முகங்கள்: வருமானத்துடன் ஆரோக்கியமும் பெருகும்!

By ரெ.ஜாய்சன்

வீடுகளில் மாடித் தோட்டம் அமைத்து இயற்கை முறையில்  காய்கறிகளை வளர்ப்பதில் பலர் ஆர்வத்துடன் செயல்பட்டுவருகிறார்கள். ஆனால், பிளாஸ்டிக் பைகளிலும் சிமெண்ட் தொட்டிகளிலும்  செடிகளை வளர்ப்பது இயற்கைக்கு முரணாக உள்ளது. இதற்கு மாற்றாக மூங்கில் கூடைகளைத் தயாரித்து அவற்றில் மாடித் தோட்டம் அமைத்து இயற்கை முறை விவசாயத்துக்கு வலுச்சேர்க்கிறார் தூத்துக்குடி மாவட்டம் மட்டக்கடைப் பகுதியைச் சேர்ந்த ராஜாத்தி.

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பம்பரமாகச் சுழன்று மூங்கில் கூடைகளை வைத்து மாடித் தோட்டம் அமைக்கப் பயிற்சி அளித்துவரும் ராஜாத்தியைப் பார்ப்பதற்கே நான்கு நாட்களாகிவிட்டன. நாம் அவரைச் சந்தித்தபோதுகூட சாத்தான்குளம் அருகேயுள்ள சொக்கன்குடியிருப்பு கிராம மகளிருக்கான மாடித்தோட்டப்  பயிற்சியை முடித்துவிட்டு வீடு திரும்பியிருந்தார்.

வாகனப் பழுதுநீக்குதல் பிரிவின் பயிற்சியாளர், ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி ஆசிரியை எனத் தான் பார்த்துவந்த வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு இயற்கை முறையில் காய்கறிகள் வளர்ப்பது குறித்துப் பல்வேறு பகுதி மக்களுக்குக்  கற்றுக்கொடுத்துவருகிறார். அத்துடன் மூங்கில் கூடைகளைத் தயாரித்து விற்பனை செய்வது, இயற்கை முறையில் பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தயாரிப்பது போன்றவற்றையும் ராஜாத்தி செய்துவருகிறார்.

தேடிவந்த விருது

“இயற்கையுடைய ஒரு பகுதிதான் மனிதர்களாகிய நாமும். எனக்குச் சிறு வயதிலிருந்தே தாவரங்கள் மீது ஆர்வம் அதிகம். அதனால்தான் கல்லூரியில் தாவரவியல் துறையைத் தேர்ந்தெடுத்தேன். ஆனால், குடும்பச் சூழ்நிலை காரணமாக வாகனப் பழுது நீக்குதல் பிரிவைப் படித்தேன்” என்று சொல்லும் ராஜாத்தி, படித்து முடித்ததும் பாளையங்கோட்டை சமுதாயக் கல்லூரியில் 13 ஆண்டுகள் பயிற்சியாளராக இருந்திருக்கிறார்.

அதன் பிறகு சென்னையில் உள்ள  ஐடி கம்பெனியில் ஒருங்கிணைப்பாளர், ஆங்கில ஆசிரியர் எனப் பல தளங்களில் வேலை செய்திருக்கிறார். இந்நிலையில் அவர் உறுப்பினராக இருந்த அன்னை வேளாங்கன்னி மகளிர் குழு மூலம் கடந்த ஆண்டு சென்னையில் நடந்த மாடித்தேட்டம் பயிற்சி வகுப்பு பற்றி ராஜாத்திக்குத் தெரியவந்தது. அந்தப் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட அனுபவம் ராஜாத்தியின் தாவரவியல் ஆசையை மேலும் அதிகாரித்தது. பயிற்சி முடிந்து

வீட்டுக்குத் திரும்பியவர், தன் வீட்டில் மாடித் தோட்டம் அமைத்தார். 150 பாலித்தீன் பைகளில் காய்கறிகள், கீரை வகைகள் போன்றவற்றை வளர்த்தார். தமிழகத்தில் அதிகமான பைகளில் சிறப்பாக மாடித் தோட்டம் அமைத்தற்காக ராஜாத்திக்கு மாநில விருது வழங்கப்பட்டது.

அந்த விருது அவரது உற்சாகத்தை அதிகரித்ததுடன் அவரை ஊரறிய வைத்தது. இயற்கை விவசாய முறையில் மாடித் தோட்டம் அமைப்பது குறித்து பெண்களுக்கும் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கும் பயிற்சியளிக்கத் தொடங்கினார். மேலும், மாடித் தோட்டத்துக்குத் தேவையான பைகள், உரம், விதை போன்றவற்றைத் தயாரித்துக் கொடுக்கும் வேலையையும் செய்தார். பலரும் ஆர்வத்துடன் மாடித்தோட்டம் அமைப்பதன் நுணுக்கங்களை அவரிடம் கற்றுச் சென்றனர்.

மாற்றம் தந்த முயற்சி

இந்த வெற்றிக்கு நடுவே பாலித்தீன் பைகளுக்கு மாற்றாக மூங்கில் கூடைகளில் மாடித் தோட்டம் அமைக்கும் முயற்சியில் ராஜாத்தி ஈடுபட்டார். “மூங்கில் கூடைகளைப் பயன்படுத்தி மாடித் தோட்டம் அமைப்பது செலவு அதிகம் என்ற போதிலும் சுற்றுச்சூழல் மாசு இல்லை, கட்டிடங்களுக்கு ஆபத்து இல்லை, நீண்ட காலம் பயன்படுத்த முடியும், பழமரங்களைக்கூட அதில் வளர்க்கலாம். மூங்கில் கூடைகளில் சாணம் பூசிப்

பயன்படுத்துகிறோம். மேலும், மரத்தால் ஆன ஸ்டாண்ட் வைத்து அதன் மீதுதான் கூடைகளை வைக்கிறோம். எனவே, கட்டிடங்களுக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை. மூங்கில் கூடையில் மண்ணுக்குப் பதில் தென்னை நார் கழிவுகளைப் பயன்படுத்துகிறோம். மண்புழு உரம் மட்டுமே இடுகிறோம்” என்கிறார் ராஜாத்தி. இந்த மூங்கில் கூடைகள் 750 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை கிடைக்கின்றன.

“விலை அதிகம்தான். ஆனால், இதன் பலனோடு ஒப்பிடும்போது விலை குறைவு. இந்தக் கூடையை மூன்று ஆண்டுகளுக்குப் பயன்படுத்தலாம். நாங்கள் எந்தவித ரசாயனத்தையும் பயன்படுத்துவதில்லை. இயற்கை உரம், இயற்கையான பூச்சிக்கொல்லிகளைத்தான் பயன்படுத்துகிறோம். இதனால் மகசூலும் அதிகம்” எனக் கூறி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார் ராஜாத்தி. இவரின் இந்த முயற்சிக்குப் பொதுமக்களிடம் அமோக ஆதரவு கிடைத்துள்ளது.

இவர் தூத்துக்குடி புனித அந்தோணியார் ஆலய பங்குத் தந்தை இல்ல மாடியில் 50 கூடைகளிலும், மற்றொரு வீட்டில் 80 கூடைகளிலும் மாடித் தோட்டம் அமைத்துக் கொடுத்துள்ளார். அவை நல்ல விளைச்சல் தந்துள்ளன. “இப்படி மூங்கில் கூடைகளைப் பயன்படுத்தி மாடித் தோட்டம் அமைத்துக் கொடுப்பதன்மூலம் எனக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது. தற்போது பலரும் என்னிடம் ஆலோசனை பெற்றுவருகின்றனர்.

இந்தக் கூடைகளில் கீரை வகைகள், காய்கறிகள், கறிவேப்பிலை ஆகியவற்றுடன் கொய்யா, மாதுளை, சப்போட்டா, சீத்தாப்பழம், எலுமிச்சை போன்ற மரங்களையும் வளர்க்கலாம். தூத்துக்குடியைவிட சென்னையில்தான் எனது மூங்கில் கூடைகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. பலரும் தொடர்ந்து கேட்டு வருகின்றனர்.

பேருந்து மூலம் சென்னைக்குக் கூடைகளை அனுப்பி வைக்கிறேன். கூடைகளைச் செய்ய ஐந்து பேரைப் பணியில் அமர்த்தியுள்ளேன். கூடைகளைச் செய்ய போதுமான ஆட்கள் இல்லை. நிறையப் பேர் இந்தக் கூடையைத் தயாரிக்க முன்வந்தால் செலவு குறையும்” என்கிறார் அவர்.

பெருகும் ஆர்டர்கள்

தமிழக அரசு சார்பில் பத்து மாவட்டங்களில் மாடித் தோட்டம் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. இதற்கு ராஜாத்தியிடம்தான் மூங்கில் கூடைகள் வாங்கப்பட்டுள்ளன. அதேபோல் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய அலுவலக மாடியில் 225 கூடைகள் அமைக்க ராஜாத்திக்கு ஆர்டர் கிடைத்துள்ளது. கூடைகள் மட்டுமின்றி இயற்கை உரம், பஞ்சகவ்யம், இயற்கை பூச்சிக் கொல்லிகளான மீன் எண்ணெய், வேப்ப எண்ணெய் போன்றவற்றையும் இவர் தயார்செய்கிறார்.

“நஞ்சில்லாத, இயற்கையான உணவைச் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் அதிகரித்துவருகிறது. நமக்குத் தேவையான காய்கறிகள், கீரைகள் போன்றவற்றை நாமே உற்பத்தி செய்வதுதான் அதற்கு வழி. அதற்கு ஒவ்வொரு வீட்டிலும் வீட்டுத் தோட்டம் அல்லது மாடித்தோட்டம் அவசியம். அதைத்தான் மக்களிடம் எடுத்துச் சொல்லி வருகிறேன். நான் விரும்பிய செயலைச் செய்ய என் கணவரும் குடும்பத்தினரும் துணையாக இருக்கிறார்கள்.

மாவட்டம் முழுவதும் வாய்ப்புள்ள அனைத்து வீடுகளிலும் மாடித் தோட்டம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதே என் விருப்பம். மூங்கில் கூடைகளை அதிகமாகத் தயார் செய்து மாநிலம் முழுவதும் அனுப்பும் திட்டமும் இருக்கிறது. இதற்கு அரசு சார்பில் கடனுதவி கிடைத்தால் பயனுள்ளதாக இருக்கும்” என்கிறார் ராஜாத்தி. தமிழகத்தில் அடுத்த ஆண்டு முதல் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வரவிருக்கும் நிலையில் மூங்கில் கூடையில் மாடித் தோட்டம் அமைக்கும் ராஜாத்தியின் செயல் வரவேற்கத்தக்கது.

ராஜாத்தியைத் தொடர்புகொள்ள: 9843955317.
படங்கள்: என்.ராஜேஷ்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்