பார்வை: அவர்கள் பேசட்டும்

By பிருந்தா சீனிவாசன்

ஆப்பிரிக்க – அமெரிக்கச் செயற்பாட்டாளரான தரானா புர்க் என்பவரால் 2006-ல் எழுப்பப்பட்ட முழக்கம், ஆய்வு மாணவி ரயா சர்க்கார் வழியாகக் கடந்த ஆண்டு பிரதிபலித்து இன்று இந்தியாவில்   ‘#மீடூ’ என எதிரொலித்துக்கொண்டிருக்கிறது.

பணியிடங்களில் தங்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் அத்துமீறல் தொடர்பாகப் பல பெண்கள் புகார் சொல்லிவரும் நிலையில், ‘ஏன் அப்போதே சொல்லவில்லை, பெண்கள் இதை ஆண்களுக்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்த முடியும்தானே, அன்று என்ன நடந்தது என இப்போது விளக்க முடியுமா?’ என்றெல்லாம் செய்தியாளர்களிடமிருந்தே கேள்விகள் எழுவது நம் சமூகத்தில் புரையோடிப்போயிருக்கும் ஆணாதிக்கச் சகதியின் சிறு துளி.

‘எனக்கும் இப்படியான பாலியல் சீண்டல் நடந்தது’ எனப் பெண்கள் வெளிப்படையாகச் சொல்வதை ஆண்களுக்கு எதிரான செயல்பாடாகவே பலரும் புரிந்துகொண்டு கொதித்துப்போய்க் கூச்சலிடுகிறார்கள். உண்மையில் பெண்கள் பல நூறு ஆண்டுகளாகத் தங்கள் மீது விழுந்த அடிகளுக்குக் கொடுக்கும் பதிலடியல்ல இது.

இத்தனை ஆண்டுகளாக  எங்களைத் தொடர்ச்சியாக இப்படி அடிப்பது நியாயமல்ல, வலிக்கிறது என்று சொல்லி, சற்றே நிமிர்கிறார்கள் அவ்வளவே. அதற்கே இவ்வளவு எரிச்சலும் பதற்றமுமாக ஆண்கள் எதிர்வினையாற்றுகிறார்கள். சிறு வயதிலோ வேலைக்குச் சென்ற நாட்களிலோ ஒரு பெண் மீது பாலியல்ரீதியான துன்புறுத்தல் நிகழ்ந்திருந்தால் பெரும்பாலான பெண்களால் அதை உடனடியாகச் சொல்ல முடியாது என்பதே நிதர்சனம்.

அந்தப் பாதிப்பிலிருந்தும் அது தரும் மனவேதனையிலிருந்தும் அவர்களால் அவ்வளவு விரைவில்  வெளிவந்துவிட முடியாது. அந்த ரணமெல்லாம் ஆறி, ஓரளவுக்கு மனம் தேறிய பிறகு, அதைச் சொல்வதற்கான சூழலும் அமைந்தால் மட்டுமே வெளியே சொல்லத் துணிவார்கள். அப்படிச் சொல்கிற பெண்களின் குரல்வளையை நசுக்கும் வேலையைத்தான் இன்று பலரும் செய்துகொண்டிருக்கிறோம்.

இதில் ஆண் – பெண் என்ற பாகுபாடெல்லாம் இல்லை. ஓர் ஆண் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக ஒரு பெண் சொன்னதுமே வரிந்துகட்டிக்கொண்டு அந்தப் பெண்ணின் நடத்தையைக் கேள்விகேட்கிறவர்களில் கணிசமாகப் பெண்களும் இருப்பதை என்ன சொல்வது? என்ன நடந்தாலும் ஒரு பெண் பொறுத்துப்போக வேண்டும்; குறைந்தது அந்தக் கணமே கத்தி, கூப்பாடு போட்டு ஊருக்கே சொல்ல வேண்டும் என்ற பொதுப்புத்தியின் வெளிப்பாடாகவும் இதைப் புரிந்துகொள்ளலாம்.

இங்கே பெண்ணின் சம்மதம், விருப்பமின்மை போன்றவை இரண்டாம்பட்சம்தான். காரணம் பெண் என்பவள் நுகர்ச்சிக்கு உரியவள் மட்டுமே என்ற நச்சு வித்துதானே காலம் காலமாக மனித மனங்களில் விதைக்கப்பட்டு அறுவடை செய்யப்படுகிறது.

கடக்க முடியாத சுமை

பணியிலோ பதவியிலோ அதிகாரத்திலோ இருக்கும் பெண்களுக்கே தன் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் சீண்டலையோ வல்லுறவையோ வெளியே சொல்வதற்குக் காலமும் சூழலும் தேவைப்படுகின்றன. அப்படியான சூழல் ‘#மீடூ’ மூலமாகச் சிலருக்கு வாய்த்திருக்கிறது. ஆனால், சிறுவயதில் தனக்கு நேர்ந்தது பாலியல் துன்புறுத்தல் என்பதுகூடப் புரியாமல் மனத்தில் கசப்புடன் அதைச் சுமந்துகொண்டு வாழும் பெண்கள் எங்கே, யாரிடம் சென்று முறையிடுவார்கள்?

அப்படிச் செய்தவர்கள் தனக்குத் தெரிந்தவர்களாகவோ உறவினராகவோ இருக்கிறபட்சத்தில் வளர்ந்த பிறகும் அவர்களைச் சந்திக்க நேர்கையில் எப்படி எதிர்வினையாற்றுவார்கள்? ‘இதெல்லாம் பெரிய விஷயமா? நடந்ததைக் கெட்ட கனவாக நினைத்து மறக்க வேண்டியதுதான்’ என்பது போன்ற சமாதானமெல்லாம் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதைப் போன்றதே.

சிறுவயதில் நேர்ந்த கொடுமை

“நான் அப்போ ஒன்பதாவது படிச்சிக்கிட்டு இருந்தேன். அவங்க கணவர் ஊருக்குப் போனதால தனியா தூங்க பயமா இருக்குன்னு துணைக்கு என்னை வரச் சொன்னாங்க. தூங்கிட்டு இருந்தப்போ என் மேல ஏதோ பாரமா அழுத்தறா மாதிரி இருந்தது. கனவுன்னு நினைச்சேன். பாரம் அதிகமாகத் திடுக்கிட்டு முழிச்சேன். அந்த ஆண்ட்டியோட கணவர் என்கிட்ட ரொம்ப தப்பா நடந்துக்கிட்டு இருந்தார்.

ஊர்ல இருந்து ராத்திரியே வந்துட்டார்போல. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல. எழுந்து உட்கார்ந்துட்டேன். ஆண்ட்டியும் அசந்து தூங்கிட்டு இருந்தாங்க. பொழுது விடியற நேரமா இருந்ததால நான் வீட்டுக்குப் போறேன்னு சொல்லி, கதவைத் திறக்கச் சொல்லி ஓடி வந்துட்டேன். வீட்டுக்கு வந்ததும் ரொம்ப அவமானமா இருந்தது. யார்கிட்டேயும் சொல்லப் பயமா இருந்தது. சொன்னா நம்புவாங்களான்னும் தெரியல. அதுக்கப்புறம் அந்த ஆளைப் பார்க்கறதைத் தவிர்த்தேன்.

ஆனா, அவர் கொஞ்சம்கூடக் கூச்சமே இல்லாம ரொம்ப நல்லவர் மாதிரி என்கிட்ட சிரிச்சுப் பேசுவார். அப்போல்லாம் நெருப்பு மேல நிக்கற மாதிரி இருக்கும்” என்று சொன்ன அந்தப் பெண்ணுக்கு இன்று 35 வயது. ஒரு குழந்தைக்குத் தாயாகிவிட்ட பிறகும் சிறுவயதில் தனக்கு நேர்ந்த அந்தக் கொடுமையை மறக்க முடியாமல் தவிப்பதாகக் குறிப்பிட்டார்.

பணியிடப் பாலியல் வன்முறை

சென்னையைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத பெண், பணியிடத்தில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்துச் சொல்லும்போதே அழுகையில் உடைகிறார். “நான் சாதாரண ஸ்டாஃப்தான். அவர் சூபர்வைசர். எப்போ பார்த்தாலும் ரெட்டை அர்த்தத்தோடுதான் பேசுவார். என் அப்பா வயசு அவருக்கு. இருந்தாலும் கையை உரசுறது, மேல இடிக்கிறதுன்னு சாதாரணமா நடக்குற மாதிரி எல்லாத்தையும் பண்ணுவார்.

வேலையில ஏதாவது நடந்தா சூபர்வைசர்கிட்டதான் சொல்லணும். அவரே இப்படி நடந்துக்கிட்டா யார்கிட்ட போய் சொல்ல முடியும்? வர்ற ஆத்திரத்துக்கு ஓங்கி அறையலாம்னு தோணும். அப்புறம் வேற வேலைக்கு எங்கே போறது? புருஷன்கிட்டயும் சொல்ல முடியாது. ஏற்கெனவே அந்த ஆளு சந்தேகப் பிராணி. அதுல இதுவும் சேர்ந்துக்கும்” என்று விசும்பலோடு சொன்ன பெண்ணுக்கு, பணியிடப் பாலியல் துன்புறுத்தல் குறித்துப் புகார் சொல்ல ஒவ்வோர் அலுவலகத்திலும் ஐசிசி எனப்படும் உள்ளக புகார் குழு இருக்க வேண்டும் என்பதை யார் சொல்வது? அப்படியே குழு இருந்தாலும் பெயரளவுக்கு மட்டுமே விசாரணை நடந்தால் சம்பந்தப்பட்ட பெண்தானே மீண்டும் பாதிப்புக்குள்ளாவார்?

குடும்பங்களிடம் கிடைக்காத ஆதரவு

“என் புருஷனோட அப்பனே என்கிட்ட தப்பா நடந்துக்கிட்டார்னு சொன்னா நம்புவீங்களா?” என்று கேட்ட பெண், கிருஷ்ணகிரியின் உள்ளடங்கிய கிராமம் ஒன்றைச் சேர்ந்தவர். திருமணத்துக்குப் பின் சென்னையில் குடியேறினார். கணவன் வேலைக்குப் போய்விட்ட பொழுதொன்றில் தன் விருப்பத்துக்கு இணங்கச் சொல்லி மாமனார் வற்புறுத்த, அதிர்ந்திருக்கிறார். உடனே மாமியாரிடம் விஷயத்தைச் சொல்ல, அவரோ கண்டும்காணாமல் விட்டுவிட்டார்.

கணவனிடம் சொன்னபோது அவரும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. கடைசியில் தன் பிறந்த வீட்டினரை வரவழைத்துப் பேசியிருக்கிறார். “அவங்ககிட்டகூட என் மாமனாரைப் பத்தி சொல்லலை. சொன்னா நமக்குத்தான் அசிங்கம். வேற ஏதோ காரணத்தைச் சொல்லி தனிக்குடித்தனம் வந்துட்டேன்” என்று சொல்லும் அந்தப் பெண், திருமணமாகிவந்த புதிதில் மாமனாரை அப்பா என்றே அழைத்திருக்கிறார்.

வீடுகளில் தங்களுக்கு நடக்கும் பாலியல் சீண்டல்களைப் பெரும்பாலான பெண்கள் வெளியே சொல்லாததற்குக் காரணம் அது அணுகப்படும் விதத்தில் நிறைந்திருக்கும் சிக்கல்தான். எந்தப் புள்ளியிலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எதிராகவே அது திரும்பக்கூடும். காரணம் இந்தியக் குடும்ப அமைப்பில் ஆணே பொருளாதாரம் – அதிகாரம் போன்றவற்றின் அச்சாணி. ஆணைப் பகைத்துக்கொண்டு பெண்ணால் என்ன செய்துவிட முடியும்? குழந்தைகள் மீது செலுத்தப்படுகிற பாலியல் வன்முறைகள் பெரும்பாலும் பாசம் என்ற பெயரில் புறந்தள்ளப்படும்.

“அங்கிள் ஆசையா கொஞ்சினாகூட ஏன் இப்படிக் கோவப்படுற” என்று கேட்கிற பெற்றோர் இங்கே அதிகம். பாதிக்கப்பட்ட பெண்ணுக்குக் குடும்பம் தன் ஆதரவைத் தரும் என்ற நம்பிக்கை உறுதிசெய்யப்படும்போதுதான் ஓரளவுக்காவது பெண்களின் குரல்கள் வெளிப்படும்.

பொதுவெளியில் அம்பலப்படுத்துவோம்

இங்கே குறிப்பிட்டிருப்பதைப் போன்ற சம்பவங்கள் நமக்கும் நமக்குத் தெரிந்த பெண்களுக்கும் நம் வீடுகளில் உள்ள பெண்களுக்கும் நிகழ்ந்திருக்கலாம். அவற்றை நிகழ்த்தியவர்கள் நமக்குத் தெரிந்தவர்களாகவும் நம் வீட்டைச் சேர்ந்த ஆண்களாகவும் இருக்கலாம். பெண்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறை குறித்த புரிதல் இல்லாமல், ‘#மீடூ’ இயக்கத்தைக் கையிலெடுக்கும் பெண்களைத் தரக்குறைவாக விமர்சிக்கிறவர் களுக்கும் வன்முறையில் ஈடுபடுகிறவர்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை.

தங்களுக்கு நேர்ந்த கொடுமையை உரக்கச் சொல்லும் பெண்களை ஒடுக்குவதன் மூலமாக அந்த இயக்கத்தின் நோக்கத்தை நீர்த்துப்போகச் செய்யும் வேலையைத்தான் பலரும் செய்துகொண்டிருக்கிறார்கள். எங்கே நம்மையும் பாலியல் சீண்டலில் தொடர்புபடுத்திவிடுவார்களோ என்ற அச்சம் அப்பியிருக்கிற மனத்தால்தான், “ஐ லவ் யூ சொல்லவே பயமா இருக்குடா. அவ ‘மீடூ’ன்னு சொல்லிட்டா என்ன பண்றது” என்பது போன்ற மூன்றாம் தர நகைச்சுவையைச் சொல்லிச் சிரிக்க முடியும்.

தன்னிடம் தவறாக நடந்துகொண்ட ஆணை அடையாளப்படுத்துவதன் மூலம் பெண்ணுக்குப் பெரிதாக எதுவும் கிடைத்துவிடாது. அந்த ஆணைத் தண்டிப்பதும் பெண்ணின் வேதனைக்குத் தீர்வல்ல. ஆனால், இவன் கயவன், இவனை நான் இத்தனை நாட்களாகப் பொறுத்துக்கொண்டிருந்தேன் அதை நீங்களும் தெரிந்துகொள்ளுங்கள் என்று சொல்வது தனக்குள் ஆறாமல் இருக்கும் காயத்தின் மீது அந்தப் பெண் தடவிக்கொள்ளும் களிம்பு.

தவறு செய்தவனை இப்படிப் பொதுவில் அம்பலப்படுத்துவது, தவறு செய்ய நினைக்கும் ஆண்களுக்கு எச்சரிக்கை மணியாகவும் இருக்கும். அதனால், பெண்களைப் பேசவிடுவோம், அவர்களின் கருத்துக்குக் காதுகொடுப்போம். அதுதான் இத்தனை ஆண்டுகளாக நாம் அவர்களை அடக்கிவைத்திருந்த பாவத்துக்குச் செய்யும் பரிகாரம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்