உலகில் நம்பத்தகாத விஷயங்களில் ஒன்று புள்ளிவிவரங்கள் எனச் சிலர் சொல்லக்கூடும். ஆனால், அனைத்துப் புள்ளிவிவரங்களையும் அப்படி ஒதுக்கிவிட முடியாது. நிதர்சனத்துடன் ஒத்திசைவானவற்றை நாம் கண்டுகொண்டே ஆக வேண்டும். ‘பெண்களுக்கு வீடுதான் மிக ஆபத்தான இடம்’ என ஐ.நா. வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கையும் அவற்றில் ஒன்று.
பெண்கள் மீதான வன்முறையை ஒழிக்கும் முனைப்புடன் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 25 ‘ஆரஞ்சு தின’மாகக் கடைப்பிடிக்கப்பட்டுவரும் சூழலில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் ஆய்வறிக்கை பெண்களின் நிலை குறித்த உண்மைக்கு மற்றுமொரு சான்று.
ஐ.நா.வின் போதை மற்றும் குற்றப்பிரிவு அலுவலகம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் கடந்த ஆண்டு உலகம் முழுவதும் கொல்லப்பட்ட பெண்களில் 58 சதவீதத்தினர் தங்கள் இணையராலோ முன்னாள் இணையராலோ குடும்ப உறுப்பினராலோ கொல்லப்பட்டிருக்கிறார்கள் எனத் தெரியவந்திருக்கிறது.
இது தவிர தற்கொலை, சந்தேகத்துக்கு இடமான மரணங்கள், சாதி ஆணவப் படுகொலைகள் போன்றவை தனி. ஏற்கெனவே, ‘பெண்கள் வாழத் தகுதியில்லாத நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது’ என தாம்சன் ராய்ட்டர்ஸ் நிறுவனம் வெளியிட்ட கருத்துக் கணிப்பையும் ஐ.நா.வின் இந்த ஆய்வுடன் பொருத்திப்பார்க்க வேண்டும்.
கவனம்பெறாத வன்முறை
பாரம்பரியம், பண்பாடு போன்றவற்றுக்காக மற்ற நாடுகளால் பெருமிதத்துடன் பார்க்கப்படுகிற நம் நாட்டில்தான் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் அதிக அளவில் நடக்கின்றன. பெண்களுக்கு வாக்குரிமை, சொத்து ரிமை, கல்வி கற்கும் உரிமை போன்ற பல உரிமைகள் உண்டு என்று சட்டம் சொல்கிற இந்த நாட்டில்தான் பல பெண்கள் பேசவும் உரிமையற்று இருக்கி றார்கள்.
குழந்தைகள் மீதான வன்கொடு மைக்கு எதிரான சட்டம், குடும்ப வன்முறைத் தடைச் சட்டம், வரதட்சணைக் கொடுமைக்கு எதிரான சட்டம், பெண்களுக்கான பணியிடப் பாதுகாப்புச் சட்டம் எனப் பெண்களுக்கு ஆதரவாகப் பல்வேறு சட்டங்கள் அமலில் உள்ள இங்கேதான் பெண்கள் அதிக அளவில் குடும்ப வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.
கிடைக்காத விடுதலை
குற்றப் பதிவேட்டில் எண்ணிக்கையாக மாறுகிறவற்றைத் தவிர சமூகத்தின் கவனத்துக்கே வராத வன்முறைகள் ஏராளம். பெண்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்து வதற்காக இந்தச் சமூகம் கட்டமைத்திருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரத் தற்சார்பு, சட்டங்கள் போன்ற எதுவுமே ஏன் பெண்ணுக்கு அச்சமில்லாத, வன்முறையற்ற வாழ்க்கையைச் சாத்தியப்படுத்தவில்லை?
பெண் என்பவள் எப்போதும் தன் இருப்பை வெளிப்படுத்தாதவளாக இருக்க வேண்டும்; ஆணின் தேவையறிந்து செயல்பட வேண்டும்; பேசுவதற்குத்தான் வாய் இருக்கிறது என்பதையும் மறந்துவிட வேண்டும்; எப்போதும் ஆணின் உடைமைப் பொருளாக இருக்க வேண்டும்… இப்படி இன்னும் பல்வேறு வரையறைகள் பெண்ணுக்கு இங்கே வகுக்கப்பட்டிருக்கின்றன.
பல்வேறு உயர் பதவிகளைப் பெண்கள் வகிக்கும் இந்தக் காலத்தில் இதைச் சொல்வது பழமைவாதமாகத் தெரியலாம். ஆனால், நிதர்சனம் இதுதானே? கல்வி, பொருளாதாரம் என எந்தவொரு முன்னகர்வும் பெண்ணுக்கு விடுதலையைத் தந்துவிடவில்லையே?
தண்ணீர் மனைவிகள்
வேறு எதனோடும் ஒப்பிட முடியாத அளவுக்குக் கொண்டாடப்பட்டுக்கொண்டி ருக்கிற இந்தியக் குடும்ப அமைப்புதான் பெண்களை மிக அதிகமாகச் சுரண்டுகிறது. அப்படிச் சுரண்டப்படுவதுதான் பெண்ணின் பெருமை என்று பெண்களையே நம்பவைத்துப் பேசவைக்கிறது. இந்தியக் கிராமங்கள் பலவற்றில் ஒரு குடம் தண்ணீருக்காகப் பெண்கள் செலவிடும் நேரமும் உழைப்பும் அசாத்தியமானவை.
பல கி.மீ. தொலைவு நடந்து சென்று தண்ணீரைச் சேகரித்து வருகின்றனர். சில வட இந்தியக் கிராமங்களில் தண்ணீர் பிடிப்பதற்காகவே இரண்டு அல்லது மூன்று பெண்களை மணந்துகொள்ளும் முறையும் இருக்கிறது. அவர்களைப் பொறுத்தவரை அது பெண்ணுக்கு இழைக்கப்படும் அநீதியல்ல, வாழ்க்கை முறை.
வன்முறையின் களம்
ஒவ்வொரு வன்முறையும் இப்படித்தான் நியாயப்படுத்தப்பட்டுச் செயல்படுத்தப்படுகிறது. தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையின்படி 2012 முதல் 2016-க்கு இடைப்பட்ட பெண்கள் மீதான பாலியல் வன்முறை வழக்குகளில் 40 சதவீதத்தினர் குழந்தைகள். தங்கள் மீது வன்முறை நிகழ்த்தியவர்கள் யார் என்பது அந்தக் குழந்தைகளுக்குத் தெரியும் என்றும் அந்த அறிக்கை சொல்கிறது. குற்றவாளிகளில் 95 சதவீதத்தினர், பாதிக்கப்பட்ட குழந்தையின் நெருங்கிய உறவினர் அல்லது ஒரே வீட்டில் வசிப்பவர்.
வீடுதான் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு என்று சொல்கிறோம். வீட்டுக்குள் கொடுமை நடந்தால் அந்தக் குழந்தைகள் எங்கே செல்வார்கள்? பெரும்பாலான குழந்தைகள் தங்கள் மீது செயல்படுத்தப்படும் வன்முறையை வெளியே சொல்ல அச்சப்பட்டு மறைத்துவிடுகின்றனர். அப்படியே மீறி அவர்கள் சொன்னாலும் நம் குடும்ப அமைப்பு, குற்றம் செய்த ஆண்களைப் பாதுகாக்க முனைகிறதே தவிர பாதிக்கப்பட்ட குழந்தைக்கு ஆதரவாக இருப்பதில்லை.
குழந்தைப் பருவத்தில் இருந்தே இப்படியான வன்முறைகளுக்குப் பெண்கள் பழகிவிடுகிறார்கள். வீடு என்பது வன்முறையுடன் இணைந்ததாகவே பெரும்பாலான பெண்களுக்கு ஆகிவிடுகிறது. வன்முறை என்பது பாலியல் வல்லுறவும் அதைத் தொடர்ந்த கொலையும் மட்டுமல்ல.
உழைப்புச் சுரண்டல், பாலினப் பாகுபாடு, ஒடுக்குதல், அங்கீகாரம் இன்மை உள்ளிட்ட பெண்ணுக்கு எதிரான அனைத்துமே வன்முறைதான். அந்த வன்முறை செயல்படுத்தப்படும் களமாகப் பலருக்கும் வீடே அமைந்துவிடுகிறது. பெரும்பாலான வீடுகளில் பெண்களின் இருப்பு கண்டுகொள்ளப்படுவதே இல்லை.
பிள்ளைகளைப் பெற்று வளர்ப்பதும் வீட்டு வேலை செய்வதும் அவர்களின் வாழ்நாள் கடமையாகிப் போகின்றன. இது குறித்துப் பெண்கள் எழுப்பும் கேள்விகள் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகின்றன. அல்லது அடங்கிப் போவதுதான் குடும்பப் பெண்ணுக்கு அழகு என்று அறிவுரையே பதிலாகக் கிடைக்கிறது.
வார்த்தை வன்முறை
பொதுவான குடும்ப ஒடுக்குமுறைகளைத் தாண்டி கணவன் – மனைவி உறவுமுறையில் ஆணே அதிகாரம் படைத்தவனாக இருக்கிறான். பெண்ணின் செயல்பாடுகள் அனைத்தையும் ஆணே தீர்மானிக்கிறான். இவற்றில் விதிவிலக்குகள் இல்லாமல் இல்லை. குடும்ப வன்முறைக்கு ஆண்களும் ஆளாகிறார்கள். ஆனால், பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறையுடன் ஒப்பிடும்போது அது குறைவுதான்.
காரணம் குடிகாரக் கணவனையோ சந்தேகப்படும் கணவனையோ பொறுத்துக்கொண்டு வாழும் நிலையே பல பெண்களுக்கும் விதித்திருக்கிறது. குடியின் தொடர்ச்சியாக நீளும் சந்தேகம், பெண்ணின் மனத்தையும் நிம்மதியையும் சிதைத்துவிடுகிறது. வீட்டுக்குள் அதிகாரப் பகிர்வில் ஏற்படும் போட்டியால் பெண்ணைப் பெண்ணே ஒடுக்கும் வன்முறையும் நடக்கிறது.
ஒடுக்குதலுக்கும் சுரண்டலுக்கும் ஆளாகிற பெண்தான் வாய்ப்பு கிடைக்கிறபோது தன் வீட்டுக்குள் மற்றொரு பெண்ணை ஒடுக்கத் துணிகிறார். எந்த வகையில் பார்த்தாலும் பெண்ணே ஒடுக்கப்படுகிறார்.
வீட்டுக்குள் நடக்கிற வன்முறைகளில் முக்கியமானது வார்த்தை வன்முறை. ஒரு பெண்ணை இல்லாமலாக்க நினைத்தால் அவளது நடத்தை, ஒழுக்கம் போன்றவை குறித்துக் கேள்வியெழுப்பலாம் என்பது ஆணுக்கு வசதியாக இருக்கிறது. இந்த ஒழுக்க மதிப்பீடுகள் ஆணை எதுவுமே செய்வதில்லை. என்ன இருந்தாலும் அவன் ஆண் என்கிற பெருமிதத்துக்குள் நிமிர்ந்து நிற்பான். பெண்ணுக்கு அப்படியல்ல.
ஒவ்வொரு கேள்வியின்போதும் தன்னை நிரூபித்தாக வேண்டிய கட்டாயம் பெண்ணுக்கு இருக்கிறது. வீடு மட்டுமல்ல, கல்வி நிலையங்கள், பணியிடங்கள், போக்குவரத்து, பொது இடங்கள் என அனைத்திலும் வெவ்வேறு வகையிலான வன்முறையைப் பெண்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஒன்றில் இருந்து தப்பித்தால் இன்னொன்று.
முன்வைக்கப்படும் கேள்வி
பெண்கள் மீதான கொடுமைகளைக் கண்டித்து இயங்கங்களும் பரப்புரைகளும் எழாமல் இல்லை. அவற்றையும் மீறி ஒவ்வொரு நாளும் வன்முறையின் வாயில் விழுந்து எழுந்து பிழைப்பதே பெண்களுக்குப் பெரும்பாடாக இருக்கிறது.
பெண்களின் நிலை குறித்துப் பேசினாலே அவற்றை வெற்றுப் புலம்பலாக எண்ணிக் கடக்கிறவர்களே இங்கு அதிகம். சமூக ஊடகங்களில் ஆடுகிற, பாடுகிற, நடிக்கிற பெண்களை உதாரணமாகக் காட்டி பெண்கள் இன்று எவ்வளவோ முன்னேறிவிட்டார்கள்; ஆண்கள்தாம் அடங்கி நடக்க வேண்டியிருக்கிறது என்று சொல்கிறவர்களும் இங்கே உண்டு.
அந்தப் பெண்களையும் உள்ளடக்கியதுதான் நம் சமூகம் என்பது எவ்வளவு உண்மையோ அதைப் போலவே, அவர்கள் மட்டுமே பெண்களின் நிலைக்கான சான்று அல்ல என்பதும் மறுக்க முடியாத உண்மை. இவற்றையெல்லாம் ஆண் செய்தால் பொழுதுபோக்குக்காகச் செய்கிறான் என்று சொல்லிவிட்டுக் கடந்துவிடுகிற சமூகம் அதையே பெண் செய்கிறபோது அவளது ஒழுக்கம், நடத்தை போன்றவற்றைக் கேள்விக்குள்ளாக்குகிறது. இது வன்முறைப் பட்டியலில் சேராதா?
குடும்பத்தைவிட வேறெந்த அமைப்பும் பெண்ணுக்குப் பாதுகாப்பு தராது என்று சொல்கிறவர்கள் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறையையும் கணக்கில்கொள்ள வேண்டும். அதற்காக எல்லாப் பெண்களும் வீட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்பதில்லை. நம் முன் வைக்கப்படும் கேள்வியெல்லாம் குடும்ப அமைப்புக்குள்ளும் வீட்டுக்குள்ளும் பெண்கள் நிம்மதியாக, அச்சமின்றி இருக்கிறார்களா என்பதுதான்.
நீங்க என்ன சொல்றீங்க?
தாய்வழிச் சமூகம் மறைந்து பெண்கள் இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்ட காலத்தில் இருந்தே பெண்கள் மீதான ஒடுக்குதலும் தொடங்கிவிட்டது. உரிமை கேட்டு எழும் குரல்களை அடக்க, சட்டங்களும் திட்டங்களும் போடப்பட்டாலும் சிந்தனை அளவில் பெரிதாக எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
எல்லா நிலைகளிலும் பெண்களுக்கு இரண்டாம் இடம்தான். பாலினப் பாகுபாட்டைக் களைந்து, பெண்களின் பிரதிநிதித்து வத்தை எப்படி உறுதிசெய்வது? இதில் உங்கள் அனுபவம் என்ன, கருத்து என்ன? எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்; விவாதிக்கலாம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago