வாழ்வில் ஏற்படும் திருப்பங்கள் சிலரை ஏணியில் ஏற்றும்; சிலரைத் தலை குப்புறத் தள்ளும். தடகளத்தை உயிர் மூச்சாக நினைத்த அந்தப் பெண்ணுக்கு, ஒரு வெற்றியாளரின் மூலம் குத்துச்சண்டை என்ற விளையாட்டு பெரும் திருப்பமாக அமைந்தது. அந்தத் திருப்பமும் அந்த விளையாட்டின் மீதான அவரது ஆர்வமும் பின்தங்கிய மாநிலத்தில் பிறந்த அவரை, உலக சூப்பர் ஸ்டாராக மாற்றியது. அவர், ‘மேக்னிஃபிசியன்ட் மேரி’ என்று செல்லமாக அழைக்கப்படும் மேரி கோம்.
மேரி கோமின் சொந்த ஊர், மணிப்பூர் மாநிலத்தின் கங்காதேய். படிப்பின் மீது அவருக்குப் பெரிதாக ஈடுபாடு இல்லை. படிப்பு, தேர்வு போன்ற வார்த்தைகள் எல்லாம் அவருக்குப் பாகற்காய். விளையாட்டு என்றால் கற்கண்டு. கஷ்டப்படும் பெற்றோருக்கு உதவியாக விவசாய வேலை பார்ப்பதிலும் அவருக்கு ஈடுபாடு இருந்தது. பள்ளியில் விளையாட அழைத்தால் முதல் ஆளாகப் பெயர் கொடுத்துவிடுவார். ஓட்டப்பந்தயம், ஈட்டி எறிதல் போன்றவைதாம் அவருக்குப் பிடித்தமானவை.
குத்துச்சண்டையில் ஆர்வம்
இந்த ஆர்வம் மணிப்பூரைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரர் டிங்கோ சிங் பதக்கம் வெல்லும்வரைதான் நீடித்தது. 1998-ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் டிங்கோ சிங், தங்கப் பதக்கம் வென்ற பிறகு, அந்த விளையாட்டின் மீது மேரி கோமுக்கு ஆர்வம் ஏற்பட்டது. 2000-ம் ஆண்டில் குத்துச்சண்டை விளையாட்டில் தீவிரமாக ஈடுபட முடிவெடுத்து, அந்த விளையாட்டில் நுழைந்தார் மேரி கோம். ஆனால், குத்துச்சண்டை விளையாடக் கையுறை வாங்கக்கூடக் காசு இல்லை. வெறுங்கைகளால் குத்துச்சண்டையைப் பழக ஆரம்பித்தார். 18 நாட்களிலேயே குத்துச்சண்டை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார்.
வீட்டுக்குத் தெரியாமல்...
குத்துச்சண்டை பழகுவதை வீட்டில் யாருக்கும் அவர் சொல்லவில்லை. சொன்னால், விளையாட விட மாட்டார்கள் என்பதால் யாருக்கும் சொல்லாமலேயே குத்துச்சண்டை கற்றுக்கண்டதோடு போட்டிகளுக்கும் சென்று வந்தார். மாநில அளவில் விளையாடியபோதும் வீட்டில் யாருக்கும் தெரியாது! ஒரு நாள் மேரி கோமின் தந்தை செய்தித்தாள் படித்துக் கொண்டி ருந்தபோது திடுக்கிட்டார். செய்தித்தாளில் சிரித்த முகத்தோடு மேரி கோமின் ஒளிப்படத்தைப் பார்த்ததுதான் திடுக்கிடலுக்குக் காரணம். இதனால் அவருக்குக் கோபம் தலைக்கேறியது. “குத்துச்சண்டை விளையாடுறியா, காயம் ஏற்பட்டுச்சுன்னா உன்னை யார் கல்யாணம் பண்ணிக்குவா?” என்று சத்தம்போட்டார்.
சர்வதேச வாய்ப்பு
மேரி கோம் குத்துச்சண்டை விளையாட தந்தை விரும்பாவிட்டாலும், தாயின் ஆதரவு அவருக்குப் பக்கபலமாக இருந்தது. அப்போதே மாநில, தேசிய அளவில் தன்னை நிலைநிறுத்திகொண்ட மேரி கோம், சர்வதேச அங்கீகாரத்துக்காகக் காத்திருந்தார். அவரது திறமையை 2001-ம் ஆண்டு பென்சில்வேனியாவில் நடைபெற்ற உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் நிரூபித்தார். 48 கிலோ எடைப் பிரிவில் களமிறங்கிய மேரி கோம், இறுதிச் சுற்றுவரை முன்னேறி வெள்ளிப் பதக்கத்தோடு நாடு திரும்பினார். இது அவர் பெற்ற முதல் சர்வதேசப் பதக்கம்.
உலக சாம்பியன்
உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன் ஷிப் போட்டியில் எந்த வீராங்கனையும் செய்யாத சாதனையை மேரி கோம் செய்தார். 2002, 2005, 2006, 2008, 2010 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்று ஐந்து தங்கப் பதக்கங்களை வென்று புதிய உலக சாதனை படைத்தார் மேரி கோம்.
இது மட்டுமல்ல, ஆறு முறை உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற ஒரே வீராங்கனை என்ற சிறப்பையும் பெற்றார். குத்துச்சண்டையில் சிறந்து விளங்கிய பல வெளிநாட்டு வீராங்கனை களை வீழ்த்தி, தொடர்ந்து வெற்றிக்கொடியைப் பறக்கவிட்டதன்மூலம், மகளிர் குத்துச்சண்டை உலகில் தனக்கெனத் தனி இடத்தைப் பிடித்தார் மேரி கோம்.
உலக சாம்பியன்ஷிப்பில் மேரி கோம் எப்படி உச்ச நாயகியாகத் திகழ்ந்தாரோ அதேபோல ஆசிய மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியிலும் அவர் தனிக்காட்டு ராணியாக இருந்தார். ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியிலும் ஐந்து முறை தங்கப் பதக்கத்தையும் ஒரு முறை வெள்ளிப் பதக்கத்தையும் வென்றிருக்கிறார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் தலா ஒரு முறை தங்கப் பதக்கத்தையும் வெண்கலப் பதக்கத்தையும் வென்றிருக்கிறார் மேரி.
முத்தாய்ப்பான வெற்றி
2008-ம் ஆண்டில் சீனாவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் அவர் வென்ற தங்கப் பதக்கமும் இந்தியாவில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப்பில் வென்ற வெள்ளிப் பதக்கமும் தன்னிகரற்றவை. மேரி கோம், 2005-ம் ஆண்டில் கருங் ஆன்ஹோலர் என்பவரைக் காதல் திருமணம் செய்திருந்தார். அவர்களுக்கு 2007-ம் ஆண்டில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. குழந்தைகளைப் பராமரிக்க வேண்டியிருந்ததால் குத்துச்சண்டை பக்கமே அவர் தலைவைக்கவில்லை.
பயிற்சி எடுத்தே மாதக் கணக்காகியிருந்தது. மேரி கோம் பதக்கம் வெல்வார் என யாரும் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. ஒரு மாதம் மட்டுமே பயிற்சி எடுத்து, தன்னை மட்டும் நம்பி களத்தில் இறங்கிய மேரி உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியிலும் பதக்கங்களை வென்று குத்துச்சண்டை உலகைப் புருவம் உயரச் செய்தார். மேரி கோமின் தன்னம்பிக்கைக்குக் கிடைத்த வெற்றி இது என்று குத்துச்சண்டை உலகம் மேரி கோமை உச்சி முகர்ந்தது.
உலக சாம்பியன்ஷிப், ஆசிய சாம்பியன்ஷிப்பில் ராணியாக வலம்வந்த மேரி கோம், ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லக் காத்திருந்தார். இறுதியில் 2012-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் சண்டையிடுவதற்கான வாய்ப்பு மேரிக்குக் கிடைத்தது. 51 கிலோ ஃபிளைவெயிட் பிரிவில் களமிறங்கியவர், இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொண்டார்.
அரையிறுதிப் போட்டிவரை முன்னேறி, இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்தாலும், இந்தியாவுக்காக வெண்கலப் பதக்கம் வென்றார் மேரி கோம். குத்துச்சண்டையில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார்.
எல்லாப் பதக்கங்களையும் பார்த்திருந்தா லும், காமன்வெல்த்தில் மட்டும் மேரி பதக்கம் வெல்லவில்லை என்ற குறை இருந்தது. அந்தக் குறையையும் இந்த ஆண்டு கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தீர்த்துவிட்டார். 48 லைட் ஃபிளை வெயிட் பிரிவில் பங்கேற்றுத் தங்கப் பதக்கம் வென்றதன்மூலம் எல்லாவிதமான தொடர் களிலும் பதக்கம் வென்றவரானார் மேரி கோம்.
அங்கீகாரங்கள்
குத்துச்சண்டையில் தனக்கெனத் தனிப் பாதையை ஏற்படுத்திக்கொண்ட மேரி கோம், இந்திய மகளிர் குத்துச்சண்டைக்கு முன்னுரை எழுதிய மகத்தான வீராங்கனை. மற்ற வீரர், வீராங்கனைகளைவிட அதிகமாக அவர் பெற்ற விருதுகளே அதற்கு அத்தாட்சி. 2003-ம் ஆண்டில் அர்ஜுனா விருது, 2006-ல் பத்மஸ்ரீ விருது, 2009-ல் ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது, 2013-ல் பத்மபூஷன் விருது என அவரது சாதனையில் மகுடங்களாக விருதுகள் ஜொலிக்கின்றன.
இதுமட்டுமல்ல கபில்தேவ், டோனி, அபினவ் பிந்த்ரா எனச் சிலருக்கு மட்டுமே கிடைத்த இந்திய ராணுவத்தின் கௌரவ லெப்டினன்ட் கர்னல் பதவியும் மேரி கோமுக்குக் கிடைத்தது. இந்தக் கவுரவப் பதவியைப் பெற்ற முதல் இந்திய வீராங்கனையும் மேரி கோம்தான்.
மகளிர் குத்துச்சண்டை இன்று இந்தியாவில் இவரால் பீடு நடைபோடுகிறது. அந்த வகையில் இந்தியாவில் மகளிர் குத்துச்சண்டைக்கான கதவுகளைத் திறந்தவர் மேரி கோம். குத்துச்சண்டை விளையாடப் பணம் இல்லாமல் தவித்த காலத்தை மேரி கோம் இன்னும் மறந்துவிடவில்லை.
யாரும் ஏழ்மையால் குத்துச்சண்டை விளையாடாமல் இருக்கக் கூடாது என்பதற்காக இம்பாலில் ‘எம்.சி. மேரி கோம் பாக்ஸிங் அகாடமி’யை நிறுவி இளம் வீரர், வீராங்கனைகளுக்கு இலவசப் பயிற்சி வழங்கிவருகிறார். தனது பரிசுப் பணத்திலிருந்து இந்த உதவியைச் செய்துவருவது அவரது உன்னதமான மனதுக்கு ஓர் உதாரணம்.
ஒலிம்பிக்கில் எப்படியும் தங்கம் வெல்ல வேண்டும் என்பதுதான் மேரி கோமின் லட்சியம். 2020-ல் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்காக அவர் தயாராகிக்கொண்டிருக்கிறார்.
(வருவார்கள் வெல்வார்கள்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: karthikeyan.di@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago