இந்திய இசை கருவி என்று நம்பும் அளவுக்கு வயலின் மாறிவிட்டது நமக்குத் தெரிந்ததுதான். அதன் மற்றொரு வகையான செல்லோவை இந்திய வாத்தியமாக மாற்றிவருகிறார் ஒரு கனடா பெண். கனத்த சாரீரத்தோடு இசையை வெளிப்படுத்தும் மேற்கத்திய வாத்தியம் செல்லோ. பேஸ் வயலின் என்று இதைச் சொல்பவர்களும் உண்டு.
கனடாவைப் பூர்வீகமாகக் கொண்ட நான்ஸி, மேற்கத்தியப் பாணியில் செல்லோ வாசிக்கும் கலைஞர். ரோமின் புகழ்பெற்ற ஃபெஸ்டிவல் ஆர்கெஸ்ட்ராவில் இருந்தவர். சிகாகோவின் சிவிக் ஆர்கெஸ்ட்ரா, இத்தாலியின் ஃபுளாரன்ஸ் ஆர்கெஸ்ட்ராவிலும் செல்லோ கலைஞராக இருந்தவர்.
1982-ல் நான்ஸியின் இந்தியச் சுற்றுப்பயணம், அவரின் வாழ்க்கையையே திசை திருப்பியது. வாரணாசியில் கேட்ட இந்திய இசை, அதுவரை அனுபவிக்காத பரவசத்தை அவருக்குள் ஏற்படுத்தியது. அதுவரை அவருக்குள் இருந்த இறுக்கம் தளர்வதாக உணர்ந்தார். கண்களில் கண்ணீரோடு, கரையும் மனதோடு இந்திய இசையை மானசீகமாக அவர் வழிபடவே ஆரம்பித்தார். அவர் கேட்டது, இந்தியாவின் பாரம்பரிய துருபத் பாணி இசை.
செல்லோ மாற்றம்
புகழ்பெற்ற துருபத் வாய்ப்பாட்டுக் கலைஞரான பண்டிட் ரித்விக் சன்யாலிடம் இசைப் பயிற்சி பெறத் தொடங்கினார். தொடர்ந்து, புகழ்பெற்ற வீணை, வாய்ப்பாட்டு சகோதரர்களான உஸ்தாத் ஸியா மொகிதீன் தாகர், உஸ்தாத் ஸியா ஃபரூதீன் தாகர் ஆகியோரிடம் செல்லோ வாத்தியத்தில் துருபத் இசையை வாசிக்கும் பயிற்சியை எடுத்துக்கொண்டார்.
பொதுவாகச் செல்லோவை நாற்காலியில் அமர்ந்துதான் வாசிப்பதுதான் வழக்கம். வீணையில் இருப்பதைப் போன்ற இரண்டு தந்திகளைச் செல்லோவில் கூடுதலாக இணைத்து, இந்திய முறைப்படி தரையில் அமர்ந்தே வாசிக்கும்வண்ணம் வாத்தியத்தில் மாற்றத்தைக் கொண்டுவந்தார். அன்றிலிருந்து ஏறக்குறைய 30 ஆண்டுகளாக அவரின் செல்லோ ஒலிப்பது இந்தியத் துருபத் இசையைத்தான்.
உடலில் பாயும் இசை
மேற்கத்திய இசையையே மறந்துவிட்டீர்களா என்று கேட்பவர்களுக்கு இவரின் பதில்: “பாஹ் போன்ற மேற்கத்திய மேதைகளின் இசையை இப்போதும் கேட்கிறேன். ஆனால், என்னால் துருபத் இசையைத் தவிர வேறு எதையும் வாசிக்க முடியாது. என் நாடி நரம்பு முழுவதும் உள் ஒலிப் பயணம் செய்வது துருபத் இசைதான்”.
இந்தியாவின் புகழ்பெற்ற மேடைகளில் செல்லோ மூலம் இந்திய துருபத் இசையை வாசிக்கும் ஒரே கலைஞர் என்னும் புகழோடு விளங்கும் நான்ஸி, மூன்று இசை ஆல்பங்களை வெளிட்டிருக்கிறார். மணி கவுல், உமேஷ் ஆகியோரின் இரண்டு திரைப்படங்களில் இசைப் பங்களிப்பையும் அளித்திருக்கிறார்.
இந்திய நிகழ்த்து கலைகளைக் கற்றுக் கொள்வதற்காக அமெரிக்கக் கல்வி நிறுவனம் வழங்கும் நிதியுதவியை இரண்டு முறை பெற்றிருக்கும் கலைஞர் இவர். இந்தியரை மணந்துகொண்டு நான்ஸி குல்கர்னி ஆகியிருக்கும் இவர், மகாராஷ்டிர மாநிலம் புனேயில் வசிக்கிறார். செல்லோவில் துருபத் இசையை வாசிப்பதற்கு மாணவர்களுக்குக் கற்றுக்கொடுத்தும்வருகிறார். உலகம் முழுவதும் பயணித்து இந்தியாவின் துருபத் இசையைச் செல்லோவின் மூலம் பரப்பிவருகிறார் நான்ஸி குல்கர்னி.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago