2018: ஜொலித்த நட்சத்திரங்கள்

By டி. கார்த்திக்

பல மைல் கல் தருணங்களை 2018-ல் சந்தித்திருக்கிறார்கள் இந்திய வீராங்கனைகள். அவர்களில் புடம்போட்ட தங்கமாக ஜொலித்தவர்களும் உண்டு; புதிய வரவாக அமர்க்களப்படுத்தியவர்களும் உண்டு. அவற்றில் சில முக்கியமான தடங்கள் இவை.

 

மேரிகோம்

மூன்று குழந்தைகளின் தாய், 36 வயது பெண் போன்ற தடைகள் எல்லாம்  மேரிகோமுக்கு எப்போதும் கிடையாது. சென்ற ஆண்டு மட்டும் அவர் 4 தங்கப் பதக்கங்களை வென்று இந்திய குத்துச்சண்டைப் பிரிவுக்குப் பெருமைசேர்த்தார். 2018-ன் தொடக்கத்தில் இந்திய ஓபனில் தங்கப் பதக்கம் வென்ற மேரிகோம், ஆண்டு இறுதியில் டெல்லியில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்று 2018-ம் ஆண்டை வெற்றிகரமாக நிறைவுசெய்தார். இடையே காமன்வெல்த், பல்கேரியாவில் நடைபெற்ற ஐரோப்பியப் போட்டியிலும் இவருக்கே தங்கப் பதக்கங்கள் கிடைத்தன.

 

பி.வி. சிந்து

2018-லும் பி.வி. சிந்துவை நோக்கி வெற்றிக் காற்று பலமாக வீசியது. இரண்டு பட்டங்கள், காமன்வெல்த், ஆசியப் போட்டி, உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் 3 வெள்ளிப் பதக்கங்கள் என வெற்றி மேல் வெற்றி குவிந்தது. இந்திய ஓபன், தாய்லாந்து ஓபனில் இரண்டாமிடத்தைப் பிடித்த சிந்து, இறுதியாக பி.டபுள்யு. உலக டூர் ஃபைனல்ஸ் பட்டப் போட்ட்டியில் சாம்பியன் பட்டம் வென்று தொடர்ச்சியாக இறுதிப் போட்டித் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

 

மணிகா பத்ரா

டேபிள் டென்னிஸில் சென்ற ஆண்டு அறிமுக நாயகியாக அமர்க்களப்படுத்தினர் மணிகா பத்ரா. டெல்லியைச் சேர்ந்த இவர், காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்று ஆச்சர்யத்தில் மூழ்கடித்தார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும் தனதாக்கினார்.

 

சாய்னா நேவால்

சாய்னாவுக்கு 2018 மறக்க முடியாத ஆண்டு. காமன்வெல்த்  பாட்மிண்டன் இறுதிப் போட்டியில் பி.வி. சிந்துவைத் தோற்கடித்து தங்கப் பதக்கத்தை வென்றார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் கிடைத்தது. ஆசிய சாம்பியன்ஷிப்பிலும் வெண்கலம் இவருக்கே கிடைத்தது. தவிர இந்தோனேசியா மாஸ்டர்ஸ், டென்மார்க் ஓபன், சயீத் மோடி இண்டர்நேஷனல் போன்ற தொடர்களில் இறுதிப் போட்டிவரை முன்னேறினார். பாட்மிண்டன் வீரர் பாருபள்ளி காஷ்யப்பை மணந்துகொண்டு புதிய இன்னிங்ஸைத் தொடங்கினார்.

 

ஹிமா தாஸ்

தடகளத்தில் தன்னிகரற்ற சாதனைகளைப் படைத்தார் ஹிமா தாஸ். பின்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ட்ராக் போட்டியில் 400 மீ. ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமை சென்ற ஆண்டு ஹிமாவுக்குச் சொந்தமானது. இதற்கு முன்பு எந்த இந்திய வீராங்கனையும் செய்யாத சாதனை இது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஒரு தங்கப் பதக்கத்தையும் இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும் வென்று தடகளத்தில் அழியா தடம் பதித்தார்.

 

தீபா கர்மாகர்

ரியோ ஒலிம்பிக்கில் நூலிழையில் பதக்கத்தைக் கோட்டைவிட்டது, இரண்டு ஆண்டுகள் காயத்தால் அவதிப்பட்டது என ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டில் சறுக்கல்களைக் கண்ட தீபா கர்மாகருக்கு சென்ற ஆண்டு புத்துணர்வைத் தந்தது. நீண்ட ஓய்வுக்குப் பிறகு களத்துக்கு வந்த தீபா, துருக்கியில் நடைபெற்ற ஜிம்னாஸ்டிக்ஸ் உலக சேலஞ்ச் கோப்பையை வென்று மீண்டும் புதிய அவதாரம் எடுத்தார்.

 

டுட்டி சந்த்

பயிற்சி பெறவே பெரும் சிரமங்களைச் சந்தித்த டுட்டி சந்துக்குச் சென்ற ஆண்டு மறக்க முடியாதது. ஆசிய விளையாட்டுப் போட்டி 100 மீ. ஓட்டப் போட்டியில் இவர்  வெள்ளி வென்றார். வெறும் 0.02 விநாடிகளில் தங்கத்தைக் கோட்டைவிட்டார். ஆனால், ஆசிய விளையாட்டுப் போட்டியில் பி.டி. உஷாவுக்குப் பிறகு வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனை என்ற பெருமை டுட்டிக்குக் கிடைத்தது.

 

வினேஷ் போகத்

கடந்த சில ஆண்டுகளாக ஏமாற்றங்களைச் சந்தித்த வினேஷ், சென்ற ஆண்டு ஏற்றம் கண்டார். ஆசிய  மல்யுத்தப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று தன்னை நிரூபித்தார் வினேஷ். ரியோ ஒலிம்பிக்கில் மல்யுத்தப் போட்டியில் யாருடன்  விளையாடும்போது  காயம் ஏற்பட்டதோ, அதே வீராங்கனையை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்று சாதித்தார்.

 

ஹர்ஷிதா தோமர்

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது ஹர்ஷிதா தோமருக்குப் பொருந்தும். பதின் பருவத்திலேயே சர்வதேசப் படகு வலித்தல் போட்டியில் பங்கேற்றுப் பதக்கத்தை வென்றார். இளம் வயதில் பதக்கம் வென்ற இரண்டாவது இந்திய வீராங்கனை என்ற சிறப்பு அவருக்குக் கிடைத்தது. ஹர்ஷிதா தற்போது 10-ம் வகுப்பு படித்துவருகிறார்.

மகளிர் கிரிக்கெட்

மகளிர் கிரிக்கெட்டில் மிதாலி ராஜ் - பயிற்சியாளர் ரமேஷ் பவார் இடையேன மோதல் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தாலும்,  சாதனை படைக்கவும் மிதாலி தவறவில்லை. மகளிர் டி20 போட்டியில் 2 ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் வீராங்கனையானார் மிதாலி.

ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனை; ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் சிறந்த வீராங்கனை என ஐசிசியின் இரட்டை விருதை வென்றார் கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா. இதற்காக அவர் ‘ரேச்சல் ஹெய்ஹோய் ஃபிளின்ட்’ விருதைப் பெற உள்ளார்.

ஐசிசியின் சிறந்த டி20 அணிக்கு இந்தியாவின் ஹர்மன்பிரீத் கவுர் கேப்டனாகத் தேர்வானார். இந்த அணியில் ஸ்மிருதி மந்தனாவும் சுழற்பந்து வீச்சாளர் பூனம் யாதவும் இடம்பிடித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்