இந்த உலகம் நிராகரித்தபோதும் தன்னுடைய வரலாற்றையும் தன் மூதாதையரின் வரலாற்றையும் கதைகளாக மாற்றியவர்கள் பெண்கள். காலம்தோறும் போராட்டங்களுக்கு நடுவேதான் பெண் எழுத்தின் இருப்பு உறுதிசெய்யப்படுகிறது. 2018-ல் பெண் எழுத்தாளர்களின் படைப்புகளும் பெண்கள் சார்ந்து எழுதப்பட்ட புத்தகங்களும் வரவேற்பைப் பெற்றன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை:
பெண்ணியம்: வரலாறும் கோட்பாடுகளும் l சாரா காம்பிள் - டோரில் மோய், தமிழில்: ராஜ் கௌதமன் | வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் | சென்னை – 98 | விலை: ரூ. 90 | தொடர்புக்கு: 044 - 26251968
பெண்ணியம் குறித்த இரண்டு நூல்களின் தமிழ்ச் சுருக்கத்தை வெளியிட்டிருக்கிறார் எழுத்தாளரும் ஆய்வாளருமான ராஜ் கௌதமன். முதலாவது புத்தகம் பெண்ணியமும் பிந்தையப் பெண்ணியமும் என்ற தலைப்பில் மேற்கத்தியப் பெண்ணிய வரலாற்றின் முக்கியமான காலக்கட்டங்களைப் பற்றிய நான்கு கட்டுரைகளின் தொகுப்பு. சாரா காம்பிளைத் தொகுப்பாசிரியராகக் கொண்டு 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த புத்தகம் இது.
இரண்டாவது புத்தகம் ‘பாலியல்/பிரதியியல்/அரசியல்: பெண்ணிய இலக்கியக் கோட்பாடு’ என்ற தலைப்பில் டோரில் மோய் எழுதியது. பெண்ணியக் கோட்பாட்டாளர்கள், திறனாய்வாளர்கள் பற்றிய எட்டுக் கட்டுரைகளின் தொகுப்பு. பெண்ணியக் கோட்பாடுகளின் அடிப்படையைப் புரிந்துகொள்ள இந்த இரண்டு புத்தகங்களின் தமிழ்ச் சுருக்கம் உதவியாக இருக்கும்.
பாழ்நிலப் பறவை லீலாகுமாரி அம்மா l இரா.பாவேந்தன் - கோ.நாகராஜ் | வெளியீடு: சந்தியா பதிப்பகம் | விலை: ரூ.115 | தொடர்புக்கு: 044 - 24896979
கேரளத்தின் காசர்கோடு பகுதியில் எண்டோசல்பான் பூச்சிக்கொல்லிக்கு எதிராகப் போராட்டத்தை முன்னெடுத்த லீலாகுமாரியின் வாழ்க்கைப் பயணம் இது. கட்டுரை வடிவில் இல்லாமல் ஒரு நாவலுக்கு இணையான உணர்ச்சிகரமான நினைவுகூரலாக அமைந்திருக்கிறது.
கௌரி லங்கேஷ்: மரணத்துள் வாழ்ந்தவர் l சந்தன் கௌடா, தமிழில்: பொன். தனசேகரன் | வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம் | விலை: ரூ.150 | தொலைபேசி: 04652 - 278525
முற்போக்குக் கருத்துகளுக்காக சுட்டுக் கொல்லப்பட்ட எழுத்தாளரும் பத்திரிகையாளருமான கௌரி லங்கேஷ் எழுதிய கட்டுரைகளை ஆங்கிலத்தில் சந்தன் கௌடா தொகுத்து வெளியிட்டிருந்தார். அதை மூத்த பத்திரிகையாளர் பொன். தனசேகரன் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். கௌரி லங்கேஷ் பற்றியும் அவரது எழுத்துகள் குறித்தும் அறிந்துகொள்வதற்கு இப்புத்தகம் பேருதவியாக உள்ளது.
இஸ்மத் சுக்தாய் கதைகள் l இஸ்மத் சுக்தாய், தமிழில்: ஜி.விஜயபத்மா | வெளியீடு: எதிர் வெளியீடு | விலை: ரூ. 400 | தொலைபேசி எண்: 9865005084
இந்தியப் பெண் எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர் இஸ்மத் சுக்தாய். இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்த இவரது இளமைக்காலம் போராட்டங்களுடன் கழிந்தது. அவரது படைப்புகள் எளிய மொழியில் வலிய கருத்துகளைப் பிரதிபலிப்பவை. இஸ்மத் சுக்தாய் எழுதிய கதைகளை ஜி.விஜயபத்மா தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.
உடலெனும் வெளி l அம்பை | வெளியீடு: கிழக்கு பதிப்பகம் | விலை: ரூ.140 | தொலைபேசி எண்: 044- 42845464/42845494
தொன்மைவாய்ந்த தமிழ்ப் பண்பாட்டில் பெண்கள் எப்படிப் பார்க்கப்பட்டுள்ளனர், பண்பாட்டிலிருந்து உருவாகும் பேச்சிலும் மொழியிலும் இலக்கியத்திலும் பெண்கள் எவ்வாறு அணுகப்பட்டிருக்கிறார்கள் என்பதை அறியும் வகையில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. பெண் உடல் குறித்த மாற்று பார்வையை இந்நூல் முன்வைக்கிறது.
உழைக்கும் மகளிர் l க்ருப்ஸ்கயா, தமிழில்: கொற்றவை | வெளியீடு: சிந்தன் புக்ஸ் | விலை: ரூ.70 | தொலைபேசி எண்: 9445123164
புரட்சிக்கு முந்தைய ரஷ்ய மகளிரின் நிலையைப் பற்றி இப்புத்தம் பேசினாலும், புத்தகத்தைப் படிக்கும்போது இன்றைய உலக நாடுகளில் உள்ள உழைக்கும் மகளிரின் நிலையைப் பிரதிபலிபதாகவே உள்ளது. பெண்களின் முழுமையான விடுதலைக்காக நாம் இன்னும் எவ்வளவு உழைக்க வேண்டும் என்பதையும் இச்சிறு நூல் விளக்குகிறது.
காம்ரேட் அம்மா l கல்பனா கருணாகரன் | வெளியீடு: பாரதி புத்தகலாயம் | விலை: ரூ. 50 | தொலைபேசி எண் : 044-24332424/24332924/24356935
இந்திய மாதர் இயக்கங்களின் முன்னோடிகளில் ஒருவரான தோழர் மைதிலி சிவராமனின் வாழ்க்கைப் பயணம் குறித்து எழுதப்பட்டுள்ள புத்தகம். தமிழகத்தில் உள்ள எண்ணற்ற தொழிற்சாலைகளில் சங்கம் அமைத்த இவர், பெண்களின் பிரச்சினைகளுக்காகக் களத்தில் போராடியவர். இவரது வாழ்க்கைப் பயணம் இளம் தலைமுறையினருக்கு நல்லதொரு வழிகாட்டி.
கைர்லாஞ்சியின் காலத்தில் காதல் - 17 தலித் பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு | வெளியீடு: மைத்ரி புக்ஸ் | தொலைபேசி எண்: 9445575740
சாதியத்தை எதிர்க்கும் வலுவான குரல்களில் தலித் பெண்ணியக் குரல் முக்கியமானது. வீட்டிலும் சமூகத்திலும் கட்டவிழ்த்துவிடப்படும் ஆணாதிக்கத்தை எதிர்க்கும் குரலாகவும் இது வெளிப்படுகிறது என்பதை இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் கவிதைகள் உணர்த்துகின்றன. தென்னிந்தியாவைச் சேர்ந்த 17 தலித் பெண் கவிஞர்கள் எழுதிய கவிதைகளின் தொகுப்பு இது. மூல மொழிகள், ஆங்கிலம் வழி வ.கீதா, சுகுமாரன், க.மாதவ், பிரேமா ரேவதி ஆகியோர் மொழிபெயர்த்திருக்கிறார்கள்.
முள் கம்பிகளால் கூடு பின்னும் பறவை l மாலதி மைத்தி | வெளியீடு: அணங்கு பெண்ணியப் பதிப்பகம் | விலை: ரூ. 90 | தொலைபேசி எண்: 9599329181/9599329181
பின்காலனிய நிலத்தின் பெண்ணுடல்களின் மொழியைப் பிரதியெடுக்கும் கவிதைகள் இதில் இடம்பெற்றிருக்கின்றன. பழைய உலகிலிருந்து வெளியேறிய பெண் உடலைக் கலைத்து அடுக்கும் கவிதைகள் இவை.
books-4-hindujpgrightவான் மண் பெண் l ந.வினோத் குமார் | தொடர்புக்கு: 7401296562
‘இந்து தமிழ்’ நாளிதழின் ‘தமிழ் திசை’ வெளியீடாக கடந்த ஆண்டு வெளியான ‘வான் மண் பெண்’ புத்தகம் இயற்கையைக் காக்கும் முனைப்பில் களத்தில் போராடிய பெண்களைப் பற்றிய ஆவணம். இயற்கையைப் பாதுகாத்தல் என்பது ஒட்டுமொத்த உலகைப் பாதுகாப்பதற்குச் சமம்.
சூழல் சீர்கேடுகளைத் தங்களுடைய மகத்தான போராட்டங்கள் மூலம் தகர்த்தெறிந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் குறித்த தொகுப்பு இது. இயற்கையை நேசிக்கும் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago