திருநம்பிகளையும் தன்பால் உறவில் ஈர்ப்புள்ள பெண்களையும் ஒன்றாக நினைக்கும்போக்கு பொதுச் சமூகத்திலும் சில மாற்றுப் பாலினத்தவர்களிடையேயும் நிலவுகிறது. இதைப் பற்றிய புரிதலை ஏற்படுத்துவதை சகோதரன், தோழி போன்ற அமைப்புகள் தொடர்ந்து சமூகத்தில் ஏற்படுத்திவந்தாலும், பொதுச் சமூகத்தை இன்னும் அந்தக் கருத்துகள் எட்டவில்லை என்றே தோன்றுகிறது.
லெஸ்பியன் எனப்படுபவர்கள் பெண்ணாகவே இருந்து பெண்ணையே விரும்புபவர்கள். பெண்ணாகப் பிறந்து உடல் ரீதியாக ஆணாக மாற நினைப்பவர்கள் திருநம்பிகள். பிறப்பால் ஆணாகக் கருதப்படும் ஒரு நபர், பெண்ணாக மாறி, திருநங்கையாக மாறுவதில் முன்பிருந்த தடைகளும் போராட்டமும் இன்றைக்குக் குறைவு. ஆண் உடலில் நீடிக்க முடியாமல் பெண்ணாக மாறியே தீருவது என்ற உறுதியோடு பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வெளியேறியவர்களின் எண்ணிக்கை அதிகம்.
அதையொட்டி அவர்களின் நலனுக்கான தன்னார்வ அமைப்புகளும் சமூகத்தில் அதிகம் தோன்றின. ஆனால், அதற்கான சுதந்திரமும் புரிதலும் தெளிவும் ஆணாக மாற நினைக்கும் ஒரு பெண்ணுக்கு எளிதாகக் கிடைக்காததற்குக் காரணம் போதிய விழிப்புணர்வு இல்லாததே. வீட்டைவிட்டு வெளியேறும் திருநம்பிகளையும் பாரபட்சம் பார்க்காமல் பராமரித்துப் பாதுகாக்கும் பணியைத் திருநங்கைகள் சமூகம்தான் செய்துவருகிறது. அப்படித் திருநங்கைச் சமூகத்தால் சட்டபூர்வமாகவும் பணிரீதியாகவும் பாதுகாக்கப்பட்ட இருவர் நசீர் முகமது – நஸ்ரின் இணையர்.
நினைவெல்லாம் நித்யா
ஆங்கிலப் பாடத்தில் இளங்கலைப் பட்டதாரி நஸ்ரின். இறுதி ஆண்டில் ஒரு நடுநிலைப் பள்ளியில் பயிற்சிக்காகச் சென்றிருக்கிறார். இரண்டு மாதங்கள் நடந்த அந்தப் பயிற்சியின் முடிவில் அங்கிருந்த மாணவர்களிடம், “உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் என்னிடம் கேட்கலாம். ஆனால், உங்கள் வீட்டில் இருக்கும் ஆண்களிடம் என் செல்போன் எண்ணைக் கொடுக்கக் கூடாது” என்று சொல்லித் தன் மொபைல் எண்ணைக் கொடுத்திருக்கிறார்.
பாடம் எடுக்கும்விதத்தாலும் நன்னெறி வகுப்புகளை நடத்தும்விதத்தாலும் எல்லாக் குழந்தைகளையும் நஸ்ரின் கவர்ந்தார். அந்தக் குழந்தைகளில் ஏழாம் வகுப்பு படித்த ஒரு மாணவன் வீட்டில் தன்னுடைய அக்காவிடம் நஸ்ரினைப் பற்றிப் புகழ்ந்து சொல்ல, அந்த மாணவனின் அக்கா நஸ்ரினுடன் செல்போனில் பேசத் தொடங்கினார். அவர் பெயர் நித்யா.
புரிந்துகொள்ளாததன் விளைவு
தொடர்ச்சியான உரையாடலால் நித்யா, நஸ்ரினின் நட்பு பலமாகிறது. பிறகு இருவரும் சந்தித்தனர். நஸ்ரினின் வீட்டுக்கு நித்யா சென்றுவருவது, சாப்பிடுவது என்று நெருக்கம் கூடுகிறது. தோற்றத்தில் பெண்ணாக இருந்தாலும் ஓர் ஆணைப் போல் நடந்துகொள்ளும் நித்யாவுடன் நஸ்ரின் பழகக் கூடாது என்றே நஸ்ரினின் பெற்றோர் விரும்பினர். “ஆண் தன்மையோடு இருக்கும் அவள் உன்னை எங்காவது விற்று விடுவாள்” என்று தொடர்ந்து நஸ்ரினிடம் அவளுடைய பெற்றோர் கூறிவந்தனர்.
நஸ்ரின் பி.எட். படித்த கல்லூரியிலும் நித்யாவுடனான நட்பைத் தொடராதே என்று அறிவுரை கூற ஆரம்பித்தனர். பிறகு நஸ்ரின் படிப்பதற்கும் கல்லூரியில் தடைவிதித்தனர். தன்னை நம்பாத பெற்றோரால் மன வேதனை அடைகிறார் நஸ்ரின். எல்லோரும் நித்யாவை வெறுக்க, நஸ்ரின் நித்யாவை ஆழமாக நேசிக்கத் தொடங்குகிறார்.
பூ பூத்த ஓசை
சில நாட்களில் தன்னுள் இயல்பாகத் தோன்றும் ஆண் தன்மையைப் பற்றி நஸ்ரினிடம் பகிர்ந்து கொண்டதோடு, அவரின் மீதான தன்னுடைய காதலையும் வெளிப்படுத்துகிறார் நித்யா. அவரின் ஆண் தன்மையை இயல்பாக ஏற்றுக்கொண்டதோடு, அதற்காக உளவியல் நிபுணரின் ஆலோசனையை நித்யா பெறவும் நஸ்ரின் ஏற்பாடு செய்கிறார்.
உளவியல் நிபுணருடனான சந்திப்பு நித்யாவுக்குள் இருக்கும் ஆண் தன்மையை உறுதிசெய்கிறது. தொடர்ந்து ஆணாக மாறுவதற்கான தொடக்க மருந்துகளை எடுத்துக்கொள்ள ஆரம்பிக்கிறார். இப்போது கூந்தல் இல்லை. முகத்தில் இளைஞருக்கே உண்டான தாடி, மீசையின் வளர்ச்சி. அவருக்கு இயல்பாக இஸ்லாம் மதத்தின் மீது இருந்த ஈடுபாட்டின் காரணமாகப் பெயரை நசீர் முகமது என்று மாற்றிக்கொள்கிறார்.
நஸ்ரினுக்குத் திருமண ஏற்பாடுகளை அவரின் பெற்றோர் தொடங்குகின்றனர். “என்னை அழைத்துக்கொண்டு போ… இல்லாவிட்டால் என்னை இனிமேல் நீ பார்க்கவே முடியாது..” என்னும் தகவலை நசீருக்கு அனுப்பினார் நஸ்ரின்.
கைகொடுக்கும் திருநங்கைகள்
நசீர், நஸ்ரினை அழைத்துக்கொண்டு கேரளாவுக்குச் செல்கிறார். அங்கிருக்கும் மாற்றுப் பாலினத்தவருக்கான தன்னார்வ அமைப்பான ஓயாசிஸ், அவர்களின் நிலையை நீதிமன்றத்தில் எடுத்துக் கூறுகிறது. வயதுவந்த இருவர் அவர்களின் விருப்பத்தின் பேரில் இணைந்து வாழலாம் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியது. தற்போது சகோதரன் அமைப்பின் ஆதரவோடு நசீருக்குப் பணியும் இருப்பிடமும் கிடைத்திருக்கின்றன.
“சமூகத்தில் திருநம்பிகளைப் பற்றிய விழிப்புணர்வு இல்லவே இல்லை. திருநங்கைகளுக்கு அரசு மருத்துவ மனைகளில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வதுபோல் திருநம்பியாக மாற விரும்புபவர்களுக்கும் செய்ய வேண்டும். ஆதார் அட்டையில் என்னுடைய தற்போதைய பெயர் இருக்கிறது. மற்ற ஆவணங்களிலும் பெயரை மாற்றிய பிறகு பொது மேடையில் திருநம்பி சமூகத்துக்கு முன்னுதாரணமாக எங்களின் திருமணம் நடக்கும்” என்றார் நசீர் முகமது நம்பிக்கையான குரலில்.
“இவரோடு இருக்கும்போது மிகவும் நம்பிக்கையாகவும் பாதுகாப்பாகவும் உணர்கிறேன். மீண்டும் பி.எட். படிப்பை தொடர்ந்து படிக்கப்போகிறேன்…” என்ற நஸ்ரினின் விரல்கள் அனிச்சையாய் மொபைல் போனிலிருக்கும் எஃப்.எம். ரேடியோவில் பட, அதிலிருந்து உயிர்பெற்று ஒலித்தது, ‘அல்லா உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும்’ பாடல்.
ஜெஃப்ரியாக மாறிய ஜெனிபர்!
ஜெனிபர் யலாய்னே ரூபல் என்னும் பெண்ணாகப் பிறந்த ஒருவர் ஜெஃப்ரி ரூபலாகத் தன்னைப் படிப்படியாக மாற்றிக்கொள்ளும் தருணங்களை யூடியூபில் வெளியிட்டிருக்கிறார்.
தனது இளமைக்கால ஒளிப்படங்கள், விளையாட்டில் அவர் இடம் பிடித்த தருணங்களின் ஒளிப்படங்கள், படிப்படியான மருத்துவ சிகிச்சை ஆகியவற்றுடன் ஹார்மோன் சிகிச்சைகளின் மூலமாக அவர் ஆணாக மாறியிருக்கும் நிலையையும் விவரிக்கிறது இந்தக் காணொலி.
(புரிந்துகொள்ள முயல்வோம்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: ravikumar.cv@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago