வண்ணங்கள் ஏழு 36: பாதுகாப்பு மசோதாவா, பழிவாங்கும் மசோதாவா?

By வா.ரவிக்குமார்

ஒருவரின் மனத்தில் இடம்பெறுவதற்கு அவருக்குப் பிடித்த விஷயங்களைத்தான் செய்ய வேண்டும் என்பதில்லை; அவருக்குப் பிடிக்காத விஷயங்களைச் செய்யாமல் இருந்தால்கூடப் போதும். இந்தியா முழுவதும் இருக்கும் மாற்றுப் பாலினத்தவரைப் பீதியில் ஆழ்த்தியிருக்கிறது, மத்திய அரசின் மாற்றுப் பாலினத்தவர் பாதுகாப்பு மசோதா. தங்கள் உரிமைக்கும் உயிருக்கும் உத்தரவாதமில்லாத ஒன்றால் தங்களுக்கு எப்படிப் பாதுகாப்பு கிடைக்கும் என்கின்றனர் மாற்றுப்பாலினத்தவர்.

பெண், ஆண் பாலினங்களைப் போன்று இடையிலிங்கத்தவர் (Intersex), திருநங்கையர், திருநம்பியர் போன்ற மாற்றுப் பாலினத்தவர்களும் சமூகத்தின் ஒரு பிரிவினர்தான். மருத்துவ அறிவியலும் இதைத் தற்போது ஏற்றுக்கொண்டிருக்கிறது.

சமூகத்தின் அங்கீகாரம் இல்லாததாலும் கல்வி, வேலை வாய்ப்பு போன்றவற்றில் திருநங்கைகளுக்கு எந்தவிதமான ஒதுக்கீடுகளும் இல்லாததாலும்தான் பிச்சை எடுப்பது, பாலியல் தொழிலில் ஈடுபடுவது என்னும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுவருகின்றனர். இந்த நிலையைத் தங்களின் தொடர்போராட்டங்களின் மூலமும் சட்டத்தின் துணைகொண்டும் மாற்றி, ஒவ்வொரு துறையிலும் தடம் பதித்து வருகின்றனர்.

நாடு முழுவதும் எதிர்ப்பு

கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவற்றில் இட ஒதுக்கீடு கேட்டு இந்தியா முழுவதும் மாற்றுப் பாலினத்தவர் தொடர்ந்து பல ஆண்டுகளாகப் போராடியதோடு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தனர். அந்த அடிப்படையில் 2014 ஏப்ரல் 15 அன்று கல்வி, பணியிடங்களில் மாற்றுப் பாலினத்தவருக்கான இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதையொட்டியே 2015-ல் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா மாற்றுப் பாலினத்தவருக்கான பல சிறப்பம்சங்களை உள்ளடக்கிய தனிநபர் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதன் பிறகு, மத்திய அரசின் சமூக நிதித் துறை அமைச்சர் தாவர்சந்த் ஹெகலாட் இட ஒதுக்கீடே இல்லாத காரணத்தால் பிச்சை எடுத்தும் பல பிரச்சினைகளோடும் வாழ்க்கையை எதிர்கொள்ளும் மாற்றுப் பாலினத்தவரைக் குற்றவாளிகளாகச் சித்தரிக்கும் டிரான்ஸ் பர்சன்ஸ் ரைட்ஸ் பில்-2016 எனும் மசோதாவைத் தாக்கல் செய்தார்.

அதை எதிர்த்துப் பல்வேறு போராட்டங்களை இந்தியா முழுவதும் மாற்றுப் பாலினத்தவர் நடத்தினர். இதையொட்டி நாடாளுமன்ற நிலைக்குழுவிடமும் அவர்களின் கோரிக்கையை வலியுறுத்தினர். நாடாளுமன்ற நிலைக்குழு மாற்றுப் பாலினத்தவரின்  கோரிக்கைகளை அரசுக்குப் பரிந்துரைத்தது. ஆனால், அந்தப் பரிந்துரைகளை ஏற்காமல் 27 திருத்தங்களை மட்டும் செய்து, கடந்த ஆண்டு டிசம்பர் 17 அன்று லோக் சபாவில் இந்த மாற்றுப் பாலினப் பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றியது.

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான மசோதா

இதைத் தொடர்ந்து இந்தியாவில் இருக்கும் மாற்றுப் பாலினத்தவர் தங்களின் எதிர்ப்பையும் நியாயமான கோரிக்கைகளையும் பல விதங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

vannam-2jpgஷியாம்

பொதுச் சமூகத்தின் புரிதலோடு கூடிய ஆதரவு மாற்றுப் பாலினத்தவர் சமூகத்துக்குக் கிடைக்கும் பட்சத்தில்தான் அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடியும் என்ற நிலையில் அண்மையில் இந்த மசோதாவைக் கண்டித்து மிகப் பெரிய அளவில் கவன ஈர்ப்பு கண்டனப் பேரணியையும் போராட்டத்தையும் தமிழ்நாடு, பாண்டிச்சேரியைச் சேர்ந்த மாற்றுப்பாலினத்தவர் நடத்தினர்.

போராட்டத்தில் பங்கெடுத்த கோவையைச் சேர்ந்த திருநம்பி ஷியாம், “இந்த மசோதா உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக உள்ளது. ஒருவர் அவர் விரும்பும் பாலின அடையாளத்துடன் வாழலாம் என்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சொல்கிறது. ஆனால், இந்த மசோதாவோ ஒருவர் தன்னைத் திருநராக அடையாளப்படுத்திக்கொள்ள மாவட்ட நீதிபதியிடம் விண்ணப்பித்து, திருநர் அடையாளச் சான்றிதழ் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, ஒருவரின் பாலின அடையாளத்துக்கு எந்தவித அறுவை சிகிச்சையையோ ஹார்மோன் சிகிச்சையையோ அரசாங்கம் கேட்பதைச் சட்டத்துக்குப் புறம்பான செயலாகப் பார்க்க வேண்டும்” என்றார்.  அதேபோல், “ஒருவரின் சுய அடையாளத்தைத் தாண்டி வேறு சாட்சியங்கள், அதாவது உடல், மன நல மதிப்பீடு கேட்பது அரசியலமைப்புச் சட்டம் 19 மற்றும் 21-ன்படி குற்றமாகும்” என்கின்றனர் சட்ட நிபுணர்கள்.

அரசியல் அணுகுமுறை தேவையில்லை

கடந்த 26 ஆண்டுகளாகத் திருநங்கை களுக்கான சமூகப் பணிகளைச் செய்துவருபவர் சுதா. தற்போது ஐ.டி.ஐ. எனும் திருநங்கைகள் அமைப்பின் தலைவராக இருக்கிறார். தமிழ்நாடு மூன்றாம் பாலின நலவாரியத்தின் மாநில உறுப்பினர்.

வேலூர் விரைவு நீதிமன்றத்தில் கமிட்டி உறுப்பினர் மற்றும் திருநங்கைகள் கலை நிகழ்வுகளின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருப்பவர். மாற்றுப் பாலினப் பாதுகாப்பு மசோதா குறித்து அவர் நம்மிடம் சில முக்கியமான விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். “மத்திய அரசின் மசோதாவில் எங்களுக்கான சட்டப் பாதுகாப்புகூட இல்லாதது வேதனையானது.

vannam-3jpgசுதாright

6 வயது முதல் இறுதிக் காலம் வரை குடும்பத்திலோ வீதியிலோ சொத்துக்களைப் பெறுவதிலோ பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாக்கப்படுவதிலோ மாற்றுப்பாலினத்தவருக்கு எந்தவிதப் பாது காப்பும் இருக்கவில்லை.

இவை குறித்த பாதுகாப்பு அம்சங்களை  மசோதாவில் கொண்டு வந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். திருநங்கைகள் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள சமூகத்தில் படாதபாடு பட வேண்டியுள்ளது. இந்நிலையில் சமூகத்தின் விளிம்பில் உள்ள மக்களாக எங்களைக் கருதி மத்திய அரசு உதவ வேண்டும்.

எங்களை அரசியல் ரீதியாக அணுக வேண்டாம். ஓட்டு அடிப்படையிலும் பார்க்க வேண்டாம். இதுவரை எங்களுக்குக் கிடைத்திருக்கும் திருநங்கைகளுக்கான வாரியம் முதல் பென்ஷன் வரையிலான மாநில அரசுகளின் திட்டங்கள் ஓட்டு அடிப்படையில் வந்தவை அல்ல.

திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்பு குறைவாக உள்ள நிலையில் அவர்கள் யாசகம் கேட்பதைத் தவறாகவும் தண்டனைக் குரியதாகவும் கூறி மிரட்டுவது அவர்களுக்குப் பெரும் அச்சத்தை உண்டாக்குகிறது. மசோதா மீது கருத்து கேட்டும், இதற்கான தனி கமிட்டி போட்டு கருத்து கேட்டும் எதுவும் மசோதாவில் வரவில்லை.

இம்மசோதா திருநங்கைகளின் வாழ்வியலையும் கலாச்சாரத்தையும் புரிந்து கொள்ளாமல் அவர்களின் தேவைகளைப் புறந்தள்ளியுள்ளது. இந்த மசோதாவில் திருநங்கைகளுக்கான கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் எந்தவித இட ஒதுக்கீடும் குறிப்பிடப்படவில்லை”.

(புரிந்துகொள்ள முயல்வோம்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: ravikumar.cv@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்