மகளிர் மட்டும்: சிந்தனைக்கு வித்திட்ட சந்திப்பு

By செய்திப்பிரிவு

பெண்கள் ஒன்றாகச் சந்தித்துப் பல்வேறு கருத்துகளை விவாதப் பொருட்களைத் தங்களுக்குள் பகிர்ந்துகொள்கிறார்கள் என்பதை நினைக்கும் போதே ஆர்வம் தோன்றும். ஆண்டுதோறும் பெண்கள் ஒன்றுகூடுவதும் தங்கள் நாட்டின் கலாச்சார, சமூக, அரசியல் குறித்த விஷயங்களைப் பேசுவதுமான பெண்கள் சந்திப்பை ஆண்டுதோறும் ‘ஊடறு.காம்’ என்ற இணையதளம் நடத்துகிறது. இந்த இணைய இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவரான றஞ்சி சுவிட்சர்லாந்தில் இருந்தும் ஆழியாள் ஆஸ்திரேலியாவில் இருந்தும் ஒருங்கிணைத்தனர்.

பெண்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் மீது எனக்கு மிகுந்த மதிப்பு உண்டு. இந்த ஆண்டு ஊடறு பெண்கள் சந்திப்பை இலங்கையில் நடத்தப் போவதாகவும்  செப்டம்பர் 15, 16 தேதிகளில் நடைபெறப்போகும் சந்திப்பில் கலந்துகொள்ள வேண்டும் எனவும் றஞ்சி தெரிவித்தார்.

இலங்கையை நோக்கி

‘ஊடறு’ இணைய இதழை ஏறக்குறைய 15 ஆண்டுகளாக நடத்திவருவதோடு உலகின் பல பகுதிகளில் இப்பெண்கள் சந்திப்பு நிகழ்ச்சியைப் பரவலாக நடத்திவருகிறது ஊடறு குழு. 2015-ம் ஆண்டு இலங்கையில் நுவரெலியாவில் கொத்தகல ஆசிரியர் பயிற்சிப் பள்ளியிலும் 2016-ம் ஆண்டு மலேசியாவின் பினாங்கிலும் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்றிருக்கிறேன். மட்டக்களப்பு என்றவுடன் தாய்வழிச் சமூகம் இப்பகுதியில் இருக்கிறது என்ற செய்தி நினைவுக்கு வந்தது.

கேரளம், கன்னியாகுமரி பகுதியில் இப்படியான மருமக்கள்வழி மான்மியமுறை முன்பு இருந்துள்ளது. மட்டக்களப்பில் அசையாச் சொத்துகளான நிலம், வீடு ஆகியவற்றின் உரிமை தாய்க்குப்பின் மகளுக்கு என்று அளிக்கப்படுகிறது. இப்படிப் பெண் தலைமைத்துவத்தைப் போற்றும் நிலப்பரப்பில் ஊடறு சந்திப்பு நடப்பதைச் சிறப்பாகக் கருதினேன்.

சென்னையில் இருந்து கொழும்பு பண்டார நாயக்கா விமான நிலையத்துக்குத் தோழியர் கவின்மலர், சுகிர்தராணி, சிநேகாவுடன் சென்று சேர்ந்தேன். மலேசியா யோகி சந்ரு, கனடாவில் இருந்து வந்திருந்த கவிஞர் அவ்வை, இலங்கை ஊடகவியலாளர் கோகில தர்ஷினியுடன் ஊடறு றஞ்சி எங்களை வரவேற்கக் காத்திருந்தார்.

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு செல்வதற்காக வேன் தயாராக இருந்தது. மட்டக்களப்பு செல்லும் வழி முழுக்க கேரள நிலப்பரப்பைப் போன்றே இருந்தது. வேறொரு நாட்டில் இருக்கிறோம் என்ற எண்ணம் இல்லாமல் சொந்த நாட்டைப் போல உணர்ந்தேன்.

இந்நிகழ்ச்சி வழக்கமாக இரண்டு நாள் நடக்கும். முதல்நாள் நிகழ்ச்சியில் பெண்கள் மட்டுமே பங்கேற்க முடியும். இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் ஆண்களும் பங்கேற்கலாம். பெண்கள் தங்களுக்குள் தடையில்லாமல் பேசிப் பழகவும் விவாதிக்கவும் தயங்காமல் பங்கெடுக்க வேண்டும் என்பதால் முதல் நாள் பெண்கள் மட்டும் பங்கெடுக்கக் கேட்டுக்கொள்கிறார்கள்.

பெண்களை மையமிட்ட உரை

கொட்டக்கலை ஆசிரியர் கலாசாலைப் பெண்களின் தப்பாட்டத்தோடு முதல் நாள் நிகழ்ச்சி தொடங்கியது. முதல் அரங்கமான அரசியல் அரங்கில் அரசியலில் பெண்களின் நிலை, சிறைக்கைதிகளாக இருக்கும் பெண்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள், மாற்றுத் திறனாளிகளும் பிரச்சினைகளும், போராளிப் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், தொடரும் அச்சுறுத்தல்கள், இன்னும் செய்ய வேண்டிய முன்னெடுப்புப் பணிகள், போருக்குப் பின் பெண்களின் நிலை, தனித்து வாழும் பெண்கள், சிறார் துஷ்பிரயோகமும் குடும்ப அமைப்பு முறையும் போன்றவை குறித்துப் பேசப்பட்டது.

வன்முறைகளின் முகம் என்னும் அமர்வில் குடும்பமும் கலாச்சாரமும் சட்டமும் அதன் நடைமுறையும் குறித்து தமிழகத்திலிருந்து வந்திருந்த வழக்கறிஞர் சிநேகாவும், விளம்பரங்களில் பெண்கள் குறித்து இலங்கையின் ஊடகவியலாளர் கோகிலதர்ஷினியும் ஊடகங்களில் பெண்கள் என்ற கோணத்தில் ஊடகவியலாளர் அனுதர்ஷி லிங்கநாதனும் உரையாற்றினர்.

அனுபவப் பகிர்வு

இரண்டாம் நாள் தொடக்க நிகழ்ச்சியாக சூரியா பெண்கள் அமைப்பின் கலாச்சார நிகழ்வாக மட்டுமாநகர் கண்ணகி நாடகம் அரங்கேறியது. அந்நிலம் சார்ந்த பெண்களின் போர்க்கால அவலங்களையும் இன்றளவும் மீளமுடியாத வலியையும் நவீன நாடகமாக அரங்கேற்றினர். பாலிழிவு – செவ்வியல் வழக்கும் வாய்மொழி வழக்கும் என்ற தலைப்பில் மாலதி மைத்ரி கருத்துகளைப் பகிர்ந்தார். முஸ்லிம் தனியார் சட்ட சீர்திருத்தமும் பெண்களும் குறித்து லறீனா அப்துல் ஹக் உரையாற்றினர்.

‘மலேசிய இஸ்லாம் பெண்களுக்குக் கந்துமுனை அகற்றும் சடங்கு’ குறித்து யோகியும் ‘பாலியல் தொழிலும் ஆண் மேலாதிக்கமும்’ குறித்து மதுரை ரஜனியும் ‘பெண்ணிய நோக்கில் சாதி மத வர்க்கம்’ குறித்து சுகிர்தராணியும் ‘சாதியும் பெண்களும்’ தலைப்பில் கவின்மலரும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்தனர்.

பெண்களும் கவிதைகளும்

‘கவிதைப் பெண்களும் என் கவிதை அனுபவங்களும்’ என்னும் தலைப்பில் நான் என்னுடைய அனுபவங்களை முன்வைத்தேன். சங்கப் பெண் கவிஞர்கள் முதல் சமகாலக் கவிஞர்கள்வரை பெண்கள் பிரச்சினையை வெளிப்படுத்துவது, அப்பிரச்சினைகள் குறித்து செப்பேடுகள், கல்வெட்டுகள் எப்படி வரலாற்று ஆவணமாக நமக்குக் கிடைக்கின்றனவோ அவ்வாறே இலக்கியம் நமக்குச் சொல்லும் எளிய மக்களின் வரலாற்றைச் சுட்டிக்காட்டினேன்.

சங்க காலத்தின் கைம்மை சதி வழக்கங்கள் பதிவானதுபோல,  முட்டுவென் கொல் தாக்குவென் கொல்லெனும் அவ்வையின் வெளிப்படையான குரலும் பதிவானதைக் கவனிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கும் வாழ்க்கை முறை செலுத்தும் ஆதிக்கத்தை கவனத்தில்கொள்ள வேண்டும். இதை ஆண்டாள், காரைக்கால் அம்மையார் வாழ்க்கை ஒப்பீடு, பாடல்களின் பயன்படும் மொழி ஆகியவற்றோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

சிற்றிலக்கியத்தில் பெண்களின் பங்களிப்பு இல்லை என்ற கருத்து நிலவுகிறது. இஸ்லாமியப் பெண் கவிஞர் ஆசியா உம்மா முதலான சிலரின் பாடல்கள் சிற்றிலக்கியக் கூறுகள் பலவற்றையும் உள்ளடக்கியவை. தனிப்பாடல் திரட்டிலும் பல பெண்கள் பாடல் எழுதியதாகக் குறிப்புகள் கிடைக்கின்றன. அப்பாடல்களைத் தேடி வருகிறேன். 

சமகால எழுத்து

சமகால பெண் கவிஞர்களின் கவிதைகள் என எடுத்துக் கொண்டால் தமிழகத்தின் கவிதைகள் இலங்கையில் உள்ள பெண் கவிஞருக்குப் பார்வை நூலாகப் பயன்பட்ட நிலையை ‘சொல்லாத சேதிகள்’ தொகுப்பும், செல்வி, சிவரமணி உள்ளிட்ட பெண் கவிஞர்களின் கவிதை தமிழ்ப் பெண் கவிஞர்களின் கவிதையில் புதிய திறப்பை உருவாக்கியதையும் அதன் தாக்கம் பின்னர் தமிழகத்தில் எழுதிய பெண்கவிஞர்களிடம் பாதிப்பை ஏற்படுத்தியதையும் சுட்டிக்காட்டினேன். சமகாலத்தில் எழுதக்கூடிய பெண்களே இல்லை என்று  சொல்கிறார்கள்.

அப்படியில்லை. ‘பெயல் மணக்கும் பொழுது’ தொகுப்பைக் கொண்டு வருவதற்கு முன்னதாக இத்தனை பெண் கவிஞர்கள் இருந்தார்களா எனத் தெரியாது. அது போல இப்போதும் சமூக வலைத்தளங்களிலும் பல்வேறு இதழ்களிலும் எழுதிக்கொண்டிருக்கும் பெண்களின் படைப்புகளைத் தொகுத்தால் மட்டுமே பெண்கள் எழுதுகிறார்களா,  எத்தன்மையில் எழுதுகிறார்கள் என விமர்சிக்க இயலும்.

இல்லையெனில் இப்படியான விமர்சனங்கள் மேம்போக்கானவை என்றே எடுக்க வேண்டும் என்ற என் உரையில் ‘லண்டாய்’ மொழி பெயர்ப்பு அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டேன்.

இச்சந்திப்பிலும் யாழ்ப்பாணம், கொழும்பில் நடந்த சந்திப்புகளிலும் பல்வேறு ஆளுமைகளைச் சந்திக்கவும் கலந்துரையாடவும் முடிந்தது மிக மகிழ்ச்சியான அனுபவம். யாழ்ப்பாணம் பகுதியில் நிர்வாகச் சேவையில் இருப்பவர்களைச் சந்திக்கவும் கலந்துரையாடவும் யாழினியும் சுரேகாவும் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

மொத்தத்தில் பெண்கள் பலர் ஒன்றுகூடி பல்வேறு விஷயங்களை விவாதித்த அந்தச் சந்திப்பு, நல்ல மாற்றங்களை நோக்கி எங்களை அழைத்துச் சென்றது.

- ச.விஜயலட்சுமி,
தொடர்புக்கு: kaatumalli@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்