எழுபதுகளில் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டராக கபில்தேவ் களம்கண்டபோது, மகளிர் அணியில் ஆல்ரவுண்டராக அவர் கால்பதித்தார். இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியின் முதல் கேப்டனான அவர், இந்திய மகளிர் கிரிக்கெட்டின் முன்னோடி எனவும் அழைக்கப்படுகிறார். மகளிர் கிரிக்கெட்டைக் கட்டமைத்தவர்களில் ஒருவரான அவர், டயானா எடுல்ஜி.
மும்பையைச் சேர்ந்த எடுல்ஜிக்குச் சிறு வயதிலிருந்தே டென்னிஸ், கூடைப்பந்து போன்ற விளையாட்டுகள் அத்துப்படி. இவற்றில் வேகம்காட்டியவர், 1960-களில் ஜூனியர் தேசிய அணியில் இடம்பெறும் அளவுக்கு முன்னேறினார். அந்தக் காலகட்டத்தில் இந்தியாவில் மகளிர் கிரிக்கெட் வளரத் தொடங்கியது. அதனால், கிரிக்கெட் மீது அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. மூன்று விளையாட்டுகளில் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டிய நிலை வந்தபோது, எடுல்ஜி கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை கொடுத்தார்.
உடைந்த பற்கள்
கிரிக்கெட்டைத் தேர்வுசெய்த பிறகு, அதை முறைப்படி கற்றுக்கொள்ளத் தொடங்கினார். அப்போது முன்னாள் கிரிக்கெட் வீரர் லாலா அமர்நாத், மும்பையில் கிரிக்கெட் பயிற்சி முகாமை நடத்திவந்தார். அதில் எடுல்ஜி சேர்ந்தார். அங்கே தரைவிரிப்பு பிட்சில்தான் எடுல்ஜி விளையாடினார். அந்த வகை பிட்சில் அவர் விளையாடியது அதுவே முதல்முறை.
எடுல்ஜி பேட்டிங் பயிற்சி செய்தபோது, அவரது வாயில் பந்து பட்டு நான்கு பற்கள் உடைந்தன. பற்கள் உடைந்ததால் அவர் நிலைகுலைந்துவிடவில்லை. தொடர்ச்சியாக முகாமில் பங்கேற்று கிரிக்கெட் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார். இந்தப் பயிற்சி முகாமில் அவர் கூர்தீட்டப்பட்டார்.
தேடிவந்த வாய்ப்பு
கிரிக்கெட்டில் படிப்படியாக எடுல்ஜி முன்னேறியபோது ரயில்வே அணிக்கு விளையாட அழைக்கப்பட்டார். ரயில்வே அணியைக் கட்டமைத்த அவர், அந்த அணியில் தன் திறமையை வெளிப்படுத்தினார். வலது கை ஆட்டக்காரரான இவர், இடது கை சுழற்பந்து வீச்சாளரும்கூட. ஆல்ரவுண்டராகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்டார்.
அந்தக் காலகட்டத்தில்தான் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியும் அமைக்கப்பட்டிருந்தது. அப்போது நன்றாக விளையாடிக்கொண்டிருந்த வீராங்கனைகளை வாய்ப்பு தேடிவந்தது. ரயில்வே அணிக்காகப் பிரமாதமாக விளையாடிக்கொண்டிருந்த எடுல்ஜிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவருக்கு 20 வயதுதான்.
விக்கெட் வீராங்கனை
அந்த வயதில் பெரிய கனவோடு இந்திய மகளிர் அணியில் கால்பதித்தார். 1976 அக்டோபர் 31-ல் பெங்களூருவில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் எடுல்ஜி அறிமுகமானார். இந்திய மகளிர் அணிக்கும் இதுதான் முதல் டெஸ்ட் போட்டி. இந்தப் போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் பேட்டிங் செய்ய அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னையில் நடந்தது.
இந்தப் போட்டியில் 57 ரன்கள் விளாசி அவுட் ஆகாமல் இருந்தார். டெஸ்ட் போட்டியில் அவரது அதிகபட்ச ரன் இதுதான். 1984-ம் ஆண்டு டெல்லியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அபாரமாகப் பந்துவீசி 64 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார் எடுல்ஜி. அவரது சிறந்த பந்துவீச்சாக அது அமைந்தது.
1976 முதல் 1991 வரை டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய எடுல்ஜி, 20 டெஸ்ட் போட்டிகளில் 404 ரன்களை எடுத்தார். 63 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மகளிர் டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீராங்கனைகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் எடுல்ஜி இருக்கிறார்.
முதல் கேப்டன்
டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகி எடுல்ஜி சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த நேரத்தில், இந்திய மகளிர் அணி 1978-ம் ஆண்டில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் அடியெடுத்துவைத்தது. தொடக்க காலத்தில் டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பு அவரைத் தேடி வந்தது. இந்திய ஒரு நாள் மகளிர் கிரிக்கெட் அணியின் முதல் கேப்டன் என்ற பெருமையைப் பெற்றார் எடுல்ஜி.
1978-ம் ஆண்டு ஜனவரி முதல் தேதி கொல்கத்தாவில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டிதான் எடுல்ஜி தலைமையில் இந்திய மகளிர் அணி பங்கேற்ற முதல் போட்டி. ஒட்டுமொத்தமாக 34 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று 211 ரன்கள் எடுத்திருக்கிறார்; 46 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருக்கிறார். இவற்றில் 18 ஒரு நாள் போட்டிகளுக்கு அவர் கேப்டனாக இருந்து 7 போட்டிகளில் இந்திய அணிக்கு வெற்றியைத் தேடி தந்திருக்கிறார்.
முன்னுதாரணப் பெண்
ஒரு நாள் போட்டிகளுக்கு மட்டுமல்ல; டெஸ்ட் போட்டிகளுக்கும் எடுல்ஜி கேப்டனாக இருந்திருக்கிறார். 1984 முதல் 1986 வரை 4 டெஸ்ட் போட்டிகளில் அணியை வழிநடத்தியிருக்கிறார். 1976 முதல் 1993 வரை 17 ஆண்டுகள் இந்திய மகளிர் அணிக்காக விளையாடிய எடுல்ஜி, சர்வதேச அரங்கில் 615 ரன்களையும் 109 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சிறப்பிடம் பெற்றார். கிரிக்கெட்டில் மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக 1983-ம் ஆண்டு இவருக்கு அர்ஜுனா விருதையும் 2002-ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதையும் வழங்கி அரசு கவுரவித்தது.
இந்த இரு விருதுகளையும் பெற்ற முதல் இந்திய கிரிக்கெட் வீராங்கனையும் இவரே. கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு மேற்கு ரயில்வேயின் முதன்மை விளையாட்டு அதிகாரியானார். கிரிக்கெட்டில் பெண்கள் வாய்ப்பையும் வேலைவாய்ப்பையும் பெற இவர் ஒரு கருவியாகவே இருந்தார். இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் மேலாளராகப் பல சந்தர்ப்பங்களில் இருந்துள்ளார்.
அதிகாரத்துக்கு எதிரான குரல்
ஆண்கள் கிரிக்கெட்டுக்கு நிகராக மகளிர் கிரிக்கெட்டும் வளர வேண்டும் என்ற அக்கறையை வெளிப்படுத்தியவர் எடுல்ஜி. மகளிர் கிரிக்கெட்டுக்குத் தடைபோட நினைப்பவர்களை அவர் விமர்சிக்கத் தயங்கியதே இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட பிசிசிஐ தலைவரை வாழ்த்துவதற்காக எடுல்ஜி சென்றார்.
அப்போது அந்தப் புதிய தலைவர், “நாங்கள் எங்கள் வழியில் செல்லவே விரும்புகிறோம். பெண்கள் கிரிக்கெட் விளையாடத் தேவையில்லை. அவர்கள் கிரிக்கெட் விளையாடுவதை விரும்பவில்லை. இப்போது நடக்கும் மகளிர் கிரிக்கெட் போட்டிகளையே ஐசிசி கட்டாயமாக்கியதால்தான் நடத்துகிறோம்” என்று சொன்னார்.
அதைப் பொதுவெளியில் வெளிப்படுத்தி, “இந்திய கிரிக்கெட் வாரியம், ஆண் பேரினவாத அமைப்பு” எனக் கடுமையாக விமர்சித்தார் எடுல்ஜி. இதேபோல 1986-ம் ஆண்டில் இந்திய அணி இங்கிலாந்து சென்றபோது, இவரை லார்ட்ஸ் கிளப்பில் அனுமதிக்கவில்லை.
அந்தக் காலகட்டத்தில், அவர் மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் பெயரை ‘ஆண் பேரினவாதப் பன்றி’ (எம்.சி.பி) என்று மாற்றிக்கொள்ளலாம் எனக் குறிப்பிட்டதால், அவர் தடுக்கப்பட்ட நிகழ்வும் அப்போது பரபரப்பானது. மகளிர் கிரிக்கெட்டுக்கு எதிரான குரல் எந்த அதிகார மட்டத்திலிருந்து வெளிப்பட்டாலும் அதற்கு எதிராகக் குரல்கொடுக்க எடுல்ஜி தயங்கியதே இல்லை.
துணிச்சலாகவும் வெளிப்படையாகவும் வெளிப்படும் அவரது கருத்துகளால் கடந்த ஆண்டு பிசிசிஐ இடைக்கால நிர்வாகக் குழு அமைக்கப்பட்டபோது, அதில் அவரும் ஒரு நிர்வாகியானார். இடைக்காலக் குழுவில் இடம்பெற்ற ஒரே கிரிக்கெட்டர் என்ற பெயரும் இவருக்குக் கிடைத்தது. இந்தியாவில் மகளிர் கிரிக்கெட் தொடங்கிய காலம் முதல் இன்றுவரை கிரிக்கெட்டோடு சேர்ந்து பயணித்துக்கொண்டிருக்கும் எடுல்ஜி, மகளிர் கிரிக்கெட்டின் ஓர் அவதாரம்!
(வருவார்கள் வெல்வார்கள்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: karthikeyan.di@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago