க்கையைச் சித்தரிப்பதிலும் ஒற்றைத்தன்மை வியாபித்திருந்தது. இதற்கு மாறாகத் தனித்த மொழியில் கதைகள் எழுதித் தமிழ்க்கொடை அளித்த எழுத்தாளர்கள் வெகு சிலரே. அவர்களில் ஒருவர் ஹெப்ஸிபா ஜேசுதாசன்.
நாகர்கோவிலுக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தின் கதையைச் சொல்லும் ‘புத்தம் வீடு’தான் ஹெப்ஸிபாவின் முதல் நாவல். எழுதப்பட்டு 50 வருடங்களுக்கு மேலான பிறகும் தமிழின் சிறந்த நாவல்களில் ஒன்றாக இன்றும் முன்னிறுத்தப்படும் நாவலாக இது இருக்கிறது. அந்தக் காலகட்டத்தில் எழுதப்பட்ட பெண் எழுத்தாளர்களின் நாவல்களைப் போல் இதுவும் ஒரு பெண்ணை மையமாகக் கொண்டு சொல்லப்பட்டதுதான்.
ஆனால், இது கதை மொழியிலும் பார்வையிலும் தனித்துவம் பெறுகிறது. லிஸி என்னும் பெண்ணின் வழியாக நாவல், ஒரு மானுடவியல் ஆவணமாக விரிவுகொள்கிறது; அதுவரை தமிழ் இலக்கியத்தில் பதிவுசெய்யப் படாத குமரி நாடார் சமூகத்தின் வாழ்க்கையைப் பதிவுசெய்கிறது.
பனைவிளையின் நிலத்தில்
பனைவிளை என்னும் கிராமம்தான் இந்த நாவலின் களம். இந்த ஊரிலுள்ள ‘புத்தம் வீடு’ என அழைக்கப்படும் ஒரு முதலாளிக் குடும்பம்தான் மையம். பனை மரத் தோப்புகளின் உடைமையாளர்களான இந்த முதலாளிக் குடும்பத்துக்கும் பனை மரத்திலேறி உழைக்கும் வர்க்கத்துக்கும் உள்ள வேறுபாடுகளையும் நாவல் சொல்கிறது. இந்த வேறுபாடு, முரண்களை வளர்க்கிறது. கால மாற்றத்தால் பனையேறிகளும் நில உரிமையாளர்களாக மாறுகிறார்கள். இந்த மாற்றங்களுக்கு இடையில் லிஸி இருக்கிறாள்.
அவரது இரண்டாவது நாவல் ‘டாக்டர் செல்லப்பா’. இந்த நாவலில் தங்கராஜாவின் தம்பியாக வரும் செல்லப்பாவின் கதைதான் அது. அந்தக் கதாபாத்திரம் காலமாற்றத்தால் எப்படி நஷ்டமாகிறது என்பதை இந்த நாவல் விசாரிக்கிறது. அவரது மற்றொரு நாவலான ‘அநாதை’ புத்தம் வீடு நாவலின் இன்னொரு கதாபாத்திரமான தங்கப்பனின் கதையைச் சொல்கிறது. இந்த மூன்று நாவல்களுமே கால மாற்றத்தின் கதையைச் சொல்பவைதாம். இது அல்லாமல் ‘மா-னீ’ என்னும் நாவல் உலகப் போர் காலகட்டத்திய பர்மாவின் வாழ்க்கையைச் சொல்கிறது.
மாற்றங்களின் சாட்சி
லிஸி, புத்தம் வீட்டின் வாரிசு. ஹெப்ஸிபா ‘குல விளக்கு’ என்கிறார். இந்தச் சிறப்புப் பெயர்தான் அவளுக்குப் பாதகமாக ஆகிறது. சின்னஞ்சிறு பெண்ணாக இருந்து, தன் காதலனைக் காண நாணிக்கொண்டு சமையல்கட்டில் மறைந்துகொள்ளும் கல்யாணப் பெண் வரையிலான லிஸியின் கதைதான் இந்த நாவல். இந்தக் கதையின் எல்லாச் சம்பவங்களுடனும் லிஸிக்குத் தொடர்பிருக்கிறது. வீட்டுக்கு உள்ளும் புறமும் நடக்கும் மாற்றங்களுக்கும் லிஸி சாட்சியாக இருக்கிறாள்.
கட்டுப்பாடுகளுடன் இருக்கும் புத்தம் வீட்டுக்குள் அந்த ஊரிலுள்ள கிறிஸ்தவ உபதேசியார் மகள் மேரி சிறு ஒளிக்கீற்று போல் நுழைகிறார். தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, சித்தப்பா, சித்தி ஆகியோருடன் பெரிய குடும்பத்து ஆச்சாரங்களுடன் இருக்கும் லிஸிக்கு, மேரியின் நட்பு ஒரு கொண்டாட்டமாக இருக்கிறது. மேரிதான் தன் ‘சிறிய தோழி’யைப் பள்ளியில் சேர்க்கப் புத்தம் வீட்டாருடன் சிபாரிசு செய்கிறாள். வீட்டிலிருந்து தூரத்தில் உள்ள பள்ளிக்கு லிஸியும் ஒரு சிறு பறவையைப்போல் சென்று வந்தாள்.
ஆனால், அது நீடிக்கவில்லை. அவள் பெரியவள் ஆனது ‘இற்செறிப்பு’ வழக்கத்துள் தள்ளப்படுகிறாள். பழந்தமிழ் இலக்கியத்தில் கூறப்பட்டுள்ள இந்த வழக்கத்தை ஹெப்ஸிபா சுவாரசியமாக விவரித்துள்ளார். புத்தம் வீட்டார் அவளை வீட்டுக்கு வெளியே செல்லக் கூடாது எனக் கட்டுப்பாடுதான் விதிக்கிறார்கள். ஆனால், ஹெப்ஸிபா தமிழ் ஆர்வத்தால் அது ‘இற்செறிப்பு’ என்கிறார்.
‘குட்டி, நீ பெண்ணாக்கும்’ எனப் பெண்ணுக்குரிய இலக்கணங்களை லிஸிக்கு நினைவூட்டுபவராக லிஸியின் தாய் இருக்கிறார். தந்தையே செல்வந்தக் குடும்பத்தின் வாரிசு; வீட்டில் தங்குவதே இல்லை. சித்தப்பாவுக்குத் திருவனந்தபுரத்தில் தொழில். பெண்கள் வீட்டுக்குள் அடைபட்டுக் கிடந்தனர். இதற்கிடையில் வீட்டின் வளாகத்தில் பதநீர் காய்ச்ச வரும் பனையேறிகள் சிலரும் வந்துசெல்கிறார்கள்.
இந்த நாவல் இப்படிக் கட்டுப்படுத்தப்பட்ட பெண், வீட்டின் உள்ளிருந்து வெளியைப் பார்க்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது. வீட்டின் ஒவ்வொரு பத்திகளையும் வெவ்வேறு காட்சிகளில் விவரிக்கும் நாவல், அவற்றுள் எந்தப் பத்திக்குள் அவர்களுக்குப் பிரவேசிக்கும் உரிமை இருந்தது என்பதையும் சொல்கிறது. அடிச்சுக்கூட்டு என விளவங்கோடு வட்டாரவழக்கில் சொல்லப்படும் வீட்டின் முன்பகுதி அறைக்குள் பெண்களுக்கு அனுமதியில்லை. இந்த அறைக்குள் பிரவேசிக்கும் உரிமை லிஸிக்குக் கிடைக்கிறது. அதற்காக அவள் புரட்சியெல்லாம் செய்யவில்லை. ஆனாலும் அது காலமாற்றத்தால் நடக்கிறது.
பேதங்களால் முறிந்த காதல்
லிஸிக்கும் பனையேறி குடும்பத்தைச் சேர்ந்த தங்கராஜாவுக்கும் இடையில் ஒரு பால்ய கால சிநேகம் இருக்கிறது. அவள் அவனுக்கு மயிலிறகைப் பரிசளித்திருக்கிறாள். இந்த சிநேகத்தின் மூலம் இரு வர்க்கப் பின்னணி அத்தனை பிரச்சினைகளும் சித்தரிக்கப்பட்டுள்ளன. ஒரு காட்சியில் புத்தம் வீட்டைவிட பணக்காரர் ஆகிவிட்ட பிறகு, “நான்தான் புத்தம் வீட்டுப் பனையேறி” என அன்பையன் தனது பழைய முதலாளியிடம் கைகட்டிச் சொல்கிறார்.
இந்தப் புதுப் பணக்காரரின் மகன்தான் தங்கராஜ். இந்தக் காதலும் கதை போகிற போக்கில் ஒரு குத்துச் செடியைப் போல் குறுக்கே வந்துசெல்கிறது. இரண்டு மூன்று அத்தியாயங்களில்தாம் இந்தக் காதலர்கள் சந்தித்துக்கொள்கிறார்கள். ஓரிரு சொற்கள்தாம் பகிரப்படுகின்றன. ஆனால், இந்தச் சிறு காட்சிகள் வழியே காவியச் சோகத்தை ஹெப்ஸிபா கொண்டுவந்து சேர்த்துள்ளார். லிஸி பெரும் துயரடைகிறாள்.
ஆனால், அவளது வேதனையைப் பகிர ஹெப்ஸிபா கதாபாத்திரங்களை உருவாக்கவில்லை. அவளைவிட வயது குறைந்த, அவளைவிடப் படித்த அவளது தங்கை (சித்தப்பா மகள்) லில்லிகூட இந்த வர்க்க பேதக் காதலுக்கு எதிராக இருக்கிறாள். ஆனால், லிஸிக்கு அது ஒன்றும் பொருட்டாகவில்லை. லிஸியின் இந்தப் பண்பு இயல்பாகச் சொல்லப்பட்டுள்ளது. அவளை ஒரு சமூக சீர்திருத்தவாதியாகச் சட்டனெ உயர்த்திப் பிடிக்கவில்லை அவர். சிறைச்சாலைபோல் உள்ள அவள் வீட்டுக்குள் அவ்வப்போது வரும் பனையேறிக் குடும்பத்துடன் அவளது சிநேகம் தொடங்கியதை முந்தைய அத்தியாயங்களில் ஹெப்ஸிபா சொல்லிவிடுகிறார்.
சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தைச் சித்தரிக்கும் இந்த நாவல், இந்திய சுதந்திரப் போராட்டம், திருவிதாங்கூர் - தமிழ்நாடு காங்கிரஸ் போராட்டம் எனச் சமூக மாற்றங்களைப் போகிறபோக்கில் சொல்லிச் செல்கிறது. பனைகள் மட்டும் இருந்த நிலத்தில் அதே உசரத்துக்கு மின் கம்பங்கள் வருகின்றன. கருப்பட்டி, புளி வியாபாரம் வருகிறது.
கட்டிடங்கள் கட்டுவது ஒரு பெரிய தொழிலாகவும் ஆகிறது. பனையேறிகளும் நகரங்களுக்கு இடம்பெயர்ந்து பொருள் ஈட்டுகிறார்கள். இந்தப் புற மாற்றங்கள் எல்லாம் புத்தம் வீட்டின் மீது, லிஸியின் மீது, அவளது காதல் மீது பாதிப்பை விளைவிக்கின்றன. அவள் இந்த எல்லாவற்றுக்கும் மையப்புள்ளியாக இருக்கிறாள். அவளது குறுக்கீட்டில்தான் மொத்தக் கதையும் நகர்ந்துசெல்கிறது. மண்ணையும் மனிதர்களையும் மரங்களையும் முகிழ்த்தபடி லிஸியும் ஒரு நதியைப் போல் நாவலுக்குள் நிறைந்துநிற்கிறாள்
ஹெப்ஸிபா ஜேசுதாசன், (1925 - 2012)
hepsibajpgrightகுமரி மாவட்டம் தக்கலை அருகே புலிப்புனத்தைச் சொந்த ஊராகக் கொண்டவர். பர்மாவிலும் இந்தியாவிலும் பள்ளிக் கல்வி பயின்றவர். திருவனந்தபுரத்தில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றியவர். ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். ‘Count down from Solomon’ என்ற பெயரில் தமிழ் இலக்கியப் படைப்புகளை ஆங்கிலத்தில் தந்துள்ளார்.
‘புத்தம் வீடு’ (தமிழ்ப் புத்தகாலயம்) ‘டாக்டர் செல்லப்பா’ (தமிழ்ப் புத்தகாலயம்), அநாதை (அன்னம்), மா-னீ (அன்னம்) ஆகிய நாவல்கள் வெளிவந்துள்ளன.
‘சிறுகதை உலகம்’ என்றொரு சிறுகதைத் தொகுப்பும் வந்துள்ளது. இவரது படைப்புகளில் ‘புத்தம் வீடு’ மட்டும் காலச்சுவடு பதிப்பகத்தால் மறுபதிப்பு கண்டுள்ளது.
(பாதைகள் நீளும்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: jeyakumar.r@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago