பெண்கள் 360: சமூக ஆர்வலரின் உண்மை முகம்

By முகமது ஹுசைன்

காஷ்மீர் மாநிலம் கதுவா பகுதியில் கடந்த ஜனவரி மாதம் எட்டு வயதுச் சிறுமி, கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொடூரமாகக் கொல்லப்பட்டார். தனது தொடர் போராட்டங்களால் அந்தச் சம்பவத்தைச் சமூக ஆர்வலர் தலிப் ஹுசைன் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தார்.

கடந்த ஜூலையில் தலிப் ஹுசைன் மீது பாலியல் வன்முறை புகார் அவருடைய மைத்துனியால் அளிக்கப்பட்டது. தலிப் ஹுசைன் கைதுசெய்யப்பட்டார். கதுவா சம்பவத்தின் எதிரொலியாக அவர்மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது. தலிப் ஹுசைனுக்காக மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் உச்ச நீதிமன்றத்தில் வாதாடினார். இந்நிலையில் டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவி ஒருவர் தலிப் ஹுசைன் மீது ‘#மீடூ' புகார் கூறியுள்ளார்.

அந்தப் புகாரில், “கடந்த ஏப்ரலில் ஜேஎன்யூ நிகழ்ச்சி ஒன்றில் தலிப் ஹுசைன் பங்கேற்றார். தன்னைச் சந்திக்க வரும்படி மெசேஜ் அனுப்பினார். நான் அவரைச் சந்திக்கச் செல்லவில்லை. அன்றிரவு 40 முறைக்கும் மேல் செல்போனில் அழைப்புகள் வந்தன. தொந்தரவு தாளாமல் இரவு 12.30 மணிக்கு ஜேஎன்யூக்கு வெளியே அவரைச் சந்தித்தேன்.

அப்போது அவர் என்னை வல்லுறவுக்கு உள்ளாக்கினார். எவ்வளவு போராடியும் என்னால் அவரிடமிருந்து தப்ப முடியவில்லை. அன்றைய அழுகையையும் வலியையும் எப்போதுமே என்னால் மறக்க முடியாது” என்று தனது வேதனையை விவரித்துள்ளார். இதையடுத்து வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், ‘‘இனிமேல் தலிப் ஹுசைனுக்காக எந்தவொரு நீதிமன்றத்திலும் ஆஜராக மாட்டேன்’’ என அறிவித்துள்ளார்.

 

ஆதரவாகக் களமிறங்கும் பெரும் நிறுவனங்கள்

நிறுவன ஆலோசகரான சுஹல் சேத், கோகோ கோலா, ஜெட் ஏர்வேஸ் போன்ற நிறுவனங்களில் பணிபுரிந்தவர். தற்போது அவர் டாடா நிறுவனத்தில் ஆலோசகராகவும் மூத்த நிர்வாகியாகவும் பணியாற்றிவருகிறார். இவர் மீது திரைப்படத் தயாரிப்பாளர் நடாஷா ரத்தோர் (27) பாலியல் புகார் அளித்தார்.

அதற்குச் சான்றாக வாட்ஸ் அப் ஸ்கிரீன்ஷாட்களை அவர் பகிர்ந்தார். அதே போல் பத்திரிகையாளர் மந்தாகினி கெலாட் (33) 2011-ல் சேத் தனது உதட்டில் முத்தமிட்டார் என்று புகார் அளித்தார். இவை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. இந்தப் பாலியல் புகார்களைத் தொடர்ந்து சுஹல் உடனான பணி ஒப்பந்தத்தை டாடா நிறுவனம் ரத்து செய்துள்ளது. நவம்பர் மாதத்துடன் ஒப்பந்தம் முடிவடையும் நிலையில், மீண்டும் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாது என்று டாடா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார்.

ஏற்கெனவே பாலியல் புகார் காரணமாக கூகுள் நிறுவனத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 40-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நீக்கப்பட்டதாக அந்நிறுவனத்தின் சி.இ.ஓ. சுந்தர்பிச்சை சமீபத்தில் அறிவித்திருந்தார். நீக்கப்பட்ட அந்த அதிகாரிகளுக்கு இழப்பீடும் வழங்கப்பட்டது. அதைக் கண்டித்து, கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் கடந்த வியாழன் அன்று ஒரு மணி நேரம் அடையாள வெளிநடப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

வைரலாகும் #metooSafe

உத்தம சீலர்கள் என்று நம்பப்பட்டவர்களின் முகமூடிகளைக் கழற்றும் வேலையை  ‘#மீடூ’ பிரச்சாரம் செய்துவருகிறது. பாலியல் புகாரில் சிக்கிய பிரபலங்களின் வீழ்ச்சி, சமூகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் #metoosafe எனும் ஹாஷ்டேக் தற்போது வைரலாகிவருகிறது.  ஆபத்தான தருணத்தில் தங்களுக்குப் பாதுகாப்பு அரணாக நின்ற ஆண்களைப் பற்றிப் பெண்கள் அதில் நெகிழ்வுடன் பகிர்ந்துவருகின்றனர்.

இதன் நீட்சியாக ஷெரிஃப் எனும் நடனக் கலைஞர், Women Open Up About #Metoo #MetooSafe எனும் வீடியோவை யூடியூபில் பதிவேற்றி உள்ளார். அதில் சல்சா நடனக் கலைஞர், ரேடியோ ஜாக்கி, நடிகை, உடற்பயிற்சி வீராங்கனை, மாணவி, சாஃப்ட்வேர் பொறியாளர் எனப் பலரும் தங்களுக்கு ஆண்களால் ஏற்பட்ட நல்ல அனுபவங்களைப் பகிர்ந்துள்ளனர்.

இதுவரை 55,000-க்கும் மேற்பட்டோர் அந்த வீடியோவைப் (https://www.youtube.com/watch?v=7jbcYV35SrY) பார்த்துள்ளனர். பத்து விரல்கள் ஒன்றல்ல என்ற நிலையில் ஒட்டுமொத்த ஆண் இனத்தையே குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவது சரியல்ல என்ற புரிதலை ஏற்படுத்த முயலும் இத்தகைய ஆரோக்கியமான முயற்சிக்கு நல்ல வரவேற்பு. அதே நேரம்

ஆண்கள், பெண்களுக்குப் பாதுகாப்பா என்ற கேள்வியைச் சிலர் முன்வைப்பதோடு இதுபோன்ற முயற்சிகள் மறைமுகமாக ‘#மீடூ’வின் நோக்கத்தை நீர்த்துப்போகச் செய்யக்கூடும் என்றும் சொல்லியிருக்கின்றனர். 

 

ஒலிக்குமா சாமானியர் குரல்?

சமூகத்தில் இன்றும் நிலவும் சாதிக்கொடுமைக்குப் பட்டியலினத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமியின் கொடிய மரணம் சமீபத்திய உதாரணம். சேலம் தளவாய்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிறுமி, தண்ணீர் பிடிக்க அருகில் உள்ள தினேஷ்குமாரின் வீட்டுக்குச் செல்வது வழக்கம். தண்ணீர் பிடிக்கச் சென்ற சிறுமிக்கு தினேஷ்குமார் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். தினேஷின் அத்துமீறலைத் தன் அம்மாவிடம் அந்தச் சிறுமி கூறியுள்ளார்.

ஆத்திரமடைந்த தினேஷ்குமார் சிறுமியின் வீட்டுக்குச் சென்று, அவருடைய தாய் சின்னப்பொண்ணுவின் கண்ணெதிரிலேயே சிறுமியின் தலையைத் துண்டித்துள்ளார். “எங்களது சாதியைக் கூறித் திட்டிய பிறகுதான் அவன் என் குழந்தையின் தலையை வெட்டித் தனியாக எடுத்துச் சென்றான். தலையை இங்கு ஏன் எடுத்து வருகிறாய் அங்கேயே போட்டுவிட்டுவா என அவனுடைய மனைவி சொன்னார்” என சிறுமியின் தாய் சின்னப்பொண்ணு வாக்குமூலம் கொடுத்துள்ளார். தனக்கு நடந்த பாலியல் அத்துமீறலைத் தன் தாயிடம் சொன்னதற்கு ஒரு சிறுமியின் தலை துண்டிக்கப்பட்டுள்ளது. இங்கு ‘#மீடூ’ இயக்கம் செல்ல வேண்டிய தூரம் மிக அதிகம் என்பதைத்தான் சிறுமி சிந்திய ரத்தம் உணர்த்துகிறது.

 

உருவாகும் விசாகா கமிட்டிகள்

‘#மீடூ’ விவகாரம் பெரிதாக வெடித்துக் கிளம்பிவரும் நிலையில் நடிகர் சங்கத்தில் விசாகா கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கள் அன்று கூடிய நடிகர் சங்கச் செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அந்தத் தீர்மானத்தில், ‘அங்கத்தினர்களுடைய உரிமைகளையும் சுயமரியாதையையும் காப்பாற்றும் வகையில் ஏற்கெனவே தென்னிந்திய நடிகர் சங்கத்தில் சட்டங்கள் இருந்தாலும், நீதிமன்றத்தால் பரிந்துரை செய்யப்பட்ட, சட்டங்களின் அடிப்படையில் செயல்படும் ‘விசாகா குழு’ உடனடியாக உருவாக்கப்படும்.

அந்தக் குழுவில் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளோடு பெரும்பான்மையாக மகளிரும் இடம் பெறுவர். மேலும், பிரச்சினைகளை உளவியல்ரீதியாக அலசி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க மனநல மருத்துவர் ஒருவரும் அந்தக் குழுவில் இடம் பெறுவார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இசை, நடனம், நாடகம் உள்ளிட்ட துறைகளில் முன்வைக்கப்படும் பாலியல் புகார்களை விசாரிக்கவும் அவை குறித்து நடவடிக்கை எடுக்கவும் ‘நகர சபாக்கள் கூட்டமைப்பு’ சார்பிலும் விசாகா கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE