விடைபெறும் 2018: கசக்கும் உண்மைகள்

By ரேணுகா

விண்ணைத் தொட்டுவிட முடிகிற பெண்களால்கூடத் தங்கள் கால்களைப் பிணைத்திருக்கும் சங்கிலியில் இருந்து பெரும்பாலான நேரம் விடுபட முடிவதில்லை. ஆண்டுதோறும் பெண்களுக்கு நம்பிக்கை தரும் விஷயங்கள் நடந்தபடி இருந்தாலும் மற்றொருபுறம் அவர்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளும் அதிகரித்தபடியே உள்ளன. இந்த ஆண்டு பெண்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைகளே அதற்குச் சாட்சி. நம் நெஞ்சைப் பதறவைத்த சில வன்முறைகளின் தொகுப்பு இது:

 

ஆபத்தான நாடு

தாம்சன் ராய்ட்டர்ஸ் நிறுவனம் நடத்திய ஆய்வில்  உலகிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது. பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல் குறித்து  #Metoo என்ற ஹாஷ்டேகில் பதிவு செய்துவருகிறார்கள். இதன்மூலம் வந்த பதிவுகளையடுத்து இங்கிலாந்தைச் சேர்ந்த தாம்சன் ராய்ட்டர்ஸ் நிறுவனம்  ஆய்வு நடத்தி, இத்தகவலை வெளியிட்டது. 

கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் பேராயர் பிராங்கோ மூலக்கல் மீது பாலியல் வன்முறை புகார் அளித்தார். சம்பந்தப்பட்ட பேராயரைக் கைதுசெய்யக்கோரி பல்வேறு அமைப்பினரும் கன்னியாஸ்திரிகளும்  போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையெடுத்து அவர் கைதுசெய்யப்பட்டார்.

சென்னை அயனாவரம் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய 17 பேர் மீது  குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுப் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஜனநாயகத்தின் மீதான தூப்பாக்கிச் சூடு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். காவல் துறையினர் தூப்பாக்கிச் சூடு நடத்தி, கூட்டத்தைக் கலைத்தனர்.  இதில்  17 வயது மாணவி ஸ்னோலின், வாயிலேயே  சுடப்பட்டுக் கொல்லப்பட்டார். இப்போராட்டத்தில்  13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அலட்சியத்தால் நிகழ்ந்த மரணம்

திருச்சியை அடுத்த திருவெறும் பூரைச் சேர்ந்த உஷா என்பவர், தன் கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துக் காவலர் காமராஜ் அவர்களுடைய வண்டியை நிறுத்தச் சொன்னார். ஆனால், வண்டியை நிறுத்துவதற்குள் காவலர் காமராஜ் வண்டியை எட்டி உதைத்ததால் கர்ப்பிணியான  உஷா கீழே விழுந்து தலையில் அடிபட்டு,  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து கைதுசெய்யப்பட்ட காமராஜ் அடுத்த சில மாதங்களிலேயே ஜாமீனில் வெளிவந்துவிட்டார்.

மாறாத மனநிலை

பெங்களூருவில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், டெல்லி பேருந்தில் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட மருத்துவ மாணவி நிர்பயாவின் அம்மா ஆஷா தேவி  கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற கர்நாடக முன்னாள் டிஜிபி சங்கிலியானா, நிர்பயாவின் தாயின் உடலமைப்பு குறித்து மோசமாக விமர்சித்தார்.

அவரது அருவருக்கத்தக்க பேச்சுக்குப் பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்தன. அதேபோல் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரஜித் குமார், பெண்கள் ஆண்களைப் போல் ஜீன்ஸ் அணிந்துகொண்டால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தை திருநங்கையாகவே இருக்கும் என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பெண் பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்காமல்  அவரது கன்னத்தில் தட்டினார்.

சம்பந்தப்பட்ட பெண் பத்திரிகையாளர் தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தினர். ஆளுநரின் இந்தச் செயல் பணியிடத்தில் நிகழ்த்தப்படும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஒப்பானது எனப் பெண் பத்திரிகையாளர் கூட்டமைப்பு சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.  இதையடுத்து ஆளுநர், சம்பந்தப்பட்ட பெண் பத்திரிகையாளரிடம் வருத்தம் தெரிவித்தார். இந்தப் பிரச்சினை முடிவதற்குள் பாஜகவைச் சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர், பெண் பத்திரிகையாளர்களையும் ஒட்டுமொத்த ஊடகத் துறையினரையும் மிக மோசமாக விமர்சித்தார்.

இதனால் அவர் மீது பெண் பத்திரிகையாளர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.  அவரைக் கைதுசெய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டபோதும்  எஸ்.வி. சேகர் தலைமறைவாக இருந்தார். பின்னர்  எழும்பூர்  நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற்றார். தற்போது அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

அதேபோல் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெண் பத்திரிகையாளரின் கேள்விக்குப் பதிலளிக்காமல், “உங்களுக்குக் கண்ணாடி அழகாக இருக்கிறது” என்று சொன்னதும் சர்ச்சைக்கு வித்திட்டது.

கொல்லுமோ காதல்?

சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவி அஸ்வினி, கல்லூரி வாசலிலேயே கொலை செய்யப்பட்டார். அஸ்வினியைக் காதலித்துவந்த அழகேசன் என்பவர், அஸ்வினியைக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொள்ள முயன்றார். ஆனால், அங்கிருந்த பொதுமக்கள் அவரைப் பிடித்துக் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

உயிர் குடித்த பிரசவம்

திருப்பூர்  மாவட்டத்தைச் சேர்ந்த கிருத்திகாவுக்கு அவருடைய கணவர், நண்பர் இருவரும் யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்துள்ளனர். குழந்தை பிறந்த சில மணிநேரத்திலேயே அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்பட்டு கிருத்திகா உயிரிழந்தார். நண்பரின் அறிவுறுத்தலால் இயற்கை மருத்துவம் என்ற பெயரில் பெண்ணின் உயிரைப் பறித்திருக்கிறார்கள்.

வன்முறையின் உச்சம்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் எட்டு வயதுச் சிறுமி, இந்துக் கோயிலுக்குள் வைத்து  எட்டுப் பேரால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுக் கொடூரமான  முறையில் கொல்லப்பட்டார். இதில் குற்றம்சாட்டப்பட்ட எட்டுப் பேர் கைதுசெய்யப்பட்டு வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.

கொடூர மரணங்கள்

சேலம் மாவட்டம்  தாளவாய்ப்பட்டி கிராமத்தைச்  சேர்ந்தவர் 13 வயது சிறுமி, தன் பக்கத்து வீட்டைச் சேர்ந்த தினேஷ்குமார் என்பவரால் கழுத்தறுக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். தினேஷ்குமார் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதைத் தன் அம்மாவிடம் தெரிவித்த காரணத்தாலேயே படுகொலை செய்யப்பட்டார். தினேஷ்குமார்  குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்தக் கொடூரச் செய்தியின் ரணம் ஆறுவதற்குள்ளாகவே  தர்மபுரி மாவட்டம் சிட்லிங்கி கிராமத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு  மாணவி பாலியல் வல்லுறவாலும்,  காவல் துறையின் அலட்சியத்தாலும் கொல்லப்பட்டார்.  அந்த மாணவி இயற்கை உபாதைக்காக அருகிலிருந்த காட்டுக்குள் செல்ல, அங்கே வந்த ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த ரமேஷ், சதீஷ்  இருவரும் மாணவியைப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கினர்.

இதுகுறித்துக் காவல் துறையினரிடம் தெரிவித்தபோது அவர்கள் உடனடியாக வழக்குப் பதியாமல் அலைக்கழித்துள்ளனர். உடனடியாக மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்படவில்லை. அதனால், அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்தார்.

ஆணவக்கொலை எனும் அவமானம்

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பிரணய், அம்ருதவர்ஷனி இருவரும் காதலித்து மணந்துகொண்டவர்கள். அதனாலேயே பிரணய், கூலிப்படையினரால் வெட்டிக் கொல்லப்பட்டார். மகள் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டதால் அம்ருத வர்ஷினியின் தந்தையே இக்கொலைக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

கேரளத்தைச் சேர்ந்த நீனு, ஜோசப் இருவரும் காதல் மணம் புரிந்துகொண்டனர். மணமான மூன்றாவது நாளே  நீனுவின் குடும்பத்தினர் ஜோசப்பைக் கடத்தி, கொலை செய்தனர். இந்தக் குற்றத்தில் ஈடுபட்ட நீனுவின் தந்தை, சகோதரர்கள் உட்பட, கொலையில் ஈடுபட்ட 14 பேர்  கைதுசெய்யப்பட்டனர்.

மும்பையைச் சேர்ந்த மருத்துவ மாணவி அனுராதா, ஸ்ரீஷில் பிராஜ்தார் என்பவரை மணந்துகொண்டார்.  இதனால் அனுராதாவின் பெற்றோரே  அவரைக் கொன்றுவிட்டனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஸ்ரீஷிலும் அனுராதாவின் கல்லறை அருகே சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியைச் சேர்ந்த நத்தீஷ், சுவாதி இருவரும் காதலித்து, சாதி மறுப்புத் திருமணம் செய்துக்கொண்டதால் சுவாதியின் தந்தையும் உறவினர்களும் அந்தத் தம்பதியைக் கொன்று ஆற்றில் வீசினர். இந்தியாவில் கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட ஆணவக் கொலைகள் பதிவாகியுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

மேலும்