கொல்கத்தாவில் 1920 நவம்பர் 8 அன்று சித்தாரா தேவி பிறந்தார். அன்று தீபாவளி என்பதால், வளங்களை அளிக்கும் தேவியின் நினைவாக அவருக்கு தனலட்சுமி என்று பெயரிட்டனர். அவருடைய தந்தை சுகதேவ் மஹராஜ், வாராணசியைச் சேர்ந்த பிராமணர். கதக் நடனமே அவருக்கு வாழ்வாதாரம். அந்தக் காலத்தில் உயர்குடிப் பெண்கள் கதக் நடனத்தை ஆட மாட்டார்கள். ஆனால், சுகதேவ் தன் வீட்டுப் பெண்களுக்கே கதக் நடனத்தைக் கற்றுக்கொடுத்தார்.
தனலட்சுமியின் பெயர் ‘சித்தாரா தேவி’ என்றானது. ‘நாட்டியப் பேரரசி’ என்று ரவீந்திரநாத் தாகூரால் 16 வயதில் அழைக்கப்பட்ட இவர், கதக் நடனத்தின் அரசியாகப் போற்றப்படுகிறார். இந்தியப் பாரம்பரிய நடனங்களில் மட்டுமல்லாமல் மேற்கத்திய வகை நடனங்களிலும் இவர் தேர்ச்சிபெற்றவர். ‘மதர் இந்தியா’ உள்ளிட்ட பல இந்தித் திரைப்படங்களில் அவர் ஆடியுள்ளார். மதுபாலா, ரேகா, கஜோல் ஆகிய நடிகைகளுக்கு இவர்தான் நடன குரு. 94 வயதில் இவ்வுலகை விட்டு மறைந்தார். இவரது பிறந்தநாளையொட்டி நவம்பர் 8 அன்று சிறப்பு டூடுலை கூகுள் வெளியிட்டது.
அமெரிக்காவில் வென்ற பெண்கள்
அமெரிக்கத் தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக இஹான் ஓமர் (37, ரஷிதா தாலிப் (42) ஆகிய இரண்டு இஸ்லாமியப் பெண்கள் வெற்றிபெற்றுள்ளனர். இஹான் ஓமர், சோமாலியா அகதி. சோமாலியாவில் நடந்த போரால் எட்டு வயதிலேயே அவர் அகதியாக்கப்பட்டார். தன் பெற்றோருடன் கென்யாவில் நான்கு ஆண்டுகள் வசித்தார். 1997-ல் குடும்பத்துடன் மின்னசோட்டாவுக்குக் குடிபெயர்ந்தார். நாட்டு மக்களின் நலனுக்காகப் போராடினார். எல்லோருக்கும் இலவசக் கல்வி, வீடு எனப் பலவற்றுக்காகக் குரல் கொடுத்தார்.
தான் ஜனநாயகத்தைத் தேடும் பெண்களின் பிரதிநிதி என்று வெற்றிக்குப் பிறகு அவர் கூறினார். டெட்ராய்ட் நகரைச் சேர்ந்த ரஷிதா தாலிப்பின் பெற்றோர் பாலஸ்தீனத்திலிருந்து அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தவர்கள். “அநியாயங்களை எதிர்கொள்ள அஞ்சி முதலில் நான் ஓடினேன். ஆனால், என் அடையாளம் (இஸ்லாம்) குறித்த கேள்வியும் என்னைத் துரத்திக்கொண்டே வந்தது. ஓடியது போதும் என முடிவெடுத்தேன், இன்று தேர்தலில் வென்றுள்ளேன்” எனத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு ரஷிதா பேட்டி அளித்தார்.
நீதிக்குத் தேவை சிகிச்சை
உக்ரைனின் கெர்சொன் நகரசபை உறுப்பினராக கடேர்னியா (33) பதவி வகித்தார். ஊழலுக்கு எதிரான பிரசாரங்களை அவர் மேற்கொண்டார். அவை தொடர்பான பதிவுகளை உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றினார். இதனால் தொடர்ந்து கடும் விமர்சனத்துக்கும் எதிர்ப்புக்கும் ஆளானார். கடந்த ஜூலை 31-ல் அவர்மீது அமில வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டது. சிகிச்சையில் இருந்தபோது அவர், “நான் மோசமான தோற்றத்தில் இப்போது இருக்கிறேன்.
ஆனால், என்னால் உறுதியாகச் சொல்ல முடியும், உக்ரைனின் நீதியைவிட நான் நன்றாகத்தான் இருக்கிறேன். குறைந்தபட்சம் எனக்குச் சிகிச்சையளிக்கப்படுகிறது. ஆனால், நீதியை நிலைநாட்டுவதற்கான சிகிச்சையை இங்கு யாரும் அளிப்பதில்லை" என்று கூறினார். மூன்று மாதங்களுக்கு மேல் நீடித்த சிகிச்சை பலனின்றிக் கடந்த திங்கள் அன்று உயிரிழந்தார். அவரது இழப்பு சமூக ஆர்வலர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடேர்னியாவின் மரணத்துக்குக் காரணமானவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.
சாதிக்கும் இந்தியப் பெண் விமானிகள்
உலகின் மற்ற நாடுகளைவிட இந்தியாவில்தான் அதிக எண்ணிக்கையில் பெண் விமானிகள் பணிபுரிவது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. சர்வதேச அளவில் பெண் விமானிகளின் எண்ணிக்கை 5.4 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் அது 12.4 சதவீதம். இந்தியாவில் பணிபுரியும் 8,797 விமானிகளில் 1,092 பேர் பெண்கள். இவர்களில் 385 பேர் கேப்டன்களாக உள்ளனர். டெல்லியைச் சேர்ந்த ஜூம் விமான நிறுவனம், தனது நிறுவனத்தில் 30 சதவீதப் பெண்களை விமானிகளாகப் பணியமர்த்தியுள்ளது.
இங்கு விமானிகளாகத் தேர்வு செய்யப்படும் 30 பேரில் 9 பேர் பெண்கள். அதற்கடுத்த இடங்களில் இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், ஜெட் ஏர்வேஸ், ஏர் இந்தியா நிறுவனங்கள் உள்ளன. இண்டிகோ நிறுவனத்தில் 2,689 விமானிகளில் 351 பேர் (13.9%) பெண்கள், ஜெட் ஏர்வேசில் 1,867 விமானிகளில் 231 பேர் (12.4 %) பெண்கள், ஸ்பைஸ் ஜெட்டில் உள்ள 853 விமானிகளில் 113 பேர் (13.2%) பெண்கள், ஏர் இந்தியாவில் உள்ள 1,710 விமானிகளில் 217 பேர் (12.7%) பெண்கள். அமெரிக்க விமான நிறுவனங்களைவிட இண்டிகோ, ஜெட் ஏர்வேஸ் நிறுவனங்களில்தான் அதிக எண்ணிக்கையில் பெண் விமானிகள் பணிபுரிகின்றனர்.
மீண்ட உயிர்
பாகிஸ்தானில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய ஆசியா பிபி வழக்கில், அவருக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆசியா பிபி, கடந்த 2009-ல் வேலை பார்த்த அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் சண்டையிட்டுள்ளார். அப்போது அவர் நபிகள் நாயகம் குறித்துத் தவறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. அந்த அலுவலகத்துப் பெண்கள் மத குருமார்களிடம் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகார்மீது வழக்குத் தொடுக்கப்பட்டது.
இஸ்லாம் மதத்தையும் நபிகள் நாயகத்தையும் தவறாகப் பேசியதற்காக 2009 இறுதியில் கைது செய்யப்பட்டார். 2010-ல் அவருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. 2010-ல் நடந்த மேல்முறையீட்டு வழக்கில் இந்தத் தீர்ப்பை லாகூர் நீதிமன்றம் உறுதிசெய்தது. இது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த எட்டு ஆண்டுகளாக ஆசியா பிபி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருடைய கணவர் ஆசிக் மாஷா, இதற்கு எதிராக வழக்குத் தொடுத்து தீவிரமாகப் போராடினார். இந்நிலையில் அவர்மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று கடந்த வாரம் விடுதலை செய்யப்பட்டார். பல இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் இந்தத் தீர்ப்புக்கு எதிராகத் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago