ஆடும் களம் 25: காற்றைக் கிழித்து வானில் குதித்தவர்!

By டி. கார்த்திக்

அடுக்குமாடிக் குடியிருப்பின் மாடியிலிருந்து தரையை எட்டிப் பார்த்தாலே பலருக்கும் தலை கிறுகிறுத்துவிடும். பறக்கும் விமானத்திலிருந்தோ பெரிய மலைகளிலிருந்தோ குதிக்க வேண்டும் என்றால் எப்படியிருக்கும்? முதுகுத் தண்டு ஜில்லிட்டுப் போய்விடும். பார்ப்பவர்களுக்குப் பீதியூட்டும் இந்த சாகச விளையாட்டை அந்தப் பெண் அநாயசமாகச் செய்து, இந்தியாவின் சாகச மங்கையாக மாறினார். அவர், இந்தியாவின் முதல் ஸ்கை டைவிங் வீராங்கனையான ரேச்சல் தாமஸ். 

சிறுவயதில் பறவையைப் போல பறக்க முடியாதா என குழந்தைகள் ஏங்குவார்கள். ரேச்சலும் அப்படித்தான் ஏங்கினார். விமானங் களைப் பார்க்கும் போதெல்லாம் பறக்கும் ஆசை, அவருக்குள் பீறிட்டு எழும். சிறுவயதில் மனத்தில் ஆழமாகப் பதிந்த இந்த ஆசை அவர் வளர்ந்த பிறகு செயல்வடிவம் பெறத் தொடங்கியது.

ஆக்ராவில் இந்திய ஸ்கை டைவிங் கூட்டமைப்பு  நடுவானில் பறக்கவும், மலையிலிருந்து குதித்துப் பறக்கவும் பயிற்சி வழங்கிவந்தது. ராணுவத்தினருக்கு மட்டுமே வழங்கப்படும் பயிற்சி இது. ஆனால், சாதாரனக் குடிமகளாக இந்தப் பயிற்சியைப் பெறும் பாக்கியம் ரேச்சலுக்கும் கிடைத்தது. 1979-ம் ஆண்டில் 24 வயதில் இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பிறகுதான் அந்தப் பயிற்சியில் ரேச்சல் சேர்ந்தார். அப்படிக் கிடைத்த பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்தி அடிப்படை பயிற்சியை முடித்து ‘ஸ்கை ஜம்பிங்’ செய்யக் கற்றுக்கொண்டார்.

பறக்கும் பாவை

ஸ்கை ஜம்பிங், டைவிங் போன்ற சாகச விளையாட்டுகளில் ஆண்கள் மட்டுமே ஈடுபட்ட காலம் அது. அந்தச் சாகசத்தில் களம்கண்ட முதல் இந்தியப் பெண் என்ற சிறப்போடு ஸ்கை டைவிங்கில் குதித்தார். இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பிறகு அவர் செய்த இந்தச் சாகசம், இந்தியா முழுவதும் அவருக்குப் புகழ் வெளிச்சத்தைத் தந்தது. இந்தியாவின் முதல் பெண் ஸ்கை டைவர் என்ற சிறப்பு பெற்றதால், அந்தச் சாகச விளையாட்டில் ஈடுபட அவருக்கு ‘ஏ லைசென்ஸ்’ சான்றிதழை இந்திய ஸ்கை டைவிங் கூட்டமைப்பு வழங்கியது.

1983-ம் ஆண்டில் பல நாடுகளுக்குச் சென்ற ரேச்சல், காட்சி ரீதியிலான டைவிங் செய்து அசத்தினார். தொடர்ந்து ஸ்கை டைவிங்கில் இவர் செய்துகாட்டிய சாகசங்கள் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியை ஈர்த்தன. ஸ்கை டைவிங்கில் மேலும் நுணுக்கங்களை அறிந்துகொள்ள அரசாங்கமே அவரை அமெரிக்காவுக்கு அனுப்பிவைத்தது.

இந்தப் பயிற்சியின்போது கலிபோர்னியாவில் 150 முறை டைவிங் செய்து தனது பயிற்சியை நிறைவு செய்தார். பயிற்சியாளருடன் ஒருசேர சேர்ந்து நடுவானில் குதிக்கும் ‘டேண்டம் ஜம்பிங்’ எனும் பயிற்சியையும் முறைப்படி கற்றுத் தேர்ந்தார்.  நேரத்தைக் கணக்கிட்டுத் துல்லியமாகக் குதிக்கும் பயிற்சியிலும் நிபுணத்துவம் பெற்றார்.

கடல் கடந்த சாகசம்

தொடர்ந்து ஸ்கை டைவிங்கிலும் ஜம்பிங்கிலும் ஈடுபட்டுவந்தபோதும், சில ஆண்டுகள் கழித்துத்தான் சாகசப் போட்டியாளராக ரேச்சல் களமிறங்கினார். அவரது திறமையை வெளிப்படுத்த 1987-ம் ஆண்டு உலக பாராசூட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி தென் கொரியத் தலைநகர் சியோலில் நடைபெற்றது. இந்தியா சார்பாகப் பங்கேற்ற முதல் நபர் என்ற பெருமையோடு இந்தப் போட்டியில் ரேச்சல் பங்கேற்றார்.

அதற்கு முன்புவரை பரந்து விரிந்த நிலப்பரப்புக்கு மேலே பறந்து, தரையிறங்கி அனுபவம் பெற்றிருந்தது ரேச்சல்,  முதன்முறையாக விளையாட்டுத் திடலில் பங்கேற்றது அப்போதுதான். இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடி இலக்கைப் பூர்த்தி செய்தார் ரேச்சல்.

1988-ம் ஆண்டில் ஸ்வீடனில் நடந்த உலக பாராசூட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் ரேச்சல் பங்கேற்றார். இது அவர் பங்கேற்ற இரண்டாவது சர்வதேசத் தொடர். நான்கு விதமான போட்டிகளில் பங்கேற்ற ரேச்சல், முதன்முறையாக ஆறு வெவ்வேறு முறைகளில் குதிக்கும் போட்டிகளிலும் பங்கேற்றுத் தனது திறமையை வெளிப்படுத்தினார். 1989-ம் ஆண்டு தாய்லாந்து ஓபன் பாராசூட்டிங் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தார். சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்ற அதே காலகட்டத்தில் தேசிய அளவிலான போட்டிகளிலும் பங்கேற்க ரேச்சல் தவறவில்லை.

பெருமைமிகு அங்கீகாரம்

1991-ம் ஆண்டில் உத்தர பிரதேசத்தில் உள்ள ஹிண்டன் விமானப் படைத் தளத்தில் நடந்த ஸ்கை டைவிங் போட்டியில் பங்கேற்று இலக்கை நிறைவு செய்தார். இந்திய விமான சாகசக் கூட்டமைப்பு நடத்திய இந்தப் போட்டியில், பெண் போட்டியாளராகப் பங்கேற்ற, ஒரே வீராங்கனை ரேச்சல் மட்டுமே. இதேபோல 1995-ம் ஆண்டில் ஆக்ராவில் நடைபெற்ற தேசிய ஸ்கை டைவிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று இலக்கை நிறைவு செய்து சாதித்தார்.

1995-ம் ஆண்டில் போபால் நகரில் தேசிய இளையோர் திருவிழா நடைபெற்றபோது நடந்த ஒரு நிகழ்வை ரேச்சல் பெருமையான விஷயமாகக் குறிப்பிடுவது வாடிக்கை. இந்த நிகழ்வில் அப்போதைய குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மாவும் பங்கேற்றார். ரேச்சல் தரையை நோக்கி வரும்போது எந்தப் பகுதியில் அவர் தரையிறங்குவார் என்பதை அறிய ஆர்வமிகுதியால் சங்கர் தயாள் சர்மா எழுந்து நின்று பார்க்க ஆரம்பித்தார். வானில் பறந்தபோதே இதைக் கண்ட ரேச்சல், இதைத் தனக்குக் கிடைத்த பெருமைமிகு அங்கீகாரமாகக் குறிப்பிடுகிறார்.

aadumjpg

துருவப் பயணம்

பல்வேறு நிகழ்வுகளின்போது காட்சி ரீதியிலான ஸ்கை டைவிங் செய்வது ரேச்சலின் வழக்கம். இப்படி அவர் குதித்த நிகழ்வுகளுக்கெல்லாம் கணக்குவழக்கே இல்லை. 2000-ம் ஆண்டில் ஜோர்டான் இளவரசருடன் ஒருசேர சேர்ந்து குதித்த நிகழ்வும் இவரது ஸ்கை டைவிங் பயணத்தில் முக்கியமானது.

வட துருவத்திலிருந்து குதிப்பது என்பது எவரெஸ்ட்டிலிருந்து குதிப்பதற்குச் சமமாக ஸ்கை டைவர்கள் கருதுகிறார்கள். வட துருவத்திலிருந்து குதிக்கும் ஆசை ரேச்சலுக்கும் இருந்தது. 38 ஆண்டுகள் இதற்காகக் காத்திருந்தவருக்குச் சரியான தருணம் 2002-ம் ஆண்டில்தான் அமைந்தது. வட துருவத்தில் 7 ஆயிரம் அடி உயரத்திலிருந்து ஸ்கை  டைவிங் செய்து அசத்தினார் ரேச்சல். அப்போது இந்திய ரயில்வேயின் 150-வது ஆண்டு விழாக் காலம்.

இதையொட்டி இந்தச் சாகசத்தை ரேச்சல் தாமஸ் செய்தார். வடதுருவத்திலிருந்து ஸ்கை டைவிங் செய்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெயரும் அவருக்குக் கிடைத்தது. வட துருவத்துக்கு அவர் பயணம் மேற்கொண்டபோது மைனஸ் 45 முதல் மைனஸ் 55 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் ஆறு நாட்கள் இதற்காகத் தங்கியிருந்தார் ரேச்சல் தாமஸ்.

18 நாடுகளில் 656 முறை ஸ்கை டைவிங் செய்து சாதித்திருக்கிறார் ரேச்சல். 16 முறை விமானத்திலிருந்து நடுவானில் குதித்து, சாகசத்தை அரங்கேற்றியிருக்கிறார். இவரது வீரதீர சாகசத்தைக் கண்டு தேசிய சாகச விளையாட்டு விருதை மத்திய அரசு வழங்கிக் கவுரவித்தது. 2005-ம் ஆண்டில் இந்தியாவின் நான்காவது பெரிய விருதான பத்மஸ்ரீ விருதும் ரேச்சலுக்கு வழங்கப்பட்டது.

வானிலிருந்து குதிப்பது என்பது லேசுப்பட்ட காரியமல்ல. காதைப் பிளக்கும் காற்றின் இரைச்சலே பயத்தை வரவழைத்துவிடும். பார்ப்பவர்களுக்கே அச்சமூட்டும் ஸ்கை டைவிங் சாகசத்தில் அச்சம் தவிர்த்துக் சாதித்தவர் ரேச்சல். இரண்டு முறை மரணத்தின் விளிம்புவரை சென்று பத்திரமாகத் தரையிறங்கியவர்.

கணக்கிட்டுச் சாதித்தவர்

ஸ்கை டைவிங் என்பது சாகச விளையாட்டு மட்டுல்ல.. துல்லியமாகக் கணக்கிடவேண்டிய விளையாட்டும்கூட.  மிகுந்த எச்சரிக்கையோடு சில விநாடிகளில் தீர்க்கமாக முடிவெடுத்து விளையாடும் திறன் இருந்தால் மட்டுமே இது சாத்தியம். அதற்கு உறுதியான மனோபலமும் தேவை. அந்தரத்தில் சமநிலைப்படுத்திப் பறப்பதற்கு முதலில் கற்க வேண்டும்.

ஒவ்வொரு விநாடியும் கை, கால்களின்  நகர்வுகள் முக்கியப் பங்காற்றும். இதில் போதுமான அனுபவம் பெற்றால்தான் ஸ்கை டைவிங் விளையாட்டிலேயே ஈடுபட முடியும். அந்தத் துணிச்சல் ரேச்சலுக்கு இருந்ததால்தான், இந்தச் சாகச விளையாட்டில் அவரால் சாதிக்க முடிந்தது.

தற்போது 63 வயதாகிவிட்ட நிலையிலும் ஸ்கை டைவிங் செய்கிறார். இதற்காக தினமும் 6 கி.மீ. தொலைவு நடப்பதையும் ஓடுவதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார். ஸ்கை டைவிங் பயிற்சியாளராகவும் ஆசிரியராகவும் செயல்பட்டு இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டிவருகிறார்.

(வருவார்கள் வெல்வார்கள்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: karthikeyan.di@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்