ஆடும் களம் 28: சரித்திர நாயகி சிந்து!

By டி. கார்த்திக்

இரண்டாண்டுகளுக்கு முன்பு தேசமே அந்த இளம் பெண்ணின் மீது பார்வையைக் குவித்திருந்தது. உலகின் கவுரமாகப் பார்க்கக்கூடிய  அந்த விளையாட்டுத் திருவிழாவின் இந்தியாவின் ஒரே நம்பிக்கையாக  முன்னேறிக்கொண்டிருந்தார் அவர்.

அவர் மீது தேசம் வைத்த நம்பிக்கை வீணாகவில்லை. அரங்கம் அதிர வெள்ளிப் பதக்கத்தைப் பெறுவதற்காக அவர் தலைகுனிந்தபோது தேசமே தலை நிமிர்ந்தது! 122 ஆண்டு கால ஒலிம்பிக் வரலாற்றில் தனி நபர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற சிறப்பையும் சேர்த்தே பெற்றார். அவர், ஒலிம்பிக் வெள்ளி மங்கை பி.வி.சிந்து.

விளையாட்டுக் குடும்பம்

புசார்லா வெங்கட சிந்து என்றழைக்கப்படும் பி.வி. சிந்துவின் சொந்த ஊர் ஹைதராபாத். சிந்துவின் குடும்பமே விளையாட்டுக் குடும்பம் தான். அப்பாவும் அம்மாவும் கைப்பந்து விளையாட்டில் பெயரெடுத்தவர்கள். அவருடைய சகோதரி பி.வி. திவ்யா எறிபந்து வீராங்கனை. குடும்பமே விளையாட்டில் இருந்தாலும், சிறுவயதிலிருந்தே சிந்துவுக்கு மருத்துவராக வேண்டும் என்பதே லட்சியம்.

ஆனால், விளையாட்டு அவரை விடவில்லை. ஹைதராபாத்தைச் சேர்ந்த கோபிசந்த், பாட்மிண்டனில் சாதித்ததைப் பார்த்து அந்த விளையாட்டின் மீது சிந்துவுக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. அப்போது முதல் பாட்மிண்டன் விளையாட விரும்பினார். முதன்முறையாக அவர் பாட்மிண்டன் ராக்கெட்டைப் பிடித்தபோது அவருக்கு எட்டு வயது.

அதிகாலைப் பயிற்சி

தொடக்கத்தில் செகந்திராபாத்தில் உள்ள ஒரு மையத்தில்  பாட்மிண்டன் அடிப்படை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார் சிந்து. அதன் பிறகு ஹைதராபாத்தில் உள்ள கோபிசந்த் பாட்மிண்டன் அகாடமியில் சேர்ந்தார். இந்த அகடாமிக்கும் சிந்துவின் வீட்டுக்கும் 56 கி.மீ. தொலைவு.

ஆனாலும், நாள்தோறும் அதிகாலையில் பயிற்சிக்குச் சென்றார். பாட்மிண்டன் விளையாட்டை அர்ப்பணிப்போடு கற்றுத் தேர்ந்தார். கோபிசந்த் அகாடமியில் சேர்ந்த பிறகு பத்து வயதுக்குட்பட்டோர் பாட்மிண்டன் விளையாட்டில் பலமுறை பட்டம் வென்றிரு க்கிறார். இதில் அகில இந்தியத் தரவரிசை சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்றது முக்கியமானது.

13 வயதுக்குட்பட்ட தேசிய சப் ஜூனியர் பிரிவு, 14 வயதுக்குட்பட்டோருக்கான தேசியப் பள்ளிகள் விளையாட்டுப் போட்டி என அவர் களமிறங்கியதெல்லாம் வெற்றியாக வந்துசேர்ந்தது. ‘விளையும் பயிர் முளையிலே தெரியும்’ என்ற பழமொழிக்கு ஏற்ப பள்ளிப் பருவத்திலேயே தேசிய அளவில் உயர்ந்தார் சிந்து.

சர்வதேசத்தில் உச்சம்

இந்திய அளவில் பெரும் முன்னேற்றம் கண்ட பி.வி. சிந்து, சர்வதேச அரங்கில் 2009-ம் ஆண்டில் காலடி வைத்தார். கொழும்பில் நடைபெற்ற சப்-ஜூனியர் ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்தான் அவர் பங்கேற்ற முதல் சர்வதேசப் போட்டி.

இந்தப் போட்டியில் வெண்கலம் வென்றார். 2010-ல் ஈரானில் நடைபெற்ற பாட்மிண்டன் சேலஞ்ச் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற அவர், அதே ஆண்டு மெக்சிகோவில் நடைபெற்ற  ஜூனியர் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் காலிறுதிவரை முன்னேறினார். 2012-ம் ஆண்டில் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய இளையோர் போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடி, ஜப்பானின் நஷோமி ஒக்குஹாராவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

இதேபோல அதே ஆண்டு சீன சூப்பர்  தொடரில் லண்டன் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சீனாவின் லி சூயிரியை அரையிறுதியில் வீழ்த்தியபோது பாட்மிண்டன் உலகம் சிந்துவைத் திரும்பிப் பார்த்தது. 2012-ம் ஆண்டில் மட்டும் பாட்மிண்டனில் கோலோச்சிய சீன, இந்தோனேஷியா வீராங்கனைகளைப் பல்வேறு சந்தர்ப் பங்களில் வீழ்த்தி புதிய சாம்பியனாக உருவெடுக்கத் தொடங்கினார்.

2013-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டுவரை சர்வதேசப் போட்டிகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தினார் பி.வி. சிந்து. குறிப்பாக 2013, 2014, 2015 ஆகிய ஆண்டுகளில் மக்காவ் ஓபன் பட்டத்தைத் தொடர்ச்சியாக வென்று புதிய அத்தியாயம் எழுதினார். இதேபோல 2014-ல் சயீத் மோடி இண்டர்நேஷனல் தொடரிலும் 2015-ல் டென்மார்க் ஓபன் போட்டியிலும் இரண்டாமிடம் பிடித்து நூலிழையில் பட்டத்தைக் கோட்டைவிட்டார்.

நனவான ஒலிம்பிக் கனவு

2016 சிந்துவுக்கு மறக்க முடியாத ஆண்டு. அந்த ஆண்டின் தொடக்கத்தில் மலேசியன் மாஸ்டர்ஸ் தொடரில் ஸ்காட்லாந்தின் கிறிஸ்டி கில்மோரைத் தோற்கடித்த சிந்து, ரியோ ஒலிம்பிக் போட்டியில் சாதிப்பதற்காகக் காத்திருந்தார். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் முன் பாட்மிண்டனில் பதக்கம் கிடைக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. சிந்து சந்தித்த போட்டியாளர்கள் எல்லாருமே கடினமானவர்களாகவே இருந்தார்கள்.

படிப்படியாக முன்னேறிவந்தவர், அரையிறுதியில் ஜப்பானின் நம்பர் ஒன் வீராங்கனை நஷோமி ஒக்குஹாராவை வீழ்த்தி இறுதியாட்டத்துக்குத் தகுதி பெற்றபோது இந்தியாவுக்கு ஒலிம்பிக் பதக்கம் உறுதியானது. அதுவரை இந்தியா எந்தப் பிரிவிலும் எந்தப் பதக்கமும் பெறாததால்,  நாடே சோர்வடைந்திருந்தது. அதனால், சிந்துவின் அரையிறுதி வெற்றியை இந்தியாவே கோலகலமாகக் கொண்டாடியது.

இறுதிப் போட்டியில் ஸ்பெயினின் கரோலினா மரினிடம் போராடித் தோற்று, தங்கப் பதக்கத்தை இழந்தார். ஆனாலும், வெள்ளிப் பதக்கம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்தார். ஒலிம்பிக்கில் இளம் வயதில் பதக்கம் வென்ற முதல் இந்தியர், தனிநபர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை, பாட்மிண்டனில் பதக்கம் வெல்லும் இரண்டாவது வீராங்கனை எனப் பல சிறப்புகளை ஒரே வெற்றியின் மூலம் பெற்றார் பி.வி. சிந்து.

தொடரும் ஆதிக்கம்

ஒலிம்பிக் வெற்றியோடு சிந்துவின் வெற்றி நின்றுவிடவில்லை. அதன் பிறகு சீன ஓபன் (2016), சயீத் மோடி இண்டர்நேஷனல், இந்திய ஓபன், கொரிய ஓபன் (2017) என ஒற்றையர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் தொடர்ந்து முத்திரை பதித்துவருகிறார். இதில் இந்திய ஓபன் இறுதிப் போட்டியில் தன்னை ஒலிம்பிக் இறுதியாட்டத்தில் தோற்கடித்த கரோலினா மரினைத் தோற்கடித்ததும் அடங்கும்.

இதேபோல உலக சாம்பியன்ஷிப், ஹாங்காங் ஓபன், சூப்பர் சீரிஸ் பைனல்ஸ் (2017 இந்திய ஓபன், காமன்வெல்த் போட்டி, தாய்லாந்து ஓபன், உலக சாம்பியன்ஷிப், ஆசிய விளையாட்டுப் போட்டி (2018) எனத் தொடர்ச்சியாக இரண்டாமிடம் பிடித்தும் இந்தியாவின் நம்பர் ஒன் வீராங்கனையாக சிந்து தொடர்கிறார்.

தற்போதைய நிலையில் உலகத் தரவரிசைப் பட்டியலில் இரண்டாமிடம் வகிக்கிறார் சிந்து. இந்திய மகளிர் பாட்மிண்டன் முகமாகவே மாறியிருக்கும் பி.வி. சிந்து 2020-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் சாதிக்கக் காத்திருக்கிறார்.

இந்தியாவின் பெருமை

இதுவரை 346 சர்வதேச ஒற்றையர் போட்டியில் விளையாடி 242 வெற்றிகளைப் பதிவு செய்திருக்கிறார் சிந்து. இதேபோல 17 இரட்டையர் போட்டிகளில் பங்கேற்று 9 வெற்றிகளை ஈட்டியிருக்கிறார். சிந்துவின் சாதனைகளைப் பாராட்டி 2013-ம் ஆண்டில் அர்ஜுனா விருதையும் 2015-ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதையும் 2016-ம் ஆண்டில் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதையும் மத்திய அரசு வழங்கிக் கவுரவித்தது.

பாட்மிண்டனில் உச்சத்தில் இருக்கும் பி.வி. சிந்துவைப் பற்றி அவருடைய பயிற்சியாளர் கோபிசந்த் இப்படிச் சொன்னார்: “எட்டு வயதிலிருந்து சிந்து பயிற்சி எடுக்கிறார். தினமும் அதிகாலை நான்கரை மணிக்குப் பயிற்சிக்கு வரச் சொல்வேன். ஒருநாள்கூட ‘நாளைக்கு நான் பத்து நிமிஷம் லேட்டா வரலாமா’ என்று சிந்து கேட்டதேயில்லை.

புன்சிரிப்புதான் சிந்துவின் அடையாளம். ஆனால், களத்தில் இறங்கிவிட்டால் ஆக்ரோஷமாக ஆடுவார். கடைசி நிமிடம்வரை போராடுவார். இதுதான் அவரை ஜொலிக்க வைத்திருக்கிறது. இன்னும் அவர் போக வேண்டிய உயரம்  உண்டு. அவர் இந்தியாவின் பெருமை”.

(வருவார்கள் வெல்வார்கள்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: karthikeyan.di@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்