பிறக்கும்போது ஆணாகவும் வளரும் போது தன்னைப் பெண்ணாகவும் உணரும் ஒருவர் திருநங்கை ஆகிறார். பிறக்கும்போது பெண்ணாகவும் வளரும் போது தன்னை ஆணாகவும் உணரும் ஒருவர் திருநம்பி ஆகிறார். அறுவை சிகிச்சையின் மூலமாக இந்தப் பாலின மாற்றத்துக்குத் தன்னை உட்படுத்திக்கொள்பவர் திருநர்.
இதன் பிறகே ஆணாக இருந்து பெண்ணாக மாறுபவர் ‘டிரான்ஸ் ஃபீமேல்’ என்றும் பெண்ணாக இருந்து ஆணாக மாறுபவர் ‘டிரான்ஸ் மேல்’ என்றும் அழைக்கப்படுகின்றனர்.
இப்படித் தாங்கள் பிறந்த பாலினத்தைவிட்டு எதிர் பாலினத்துக்கு மன ரீதியாக மாறுபவர்களின் பால் ஈர்ப்பு, பொதுவாக அவர்கள் பிறந்த பாலினத்தை நோக்கித்தான் இருக்கும். உதாரணமாக, திருநங்கையின் ஈர்ப்பு ஆணின் மீதும் திருநம்பியின் ஈர்ப்பு பெண்ணின் மீதும் இருக்கும். ஆனால், காதல் என்பது பால் உறுப்புகள் சார்ந்து வெளிப்படும் உணர்வு மட்டும் அல்லவே. ஆகவே, இதற்கு விதிவிலக்குகளும் உண்டு.
வாடகைக்கு வீடு கிடைப்பதில் தொடங்கி, கல்வி, வேலை வாய்ப்பு என எல்லா மட்டங்களிலும் சமூகத்தில் திருநர்கள் போராடித்தான் பெற வேண்டும் என்னும் நிலையே நீடிக்கிறது. தகுந்த ஆலோசனை, புரிதல் இன்மையால் தங்களுக்கு எதிர் பாலினத்தவரை வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுப்பவர்களின் காதலும் நாளடைவில் தோல்வியில் முடிகிறது.
அவர்களின் இந்தப் போராட்டம் காதலிலும் தொடர்வதையும் அதைத் தொடர்ந்து அக்ஷய் தேவ் போன்றவர்களின் உயிரிழப்பும் நாளுக்குநாள் அதிகரித்துவருவதையும் பார்க்க முடிகிறது. இந்த அடிப்படையில் திருநர் சமூகத்துக்கு உள்ளேயே அபூர்வமாகச் சில காதல் உறவுகளும் பூத்திருக்கின்றன.
மணமகன் பிரேம் குமரன்
ஈரோட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர் பிரேம். பெண்ணாகப் பிறந்து ஆணின் மனதோடு வளர்ந்தவர். ஆணைப் போல் உடுத்திக்கொள்ளவும் கிராப் வெட்டிக்கொள்ளவும் சிறுவயதில் ஆசைப்பட்டவரை, ‘பெண்ணாக அடக்க ஒடுக்கமாக இரு’ என்று குடும்பம் அதட்டியது. ப்ளஸ் டூ முடித்ததுமே, தான் விரும்பிய மாற்றத்தை அடைய புதுச்சேரிக்குச் சென்றிருக்கிறார் பிரேம். அங்கு அவரை ஆதரித்து அவர் விரும்பும் நிலையை அடைய உதவியிருக்கிறது திருநங்கை சமூகம். அதிலும் பெற்றெடுத்த தாயைவிடத் தன் மீது பாசம் காட்டிய ஒரு திருநங்கையைப் பற்றி நெகிழ்ச்சியாகக் குறிப்பிடுகிறார் பிரேம். விரும்பிய தோற்றத்தை அடைந்தாலும் விரும்பியபடி வாழ்க்கை அமையவில்லை பிரேமுக்கு.
ஒரு பெண்ணை உண்மையாகக் காதலித்து, திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதே அவரின் விருப்பமாக இருந்திருக்கிறது. இப்படிப்பட்ட முயற்சியில் இரண்டு மூன்று முறை கிடைத்த தோல்வியால் விரக்தியில் இருந்தவருக்குக் கிடைத்த ஒரே ஆறுதல், அவருடைய நீண்ட நாள் தோழியான திருநங்கை பிரித்திஷா.
மணமகள் பிரித்திஷா
திருநெல்வேலியைப் பூர்வீகமாகக் கொண்டவர் பிரித்திஷா. குடும்பத்தில் கடைக்குட்டி சிங்கமாகப் பிறந்த இவர், அவரைப் பொறுத்தவரையில் தன்னை ஒரு பெண் சிங்கமாகவே உணர்ந்தார். ஆண் உடலில் பெண்ணின் மனத்தோடு வாழ விரும்பாத பிரித்திஷா, தான் விரும்பிய பெண் உடலைப் பெற வேண்டி புனேவுக்குப் பயணித்தார். அங்கு அவர் விரும்பிய உருவத்தை அடைந்ததும் அடுத்த பிரச்சினை அவருக்கு வந்தது.
அது, அங்கு வாழ்க்கையைத் தொடர ஒன்று கடை கேட்பது அல்லது பாலியல் தொழிலில் ஈடுபட வேண்டிய நிலை. ஆனால், இந்த இரண்டையும் செய்யாமல், தன்னைப் போன்றே எண்ணமுடைய இன்னொரு திருநங்கை தோழியுடன் சேர்ந்து மின்சார ரயிலில் சிறு சிறு பொருட்களை விற்பனைசெய்துள்ளார்.
குறைந்த முதலீட்டில் குறைந்த வருமானம் கிடைத்திருக்கிறது. உழைத்துப் பிழைக்கும் இவர்களைச் சுட்டிக்காட்டி, ரயிலில் பிச்சை எடுத்த திருநங்கைகளைச் சிலர் திட்டித் தீர்க்க, அவர்களின் கோபம் இவர்களின் மீது திரும்பியிருக்கிறது. அது இவர்களின் தொழிலையும் முடக்கியது. அங்கிருந்து டெல்லிக்குச் சென்றிருக்கிறார். அங்கே புதுமணத் தம்பதிகள், பிறந்த குழந்தைகளுக்கு ஆசிர்வாதம் செய்யும் சடங்குகளில் ஆடிப் பாட வேண்டும். இதற்கு ‘பதாய்’ என்று பெயர். இதற்கு அந்தக் குடும்பங்களிலிருந்து சன்மானம் கிடைக்கும்.
இந்த வேலையை ஆறு மாதங்கள்வரை பார்த்த பிரித்திஷாவுக்கு அதிலும் ஒரு நெருடல் தெரிந்தது. வசதி குறைந்தவர்களிடமும் இத்தகைய ஆசிர்வாதம் செய்வதற்கு அதிகமான பணத்தை வலுக்கட்டாயமாகத் தங்களின் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வசூலிப்பதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்தப் பணியிலிருந்தும் விலகியவர், சில காலம் அங்கிருக்கும் வீதி நாடகக் குழுக்களில் நடித்திருக்கிறார்.
இதனிடையே அவரது குடும்பத்தினரும் அவரை ஏற்றுக்கொண்டனர். டெல்லியில் சம்பாதித்த பணத்தைக் கொண்டு புதுச்சேரியில் சிறிய இடம் வாங்கி அங்கே குடும்பத்தோடு சில காலம் இருந்திருக்கிறார். அதன் பின், நடிப்புத் திறமையை நம்பி சென்னை வந்தவரை நாடக நடிகரான மணிக்குட்டி, தியேட்டர் லேப் ஜெயராவிடம் திரை நடிப்பைக் கற்றுக்கொள்ளச் சொல்லியிருக்கிறார்.
“ஒரு ரூபாய்கூட வாங்காமல் ஜெயராவ் எனக்குக் கொடுத்த நடிப்புப் பயிற்சியால், எஸ்.ராமகிருஷ்ணன், மனுஷ்யபுத்திரன் ஆகியோரின் படைப்புகளை அடிப்படையாகக்கொண்ட நாடகங்களில் நடித்தேன். பாம்புச் சட்டை, வீரய்யன், கண்டதைச் சொல்கிறேன் போன்ற படங்களில் நடித்தேன். வெளிவரவிருக்கும் ஐங்கரன், வெள்ளை யானை போன்ற படங்களிலும் நடித்திருக்கிறேன். ராம் எனும் தோழர் மூலமாக ஜீ தொலைக்காட்சியில் ஜூனியர் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் பயிற்சியாளராகவும் இருந்திருக்கிறேன்” என்கிறார் மகிழ்ச்சியுடன்.
இவருக்கும் எதிர் பாலினத்தவருடனான காதல் கடந்து போயிருக்கிறது. அவருடைய மகிழ்ச்சியையும் சோகத்தையும் பகிர்ந்துகொள்ள நண்பராக இருந்தவர் பிரேம் குமரன்.
ஒருமனமான திருநர்
“நான் ஏன் திரும்பத் திரும்ப ஒரு ஆணிடம் ஏமாற வேண்டும்? நீ ஏன் திரும்பத் திரும்ப ஒரு பெண்ணிடம் ஏமாற வேண்டும். ஒருவர் மீது ஒருவர் அக்கறையோடும் புரிதலோடும் இருக்கும் நாம் திருமணம் செய்துகொண்டால் என்ன என்ற என் கருத்தை பிரேமும் ஏற்றுக்கொண்டார். பெரியார் திடலில் கடந்த மார்ச்சில் நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். எங்கள் திருமணத்தை முறையாகப் பதிவு செய்வதற்கும் விண்ணப்பித் திருக்கிறோம்.
ஆனால், என்ன காரணமோ சார்-பதிவாளர் அலுவலகத்திலிருந்து இதுவரை திருமணச் சான்றிதழ் எங்களுக்குக் கிடைக்கவில்லை. நடிப்பையே முழுக்கவும் நம்பியிருக்க முடியாத நிலையில் பெர்ரி ஃபெர்ரி நிறுவனத்தின் மூலமாக ‘வுபர் ஈட்ஸ்’ஸில் கடந்த மூன்று மாதங்களாக நான் பணி செய்துவருகிறேன். பிரேமுக்கும் இங்கு வேலை கிடைக்கப்போகுது.
வேறு வழியில்லை என்னும் நிலையில் கடை கேட்பது, பாலியல் தொழிலில் ஈடுபடுவது வேறு. பகட்டான வாழ்க்கைக்காக அந்தத் தொழிலில் ஈடுபடுவது வேறு. சமூகத்தில் திருநங்கைகள் குறித்த மதிப்பும் அவர்களுக்கான வாய்ப்புகளும் அதிகரித்துவரும் நிலையில், பெர்ரி ஃபெர்ரி போன்ற நிறுவனங்களின் மூலமாக ‘வுபர் ஈட்ஸ்’ போன்ற அமைப்புகள் அளிக்கும் பணி வாய்ப்புகளைத் திருநங்கைகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்கிறார் பிரித்திஷா.
திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்பு
சமூகத்தில் மாற்றுப் பாலினத்தவருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கித்தரும் அமைப்பு பெர்ரி ஃபெர்ரி. இதன் நிறுவனர்- இயக்குநராக இருப்பவர் நீலம்.
vannangal 2jpgபெர்ரி ஃபெர்ரி ஊழியர்களுடன் (வலமிருந்து இரண்டாவது) நீலம்100
“மாற்றுப் பாலினத்தவருக்கு வேலை தர முன்வரும் நிறுவனங்களின் அறிவிப்புகளை ஃபேஸ்புக், ட்விட்டரில் பின்தொடர்கிறோம். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உட்பட பல்வேறு நிறுவனங்கள் வெளியிடும் அறிவிப்புகளை மிகுந்த கவனத்துடன் பரிசீலிக்கிறோம். அங்குள்ள பணி வாய்ப்புகள் மாற்றுப் பாலினத்தவருக்குக் கிடைக்க முதலில் அந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்களுக்கு மாற்றுப் பாலினத்தவர் குறித்த புரிந்துணர்வை ஏற்படுத்தப் பயிலரங்கம் நடத்துவோம்.
இந்தப் பயிற்சி முகாம்களை நடத்துவதற்காகச் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் எங்களுக்குக் கட்டணம் அளிக்கும். இதைக் கொண்டுதான் திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு சேவையை இலவசமாக அளிக்கிறோம்” என்கிறார் நீலம்.
(புரிந்துகொள்ள முயல்வோம்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: ravikumar.cv@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago