பெண்கள் 360: ஆலய நுழைவுக்கு மறுப்பு

அனைத்து வயதுப் பெண்களையும் சபரிமலையில் அனுமதிக்க வேண்டும் எனக் கடந்த மாதம் 28-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து இந்து அமைப்புகளும் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றன. சபரிமலைக்குச் செல்லும் வாகனங்களை அவர்கள் சோதனை செய்து, அதில் இளம் பெண்கள் இல்லையென உறுதிப்படுத்திய பின்னரே உள்ளே அனுமதிக்கின்றனர்.

இந்த நிலையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் கவிதாவும் பெண்ணியவாதி ரஹானா பாத்திமாவும் சபரிமலைக்குக் கடந்த வெள்ளியன்று காவல் துறை பாதுகாப்புடன் வந்தனர். இருமுடி கட்டி சபரிமலை சன்னிதானத்தை அவர்கள் நெருங்கினர். அங்கு அவர்களை அனுமதிக்கக் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 18-ம் படியின் கீழ் அர்ச்சகர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களுடனும் அர்ச்சகர்களுடனும் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் கலைந்துசெல்ல மறுத்ததால் இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவிட்டது.

மண்டியிட்ட அதிகாரம்

மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் மீது இதுவரை 12-க்கும் மேற்பட்ட பாலியல் புகார்கள் வந்துள்ளன. முதலில் குற்றச்சாட்டுகளை மறுத்தார். வழக்கு தொடர்வேன் என கர்ஜித்தார். இந்த நிலையில் கடந்த புதன் அன்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் தன் மீது சுமத்தப்பட்ட தவறான குற்றச்சாட்டுகளைத் தனிப்பட்ட வகையில் நீதிமன்றத்தில் சந்திப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவர் பதவி விலகக் கோரி, அவரது வீட்டின் முன் பெண் பத்திரிகையாளர்களும் காங்கிரஸ் இளைஞர் அணியைச் சேர்ந்தவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தன் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று தெரிவித்த எம்.ஜே.அக்பர், பத்திரிகையாளர் பிரியா ரமணி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். 97 வழக்கறிஞர்கள் கொண்ட அக்பரின் குழுவுக்கு எதிராக பிரியா ரமணி துணிவுடன் தனியாக நிற்கிறார்.
 

vaaippinjpg

வாய்ப்பின் விலை என்ன?

இந்தி சினிமாவின் சிறந்த இயக்குநர்களுள் ஒருவர் சுபாஷ் கய். பிரம்மாண்டமான வெற்றிப் படங்களைத் தொடர்ந்து எடுத்தவர் அவர். அவர்மீது மாடலும் நடிகையுமான கேட் ஷர்மா பதிவுசெய்துள்ள பாலியல் புகார் இது. “கடந்த ஆகஸ்ட் 6 அன்று அவர் வீட்டுக்கு என்னை அழைத்திருந்தார். நானும் சென்றேன். அங்கு வேறு சிலரும் இருந்தனர். அவர் உடம்பை மசாஜ் செய்துவிடும்படி எல்லோர் முன்னிலையிலும் திடீரெனச் சொன்னார். நான் அதிர்ந்துபோனேன்.

இருந்தாலும் அவர் வயதைக் கருத்தில்கொண்டு நான் அவர் சொன்னபடி 2 – 3 நிமிடங்கள் செய்தேன். அதன் பிறகு என் கையைக் கழுவ வாஷ் ரூமுக்குச் சென்றேன். என்னை அவர் பின்தொடர்ந்தார். ஏதோ பேச வேண்டும் என அவர் அறைக்கு அழைத்துச் சென்றார். அங்கு என்னைப் பிடித்து இழுத்து முத்தம் கொடுக்க முயன்றார். நான் போக வேண்டும் எனச் சொன்னேன். ஓர் இரவை அவருடன் கழிக்காவிட்டால் அவரது அடுத்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழக்க நேரிடும் என மிரட்டினார்”.

எது ஆபாசம்?

கவிஞரும் இயக்குநருமான லீனா மணிமேகலை, 2005-ல் ஒரு தொலைக் காட்சி நிகழ்ச்சிக்காக இயக்குநர் சுசி கணேசனை நேர்காணல் செய்தார். நேர்காணல் முடிந்து வீடு திரும்பும்போது காரில் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக சுசி கணேசன் மீது லீனா குற்றம் சாட்டினார்.  தன் மீதான குற்றச்சாட்டை சுசி கணேசன் மறுத்த அதேநேரம், அந்த மறுப்புக்காக அவர் பயன்படுத்திய வார்த்தைகள் கடும் விமர்சனத்தைச் சந்தித்தன.

edhujpgright

“அரை மணி நேரமே நீடித்த சந்திப்புக்குப் பின் ஒரு அந்நியரை (தன்னை) நம்பி காரில் ஏறியிருக்கும் அந்தப் பெண் சொல்வது எப்படி உண்மையாக இருக்க முடியும்?” என்று அவர் கேட்டார். லீனாவைச் சேற்றில் புரளும் பன்றி எனவும் ஆபாசக் கவிதைகளை எழுதும் கவிஞர் எனவும் சுசி கணேசன் கூறினார்.

இந்த நிலையில் லீனாவுக்கு ஆதரவாகப் பேசினார் என்பதற்காகத் தன்னுடைய தந்தையை சுசி கணேசன் மிரட்டியதாக நடிகர் சித்தார்த் புகார் தெரிவித்துள்ளார். லீனா குறிப்பிட்டிருக்கும் இந்தச் சம்பவம் குறித்துத் தனக்கு முன்பே தெரியும் என்று எழுத்தாளர் ஜெயமோகனும் தெரிவித்துள்ளார்.

எண்ணமும் சொல்லும் #mentoo

“பாலியல் வன்முறைக்கு உள்ளான பெண்களுக்காக நான் துணைநிற்கிறேன். அவர்கள் கடந்து வந்த பாதை கடினமானது. அந்தக் கடினமான பாதையை என்னால் உணர முடிகிறது. 25 வருடங்களுக்கு முன்னால் பாலியல் வன்முறையால் நானும் பாதிக்கப்பட்டேன். அதை நினைத்தால் எனக்கு இப்போதும் கோபம் வருகிறது. பாதிக்கப்பட்டவர்களின் வலியைப் புரிந்துகொள்வது கடினமானது. சிலரால் அதைப் புரிந்துகொள்ளவே முடியாது. இதுவரை கொடுக்கப்பட்ட புகார்களின் உண்மைத்தன்மையைக் கண்டறிந்து தகுந்து தண்டனை வழங்கப்பட வேண்டும். பாலியல் ரீதியாகத் துன்புறுத்துபவர்கள் நிச்சயம் தண்டனை பெற வேண்டும்”

- சயீஃப் அலி கான், இந்தி நடிகர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE