மகளிர் திருவிழா: கொண்டாடித் தீர்த்த நெல்லை வாசகிகள்

By ரேணுகா

எழில் கொஞ்சும் நெல்லை மாநகரில்  ‘இந்து தமிழ்’ நாளிதழின் ‘பெண் இன்று’ இணைப்பிதழ் சார்பில் நவம்பர் 11-ம் தேதி மகளிர் திருவிழா நடைபெற்றது. வண்ணாரப்பேட்டையில் உள்ள  பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் நடந்த இந்த விழாவில் ஏராளமான வாசகிகள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.  

நிகழ்ச்சியில் பேசிய நீதிபதி சி.பி.எம். சந்திரா, “வரதட்சிணை வாங்குவதும் கொடுப்பதும் குற்றம் எனச் சட்டம் சொல்கிறது. சட்டத்தை மதித்து நடந்தால்தான் வரதட்சிணையால்  அதிகரிக்கும் குற்றங்களைக் குறைக்க முடியும். பெண்கள் மீதான பாலியல் சீண்டல் அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக அலுவலகங்களில் நடக்கும் பாலியல் சீண்டல்களைத் தடுக்க ஒவ்வொரு நிறுவனத்திலும் புகார் குழு அமைக்க உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இதனால் அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களுக்குப் பாதுகாப்பை உறுதிப்படுத்த வாய்ப்புள்ளது” என்றார்.

நாட்டை உயர்த்தும் பெண்கள்

நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து தற்போது ஐ.எஸ்.ஆர்.ஓ. திரவ இயக்க உந்தும வளாக விஞ்ஞானி யாகப்  பணியாற்றிவரும் எஸ்.ராஜேஸ்வரி, எளிமை யான பேச்சால் வாசகிகளைக் கவர்ந்தார். “நான் பணியாற்றிவரும் விண்வெளி ஆய்வுத் துறையில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு அதிகம். ஆர்வம் இருந்தால் இந்தத் துறையில் நிச்சயம் சாதிக்க முடியும். மெக்கானிக்கல் இன்ஜினீயரிங், சிவில் இன்ஜினீயரிங் போன்ற படிப்புகள் பெண்களுக்கு எதற்கு என்ற கேள்வி எழும். ஆனால், இவற்றைப் படிக்கும் பெண்களுக்கு  இந்திய விண்வெளித் துறையில் அதிக வாய்ப்பு உள்ளது. 

அதேபோல் டிப்ளமோ, ஐடிஐ,  இளங்கலை வேதியியல், இயற்பியல் போன்றவற்றைப் படித்தவர்களுக்கு எழுத்துத் தேர்வு வைத்து வேலை வழங்கப்படுகிறது. விண்வெளித் துறையில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு பிளஸ் டூ முடித்ததும்  திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய்  விண்வெளி மையத்தில் விண்வெளி குறித்துப் படிக்க நுழைவுத் தேர்வு நடத்தப்படும். அதில் தேர்வாகும்  மாணவர்களுக்கு  இலவசக் கல்வி அளிக்கப்படுகிறது.

இதில் விண்ணப்பிக்கும் மாணவிகளுக்கு விண்ணப்பப் படிவக் கட்டணம்கூடக் கிடையாது. நானும் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் முடித்த பெண்தான். என் குடும்பத்தினரின் ஆதரவால்தான் என்னால் தற்போது விஞ்ஞானியாக முடிந்திருக்கிறது” என்றார்.

கல்வி என்பது ஏட்டுக்கல்வியாக மட்டும் இல்லாமல் குழந்தைகளுக்குப் பரந்துபட்ட அறிவைத் தருவதாக இருக்க வேண்டும் என ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பொன்விழா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நிறுவன முதல்வர் உஷாராமன் கூறினார். “பெற்றோர் தங்களுடைய ஆசையைப் பிள்ளைகள்மீது திணிக்கக் கூடாது.  பாடப் புத்தகங்களில் கிடைக்கும் கல்வியைவிடக் குடும்பச் சூழ்நிலை மூலம் குழந்தைகள் கற்றுக்கொள்ளும் படிப்புதான் அதிகம்.  குழந்தைகளுடைய கனவை நிறைவேற்ற அவர்களிடம் பெற்றோர் பொறுமையாகவும் நிதானமாகவும் நடந்துகொள்ள வேண்டும்”  என்றார் அவர்.

சிந்திக்கவைத்த பேச்சரங்கம்

இதையடுத்து ‘யாருக்குச் சுமை அதிகம், இல்லத்தரசிகளுக்கா? வேலைக்குச் செல்லும் பெண்களுக்கா’ என்ற தலைப்பில் சிந்திக்கவைக்கும் கலகலப்பான பேச்சரங்கம் நடந்தது. அன்னை ஹாஜிரா மகளிர் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் க. ரஜப் பாத்திமா தலைமை வகித்தார்.

இல்லத்தரசிகளுக்கே சுமை அதிகம் என்ற தலைப்பில்  காந்திமதி அம்பாள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ஆ. சிவகாமசுந்தரியும் வேலைக்குச் செல்லும் பெண்களுக்குத்தான் சுமை அதிகம் என்ற தலைப்பில் நெல்லை எல்ஐசி உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்புக் குழு இணை அமைப்பாளர் எஸ். ஹேமலதாவும் பேசினர்.

“வேலைக்குப் போகும் பெண்கள் எப்போதும் கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டியுள்ளது. ஏதாவது ஒரு வீட்டு விசேஷத்துக்குப் போக வேண்டும் என்றால்கூட, ஒரு மணிநேரம்தான் கிடைக்கும். தாய்மையைக்கூட கடமையாகச் செய்ய வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர்” என்றார் ஆசிரியை சிவகாமசுந்தரி. அதற்குப் பதில் தரும் வகையில் ஹேமலதா,  “வேலைக்குச் செல்லும் பெண்களுக்குப் பிரச்சினைகள் அதிகம் என்றாலும் சமூக அங்கீகாரம் அவர்களுக்குக்  கிடைக்கிறது. குடும்பப் பொருளாதார விஷயத்தில் வேலைக்குப் போகும் பெண்களால் சுயமாக முடிவெடுக்க முடிகிறது.

ஆனால், இல்லத்தரசிகளுக்கு எந்த அங்கீகாரமும் கிடைப்பதில்லை. அவர்கள் எந்த வேலை செய்தாலும்  ‘சும்மாதானே இருக்க’ எனச் சொல்லியே அவர்களின் உழைப்பை உதாசீனப்படுத்துகின்றனர்” என்றார்.  இறுதியில், “அலுவலகத்தில் ஏதாவது பிரச்சினையென்றால் புகார் அளிக்க, குழு உள்ளது. ஆனால், இல்லத்தரசிகளுக்கு அந்த வாய்ப்புகூட இல்லை. எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அவர்களாகவே சமாளிக்க வேண்டியிருக்கிறது. எனவே, இல்லத்தரசிகளுக்கே சுமை அதிகம்” எனத் தீர்ப்பளித்தார் நடுவர் ரஜப் பாத்திமா.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த வாசகிகளை மேலும் உற்சாகப்படுத்தும்விதமாக திருநெல்வேலி ம.தி.தா. இந்துக் கல்லூரி மாணவர்களின் பறையாட்டம், ஒயிலாட்டம், மான்கொம்பு ஆட்டம், கரகாட்டம் போன்றவை அரங்கேறின. பெருமாள்புரம் ‘லேடீஸ் கிளப் குழுவினர்’  கோலாட்டம் ஆடி வாசகிகளை உற்சாகப்படுத்தினார்கள்.

அனைவருக்கும் பரிசு

மதிய உணவுக்குப் பிறகு போட்டிகள் தொடங்கின.  ரங்கோலிப் போட்டி, பந்து பாஸ் செய்யும் போட்டி, பலூன் உடைக்கும் போட்டி எனப் பல்வேறு போட்டிகள் நடந்தன. கணவருக்குக் காதல் கடிதம் எழுதும் போட்டியில் வெற்றிபெற்ற வாசகியரின் கடிதங்கள் மேடையில் வாசிக்கப்பட, கரவொலியில் அரங்கம் அதிர்ந்தது.  இடையிடையே ஆச்சரியப் போட்டிகள் நடத்தப்பட்டுப் பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டிகளில் வென்ற வாசகியருக்கு வீட்டு உபயோகப் பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன.

அது மட்டுமல்லாது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் நிச்சயப் பரிசுகள் வழங்கப்பட்டன. வீட்டில் நாளிதழ் வாங்கிப் படிக்க முடியாத சூழ்நிலையில் தான் வேலை பார்க்கும் பகுதியில் உள்ள கடையில் இருந்து ‘பெண் இன்று’ இணைப்பிதழை வாங்கிப் படிக்கும் தென்காசியைச் சேர்ந்த வாசகி கிருஷ்ணமணிக்கும் ரெட்டியார்பாலத்தைச் சேர்ந்த வாசகி முத்துலட்சுமி இருவருக்கும் சிறப்பு பம்பர் பரிசுகள் வழங்கப்பட்டன. மாலை நிகழ்ச்சிகளைச் சின்னத்திரைத் தொகுப்பாளர் தேவி கிருபா தொகுத்து வழங்கினார். 

திருநெல்வேலி மகளிர் திருவிழாவை ‘இந்து தமிழ்’ நாளிதழுடன் சேர்ந்து  ஆரெம்கேவி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி, மயூரி டிவி,  சௌபாக்யா,  ராஜேஷ் எலெக்டிரிகல்ஸ், பிளாசம் கார்டன் சென்டர், ஆப்பிள் குக்வேர், எஸ்விஎஸ், கலர்ஸ் லைப் ஸ்டைல், மீனாஸ் அப்பளம், கண் மார்க் ஊறுகாய், ருத்ரா வையர்டெக், பொன்வண்டு டிடர்ஜென்ட் பவுடர் அண்ட் கேக் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்திப் பரிசுகளை வழங்கின.

படங்கள்: மு.லெட்சுமி அருண்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

மேலும்