தங்களுக்குக் கிடைக்கும் அவமானத்தைக் கூட வெகுமானமாக மாற்றும் வல்லமை யைத் திருநங்கைகள் சமூகம் தொடர் போராட்டங்களாலும் தன்னம்பிக்கையாலும் பெற்றிருக்கிறது. அத்தகைய நம்பிக்கையைத் தன் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தியதுடன் தன்னைப் போன்ற திருநங்கைகளின் கலை சார்ந்த வாழ்க்கைக்கும் பொருளாதாரத் தற்சார்புக்கும் உதவும் பணியைத் தன்னுடைய ஃபார்ம் ஃபவுண்டேஷன் மூலமாகச் செய்து வருகிறார் திருநங்கை நிலா.
பள்ளிப் பருவத்திலேயே தனக்குள் பெண்மையை உணர்ந்த நிலாவுக்கு, பலவிதமான கசப்பான அனுபவங்கள் பள்ளியில் ஏற்பட்டிருக்கின்றன. பள்ளி மைதானத்தில் ஸ்கவுட் பயிற்சிக்காகக் குழுமியிருக்கும்போது 1, 2 என்று கூப்பிட்டு வரிசையில் நிற்கவைக்கும் போது 9 என்ற எண்ணைக் கூறும்போதுதான் நிலாவை அழைத்து வரிசையில் நிற்க வைப்பாராம் அவருடைய பயிற்சியாளர். ஒவ்வொரு ஸ்கவுட் பயிற்சின் போதும் எல்லா மாணவர்களும் சிரிக்கும் வகையில் இந்தக் காட்சி அரங்கேறுமாம்.
காதல் தந்த காயம்
பள்ளியில் நடக்கும் கொடுமை குறித்து நிலா அவருடைய தந்தையிடம் கூறியிருக்கிறார். அதற்கு அவர், “ஆம்பளைப் பையனா லட்சணமா நிமிர்ந்து நடக்கணும். ஆம்பளைப் பசங்ககூட விளையாடணும். எப்ப பார்த்தாலும் பொண்ணுங்ககூட நின்னுட்டிருந்தா இப்படித்தான் நடக்கும்” என்று அறிவுரை சொன்னதோடு, நிலாவை கராத்தே வகுப்பிலும் சேர்த்திருக்கிறார். காற்றில் கால்களைச் சுழற்றும் கராத்தே பயிற்சிக்குப் போகாமல், நடனப் பள்ளியை நோக்கி நடந்தன நிலாவின் கால்கள்.
பதின் பருவத்தில் எட்டிப் பார்க்கும் காதல் உணர்வால் சக மாணவன் மீதான காதலைப் பெரும் போராட்டத்துக்குப் பின் வெளிப்படுத்தியிருக்கிறார். “இன்று இரவு 8 மணிக்குப் பூங்காவுக்கு வந்துவிடு..” என்று அவன் கூறியதை நம்பிச் சென்ற நிலாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பூங்காவில் நிலாவை வரச் சொன்னவன் அவனுடைய நண்பர்களையும் அழைத்து வந்திருந்தான். எல்லோரும் சேர்ந்து நிலாவைப் புரட்டியெடுத்திருக்கின்றனர்.
வதந்தியால் பறிபோன வேலை
பள்ளிப் படிப்பை முடித்தபின், ஒரு பிபிஓ நிறுவனத்தில் வேலை செய்தார் நிலா. அவரிடம் நேரடியாக யாரும் எதுவும் பேசாவிட்டாலும் அவருக்குப் பின்னால், அவருடைய தோற்றம் குறித்தும், பாவனைகளைக் குறித்தும் டீம் லீடரிடம் தொடர்ந்து புகார் கூறியதால், அந்த வேலையும் பறிபோனது.
18 வயதில்தான் தன்னைப் போன்ற ஒரு திருநங்கையின் அறிமுகம் நிலாவுக்குக் கிடைத்தது. இந்த நேரத்தில் வீட்டைவிட்டு வெளியேறிய நிலாவை மூத்த திருநங்கை ஒருவர் வளர்ப்பு மகளாக ஏற்றுக்கொண்டார். பல்வேறு போராட்டங்களுக்குப் பின் பி.பார்ம் படித்து முடித்தார் நிலா.
திருமணத்துக்குப் பயந்து ஓட்டம்
“வீட்டில் அண்ணனின் திருமணத்துக்குப் பின் எனக்கும் பெண் பார்க்கத் தொடங்கினர். மருத்துவரீதியாகவும், சிறப்பு பூஜைகள் மூலமாகவும் என் நிலையை மாற்ற விரும்பிய அவர்களிடம் ஆண் உடலில் இருக்கும் என்னுடைய பெண் தன்மை குறித்து எடுத்துச் சொன்னேன்.
பெற்றோர்கள் புரிந்துகொண்டாலும், உறவினர்கள் சிலர் வன்முறையைச் செயல்படுத்தத் தொடங்கிய தால், புதுக்கோட்டைக்குச் சென்றேன். அங்கே திருநங்கை சமூகத்துக்குப் பணிபுரியும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் சில ஆண்டுகள் பணிபுரிந்தேன். என் அம்மாவின் அழைப்பை ஏற்று மீண்டும் அவருடனேயே வாழ்கிறேன்” என்கிறார் நிலா.
தற்போது திருநங்கைகளுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும் பெர்ரிஃபெர்ரி அமைப்பில் கம்யூனிட்டி மேனேஜராகப் பணியாற்றுகிறார் நிலா. நன்றாகப் படித்திருக்கும் திருநங்கையரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வேலை கிடைக்க உதவிவருகிறார். இதுதவிர, பியூப்பிள் ஹெல்த் ஆக்ஷன் அண்ட் ரிசர்ச் மேனேஜ்மென்ட் ஃபவுண்டேஷன் (PHARM) மூலம் திருநங்கைகளின் கல்வி, வேலைவாய்ப்பு, அரசு அடையாள அட்டையைப் பெற உதவுதல் போன்ற பணிகளைச் செய்துவருகிறார் நிலா.
சொந்தக் காலில் நிற்பதே சுகம்
vannam-2jpg100
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தெப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுவாதி. திருநங்கையான இவரை கடைகளில் வசூல் செய்து பார்க்க முடியாது. மாறாக, திருவிழாக்கள், அரசு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் போன்ற இடங்களில் நிகழ்ச்சி நடத்தும் கலைஞராகவே பார்க்க முடியும்.
‘தாய் காவியா’ என்ற கலைக் குழுவை நடத்தி சக திருநங்கைகளின் பொருளாதார முன்னேற்றத்துக்கு வாய்ப்பளித்து வருகிறார்.
“நான் ஆணாகப் பிறந்த பெண் என்பதைச் சிறுவயதிலேயே உணர்ந்துகொண்டேன். அதன்பின் ஆண்களுடன் பழகுவதே எனக்குப் பிடிக்கவில்லை. நடனமும் சமையலும் திருநங்கைகளின் உடன் பிறந்தவை. அதனால் எனக்கும் கலைகளின் மீது ஆர்வம் ஏற்பட்டது. 7-ம் வகுப்பு படித்தபோது கரகாட்டம் ஆட ஆரம்பித்தேன்.
இளநிலைக் கணிதம் படித்துள்ளேன். கல்லூரியில் பயிலும்போது திருநங்கைகளின் அறிமுகம் கிடைத்தது. பிறகு மற்ற நாட்டுப்புறக் கலைகளையும் கற்க ஆரம்பித்தேன். எனக்குள் பெண் உணர்வு இருந்ததால் என் பெற்றோரும் என்னைப் புறக்கணித்தனர். இதனால் 5 ஆண்டுகளாக வீட்டுக்கே செல்லவில்லை. தப்பாட்டம், கோலாட்டம், கும்மியாட்டம், பெரிய கம்பாட்டம், குறும்பராட்டம் என 25 கலைகளைக் கற்றேன்.
யாரிடமும் பணம் கேட்டு நிற்கவில்லை. மாறாக, என் திறமையை வெளிப்படுத்த வாய்ப்புகளைக் கேட்டேன். சிலர் வாய்ப்பு கொடுத்தார்கள். அதுவே என் பொருளாதாரத்தை உயர்த்த துணையாக இருந்தது.
சொந்தக் காலில் நின்றேன். கௌரவமாகச் சம்பாதிப்பதால் என் பெற்றோரும் என்னை ஏற்றுக்கொண்டனர். இன்று பெற்றோருடன் என் வீட்டிலேயே இருக்கிறேன். ஊர்க் காரர்களும் என்னைப் புரிந்து கொண்டார்கள்.
பழனியம்மாள், சுபா, ஆனந்தி, சிந்து உள்ளிட்ட திருநங்கைகள் எங்கள் குழுவில் உள்ளனர். ஆண்டுக்கு 100 நிகழ்ச்சிகள்வரை கிடைக்கும்” என்கிறார் சுவாதி.
‘தாய் காவியா’ கலைக் குழுவில் 10 திருநங்கைகள் இருக்கின்றனர். எச்.ஐ.வி. விழிப்புணர்வு, அனைவருக்கும் கல்வித் திட்டம், கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம், வேளாண்மை உள்ளிட்ட அரசுத் துறை திட்டங்கள் குறித்த விழிப்புணர்வையும் கடந்த 15 ஆண்டுகளாக இந்தக் குழுவினர் ஏற்படுத்திவருகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இவர்கள் கலை நிகழ்ச்சிகளை நடத்தி யுள்ளனர். வெளி மாநிலங்களிலும் நிகழ்ச்சி களை நடத்தியிருக்கின்றனர்.
அரசு நிகழ்ச்சிகளில் ரூ.500-ம், தனியார் நிகழ்ச்சிகளில் ரூ.2000 வரையும் கூலியாகக் கிடைக்கும். இதை வைத்து வாழ்க்கையை நடத்திவருகிறோம் என்று சொல்லும் சுவாதி, ‘கலை வளர்மணி’, ‘சாதனை திருநங்கை’, ‘அப்துல் கலாம் விருது’ போன்ற விருது களைப் பெற்றிருக்கிறார்.
“சில இடங்களில் நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது திருநங்கைகள் என்பதால் எங்களை வித்தியாசமாகப் பார்ப்பவர்கள்கூட நிகழ்ச்சி முடிந்தபின் எங்களைப் பாராட்டுகின்றனர். அந்த அங்கீகாரம்தான் எங்களுக்கு வேண்டும். உணர்வுகளால்தான் ஆணாக இருந்து பெண்ணாக மாறுகிறோமே தவிர பாலியல் தேவைக்காக அல்ல.
திருநங்கைகள் அனைவருக்கும் போதிய வாய்ப்புக் கிடைத்தால் எல்லோரும் நிச்சயம் சொந்தக் காலில் நிற்பார்கள்” என்கிறார் சுவாதி.
- பேட்டி, படம்: இரா.கோசிமின்
(புரிந்துகொள்ள முயல்வோம்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: ravikumar.cv@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago