பெண் சக்தி: குறைதீர்க்கும் கல்வி

By அ.அருள்தாசன்

பார்வையற்ற, உடல் குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளி மாணவியருக்கு இந்தச் சமூகம் எந்த அளவுக்கு அங்கீகாரம் அளிக்கிறது என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. சாதாரண மாணவியர் பலரும் பள்ளியைத் தாண்டி உயர்கல்விக்காகக் கல்லூரிக்குச் செல்லவே பல்வேறு தடைகளைக் கடக்க வேண்டியதாயிருக்கிறது.

இப்படியொரு சூழலில் மாற்றுத்திறனாளி மாணவியரின் நிலை மிகப் பெரிய கேள்விக்குறியாகத் தொக்கி நிற்கிறது. இந்தக் கேள்விக்குறியை ஆச்சரியக்குறியாக்கும் வகையில் திருநெல்வேலி பேட்டையிலுள்ள ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி செயல்பட்டுவருகிறது. இந்தக் கல்லூரியில் உள்ள ‘மாற்றுத்திறனாளிகள் நல மையம்’ மாற்றுத்திறனாளி மாணவியருக்குக் கல்வியில் ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறது.

உயர்த்தும் உன்னத மையம்

தென்னகத்தின் ஆக்ஸ்போர்ட் என்று பெயர்பெற்ற பாளையங்கோட்டையில் செயல்படும் தன்னாட்சி அந்தஸ்துபெற்ற பெருமைமிக்க கல்லூரிகளுக்குப் போட்டியாக ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி விளங்கு கிறது. இங்கு 3,500-க்கும் மேற்பட்ட மாணவியர் இளங்கலை,  முதுகலைப் பட்டப்படிப்புகளைப் படிக்கிறார்கள். இவர்களில் 47 பேர் மாற்றுத்திறனாளி மாணவியர்.

penn-2jpg

இவர்களில் 20 பேர் பார்வையற்றவர்கள், 23 பேர் உடல் குறைபாடு கொண்டவர்கள், 4 பேர் காது கேளாதோர். 47 பேரில் 42 பேர்  இளங்கலைப் பட்டப்படிப்பில் வரலாறு, தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம் ஆகிய பாடப்பிரிவுகளில் பயில்கிறார்கள். ஐவர் முதுகலைப் பட்டப்படிப்பு படிக்கிறார்கள்.

இந்த மாற்றுத்திறனாளி மாணவியர் கல்வி பயிலவும் தேவையான உபகரணங்களை அளிக்கவும் பொருளாதாரரீதியில் உதவிகளைச் செய்யவும் 2013-2014-ம் கல்வியாண்டில் ‘மாற்றுத்திறனாளிகள் நல மையம்’ உருவாக்கப்பட்டது. இந்த மையத்தில் தனியார் உதவியுடன் கணினிகள் வைக்கப்பட்டிருக்கின்றன.

பார்வையற்ற மாணவிகள் இணையம் வழியாகக் கல்வி கற்க இந்தக் கணினிகள் பயன்படுகின்றன. இது தவிர வகுப்பறையில் ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களைப் பதிவுசெய்து கற்கும் வகையில் குரல் பதிவு உபகரணங்கள் உள்ளிட்ட நவீன உபகரணங்களையும் தன்னார்வ நிறுவனங்கள், உதவும் நபர்கள் மூலம் வாங்கிக் கொடுத்துள்ளனர்.

திறக்கும் அறிவுக்கண்

தமிழகம் முழுவதும் உள்ள பார்வையற்ற கல்லூரி மாணவ, மாணவிகளை அழைத்துவந்து நவீன இணையவழிக் கற்றல் குறித்த கருத்தரங்குகளையும் இம்மையம் அவ்வப்போது நடத்துகிறது. பார்வையற்ற மாணவிகளுக்குத் தனியார் வழங்கும் கல்வி உதவித் தொகையைப் பெற்றுத்தரும் பெரும்பணியையும் இது செய்துவருகிறது.

இவை தவிர மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை நடத்தி ஊக்குவிப்பது, அவர்களுக்கான அரசின் கல்வி உதவி தொகையைப் பெற்றுத்தருவது, ஆளுமை மேம்பாட்டுக்கு வழிகாட்டுவது என்று பல்வேறு சேவைகளையும் இம்மையம் செய்துவருகிறது. திருநெல்வேலி மட்டு மின்றி விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவிகள் இம்மையத்துக்கு வந்து கல்வி பயிலவும், பயிற்சி பெற்றுச்செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

இந்த மையத்திலுள்ள கணினிகளில் 3.50 லட்சம் புத்தகங்களைப் பதிவேற்றம் செய்து வைத்திருக்கிறார்கள். பார்வையற்ற மாணவியர் இந்தப் புத்தகங்களைப் படித்து பயன்பெறமுடியும்.  100 சதவீதம் பார்வையற்ற மாணவிகள் பிரெய்லி முறையில் கல்வி கற்க உதவுகிறார்கள்.

சிறந்த முன்மாதிரி

இந்த மையத்தின் பொறுப்பாளர்களாகக் கல்லூரி முதல்வர் சி.வி. மைதிலி, பேராசிரியர்கள் நா. வேலம்மாள், டார்லிங் செல்வி, பீனா சோம்நாத், பாஸ்கர் ஆகியோர் செயல்படுகிறார்கள். சேவை மனப்பான்மையுடன் மாற்றுத்திறனாளி மாணவியருக்கு இவர்கள் உதவிவருகிறார்கள். தற்போது இக்கல்லூரியில் ஆங்கிலத் துறையில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்திருக்கும் சிவராமகிருஷ்ணன், பார்வையற்றவர். இவர் இங்குள்ள மாணவியருக்கு மிகப் பெரிய முன்மாதிரியாகத் திகழ்கிறார்.

திறம்படப் பாடம் நடத்தும் இவர் குறித்து மாற்றுத்திறனாளி மாணவியர் பெருமிதம் கொள்கிறார்கள். அவரைப்போன்று கஷ்டப்பட்டுப் படித்து வாழ்க்கையில் முன்னுக்கு வர வேண்டும் என்ற உத்வேகம் ஏற்பட்டுள்ளதாகவும் மாணவியர் தெரிவித்தனர்.

அறிவால் நிறைவுபெறும் மாணவியர்

கல்லூரி முதல்வர் மைதிலி கூறும்போது, “திருநெல்வேலி மட்டுமின்றிப் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பார்வையற்ற மாணவியர் எங்கள் கல்லூரியிலுள்ள மாற்றுத்திறனாளிகள் நல மையத்துக்கு வந்து பயிற்சி பெறுகிறார்கள். இம்மையத்தின் சேவையைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். தங்களால் வாழமுடியும் என்ற தன்னம்பிக்கையை அவர்கள் மத்தியில் உருவாக்கியிருக்கிறோம்.

இங்கு பயிலும் மாற்றுத்திறனாளி மாணவியர் சிலர் பல்கலைக்கழக ரேங்க் பெறும் அளவுக்குத் திறம்படக் கல்வி கற்கிறார்கள். அவர்களுக்குள் இருக்கும் கலைத்திறமைகளை வெளிக்கொணரும் வகையில் நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். மாற்றுத்திறனாளி மாணவியருக்கு இலவசக் கல்வி அளிக்கப்படுகிறது. தேர்வுக் கட்டணமும் கிடையாது” என்று தெரிவித்தார்.

இந்த மையத்தின் ஒருங்கிணைப்பாளர் வேலம்மாள், “மாற்றுத்திறனாளி மாணவியருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித்தரும் நோக்கத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் 4 வரையிலான தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஹெல்ப் தி பிளைன்ட் ஃபவுண்டேசன் அமைப்பு மூலம் பார்வையற்ற மாணவியருக்கு ஆண்டுதோறும் கல்வி உதவித் தொகையைப் பெற்றுத்தருகிறோம்.

மாற்றுத்திறனாளிகளின் பயன்பாட்டுக்கான புதிய உபகரணங்களை உருவாக்கும் நோக்கில் தேசிய கருத்தரங்குகளையும் அவ்வப்போது நடத்திவருகிறோம்” என்றார். உடல் குறைபாட்டை அறிவுச் செழுமையால் நிகர்செய்யும் இந்த மையத்தைத் தங்களுக்குக் கிடைத்த நல்லதொரு வரமாகவே மாற்றுத்திறனாளி மாணவிகள்  பாவிக்கின்றனர்.  

படங்கள்: மு. லெட்சுமி அருண்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்