புத்தாயிரத்துக்கு முன்புவரை வெளிநாட்டு வீராங்கனைகள் கோலோச்சும் விளையாட்டில் ஒன்றாகத்தான் பாட்மிண்டன் இருந்தது. அந்த விளையாட்டில் இந்திய வீராங்கனைகளும் ஜொலிக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டியவர் சாய்னா நேவால். உலக பாட்மிண்டன் தொடரில் வெற்றிபெற்ற முதல் இந்திய வீராங்கனை; ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை; உலக பாட்மிண்டன் தரவரிசையில் முதலிடம் பிடித்த முதல் இந்திய வீராங்கனை என பாட்மிண்டனில் சாய்னா பதித்தத் தடங்கள் அழுத்தமானவை.
சாய்னா பிறந்தது ஹரியாணா என்றாலும், வளர்ந்து ஹைதராபாத்தில்தான். சாய்னாவின் அப்பா ஹர்வீர் சிங்கும் அம்மா உஷா ராணியும் பாட்மிண்டனில் மாநில அளவில் விளையாடியவர்கள். மகள் சாய்னாவை பாட்மிண்டன் விளையாட்டில் தேசிய அளவில் முன்னேற்ற வேண்டும் என்று அவர்கள் விரும்பினர்.
சாய்னாவுக்கு அவரது அம்மாதான் பாட்மிண்டன் விளையாட கற்றுக்கொடுக்கத் தொடங்கினார். ஆனால், முறையான பயிற்சி தேவை என்பதை அவர் உணர்ந்திருந்தார். அப்போது ஹைதராபாத்தில் நானி பிரசாத், கோவர்தன் ரெட்டி ஆகியோர் நடத்திய பாட்மிண்டன் பயிற்சிப் பள்ளியில் சாய்னாவைச் சேர்த்தனர். பயிற்சியின்போது அவர் இயல்பாக விளையாடியவிதம் பயிற்சியாளர்களுக்குப் பிடித்துப்போனது.
உழைப்போ உழைப்பு
ஒரு பக்கம் படிப்பு, இன்னொரு பக்கம் விளையாட்டுப் பயிற்சி என சாய்னாவுக்குச் சுமை கூடியது. அதிகாலையில் எழுந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள பயிற்சி முகாமுக்குச் செல்ல வேண்டும்; பயிற்சி முடிந்த பிறகு பள்ளிக்குச் செல்ல வேண்டும்; வீட்டுக்கு வந்த பிறகு பெற்றோருடன் பாட்மிண்டன் விளையாட்டு எனத் தினமும் இயந்திரம்போல உழைக்கத் தொடங்கினார் சாய்னா.
அந்த வயதில் பாட்மிண்டன் விளையாட்டில் அவர் காட்டிய ஈடுபாடு, உழைப்பு, விடாமுயற்சி போன்றவைதான் சாய்னாவை பின்னாளில் உலகம் போற்றும் பாட்மிண்டன் வீராங்கனையாக்கின.
குறுகிய காலத்திலேயே பாட்மிண்டன் வீராங்கனையாக உருவெடுத்த சாய்னா, 2002-ல் தேசிய அளவிலான போட்டிகளில் காலடி வைத்தார். 13 வயதுக்குட்பட்ட தேசிய சப் ஜூனியர் பாட்மிண்டன் விளையாட்டில் முதன்முறையாகப் பட்டம் வென்றார். அப்போது அவருக்கு 12 வயது. பின்னர் தேசிய அளவிலான போட்டிகளில் தனது ராஜ்ஜியத்தை விரிவுபடுத்திய சாய்னா, தேசிய அளவில் நம்பர் ஒன் வீராங்கனையாக உருவெடுத்தார்.
அதைத் தொடர்ந்து சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. 2006-ம் ஆண்டில் பிலிப்பைன்ஸில் நடைபெற்ற 4 ஸ்டார் கோப்பைக்கான போட்டிதான் அவர் பங்கேற்ற முதல் சர்வதேசத் தொடர். அந்தப் போட்டியில் 16 வயதான சாய்னா சாம்பியன் பட்டம் வென்றார். இந்தப் பட்டத்தை வென்ற ஆசியாவின் இளம் பெண் என்ற சாதனையை சாய்னா படைத்தார்.
வெற்றிக் காற்று
சர்வதேச அளவில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிவந்த சாய்னா, 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார். காலிறுதிவரை மட்டுமே முன்னேறினார். ஆனால், ஒலிம்பிக்கில் அந்த நிலைவரை முன்னேறிய முதல் இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்றார். உண்மையில், ஒலிம்பிக் போட்டி தோல்விக்குப் பிறகுதான் சாய்னாவின் பக்கம் வெற்றிக் காற்று வீச ஆரம்பித்தது.
சீன தைபே ஓபன், இந்தோனேஷியா ஓபன் ஆகிய தொடர்களில் பட்டம் வென்று அசத்திய சாய்னா, 2009-ல் உலக சூப்பர் சீரிஸில் பட்டம் வென்று வெற்றிக் கொடியை உயரப் பறக்கவிட்டார். சூப்பர் சீரிஸை வென்ற முதல் இந்திய பெண் என்ற அழியாத் தடத்தைப் பதித்தார்.
2010 முழுவதும் பாட்மிண்டன் விளையாட்டில் வெற்றி மேல் வெற்றிகளைக் குவித்தார் சாய்னா. இந்த ஆண்டில் மட்டும் இங்கிலாந்து சூப்பர் சீரிஸ், இந்திய ஓபன், சிங்கப்பூர் ஓபன், உலக சூப்பர் சீரிஸ் என அடைமழையாகக் கொட்டியது வெற்றி. 2010 டெல்லி காமன்வெல்த் போட்டியிலும் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய பாட்மிண்டன் வீராங்கனை என்ற சிறப்பும் அவருக்குக் கிடைத்தது.
ஒலிம்பிக் முத்திரை
ஆசியாவில் சீனா, மலேசியா போன்ற வீராங்கனைகள் மட்டுமே ஜொலித்த இந்த விளையாட்டில் சாய்னாவும் ஜொலிக்கத் தொடங்கினார். உச்சகட்டமாக இந்தக் காலகட்டத்தில் உலகத் தரவரிசையில் 3-ம் இடத்துக்கு முன்னேறினார். இதனால், சாய்னா மீது எதிர்பார்ப்பு கூடியது. 2012 லண்டன் ஒலிம்பிக்கில் நிச்சயம் தங்கம் வெல்வார் எனக் கணிக்கப்பட்டது.
ஆனால், அரையிறுதிவரை முன்னேறிய சாய்னா, எதிர்பாராதவிதமாகத் தோல்வியடைந்தார். அதே நேரத்தில் அரையிறுதி வரை முன்னேறிய முதல் இந்தியப் பெண், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய பாட்மிண்டன் வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார்.
பாட்மிண்டன் விளையாடத் தொடங்கியதிலிருந்தே சர்வதேசத் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்க வேண்டும் என்பது சாய்னாவின் தனியாத தாகம். இந்த லட்சியம் 2015-ல் கைகூடியது. அந்த ஆண்டு ‘ஆல் இங்கிலாந்து ஓபன் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்’ போட்டியில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை எனப் பெயரெடுத்த சாய்னா, பட்டத்தையும் வென்று பெரும் புகழை ஈட்டினார். அதே ஆண்டு இந்திய ஓபன் பட்டத்தையும் வென்ற பிறகு, சர்வதேசத் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறினார். இந்தப் பட்டியலில் முதலிடம் பிடித்த இந்திய வீராங்கனை என்ற வரலாற்றுச் சிறப்பைப் பெற்றார்.
வழிகாட்டி வீராங்கனை
ஒலிம்பிக், காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டி, ஆசிய சாம்பியன் ஷிப், உலக சூப்பர் சீரிஸ் என எல்லாப் பெரிய தொடர்களிலும் சாய்னா ஜொலித்திருக்கிறார். 2008-ல் நம்பிக்கைக்குரிய வீராங்கனை என்ற விருதை உலக பாட்மிண்டன் கூட்டமைப்பு வழங்கியது அவரது பாட்மிண்டன் பயணத்தில் முத்தாய்ப்பானது.
பாட்மிண்டன் விளையாட்டில் சாய்னா செய்த சாதனை களைப் பாராட்டி 2009-ல் ஆண்டில் மத்திய அரசு அர்ஜூனா விருதையும் 2010-ல் பத்மஸ்ரீவிருதையும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதையும் வழங்கியது. 2016-ம் ஆண்டில் பத்மபூஷண் விருதையும் பெற்றார்.
சாய்னா நேவால் பாட்மிண்டன் துறையில் ஜொலிக்கத் தொடங்கிய பிறகுதான் இந்திய பாட்மிண்டன் மீதும் புகழ் வெளிச்சம் பரவத் தொடங்கியது. சாய்னாவின் பிரமிக்கத்தக்க வெற்றியைப் பார்த்து ஏராளமான இந்திய இளம் பெண்களும் குழந்தைகளும் பாட்மிண்டன் விளையாட்டில் காலடி வைத்தனர்.
சாய்னா இந்த விளையாட்டில் குறைந்தபட்சம் தேசிய அளவில் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்று மட்டுமே சாய்னாவின் பெற்றோர் நினைத்தார்கள். ஆனால், அதையும் தாண்டி சர்வதேச அளவில் தன் பெயரை உச்சரிக்க வைத்தார் சாய்னா. இந்த வெற்றிக்குப் பின்னனியில் இருந்தது, அவருடைய அர்ப்பணிப்பும் மன உறுதியும்தான்.
பாட்மிண்டன் 2018
# இந்திய பாட்மிண்டன் வீராங்கனைகள் ஓய்வு எடுக்கக்கூட நேரம் இல்லாமல் இந்த ஆண்டு பெரிய தொடர்களில் பங்கேற்றார்கள்.
# ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டி ஒற்றையர் பிரிவின் இறுதியாட்டத்தில் சாய்னா நேவாலும் பி.வி. சிந்துவும் மோதினார்கள். சாய்னா தங்கப் பதக்கத்தை வெல்ல, பி.வி. சிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
# காமன்வெல்த் மகளிர் இரட்டையர் போட்டியில் அஸ்வினி பொன்னப்பாவும் சிக்கி ரெட்டியும் வெண்கலப் பதக்கத்தை வென்றார்கள்.
# இந்தோனேசிய தலைநகர் ஜகார்தா மற்றும் பாலெம்பெங் நகரங்களில் நடைபெற்ற ஆசியப் போட்டியில் பி.வி. சிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். சாய்னா வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
# சீனாவின் உஹன் நகரில் நடைபெற்ற ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் ஒற்றையர் போட்டியில் சாய்னா நேவால் வெண்கலப் பதக்கம் வென்றார்.
# சீனாவின் நன்ஜிங் நகரில் நடைபெற்ற உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் ஒற்றையர் போட்டியில் பி.வி. சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
# சீனாவின் குவாங்ஷூ நகரில் நடைபெற்ற உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் ஒற்றையர் போட்டியில் பி.வி. சிந்து தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.
(வருவார்கள் வெல்வார்கள்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: karthikeyan.di@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago