பரபரப்பாக இயங்கும் துறைமுகம், அதன் அருகே ரயில் நிலையம், நிரம்பி வழியும் சுற்றுலா பயணிகள், இருபுறமும் நீலக் கடலும், இதமானக் காற்றும். தேனீக்களாய் எந்நேரமும் சுறுசுறுப்பாய் சுழலும் மீனவர்கள்.. இவையெல்லாம் தனுஷ்கோடியின் அடையாளமாக இருந்தது ஒருகாலம்.
1964-ம் ஆண்டு டிசம்பர் 24-ல் ராமேஸ்வரத்தை தாக்கிய புயலால் இந்தியாவின் தேசப் படத்திலிருந்து தனுஷ்கோடி துறைமுகம் துடைத்தெறியப்பட்டது. அந்த பாதிப்புகளின் தாக்கத்திலிருந்து இன்னமும் முழுவதுமாக மீளமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது தனுஷ்கோடி. இங்குதான் தனது இதய நோயையும் பொருட்படுத்தாது சேவை செய்துகொண்டிருக்கிறார் ஆசிரியர் பிரான்சிஸ் ஆரோக்கியமேரி.
இன்றைய தனுஷ்கோடியில் சாலை, போக்குவரத்து, மின்சாரம், குடிநீர் என எந்த அடிப்படை வசதியும் கிடையாது. ஆனாலும், தங்களின் தாய் நிலத்தை விட்டுச்செல்ல மனமில்லாமல் 300-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் கடலே கதி என இன்னும் இங்கே வாழ்ந்து கொண்டிருக்கின்றன. புயலுக்குப் பிறகு இங்கே ஒரு பள்ளிக்கூடம் கட்ட வேண்டும் என்றுகூட யாரும் நினைக்கவில்லை. அரசுக்கு அப்படியொரு எண்ணம் வருவதற்கே நாற்பது ஆண்டுகள் ஆகிப்போனது. 2004-ல் தனுஷ்கோடி பழைய ரயில் நிலையம் அருகே, ஆஸ்பெஸ்டாஸ் கொட்டகையில் ஓராசிரியர் பள்ளி ஒன்றை அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் கொண்டுவந்தார்கள்.
பள்ளிக்கூடம் வந்துவிட்டது.. பாடம் நடத்த ஆசிரியரைக் கொண்டுவர வேண்டுமே.. அதற்கான பணிகளில் இறங்கியபோது, ’வேலைய வேணும்னாலும் எழுதிக் குடுத்துட்டுப் போறேன்.. என்னால அங்கபோயி வேலை செய்யமுடியாது’ என்று அலறியடித்து ஓடிய ஆசிரியர்கள்தான் அதிகம். இப்படி 18 தலைமை ஆசிரியர்கள் தனுஷ்கோடிக்குச் செல்ல மறுத்திருந்த நிலையில்தான், துணிச்சலோடு பொறுப்பை ஏற்றார் பிரான்சிஸ் ஆரோக்கியமேரி.
“ராமேஸ்வரத்திலிருந்து மூன்றாம் சத்திரம் வரைதான் பேருந்து வசதி உள்ளது. அதற்கு மேல் 6 கி.மீ. தூரத்தை மினி வேன் அல்லது குட்டி டிரக்கர்கள் மூலம்தான் எட்டிப் பிடிக்கணும். இதுவும் இல்லாட்டா, நடராஜா சர்வீஸ்தான். இதுக்குப் பயந்துதான் மத்த ஆசிரியர்கள் இங்கே வரப் பயப்பட்டாங்க. நான் இந்தப் பள்ளிக்கு வந்ததை ஒரு சேலஞ்சாத்தான் எடுத்துக்கிட்டேன். எனக்கு இதய நோய் இருக்கு. தினமும் பள்ளிக்கு வர்றதுக்கு பஸ்ஸுல வேன்ல அலையுறது ரிஸ்க்கான வேலைதான்.
பயணத்துல இருக்கும்போது சில நேரங்கள்ல இதைப் பத்தியெல்லாம் யோசிப்பேன். ஆனா, இங்க வந்து இந்த பிள்ளைங்களப் பாத்ததுமே அதெல்லாம் மறந்துருவேன். டவுன்ல இருக்கிற பிள்ளைங்களுக்கு எத்தனையோ பள்ளிக்கூடங்கள் இருக்கு. ஆனா, இவங்களுக்கு இது மட்டும்தானே இருக்கு. இவங்களுக்கு கல்வி அறிவைப் போதிக்கிறது கடவுளுக்கு சேவை செய்யுறதுக்கு சமம் இல்லையா.. அதனால்தான் என் கஷ்டங்களை எல்லாம் தள்ளிவைச்சிட்டு இந்தப் பணியை ஏத்துக்கிட்டேன். மனுஷன் பிறக்குறது ஒருமுறைதானே..!” புல்லரிக்க வைத்தார் ஆரோக்கியமேரி.
அவரது தன்னலம் கருதாத உழைப்பால் நடுநிலைப் பள்ளியாக உயர்ந்திருக்கும் இந்தப் பள்ளியில் இப்போது 73 குழந்தைகள் படிக்கிறார்கள். மேரி போலவே பொதுநல சிந்தனை கொண்ட குருஞானேஸ்வரி, முத்துக்குமார், சசிகுமார் ஆகியோரும் இப்போது இங்கே சேவையில் இருக்கிறார்கள். புயல் தாக்கியதற்கு பிறகு இதுவரை இங்கே மின்சார வசதியும் எட்டிப் பார்க்கவில்லை. அதனால், வீட்டிலிருந்து தனது லேப்டாப்பை சார்ஜ் செய்து எடுத்துவந்து பள்ளிக் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறார் மேரி.
தனுஷ்கோடிதான் அழிந்துவிட்டதே என்ற நினைப்பிலேயே அரசு நிர்வாகம் இருப்பதால் இங்கே எந்த அடிப்படை வசதியும் வந்து சேரவில்லை. அதற்காக குறைசொல்லிக் கொண்டிருக்காமல், மேரி உள்ளிட்ட நான்கு ஆசிரியர்களும் தங்கள் கைக்காசை போட்டும் போதாதுக்கு, மீனவ மக்களிடம் நிதிதிரட்டியும் குடிதண்ணீர் கிணறு ஒன்றை பள்ளி வளாகத்தில் தோண்டி இருக்கிறார்கள்.
ஃபைபர் பொருட்களால் கட்டப்பட்டிருப்பதால் பள்ளியின் மேல்கூரையை கடல்காற்று அடிக்கடி சூறையாடி விடுகிறதாம். இதனால் இங்குள்ள பள்ளிக் குழந்தைகள் மழையில் நனைந்து, குளிரில் நடுங்கி, வெயிலில் காய்ந்து தங்களது எதிர்காலத்தை தீர்மானித்துக் கொண்டிருக்கிறார்கள். இத்தனை சிரமங்களுக்கு மத்தியில் ஆறுதலான ஒரு செய்தி, ஆரோக்கிய மேரியின் முயற்சியால் சமீபத்தில் இங்கு அழைத்துவரப்பட்ட தொகுதி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா, தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பள்ளிக்கு சூரிய சக்தி மின்சாரம் வழங்க ஒப்புதல் தந்திருக்கிறார்.
என்றோ ஒருநாள் புயல் விழுங்கிய தனுஷ்கோடிக்கு புதுவாழ்வு கொடுத்துக் கொண்டிருக்கிறார் இந்த புதுமைப் பெண் பிரான்சிஸ் ஆரோக்கிய மேரி!
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago