வேளாண்மைத் தொழிலுக்கு வித்திட்டவர்கள் பெண்கள்தாம். விவசாயப் பணிகளில் பெரும்பான்மையானவற்றைப் பெண்களே செய்கிறார்கள்.
பருவமழை பொய்த்தல், பயிர்க்கடன், வறுமை போன்ற பல்வேறு காரணங்களால் வேறுவழியின்றிப் பலரும் விவசாயத்தைக் கைவிட்டுக் கூலி வேலைக்குச் செல்லும் நிலையில், விவசாயத்தில் சாதித்து நம்பிக்கையூட்டுகிறார் ‘அழகு.’ விவசாய சாதனைக்கான அங்கீகாரமாக டெல்லியில் டிசம்பர் மாதம் தூர்தர்ஷன் சார்பில் நடைபெறும் விழாவில் இவருக்கு ‘மகிளா கிஸான் அவார்டு’ வழங்கப்படவிருக்கிறது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நெற்குப்பையைச் சேர்ந்தவர் அழகு. சொந்த ஊரில் 15 ஏக்கர் நிலத்தை விட்டுவிட்டுத் தன் கணவர் சுப்பிரமணியன் சென்னை மாதவரத்தில் குறைந்த சம்பளத்தில் வேலைசெய்தது அழகுக்கு மனவருத்தமாக இருந்தது. அதனால், விவசாயம் செய்வதற்காக ஏழு ஆண்டுக்கு முன் மகன், மகள்களுடன் சொந்த ஊருக்குத் திரும்பினார். இவர்களது நிலம் வெவ்வேறு இடங்க ளில் இருந்ததால் தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாத நிலை இருந்தது.
விரிவடைந்த விவசாயம்
கிணற்றிலிருந்து தண்ணீர் எடுப்பதற்கு மானிய விலையில் ஆயில் இன்ஜின் பெறுவதற்காகத் திருப்பத்தூரில் வேளாண்மைத் துறை அதிகாரிகளைத் தன் கணவருடன் சேர்ந்து சந்தித்தார். அதுதான் அழகுக்கு விவசாயத்தில் புதிய பாதையைத் திறந்துவிட்டது. அழகுக்கு விவசாயத்தின் மீதிருந்த ஆர்வத்தைப் புரிந்துகொண்ட வேளாண் துறை அதிகாரிகள், தர்ப்பூசணி பயிரிடுவதற்கு ஆலோசனை வழங்கினர். அதுவரை தர்ப்பூசணியைப் பயிரிடாததால் தங்கள் நிலத்தில் விளையுமா என்ற தயக்கம் இருந்தாலும் துணிந்து முடிவெடுத்தார் அழகு.
“எதிர்பாராதவிதமா தர்ப்பூசணி நல்ல மகசூல் கொடுத்துச்சு. தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் காமாட்சி இதைப் பாராட்டியது உந்துசக்தியா இருந்தது” என்று சொல்லும் அழகுக்கு காமாட்சி மூலம் குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தின் அறிமுகம் கிடைத்தது. அங்கு நாட்டுக்கோழி, ஆடு, மாடு வளர்ப்பு குறித்துப் பயிற்சி எடுத்துக்கொண்டார். பின்னர் கால்நடை வளர்ப்புக்கு முக்கியமான தீவனப் பயிரைப் பயிரிட்டார். சிறு அளவில் தொடங்கிய விவசாயத்தைப் பத்து ஏக்கர் பரப்புக்கு விரிவுபடுத்தினார்.
வளம் பெருக்கும் பெண்கள் சங்கம்
“நானும் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவதான். அதனால எனக்கு எதுவுமே புதுசா இல்லை. நிலத்தை உழுவதற்கு இயந்திரங்களையும் ஆட்களையும் தேட வேண்டியிருந்தது. சிலநேரம் அதற்காகவே காத்திருக்கும் சூழலும் ஏற்பட்டது. இப்படிக் காத்துக்கிடப்பதைவிட நாமே உழுது விடலாம்னு தோணுச்சு. என் கணவர் ஊக்கப்படுத்தியதால் சிறிய பவர் டில்லர் மூலம் உழவு செய்ய ஆரம்பித்தேன்” என்று சிரித்தபடி சொல்கிறார் அழகு.
குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தினர் சோதனைக்காகப் பல பயிர் ரகங்களை அழகுக்குக் கொடுத்துப் பயிரிடப் பரிந்துரைத்தனர். அவர்களின் வழிகாட்டுதலில் பாலூர் 1 ரக சிறுகீரை, கோ 5 வெங்காயம், சம்பங்கி போன்றவற்றைப் பயிரிட்டார். அதில் நல்ல மகசூலும் லாபமும் கிடைக்க, தினசரி வீட்டுச் செலவுக்காக விவசாயத்தோடு கால்நடை வளர்ப்பிலும் இறங்கினார் அழகு.
முதலில் கறவை மாடுகள் வாங்கி, பால் கறந்து தனியார் மூலம் ஆவினுக்கு அனுப்பிவைத்தார். “அப்படி அனுப்பும்போது திடீரெனக் கொள்முதல் செய்த பாலைத் திருப்பி அனுப்பிடுவாங்க. இப்படிப் பால் மிச்சமாவதால் நஷ்டம் ஏற்பட்டது. இதைத் தவிர்க்க புதிதாகச் சங்கம் ஏற்படுத்த முயன்றோம். எங்க ஊரைச் சேர்ந்த மற்ற பெண்களையும் பசு வளர்க்க ஊக்கப்படுத்தினோம்” என்று அழகு சொல்ல, கழுத்து மணியசைத்து ஆமோதித்தன மேய்ச்சலில் இருந்த கறவை மாடுகள்.
பிறகு பசுக்கள் வளர்க்கும் 60-க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்று சேர்ந்து புதிதாக ஒரு சங்கத்தை ஏற்படுத்தினார்கள். அதன் மூலம் தற்போது காலையிலும் மாலையிலும் 120 லிட்டர் அளவுப் பாலை ஆவின் நிர்வாகத்துக்கு அனுப்பிவருகின்றனர். இதனால் பால் வீணாகாமல் லாபம் கிடைப்பதாக அழகு சொல்கிறார்.
பலன்தரும் கோழிவளர்ப்பு
இவற்றுடன் தன் தேடலை அழகு நிறுத்திவிடவில்லை. அடுத்ததாக நாட்டுக்கோழிப் பண்ணை வைத்தார். கடக்நாத் எனும் கருங்கோழிகளை வளர்த்து விற்பனை செய்துவருகிறார். நாட்டுக்கோழி முட்டை, இறைச்சி தேவைப்படுவோர் மட்டுமின்றி, கோழி வளர்க்க விருப்பம் உள்ளவர்களும் அழகைத் தேடிச்செல்கின்றனர்.
“இந்தக் கோழி வளர்ப்பில் கைமேல் பலன் கிடைத்ததால் புறாக்களையும் பந்தயப் புறாக்களையும் வளர்க்கிறோம். இதனால் தினமும் இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல லாபம் கிடைக்குது” எனச் சொல்லிவிட்டுக் கோழிகளுக்குத் தீவனம் வைக்கிறார். வயலுக்குத் தேவையான இயற்கை உரத்தை மாட்டுச்சாணம் மூலம் இவர்களே தயாரித்துக்கொள்கின்றனர். மூலிகைப் பூச்சிவிரட்டியையும் இடுபொருட்களை யும் தயாரித்துக்கொள்வதால் உரச்செலவு இல்லை.
“எங்க ஊர்ல விவசாயத்தைப் பாழாக்கும் வெள்ளாட்டை வளர்க்க கட்டுப்பாடு இருக்கு. அதனால பண்ணையில் வளர்ந்துள்ள புல்லை மேய்வதற்கு 60 செம்மறியாடுகளை மட்டும் வளர்க்கிறேன்” என்று சொல்லி ஆச்சரியமூட்டுகிறார் அழகு.
வியக்கவைக்கும் அரும்பணி
ஆரம்பத்தில் அழகின் விவசாயப் பணிக்கு அவருடைய மகன் செல்வப்பாண்டியன் உதவியாக இருந்தார். தற்போது அவர் கல்லூரியில் படிப்பதால் அழகின் கணவர் சுப்பிரமணியன் சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு வந்துவிட்டார். தற்போது ஆவின் பார்லர் எடுத்து ஊருக்குள் டீக்கடை நடத்திவருகின்றனர். “அஞ்சு ரூபாய்க்கு ஆரோக்கியமான டீ, பாலை விற்பனை செய்யறோம்.
இந்தக் கடையில இருந்து எனக்கும் என்னுடைய கணவருக்கும் கடையில் வேலை பார்க்கும் ரெண்டு பேருக்கும் தினமும் சம்பளம் கிடைத்துவிடும்” என்று அழகு சொல்லச் சொல்ல கேட்டுக்கொண்டிருக்கும் நமக்கு மலைப்பாக இருக்கிறது. விவசாயப் பணிகள் குறிப்பிட்ட நேரத்துக்குள் முடிந்துவிடுகிறவையல்ல. அதுபோலத்தான் கால்நடை வளர்ப்பும். கண்ணயரக்கூட நேரமிருக்காது.
ஆனால், அவ்வளவு வேலையையும் சிரமம் பார்க்காமல் கச்சிதமாகச் செய்துமுடித்து நிமிர்கிறார் அழகு. அவரது அந்த அயராத உழைப்புக்கும் நம்பிக்கைக்கும் கிடைத்த அடையாளம்தான் ‘மகிளா கிஸான் விருது’. விருதுக்குத் தேர்வானதைப் பற்றிப் பேசக்கூட நேரமில்லாமல் களைவெட்டியுடன் வயலுக்குள் இறங்குகிறார். இவ்வளவு வேலைச் சுமைக்கு நடுவிலும் பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோர் இருவரைத் தன் வீட்டில் வைத்துப் பராமரித்துவருகிறார் அழகு. விருது கொடுத்துச் சமன்படுத்த முடியாத தொண்டல்லவா இது!
அழகுக்கு வழங்கப்படவிருக்கும் விருது குறித்து குன்றக்குடியில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தின் தலைவர் விஞ்ஞானி செந்தூர்குமரன் கூறும்போது, “மத்திய அரசின் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் சார்பில் இந்தியா முழுவதும் 681 வேளாண் அறிவியல் நிலையங்கள் உள்ளன.
இவற்றின்மூலம் பயிற்சி பெற்று அங்கு வழங்கப்படும் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி வேளாண்மைத் தொழிலில் வெற்றிகரமாக ஈடுபடும் பெண்களுக்கு தூர்தர்ஷன் சார்பில் ‘மகிளா கிஸான் அவார்டு’ வழங்கப்படுகிறது. இதற்காக இந்தியா முழுவதும் 119 பேரை தூர்தர்ஷன் தேர்வு செய்துள்ளது. அதன்படி நெற்குப்பை விவசாயி சு.அழகு விருதுக்குத் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்” என்றார்.
விவசாயத்தில் ஆர்வமுள்ள பெண்கள் அரசாங்கத்தின் வேளாண் அறிவியல் நிலையங்களை அணுகலாம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago