‘நாளும் கிழமையும் நலிந்தோர்க் கில்லை; ஞாயிற்றுக்கிழமையும் பெண்களுக்கில்லை’ என்று எழுத்தாளர் கந்தர்வன் சொல்லி இருக்கிறார். அந்த அளவு வேலைப்பளுவுக்கு இடையிலும், ‘இந்து தமிழ்’ நாளிதழின் ‘பெண் இன்று’ இணைப்பிதழ் சார்பில் கடலூரில் நடத்தப்பட்ட மகளிர் திருவிழாவில் பெண்கள் பெருமளவில் பங்கேற்றனர். கடலூர் நெல்லிக்குப்பம் நெடுஞ்சாலையில் உள்ள சுபலட்சுமி கல்யாண மஹாலில் அக்டோபர் 21 அன்று நடைபெற்றது இந்தத் திருவிழா. கொட்டித் தீர்த்த மழையையும் பொருட்படுத்தாது ஏராளமான வாசகிகள் இதில் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
பெரியார் அரசு கலைக் கல்லூரியின் பேராசிரியர் முனைவர் கு. ஆனந்த லட்சுமி, விழுப்புரம் மாவட்டம் வளவனூர் காவல் ஆய்வாளர் எ.லட்சுமி, மனநல நிபுணர் முனைவர் ஜெயசுதா காமராஜ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
தைரியம் தந்த லட்சுமி
நிகழ்ச்சியில் பேசிய காவல் ஆய்வாளர் எ.லட்சுமி, “பொதுவாக ஆண்கள்தாம் தைரியமானவர்கள் என்ற எண்ணம் சமூகத்தில் உள்ளது. ஆனால், உண்மையில் ஆண்களைவிட பெரும் தன்னம்பிக்கையும் தைரியமும் கொண்டவர்கள் பெண்களே. நான் காவல் ஆய்வாளராக இருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் என் தன்னம்பிக்கைதான். பேருந்து வசதியே இல்லாத சாதாரணக் கிராமத்தில் பிறந்தவள் நான். விவசாயக் குடும்பத்தில் பிறந்த எனக்கு, போலீஸாக வேண்டும் என்ற ஆசையை வளர்த்தவர் என்னுடைய அப்பா.
காவல் துறையில் சேர உடல்தகுதித் தேர்வின்போது பாவாடை தாவணியுடன் கலந்துகொண்டேன். என்னைப் பார்த்த ஒரு போலீஸ்காரர், “எப்படிம்மா இந்தப் பாவாடை தாவணியோட ஓடுவே?” என்றார். அதற்கு நான், “இல்லை சார். நான் நல்லா ஓடுவேன்” என்றேன். பாவாடையைத் தூக்கிச் செருகிக்கொண்டு மின்னல்போல் ஓடி முதலிடத்தைப் பெற்றேன். தற்போது 77 கிராமங்களைக் கண்காணிக்கும் பொறுப்பு என்னிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையை நான் அடைவதற்குக் காரணமாக இருந்தவை தன்னம்பிக்கையும் தைரியமும்தான்.
இவைதான் இன்றைய பெண்களுக்கு அவசியம். உங்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் சீண்டல், வரதட்சணைக் கொடுமை, கணவன் கொடுமை என எது நடந்தாலும் தைரியமாகத் தட்டிக் கேட்க வேண்டும். அவற்றுக்கெல்லாம் பயந்து வீட்டுக்குள்ளேயே முடங்கிவிடக் கூடாது. பெண்களைப் பாதுகாக்க இன்றைக்கு நிறைய சட்டங்கள் உள்ளன. அதேபோல் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களைத் தடுக்கவும் அவர்களை அவற்றிலிருந்து பாதுகாக்கவும் பல்வேறு சட்டங்கள் உள்ளன.
என்னதான் சட்டங்கள் இருந்தாலும் பெற்றோர், குழந்தைகளிடம் ஒரு நாளில் குறைந்தபட்ச நேரத்தையாவது செலவழித்துப் பேச வேண்டும். குறிப்பாகப் பெண் பிள்ளைகள் உங்களிடம் ஏதாவது சொல்லவந்தால் அதைத் தயவுசெய்து காதுகொடுத்துக் கேளுங்கள். அதேபோல் ஆண் பிள்ளைகளுக்குப் பெண்களை மதிக்கக் கற்றுக்கொடுங்கள்.
பெண்களிடம் எப்படிக் கண்ணியமாக நடந்துகொள்வது என்பதைச் சிறுவயதிலேயே கற்றுக்கொடுப்பது அவசியம். பிரச்சினைகள், குழந்தைகளை நெருங்குவதற்கு முன்பே அதைத் தடுக்கக் குழந்தைகளிடம் நேரம் செலவழித்துப் பேசுவதுதான் சிறந்த வழி” என்று அறிவுறுத்தினார்.
மனமே உடலின் ஆதாரம்
மனநல ஆலோசகர் ஜெயசுதா காமராஜ், “ஆண்களுடைய உளவியல் பிரச்சினை களுக்கும் பெண்களுடைய உளவியல் பிரச்சினைக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. ஆண்கள் தங்களுடைய மனச் சோர்வை, கோபத்தின் மூலமாகவோ மனைவியிடம் வன்முறையை வெளிப்படுத்துவதன் மூலமாகவோ அல்லது மது, போதைப் பழக்கத்துக்கு ஆளாவதன் மூலமாகவோ வெளிப்படுத்து வார்கள்.
ஆனால், பெண்கள் தங்களுடைய மனச்சோர்வை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு குறைவு. மனநலம் சார்ந்த பிரச்சி னைகள் பெண்களிடமே அதிகமாகக் காணப்படுகின்றன. கணவனின் குடிப் பழக்கம், குடும்பத்தில் முடிவெடுக்கும் அதிகாரமும் அங்கீகாரமும் மனைவிக்கு இல்லாதது, மகப்பேறு சார்ந்த பிரச்சினைகள், குடும்பப் பிரச்சினைகள் போன்றவற்றை இதற்குக் காரணங்களாகச் சொல் கிறார்கள்.
மனச்சோர்வு காரணமாகப் பெண்களுக்கு உடல் வலி, அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போய்விடுவது, முகம் சோர்வாகக் காணப்படுவது, தன்னுடைய நலனில் அக்கறையில்லாமல் செயல்படுவது, பயம், படபடப்பு போன்ற உடல்நலம் சார்ந்த பிரச்சினைகள் அதிகரிக்கும். இதை முறையான சிகிச்சையால் குணப்படுத்த முடியும். Support, Trust, Accept, Respect இந்த நான்கு விஷயங்களையும் நாம் கடைப்பிடித்தால் நம் வாழ்க்கையை அழகாக நடத்த முடியும்” என்றார்.
பேராசிரியர் முனைவர் ஆனந்த லட்சுமி பேசும்போது, “இலக்கு, கடின உழைப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை ஆகியவையே வெற்றிபெற்ற மனிதர்களின் தாரக மந்திரம். செல்போனில் தேவையில்லாமல் நேரத்தைச் செலவழிக்காமல் ஒவ்வொரு வரும் தங்களுக்கான இலக்கை நிர்ணயித்துக்கொண்டு செயல்பட வேண்டும்.
ஒரு கல் சிற்பமாக உருவாக அது உளியால் நிறைய அடிபட வேண்டும். அதேபோல் நம் வாழ்க்கையில் சாதிக்க நிறைய தடைகளைக் கடந்து தன்னம்பிக்கையுடன் நடைபோட வேண்டும்” என்றார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு
எரிபொருள் பாதுகாப்பு குறித்து இந்தியன் ஆயில் கார்ப்பேரேஷன் நிறுவனத்தின் முதன்மை மேலாளர் பிரேமா விளக்கினார். “சிலிண்டர் வெடிப்புக்கு முக்கியக் காரணம் கவனக்குறைவு. குடிசை வீட்டில் காஸ் ஸ்டவ் பயன்படுத்துவோர் குறைந்தபட்சம் சமையலறையின் மேற்கூரையில் மட்டும் சிமென்ட் ஓடு அல்லது சிமெண்ட் தகட்டை வேயலாம்.
சிலிண்டரில் இருந்து கசியும் ஒரு துளி எல்பிஜி வாயுவின் அடர்த்தி இருநூறு மடங்கு விரிவடைந்து வீடு முழுவதும் பரவும். இதைத் தடுக்க சிலிண்டரை முறையாகப் பயன்படுத்த வேண்டும். வீட்டில் பயன்படுத்தப்படும் சிலிண்டரால் விபத்து ஏற்பட்டிருந்தால் முறையான ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப் பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும்” என்றார் அவர்.
இதையடுத்து ‘பெண்களுக்கு நகைச்சுவை உணர்வு இருக்கிறதா, இல்லையா?’ என்ற தலைப்பில் நகைச்சுவை கலந்த பேச்சரங்கம் நடந்தது. நடுவராக சி.கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியின் கணிதத் துறைத் தலைவர் முனைவர் பி.சாந்தி தலைமை வகித்தார்.
நகைச்சுவை உணர்வு இருக்கிறது என சி.கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி தமிழ்த் துறைப் பேராசிரியை எம்.மகாலட்சுமியும் நகைச்சுவை உணர்வு இல்லை எனப் பெரியார் அரசு கலைக் கல்லூரி புள்ளியல் துறைப் பேராசிரியர் ஜெ.கலைவாணியும் வாதங்களை முன்வைத்தார்கள். இறுதியில், “பெண்கள் பொன் நகைகளுடன் இருப்பதைவிட நகைச்சுவை உணர்வால் என்றும் மனதைவிட்டு நீங்காத புன்னகையுடன் உள்ளனர்” எனத் தீர்ப்பளித்தார் நடுவர்.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த மகளிரை உற்சாகப்படுத்தும் வகையில் குறிஞ்சி புதுயுகம் கலைக்குழுவினரின் பறையாட்டம், ஒயிலாட்டம், மான்கொம்பு ஆட்டம், கரகாட்டம் போன்றவை அரங்கேறின.
பரிசோ பரிசு
மதிய உணவுக்குப் பிறகு வாசகிகளின் வசமானது விழா மேடை. பெண்களின் கலைத் திறனை வெளிப்படுத்தும் ரங்கோலிப் போட்டி, பந்து பாஸ் செய்யும் போட்டி, பலூன் உடைக்கும் போட்டி, ஸ்டிராவில் தெர்மாகோல் பந்து எடுக்கும் போட்டி, மணி கோக்கும் போட்டி எனப் பல்வேறு போட்டிகள் நடந்தன. கணவருக்குக் காதல் கடிதம் எழுதும் போட்டியில் வெற்றிபெற்ற வாசகிகளின் கடிதங்களைப் படித்தபோது அரங்கம் முழுக்கக் கரவொலி! இடையிடையே ஆச்சரியப் போட்டிகள் நடத்தப்பட்டுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
மாலை நிகழ்ச்சியைச் சின்னத்திரை தொகுப்பாளர் தேவி கிருபா தொகுத்து வழங்கினார். போட்டிகளில் வென்ற வாசகிகளுக்குப் பல வகையான வீட்டு உபயோகப் பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன. அது மட்டுமல்லாது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் நிச்சயப் பரிசுகள் வழங்கப்பட்டன.
கடலூர் மகளிர் திருவிழாவை ‘இந்து தமிழ்’ நாளிதழுடன் சேர்ந்து ஜிஆர்டி ஜுவல்லர்ஸ், சௌபாக்யா, கோல்டு பிரீமியம், ஹோட்டல் கார்த்திக் குழுமம், புதுச்சேரி கடலூர் அகர்வால் இனிப்பகம், கேசினோ – பேக்கரி அண்டு ஸ்வீட்ஸ், பொன்வண்டு டிடர்ஜென்ட் பவுடர் அண்ட் கேக், அரோமா இட்லி தோசை மாவு – ரெடிமேடு சப்பாத்தி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்திப் பரிசுகளை வழங்கின. மீடியா பார்ட்னரான கடலூரைச் சேர்ந்த ‘ஐஎஸ்எஸ் சேனல்’ இந்த நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்தது.
படங்கள்: எம்.சாம்ராஜ்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago