அறிவோம் தெளிவோம்: புற்றுநோயை வெல்ல முடியும்!

By எல்.ரேணுகா தேவி

செப்டம்பர் 22 - உலக புற்றுநோயாளிகளுக்கான நல நாள்

 

இந்தியாவில் ஆண்டுக்குப் பத்து லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்பது அச்சமூட்டுகிறது. மார்பகப் புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய் போன்றவற்றால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இந்தியாவில் எட்டு நிமிடத்துக்கு ஒரு பெண் கருப்பைவாய் புற்றுநோயால் மரணிக்கிறார். 27 சதவீதப் பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது, நாம் எவ்வளவு விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

இந்தியாவில் புற்றுநோயின் தாக்கம் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே போகிற அபாய நிலையிலும்கூட மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மருத்துவச் செலவுக்காக அரசு ஒதுக்கும்  நிதியின் அளவு வெறும் 1.5 சதவீதம்தான். பெண்களை அதிகமாகத் தாக்கும் மார்பகப் புற்றுநோய், கருப்பைவாய் புற்றுநோய், சினைப்பை புற்றுநோய் ஆகியவற்றை ஆரம்ப நிலையில் கண்டுபிடித்துவிட்டால் குணப்படுத்த முடியும் என மருத்துவர்கள் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

“மார்பகப் புற்றுநோய் என்பது பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் வரலாம். ஆனால், பெண்களுக்கே இந்த நோயின் தாக்கம் அதிகம்” என்கிறார்கள் மருத்துவர்கள்.  பொதுவாக மாதவிடாய் நின்ற பெண்களையே மார்பகப் புற்றுநோய் அதிகம் பாதிக்கிறது.

புற்றுநோய் யாருக்கெல்லாம்  வரலாம்?

# 30 வயதுக்கு மேல் முதல் குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்கள்

# குழந்தைப்பேறு இல்லாத பெண்கள்

# தாய்ப்பால் கொடுக்காத பெண்கள்

# சிறுவயதிலேயே பருவமமைடயும் பெண்கள்

#மதுப் பழக்கம் உள்ள பெண்கள்

# பரம்பரையாக வரும் மார்பகப் புற்றுநோயின் தாக்கம் 5 சதவீதம் மட்டுமே

# தந்தைவழியில் உள்ள நெருங்கிய உறவினருக்கு மார்பகப் புற்றுநோய் இருந்தாலும் சம்பந்தப்பட்டவரின் மகளுக்கு மார்பகப் புற்றுநோய் வரலாம்.

ஆனால், இந்தப் பட்டியலில் அடங்காத பெண்களுக்கும்கூட மார்பகப் புற்றுநோய் வரக்கூடும்.

“வாழ்க்கை முறை மாற்றம், உணவுப் பழக்க வழக்கம், பரம்பரை போன்றவை மார்பகப் புற்றுநோய் வருவதற்கான காரணங்களில் முக்கியமானவை. தமிழகத்தில் மட்டும் கடந்த 30 ஆண்டுகளில் மார்பகப் புற்றுநோய் கருப்பைவாய் ஆகியவற்றால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக, கருப்பைவாய் புற்றுநோயைவிட மார்பகப் புற்றுநோயின் தாக்கம் இங்கு அதிகம். தமிழகத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 18 மாவட்டங்களில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை அதிகம்.

இதர மாவட்டங்களில் மார்பகப் புற்றுநோயைவிடக் கருப்பைவாய் புற்றுநோயின் தாக்கம் அதிக அளவு உள்ளது” என்கிறார் அடையாறு புற்றுநோய் மையத்தின் புற்றுநோய் தடுப்புத் துறை தலைவர் ஜெ.எஸ்.மல்லிகா.

அச்சப்படத் தேவையில்லை

புற்றுநோய் வந்துவிட்டால் இறந்துவிடுவார்கள் என்று இன்றும்கூட பலரும் தவறாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், மார்பகப் புற்றுநோய், கருப்பைவாய் புற்றுநோய் ஆகியவற்றை ஆரம்ப நிலைலையில் கண்டறிந்துவிட்டால் முறையான சிகிச்சை மூலம் சரிசெய்து விடலாம். மார்பக சுய பரிசோதனை மூலம் மார்பகப் புற்றுநோயை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம்.

மார்பைக் கைவிரல்களால் லேசாக அழுத்திப் பார்த்தாலே கட்டிபோல  ஏதாவது தென்படுகிறதா என்று தெரிந்துவிடும். மார்பகக் காம்பில் நீர் கசிதல், ரத்தக் கசிவு போன்றவையும் மார்பகப் புற்றுநோய்க்கான அறிகுறிகள்.

“பொதுவாகப் புற்றுநோய் கட்டிகள் ஆரம்ப நிலையில் இருக்கும்போது வலிக்காது. அதனால் மார்பகத்தில் ஏதேனும் கட்டிகள் தென்பட்டால் அதை அலட்சியப்படுத்தாமல் மருத்துவரிடம் செல்வது நல்லது. அப்போதுதான் அது கொழுப்புக் கட்டியா அல்லது புற்றுநோய் கட்டியா என்பதைப் பரிசோதித்து அறியமுடியும். எங்களிடம் வரும் பலரும் நோயின் தீவிரம் அதிகரித்த பிறகே வருகிறார்கள். ஆரம்ப நிலையிலேயே வந்தால் மார்பகத்தை அகற்றுவதைத் தடுக்கமுடியும். 

அதேபோல் ரேடியேஷன், கீமோதெரபி சிகிச்சையும் குறைந்த அளவு கொடுத்தாலே போதுமானது. மேலும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மார்பகப் புற்றுநோய் வராமல் பாதுகாக்கவும் முடியும். நோயின் இறுதிகட்டத்தில் வந்தால் அவர்களைக் காப்பாற்றுவதற்கான வாய்ப்பு 20 சதவீதம்தான்”  என்கிறார் அவர்.

வயதாகும்போது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் அவர்களை மார்பகப் புற்றுநோய் அதிகமாகத் தாக்குகிறது. குறிப்பாக 40 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு மார்பகப் புற்றுநோய் பரிசோதனையான மமோகிராம்  செய்துகொள்வது அவசியம்.

அதேபோல் இளம் வயது பெண்கள் மாதவிடாய் முடிந்த எட்டாம் நாள் மார்பகத்தைச் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அந்த நேரத்தில்தான் மார்பகம் தளர்வாக இருக்கும் என்பதால் கட்டிகள் ஏதேனும் இருந்தால் எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம்.

கருப்பைவாய் புற்றுநோயைத் தடுக்கலாம்

பெண்களின் சுகாதாரத்துடன் தொடர்புடையது கருப்பைவாய் புற்றுநோய். இந்நோய் எச்பிவி வைரஸ் மூலம் பரவுகிறது. அதிகமான நபர்களுடன் உறவு கொள்கிறவர்களுக்குக் கருப்பைவாய் புற்றுநோய் உண்டாகிறது. அதேபோல் பிறப்புறுப்பு பகுதியைச் சுத்தமாக வைத்துக்கொள்ளாதது, அடிக்கடி குழந்தைப்பேறு, கருக்கலைப்பு போன்றவற்றாலும் இந்நோய் வரலாம்.

“புற்றுநோய் வகைகளில் கருப்பைவாய் புற்றுநோயை மட்டும்தான் முழுமையாகத் தடுக்க முடியும். 30 வயது முதல் 40 வயதுவரை உள்ள பெண்கள் வருடத்துக்கு மூன்று முறையாவது பாப்ஸ்மியர் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. பாப்ஸ்மியர் பரிசோதனையை மூன்று முறை செய்தும் புற்றுநோய்கான அறிகுறிகள் இல்லையென்றால் உங்களுடைய வாழ்நாளில் இனி எப்போதும் கருப்பைவாய் புற்றுநோய் வராது என்பது உறுதி” என்கிறார் மருத்துவர் மல்லிகா.

அதேபோல் சினைமுட்டைப்பையில் உண்டாகும் புற்றுநோய்க்கு எந்த அறிகுறியும் வெளித்தெரியாது. உடலின் உள் உறுப்பு என்பதால் இதைக் கண்டறிவதும் கடினம். அடிக்கடி வயிற்று வலி, பசியின்மை, வயிறு பெரிதாக இருப்பது, மலம் கழிக்கும்போது ரத்தம் வெளியேறுவது போன்றவை சினைமுட்டைப்பையில் புற்றுநோய் இருப்பதற்கான அறிகுறிகள். இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

எனக்கெல்லாம் புற்றுநோய் வராது என கவனக்குறைவாக இருப்பதைவிட அந்தந்த வயதில் செய்ய வேண்டிய மருத்துவப் பரிசோதனையைச் செய்துகொள்வது நல்லது என்பதை மக்கள்  புரிந்துகொள்ள வேண்டும். இவற்றுக்கான பரிசோதனையை எங்கு சென்று செய்துகொள்வது என நினைப்பவர்கள் மாவட்ட சுகாதாரத் தலைமை மையங்களில் புற்றுநோய்க்கான பிரத்யோக பிரிவைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

‘புற்றுநோயை நினைத்து பயப்படுவதைவிட புற்றுநோய் பரிசோதனை செய்யாமல் காலதாமதம் செய்வதைப் பற்றித்தான் பயப்பட வேண்டும்’ என்ற அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் சாந்தாவின் வார்த்தைகளை நினைவில்கொண்டு செயல்படுவோம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்