கிராமத்து சமையல், பாரம்பரிய சமையல் என வெவ்வேறு வகையான யூடியூப் வீடியோக்கள் பிரபலமாகிவரும் நிலையில், ஹேமா சுப்பிரமணியத்தின் சமையல் வீடியோக்கள் தனித்துக் கவனம் ஈர்க்கின்றன. சிலையைச் செதுக்கும் நேர்த்தியோடு கச்சிதமாகச் சமைக்கிறார் ஹேமா.
வீட்டில் உள்ள பொருட்களைக்கொண்டே எளிய முறையில் அற்புதச் சுவையில் உணவு வகைகளைச் சமைத்துவிடுவது ஹேமாவின் சிறப்புகளில் ஒன்று. இதுவரை 1500-க்கும் மேற்பட்ட இந்திய, அயல்நாட்டு உணவு வகைகளைச் செய்து ஃபேஸ்புக்கில் வீடியோவாகப் பதிவேற்றியிருக்கிறார். இவருக்கு முப்பது லட்சம் பார்வையாளர்கள் இருக்கின்றனர்!
சாப்பிட மட்டும்தான் தெரியும்
விதவிதமான உணவு வகைகளைச் சமைத்து அசத்தும் ஹேமா, திருமணத்துக்கு முன்புவரை சமையலறை பக்கமே சென்றதில்லையாம். “கல்யாணம் முடிந்த கையோடு கணவருடன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டேன். அப்போதுகூட அம்மா எழுதிக்கொடுத்த சமையல் குறிப்பை வைத்து ஓரளவு சமாளித்துவிடுவேன்” என்று சொல்லும் ஹேமா, ஒரு முறை அம்மாவிடம் சமையல் குறிப்பு கேட்டு பிரியாணியைச் சமைத்து முடிக்கவே நாலு மணி நேரம் ஆகிவிட்டதாம்.
கணவரால் கிடைத்த வாய்ப்பு
வெளிநாட்டு சேனல்களில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சிகள்தாம் ஹேமாவின் கவனம் சமையல் மீது திரும்பக் காரணம். “சைவம், அசைவம் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லாவிதமான உணவையும் சாப்பிடுவேன். எந்த ஊருக்குப் போனாலும் அங்குள்ள உணவைச் சுவைத்துவிடுவேன். நட்சத்திர ஹோட்டல் முதல் சாலையோர உணவுக்கடைவரை எல்லா இடங்களிலும் சாப்பிடுவேன்.
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சமையல் நிகழ்ச்சி களைப் பார்ப்பது மிகவும் பிடிக்கும். எப்படி அவர்களால் மட்டும் இவ்வளவு அருமையாகச் சமைக்க முடிகிறது என நினைப்பேன். பின்னர் சென்னைக்கு மீண்டும் வந்தபோது என் கணவர் அவரது மென்பொருள் நிறுவனத்தின் வீடியோவுக்காக என்னைச் சமைக்கச் சொன்னார். அந்த வாய்ப்பைத் தவறவிடக் கூடாது என்பதற்காக ஒப்புக்கொண்டேன்” என்று சொல்லும் ஹேமா, முதன்முதலில் பாவ்பாஜியைச் செய்திருக்கிறார்.
ஹேமா’ஸ் பிரவுனி
‘ஹேமா’ஸ் பிரவுனி’ என்ற பெயரில் சென்னையில் உள்ள பிரபல சூப்பர் மார்கெட், ஹோட்டல்களுக்கு வீட்டில் செய்த பிரவுனி கேக்குகளை விற்பனை செய்துவருகிறார். வீட்டின் மேல்தளத்தில் படப்பிடிப்பு நடக்கும் அறைக்குள் நுழைந்ததுமே கோக்கோவின் வாசம் நாசியை நிறைக்கிறது. “அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த பிறகு ஏதாவது சுயமாகத் தொழில் தொடங்க நினைத்திருந்தேன். அப்படித் தொடங்கியதுதான் பிரவுனி கேக் தயாரிப்பு.
இதற்காக சென்னையில் எங்கெல்லாம் பிரவுனி கேக் கிடைக்கிறது என ஒரு சின்ன சர்வே எடுத்தோம். பத்து வருஷத்துக்கு முன்னாடி பிரவுனி கேக் சென்னையில் பிரபலமாக இல்லை. இதனால் தைரியமாக இந்தத் தொழிலில் இறங்கினேன். கேக் தயாரிப்பில் உதவியாக இருந்தவர்கள் எல்லாம் வேலையைவிட்டு நின்றுவிட, ஆர்டர் எடுப்பது, பிரவுனி தயாரிப்பது, டெலிவரி கொடுப்பது எல்லா வேலைகளையும் நானே செய்தேன். அதுதான் நான் சுயமாகப் பலவற்றைக் கற்றுக்கொள்ளும் தருணமாக இருந்தது; என் தன்னம்பிக்கையும் அதிகரித்தது” என்கிறார் ஹேமா சுப்பிரமணியன்.
கடந்த பத்து வருடங்களாக ‘ஹோம் குக்கிங்’ என்ற பெயரில் சமையல் வீடியோக்களை வெளியிட்டுவருகிறார். ஆனால், பேஸ்புக்கில் தனியாகப் பக்கம் தொடங்கிய பிறகே வீடியோக்கள் பிரபலமடையத் தொடங்கியதாகக் குறிப்பிடுகிறார். ஏராளமான சமையல் வீடியோக்களைப் பதிவேற்றியிருந்தாலும் ஹைதராபாத் மட்டன் தம் பிரியாணி வீடியோதான் தன்னைப் பிரபலமாக்கியது என்கிறார் அவர்.
“அந்த வீடியோவை மட்டும் மூன்று லட்சம் பேர் பார்த்துள்ளனர். அதேபோல் பச்சைப் பயறு இட்லி, தானிய வகைகளில் செய்யப்படும் உணவு வகைகளும் பலரைச் சென்றடைந்துள்ளன. ஃபேஸ்புக் நிறுவனம் தங்களுடைய இணைய வீடியோவால் ஒருவரால் சாதிக்க முடியும் என்பதற்கு என்னை உதாரணமாகத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
தினமும் எல்லோரும் செய்கிற ஒரு வேலையை வீடியோவாக வெளியிட்டால் எடுபடுமா என யோசித்தேன். ஆனால், அதில் புதுமை, எளிமை, குறைந்த நேரம் ஆகியவற்றை அடித்தளமாகக்கொண்டு செயல்பட்டேன். அது எனக்கு வெற்றியைத் தந்திருக்கிறது” என்கிறார்.
செட்டிநாடு சிக்கன் குழம்பு, மீன் பிரியாணி, காளான் புலவ், பரோட்டா, மட்டன் பெப்பர் சுக்கா, பனீர் மிளகு கிரேவி, ஹோட்டல் சாம்பார், காலா ஜாமூன், பிரெட் ரவா கேசரி, மலாய் லட்டு என ஆயிரத்துக்கும் மேற்பட்ட உணவு வகைகளைச் செய்யக் கற்றுத்தரும் ஹேமா சுப்பிரமணியன் இதுவரை எந்தச் சமையல் கலைஞரிடமும் சமையல் கற்றுக்கொள்ளவில்லை!
“எல்லாவகையான சமையலையும் வீட்டிலேயே செய்ய முடியும் என்பதுதான் என் பாலிசி. ஒரு சமையலைப் பற்றிப் படித்துத் தெரிந்துகொள்வதைவிடப் பார்த்துவிட்டுச் செய்வது எளிது. இந்தியாவிலும் வெளிநாட்டிலும் தனியாகச் சமையல்செய்து கஷ்டப்படுகிறவர்களும், சமையல் கற்றுக்கொள்ளத் தொடங்கும் பெண்களும் என் சமையல் வீடியோக்கள் பயனுள்ளவையாக இருக்கின்றன என்கிறார்கள்.
ஒரு சிலர் சமையல் வீடியோக்களை எடுத்து இரண்டு, மூன்று வருடத்திலேயே நிறுத்திவிடுவார்கள். ஆனால், சாதிக்க வேண்டும் என்ற உந்துதல்தான் என்னால் இத்தனை வருடங்கள் கடந்தும் இந்தத் துறையில் நிலைத்து நிற்க முடிந்துள்ளது” என்கிறார் ஹேமா.
ஹேமா சுப்பிரமணியத்தின் சமையல் வீடியோக்களைக் காண இணையச் சுட்டி: http://bit.ly/2Q79Cac
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago