கடந்த செவ்வாய் அன்று 94-ம் வயதில் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி இவ்வுலகை விட்டு மறைந்தார். கலைஞர் என்று தமிழர்களால் பாசத்தால் அழைக்கப்பட்ட அவர் 80 வருட அரசியல் வாழ்வுக்குச் சொந்தக்காரர். ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்துள்ளார். கவிஞர், வசனகர்த்தா, கதாசிரியர், நாவலாசிரியர், நாடக ஆசிரியர், அறிஞர், போராளி, சமூக சீர்திருத்தவாதி எனப் பன்முகங்கள் அவருக்கு உண்டு. தமிழகத்தின் மிகப் பெரிய ஆளுமையான அவரது மறைவையொட்டி பெண்ணியச் செயற்பாட்டாளர்கள் தங்கள் முகநூலில் பகிர்ந்துகொண்ட கருத்துகளின் தொகுப்பு இது.
கலைஞர் கருணாநிதி மறைந்தார். திராவிட இயக்கம் எனும் மாபெரும் வரலாற்று நகர்வுக்கு அச்சாணியாகவும் தமிழ்ச் சமூகம் நவீன மக்களாட்சி தத்துவத்தின் அடிப்படையில் உருப்பெற்றதற்கும் சான்றாக இருந்த ஒருவர் மறையும்போது காலமே உறைந்துவிட்டது போன்றும், காலுக்கு அடியில் பூமி நழுவுவது போலவும் உணர்வு ஏற்படுகிறது. சமூக நீதிக்கான போராட்டம் என்பதைத் தவிர வேறு எந்த விதமான Emotional Bond உம் எனக்கு கருணாநிதி மீது கிடையாது. ஆனால் அவரது மரணச் செய்தி எனக்குப் பதற்றத்தையும் துக்கத்தையும் ஏற்படுத்துகிறது.
- கவிஞர் அனாரின் முகநூல் பதிவிலிருந்து
நான் பிற்படுத்தப்பட்டவன். அதற்கு முன்னால் எத்தனை மிக மிக வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம் என்று சுயமரியாதைக்கு இலக்கணம் படைத்த சூரியனுக்கு வணக்கம். கல்வியும் சொத்தும் பெண் விடுதலைக்கு ஆதாரம் என்பதறிந்த ஆட்சியாளரே இறுதி வணக்கம். அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகச் சட்டம் கொண்டு வந்த சாதியொழிப்புப் போராளியே வீரவணக்கம்.
இந்திய இராணுவமேயானால் என்ன, என் தமிழ் உணர்ச்சி பெரிதல்லவா என்று முகம் கொடுக்க மறுத்த வீரனுக்குத் தமிழ் வணக்கம். திருநங்கைகளுக்கு வாரியம் கண்டு பாலின சமத்துவத்துக்கு அடிக்கல் நாட்டிய மானுட நேயருக்கு அன்பு வணக்கம். உட்சாதி ஒதுக்கீடுகள் இட ஒதுக்கீட்டின் வளர்ச்சி போக்கேயென அறிந்து சட்டங்கள் சமைத்த சமத்துவ நேயருக்கு இறுதி வணக்கம். இது சூத்திரர்களின் ஆட்சி என்று அறிவித்த எங்கள் உணர்ச்சிப் பெருக்கே வணக்கம். ‘பாராட்டிப் போற்றி வந்த பழமை லோகம் இடியுது பார் ஈரோட்டு பூகம்பத்தால்’ என்றெழுதி எம் தலைவரைக் கவிதையாக்கிய கலைஞருக்கு வணக்கம்.
- செயற்பாட்டாளர் ஓவியாவின் முகநூல் பதிவிலிருந்து
சமூக நீதி கோட்பாட்டுக்காகத் தன் வாழ்க்கையையும் சமூக வாழ்க்கையையும் அழகாய் செதுக்கிய சிற்பிதான் தலைவர் கலைஞர் அவர்கள். வீட்டிலிருந்து விரட்டப்பட்டு, உறவுகள் யாருமற்று பெரும் போராட்டங்களைக் கடந்து இந்தியாவின் முதல் பொறியியல் கல்லூரி மாணவியாக நான் கல்லூரிக்குச் செல்லும்போது தந்தை, தாயைப் போல முரசொலியில் எனக்கு வாழ்த்துரைத்தவர் தலைவர் கலைஞர் அவர்கள். பொட்டை, அலி, ஒன்பது எனப் பொதுச் சமூகம் எங்களை கேவலமாக இழி சொற்களால் விளிக்கும்போது திருநங்கையர் என்று எங்களை அழைத்து அரவணைத்து பொதுச் சமூகத்திடமிருந்து காத்த மாபெரும் காப்பாளர் தலைவர் கலைஞர் அவர்கள்.
கடை வீதிகளில் பிச்சை கேட்கும் எங்கள் சமூகத்தின் கர ஒலிகளை கூர்ந்து நோக்கி, அந்த அவல வாழ்வு களைய நலவாரியம் அமைத்தவர் தலைவர் கலைஞர் அவர்கள். பார்ப்பன-பார்ப்பனீய எதிர்ப்பு, தேசிய ஆதிக்க எதிர்ப்பு, இன ஆதிக்க எதிர்ப்பு, ஆணாதிக்க எதிர்ப்பு, பாலாதிக்க எதிர்ப்பு எனத் தன் வாழ்க்கை, செயல்களில் ஜனநாயகம் செழுமையுறத் தொய்வில்லாமல் பணி செய்த மாபெரும் ஜனநாயகவாதி தலைவர் கலைஞர் அவர்கள். உங்கள் உடல்தான் நிரந்தர ஓய்வை விரும்பியிருக்கிறது உங்கள் சிந்தனை அல்ல. நீங்கள் எப்போதும் எங்களுடனே வாழ்கிறீர்கள். உங்களுக்கு மரணமில்லை கலைஞரே...!
- செயற்பாட்டாளர் கிரேஸ் பானுவின் முகநூல் பதிவிலிருந்து
திருநங்கையர், மாற்றுத் திறனாளிகள், ஆதிதிராவிடர், சீர்மரபினர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், கிராமப்புற மாணவர்கள், முதல் தலைமுறைப் பட்டதாரிகள், சொத்துரிமை பெற்ற பெண்கள், தமிழ்வழிக் கல்வி மாணவர்கள், அத்தனை பேரின் உரிமைப் போராட்டத்திலும் சுயமரியாதையிலும் உங்கள் பெயர் நிலைத்திருக்கும். உங்கள் போராட்டம் முடியவில்லை. எங்கள் தோள்களுக்கு மாறியிருக்கிறது விடைதந்தோம் கலைஞர் அய்யா ஓய்வெடுங்கள்.
- அருள்மொழி, வழக்கறிஞர்
நம்பிக்கையோடு இருந்தேனே... அய்யா எம்மை ஏமாற்றிவிட்டீரே. இனம்புரியாத பயம் மனதைக் கவ்வுகிறது. எங்கள் மானத்தில் உம் பெயர் என்றும் இருக்கும் அய்யா. இறந்தும் இட ஒதுக்கீட்டில் வெல்ல உம்மால் மட்டுமே முடியும். நிலத்துக்காகப் போராட வேண்டிய படிப்பினையை உணர்த்தினீர். யாருடன் இன்னும் போராட்டம் மிச்சமிருக்கு என்பதைக் காட்டி விட்டீர்கள். ஓய்வறியாச் சூரியன். ஒரு மகளாய் அஞ்சலி. உம் நினைவுகள் எம்மைச் சூழ்ந்திருக்கும். நாங்கள் தலை நிமிர, எங்கள் புன்னகையை ரசித்தீரே, இன்று கண்ணீரில் தவிக்கிறேன் அய்யா. எம் இதயத்தில் நீர் வாழ்வீர்.
- செயற்பாட்டாளர் பிரியா பாபுவின் முகநூல் பதிவிலிருந்து
என்னைப் போன்று 90-களில் பிறந்தவர்களின்
மனதில் எப்படி இந்த அளவு கலைஞர் நிறைந்திருக்கிறார் என்பதை முழுதாய் உணர்ந்த நாள் இன்று. நாங்கள் இன்று சுயமரியாதையோடு வாழ்வதற்கும் சமூக நீதி அரசியலை உயர்த்திப் பிடிப்பதற்கும் கலைஞர்தான் மிகப் பெரிய தாக்கத்தை எங்களுக்கே தெரியாமல் எங்களுக்குள் ஊட்டி இருக்கிறார்.
என் பேருக்கு பின்ன Surnameங்குற பேர்ல எந்த கண்றாவியான சாதிப் பேரும் இல்லாம மற்ற மாநிலத்தவர்கள் முன்ன என் பேரை மட்டும் சொல்லி கம்பீரமா நிக்க முடியுதுன்னா, அதுக்கும் இந்தத் திராவிட அரசியல்தான் காரணம். அந்தத் திராவிட அரசியலின் நாயகர்களில் ஒருவரை நாங்க இனிமே பாசிஸ்டுகளுக்கு எதிரா கொண்டாடத்தான் செய்வோம், எல்லாவற்றையும் தாண்டி.
- செயற்பாட்டாளர் திவ்யா பாரதியின் முகநூல் பதிவிலிருந்து
இன்றைய நாளைக் கடப்பது அவ்வளவு எளிதாக இல்லை. சென்னையின் வீதிகள் அடர் துயரத்தில் நீண்டு கிடந்திருந்தன. வானத்துக்கும் பூமிக்கும் இடையே தொலைவு இல்லாமல் போனதுபோல. பெரியாரில் தொடங்கிய பயணத்தை ஒரு தலைமுறை தாண்டியும் நீட்டிக்கும் பொறுப்பை இதுவரை கலைஞர் ஏற்றுக்கொண்டிருந்தாற்போல உணர்வு. செம்மையான ஒரு திரைக்கதையை, எல்லா விதத் திருப்புமுனைகளோடும் லட்சிய நோக்குகளோடும் வெற்றிகளோடும் அரங்கேற்றிச் சாதித்துக்கொண்டனர், பெரியார் தொடங்கி எல்லோரும்.
அசுர சாதனைகள். இன்று நம் விரல் நுனிகளில் வார்த்தைகள் வந்து விழுவது தொடங்கி. இல்லாத பொழுதும் உரிமைகளுக்காகப் போராடுவோராய்த் தம்மை ஆக்கிக்கொண்டனர். அதற்கு மொழியையும் அரசியலையும் பயன்படுத்திக்கொண்டனர். இதற்கு இன்றைய நாளே சாட்சி. இறந்த பின்னும் போராடி உரிமைகளை வெல்லும் வாய்ப்புகளை உருவாக்கினர்.
- கவிஞர் குட்டிரேவதியின் முகநூல் பதிவிலிருந்து
75ஆண்டு காலம் பொதுவாழ்வில் ஓய்வின்றி உழைத்த ஒரு சரித்திரம் ஓய்ந்துவிட்டது. இனி அவரை விரும்புபவர்களும் விமர்சிப்பவர்களும் என்ன செய்யப்போகிறோம்?! தமிழின்,தமிழ்நாட்டின் மூத்தகுடியே, முத்தமிழ் அறிஞரே, தலைவர் கலைஞர் அவர்களே போய்வாருங்கள்.கண்ணீர் அஞ்சலி!
- காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜோதிமணியின் முகநூல் பதிவிலிருந்து
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago