பார்வை: நாம் பார்வையாளர் மட்டும்தானா?

By பிருந்தா சீனிவாசன்

இங்கே யாருடைய குரல் ஒலிக்க வேண்டும், யாருடைய மரணம் சத்தமின்றிப் புதைக்கப்பட வேண்டும் என்பதிலும் அரசியல் இருக்கிறது. சமூகமாகப் பார்க்கும்போது பெண்கள் ஒடுக்கப்பட்டவர்கள். அதிலும் சாதிப் படிநிலையில் அடிமட்டத்தில் இருக்கும் பெண்கள், ஒடுக்குமுறையின் மொத்தக் களமாகவே நடத்தப்படுகின்றனர்.

சேலம் தளவாய்ப்பட்டியை அடுத்த செந்தாரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமிக்கு நிறைய கனவுகள் இருந்திருக்கலாம். நன்றாகப் படித்து, சமூகத்தில் மதிப்பு மிக்க வேலைக்குச் சென்று தன் பெற்றோரின் வறுமைச் சுமையைக் குறைப்பதும் அவற்றில் ஒன்றாக இருந்திருக்கலாம். ஆனால், அவளது கனவு மட்டுமல்ல; அவளது குடும்பத்தின் ஒட்டுமொத்தக் கனவுமே சிதைக்கப்பட்டுவிட்டது.

தன்னிடம் தவறாக நடந்துகொள்ள முயன்ற அண்டைவீட்டுக்காரர் தினேஷ் குமாரைப் பற்றித் தன் தாயிடம் தயங்கித் தயங்கிச் சொன்னதைத் தவிர அந்தக் குழந்தை வேறெதையும் செய்யவில்லை. ஆனால், அதுவே தன் உயிரைக் குடித்துவிடக்கூடும் என அவள் நினைத்திருக்க மாட்டாள். அந்தச் சிறுமியின் வீட்டுக்குள் நுழைந்த தினேஷ் குமார், எதிர்பாராத கணத்தில் அவளது கழுத்தை அறுத்து, படுகொலை செய்தார்.

தடுத்த தாய், சாதி குறித்த வசைச்சொல்லுடன் தள்ளிவிடப்பட்டார். தடுமாறி விழுந்தவர் சுதாரித்து எழும் முன்னே தலை வேறு உடல் வேறாக அந்தச் சிறுமி கூறுபோடப்பட்டுவிட்டாள். கணவர் வெளியூர் வேலைக்குச் சென்றிருக்க ஒற்றை ஆளாக நின்று கதறிய தாய் சின்னப் பொண்ணுவின் கதறல், அவருடைய மகளது சடலத்தைத் தாண்டியாவது ஒலித்திருக்குமா என்பது சந்தேகமே. 

கிடைக்காத நீதி

சமூகத்தில் அதிகரித்துவரும் வன்முறைச் சம்பவங்களின் தொடர்ச்சியாக மட்டுமே இந்த மரணத்தைக் கடந்துவிட முடியுமா? பெண்கள்மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளின் முடிவுறாத கண்ணியாகப் பார்க்க வேண்டுமா? ஒடுக்கப்பட்ட பெண்களின் மீது செலுத்தப்படும் ஆதிக்க வெறியின் மற்றுமொரு கொடூரச் சான்றாக நினைக்க வேண்டுமா? எதுவாக இருந்தாலும் நிகழ்ந்திருப்பது கற்பனைக்கும் எட்டாத படுகொலை.

சட்டமும் நீதியும் இரு கண்களாக வர்ணிக்கப்படுகிற நாட்டில், இப்படியொரு படுகொலை நடந்தால் என்ன நடக்க வேண்டும்? குற்றம் செய்தவருக்குத் தண்டனையும் பாதிக்கப்பட்டவருக்கு நியாயமும்தானே கிடைத்திருக்க வேண்டும்?

ஆனால், தஞ்சாவூர் அருகேயுள்ள சாலியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கலைச்செல்விக்கும் அரியலூர் மாவட்டம் சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த நந்தினிக்கும் விழுப்புரம் மாவட்டம் வெள்ளம்புதூர் கிராமத்தைச் சேர்ந்த ஆராயிக்கும் அவருடைய  மகளுக்கும் கிடைத்த உடனடி நீதிதான் செந்தாரப்பட்டி சிறுமிக்கும் கிடைத்திருக்கிறது.

சட்டம் இங்கே சமமா?

இங்கே ஒருவர் படுகொலை செய்யப்பட்டால்கூட ஊர், இனம், பாலினம் ஆகியவற்றைப் பொறுத்துத் தான் காவல்துறையின் சட்டங்கள் தன் கடமையைச் செய்யும்போல. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற வாசகத்துக்கும் நடைமுறைக்கும் சிறிதும் தொடர்பில்லை என்பது அதன் பலனை அனுபவிப்பவர்களுக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தித் தப்பிக்கிறவர்களுக்கும் மட்டுமல்ல; கையறு நிலையில் அதைப் பார்க்கிறவர்களுக்கும் தெரியும்.

சமூகத்தின் மேல் தட்டில் அமர்ந்திருக்கிறவர்களில் தொடங்கி அடித்தட்டில் அடையாளம் ஏதுமின்றி வாழ்கிற அனைவருக்கும் நீதி கிடைப்பது, அதைச் செயல்படுத்துகிறவர்களின் கைகளிலும்தானே இருக்கிறது? ஆனால், அந்தக் கரங்கள் கறைபடியாதவையாக இருக்கின்றனவா? ஒடுக்கப்பட்டுச் சுரண்டப்பட்டு அநீதி இழைக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக என்றாவது அவை நீண்டிருக்கின்றனவா?

புகார் கொடுக்க வந்தவர்களையே குற்றவாளியாக்கும் தந்திரத்தைத் தவிர்த்திருக்கின்றனவா? புகார் மனு எழுதும்போது எந்தவித சாதிய சாய்வும் இல்லாமல் நியாயத்தின் நேர்க்கோட்டில் அந்தக் கரங்கள் நீண்டிருக்கின்றனவா? இவற்றில் விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால், அவற்றின் சதவீதம் ஒப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவில்கூட இல்லை என்பதே நிதர்சனம்.

மௌனமாக்கப்படும் குரல்கள்

குற்றம் நிகழ்ந்ததுமே கிடைக்க வேண்டிய நியாயமும் நிலைநிறுத்தப்பட வேண்டிய நீதியும் போராடினால் மட்டுமே கிடைக்கும் என்பதைத்தான் அரசும் அதிகார அமைப்புகளும் நிரூபித்துவருகின்றன. ஆனால், அந்தப் போராட்டத்தை யாருக்காக யார் முன்னெடுப்பது என்பதி லும் சாதியும் வர்க்கமும் தங்கள் இருப்பை உணர்த்திவிடுகின்றன.

சென்னை போன்ற பெருநகரத்தின் ரயில் நிலையத்தில் ஒரு பெண் வெட்டிச் சாய்க்கப்பட்டால் அடுத்தடுத்து வேகமெடுக்கும் விசாரணைக்கும் பறந்துவரும் அறிக்கைகளுக்கும் தமிழகத்தின் எங்கோ ஒரு  மூலையில் ஒடுக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த ஏழைச் சிறுமி கழுத்தறுக்கப்பட்டுக் கொல்லப்பட்டால் நடக்கிற விசாரணைக்கும் இடையே உள்ள வேறுபாடே நிதர்சனத்தைச் சொல்லிவிடுகிறது.

ஆதிக்கச் சாதி அல்லது இடைநிலைச் சாதியைச் சேர்ந்த பெண்ணுக்கு நேரும் கொடுமையைத் தங்கள் இனத்துக்கே நேர்ந்த கொடுமையாக வரித்துக்கொண்டு களத்தில் இறங்கி நீதி கேட்கும் பலரும் ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலை மக்களின் மரணத்தைச் செய்தியாகக்கூட மதிப்பதில்லை. இதுபோன்ற கொடுமைகளுக்கு அவர்கள் ஆளாக வேண்டியவர்கள்தாம் என்ற நினைப்பும் அதற்கொரு காரணம்.

ஏற்கெனவே குரல் வளை நசுக்கப்பட்டுப் பேசுவும் அனுமதி மறுக்கப்பட்டு  வாழும் மக்கள், தங்கள் வாழ்க்கைப்பாட்டுக்கே போராடுகிற நிலையில் தங்கள் இனத்தைச் சேர்ந்த பெண்ணொருவருக்காக நீதி கேட்டு அதிகார மையத்தைக் கேள்வி கேட்டுவிட முடியுமா இங்கே?

paarvai-2jpgright

நாம் யார்?

பெண்கள் மீது அதுவும் ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறையை விசாரிக்கும் பலரும் முன்முடிவுடனேயே அதை அணுகுகிறார்கள். ஒடுக்கப்பட்டவர்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம், அதை எதிர்க்கும் உரிமை அவர்களுக்கு இல்லை என்ற மனநிலையின் வெளிப்பாடுதான் அது.

அதனால்தான் மகளைப் பறிகொடுத்துவிட்டுத் தவிக்கும் தாயைப் பார்த்து, “உன்னை போலீஸ்காரங்க கூப்பிட்டு விசாரிச்சபோது ஏன் இதை அப்பவே சொல்லலை?” என்று ஒருவரால் கேட்க முடிகிறது. அதற்குச் சிலர் கண்டனம் தெரிவித்த பிறகும், “இல்லப்பா அன்னைக்குப் பாலியல் பத்தி எதுவுமே சொல்லலை” என்று தன் கேள்விக்கு நியாயம் கற்பிக்கவும் முடிகிறது.

இதை வைத்து, பொதுச் சமூகத்தின் மனநிலை இப்படித்தான் இருக்கிறது என்று சொல்லிவிட முடியாது என்றாலும் இவர்களைப் போன்றவர்களையும் உள்ளடக்கியதுதானே நம் சமூகம்? 

எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் நம் வீட்டுக் கதவைத் தட்டாதவரை நமக்குச் சிக்கல் இல்லை என்பதே பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தின் மனநிலையாக இருக்கிறது. தொலைக்காட்சித் தொடரில் தொடங்கி, உலகின் பிரம்மாண்ட சிலை வரைக்கும் கருத்துத் தெரிவிக்கும் இவர்களுக்கு, புறக்கணிக்கப்படும் மக்களைக் குறித்தோ அவர்களுக்கு மறுக்கப்படும் நீதி குறித்தோ எந்தவொரு கருத்தும் இல்லை.

காரணம் அவர்கள் வீட்டுப் பெண் கழுத்தறுபடவில்லை, அவர்கள் வீட்டுப் பிள்ளை அரிவாளுடன் கழுத்தறுக்கப் புறப்படவில்லை. ஒரு குற்றவாளி தப்புவதற்கும் ஒரு பெண் நீதி கிடைக்காமல் மரணிப்பதற்கும் நம் சமூகத்தின் ‘நமக்கேன் வம்பு’ என்ற மனநிலையும் ஒரு காரணம். எங்க ஆளுங்க, அவங்க ஆளுங்க என்ற எந்தப் பிரிவினையும் இல்லாமல் குற்றம் நடந்ததுமே அதைக் குற்றமாக மட்டுமே பார்த்து, சுற்றியிருப்பவர்கள் திரண்டு குரல் எழுப்பியிருந்தால் பாதிக்கப்பட்ட பலருக்கு இந்நேரம் நீதி கிடைத்திருக்கக்கூடும்.

இந்தச் சமூகம் கேள்வி கேட்குமே என்ற அச்சமேகூட சில நேரம் குற்றங்களைத் தடுத்திருக்கும். ஆனால், அப்படியான சூழல் இங்கு சாத்தியமா? எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அதைச் சாதி, வர்க்க எல்லைக்குள் வைத்து கூறுபோட்டுத்தானே எல்லாமே நடக்கிறது.

கொலையோ வன்முறையோ எது நடந்தாலும் இப்படியொரு கொடுமை நடந்துவிட்டதே என்ற பதற்றம் வருவது தானே மனித இனத்தின் இயல்பு? ஆனால், யாருக்கோ நடந்தது, யாரோ பார்த்துக்கொள்ளட்டும் என்ற பொறுப்பற்ற தன்மைதான் இங்கே பலரிடமும் இருக்கிறது.

அவர்கள்தாம், “பெண்ணிய அமைப்புகள் என்ன செய்துகொண்டிருக்கின்றன, சம்பந்தப்பட்டவர்களுடைய சாதி அமைப்பு என்ன செய்கிறது?” என்று கேள்வி கேட்கிறார்கள். அப்படிக் கேட்பதன்வாயிலாக, ‘நடந்த குற்றத்துடன் நான் உடன்படுகிறேன், நீங்கள் யாராவது கேள்வி கேளுங்கள்’ என்ற நிலைப்பாட்டை அவர்கள் முன்வைக்கிறார்கள். அந்த ‘அவர்க’ளில் நாமும் அடக்கம் என்பதை எப்போது புரிந்துகொள்ளப் போகிறோம்?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்