கும்பகோணம், கடலூர், திருநெல்வேலி வாசகிகளின் மனங்களைக் கொள்ளையடித்த ‘இந்து தமிழ் - பெண் இன்று’ மகளிர் திருவிழா, கடந்த வாரம் திண்டுக்கல் வாசகிகளை அசத்தியது. திண்டுக்கல் எம்.வி.முத்தையா அரசு மகளிர் கல்லூரியில் நவம்பர் 25 அன்று நடைபெற்ற இந்த மகளிர் திருவிழாவில் வாசகிகள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.
பெண்களின் அன்பான, அறிவான, ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு உதவும் வகையிலான சிறப்புரைகள், சிரிப்பதற்கு வாய்ப்பாக அமைந்த பேச்சரங்கம், எழுச்சி நிறைந்த பறையாட்டம், கொண்டாட்டமான போட்டிகள், பரிசுகள் எனத் திண்டுக்கல் வாசகிகளைப் பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியது இந்த மகளிர் திருவிழா.
எம்.வி.முத்தையா அரசு மகளிர் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் கே. நாகநந்தினி சிறப்புரை வழங்கினார். காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜாகிதா பேகம் மகளிர் முன்னேற்றம் குறித்துச் சிறப்புரையாற்றினார். “கல்வியில் சிறந்தால் மட்டுமே பெண்கள் முன்னேற முடியும்.
பெண்கள் வாழ்க்கையில் என்னவாக வேண்டும் என்பதைத் திட்டமிட வேண்டும். அவர்கள் தேர்ந்தெடுக்கும் துறையில் விடாமுயற்சியுடனும் துணிச்சலுடனும் மனம் தளராமல் செயல்பட வேண்டும்” என்று அவர் பேசினார்.
பெண்களின் மனநலம் குறித்து உளவியல் மருத்துவர் ஷர்மிளா பாலகுரு சிறப்புரையாற்றினார். “ஆண்களைவிடப் பெண்களிடம் இரண்டு மடங்கு அளவில் மனநோய் காணப்படுகிறது. இதற்கு ஹார்மோன் மாற்றங்கள், மாதவிடாய், திருமணம் போன்றவை காரணமாக இருக்கின்றன. பெண்கள் கட்டாயமாக 6-8 மணிநேரம் தூங்குவதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்.
நடைப்பயிற்சி, யோகா, உடற் பயிற்சி, நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுவது, வாசிப்பது, பாடுவது, ஆடுவது என மனதுக்குப் பிடித்த ஏதாவது ஒன்றை வழக்கமாகக் கடைப்பிடிக்க வேண்டும். இறந்த காலத்தில் வாழ்வதைத் தவிர்த்து நிகழ் காலத்தில் இந்த நிமிடத்தில் வாழத் தொடங்கினாலே மனநலம் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கலாம்” என்று ஷர்மிளா பேசினார்.
நகைச்சுவைப் பேச்சரங்கம்
‘சின்னத்திரை பெண்களைச் சீர்படுத்துகிறதா, சீரழிக்கிறதா?’ என்ற தற்காலத்துக்கு ஏற்ற தலைப்பில் நடந்த பேச்சரங்கில் நடுவராக மதுரை செந்தமிழ்க் கல்லூரியின் துணை முதல்வர் ரேவதி சுப்புலட்சுமி பங்கேற்றார். பேச்சாளர்களாக ஆசிரியர்கள் அசிலா, நாகபுஷ்பம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்தப் பேச்சரங்கம் சின்னத்திரையின் சாதக பாதகங்களை வாசகிகளுக்கு நகைச்சுவையுடன் விளக்கியது. சின்னத்திரை பெண்களை சீரழிக்கிறது என்று நடுவர் வழங்கிய தீர்ப்பை வாசகிகள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். அதைத் தொடர்ந்து, எரிபொருள் பாதுகாப்பு குறித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் விற்பனை மேலாளர் தியாகராஜன் உரையாற்றினார்.
உற்சாகமூட்டிய பறையாட்டம்
திண்டுக்கல் சக்தி கலைக்குழுவினரின் பறையாட்டம், வாசகிகளை உற்சாகப்படுத்தியது. கலைக் குழுவினரின் பறையாட்டம் அரங்கத்தைக் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு மேல் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. இந்த மகளிர் திருவிழாவில், பறையின் பாரம்பரியத்தை வாசகிகள் கொண்டாடித் தீர்த்தனர்.
போட்டிகளும் பரிசுகளும்
கும்பகோணம், கடலூர், திருநெல்வேலியைப் போலவே திண்டுக்கல் மகளிர் திருவிழாவிலும் உற்சாகமான போட்டிகள் வாசகிகளை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தின. வாசகிகளின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் ரங்கோலி, மைமிங், நடனம் போன்ற போட்டிகள் நடைபெற்றன. வாசகிகளை மகிழ்ச்சியாக விளையாட வைக்கும் நோக்கத்தில் பலூன் உடைத்தல், பந்து பாஸ்செய்தல், கணவருக்குக் காதல் கடிதம் எழுதுதல் போன்ற சுவாரசியமான போட்டிகளும் நடைபெற்றன.
அத்துடன், விழாவின் நடுவே திண்டுக்கல்லைப் பற்றிச் சிறப்புக் கேள்விகள் கேட்கப்பட்டு, அதற்குச் சரியான பதிலளித்த வாசகிகளுக்கும் கொடுக்கப்பட்ட வார்த்தையில் மூன்று பாடல்களைப் பாடிய வாசகிகளுக்கும் உடனடியாக ஆச்சரியப் பரிசுகளும் வழங்கப்பட்டன. வாசகிகள் முத்துலக்ஷ்மியும், ராஜேஷ்வரியும் பம்பர் பரிசுகளைத் தட்டிச்சென்றனர். விழாவில் கலந்துகொண்ட அனைத்து வாசகி களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. சின்னத்திரை தொகுப்பாளினி தேவி கிருபா இந்த நிகழ்வுகளைச் சிறப்பாகத் தொகுத்து வழங்கினார்.
திண்டுக்கல் மகளிர் திருவிழாவை ‘இந்து தமிழ்’ நாளிதழுடன் எம்.வி.முத்தையா அரசு மகளிர் கல்லூரி, சேப்டி பார்ட்னராக இந்தியன் ஆயில் நிறுவனம், பொன்வண்டு சோப், சௌபாக்யா, பொன்மணி வெட்கிரைண்டர், மீனாஸ் அப்பளம், எஸ்.வி.எஸ். மாவு, அன்னபிரியம் மசாலா, அரசி வாகை மரச்செக்கு எண்ணெய், ஒரிஜினல் வாசவி ஜூவல்லரி மார்ட், ருத்ரா வையர்டெக், சூப்பர் டிவி, பசுமை எப்.எம்., விவேரா கிராண்டே, கருணாஸ் ரத்தினவிலாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்கின.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago