என் நண்பர் ஒருவர் தன் மகளுக்கு வரன் பார்த்துக்கொண்டிருந்தார். எந்த மாப்பிள்ளை வந்தாலும் மகள் “எனக்குப் பிடிக்கலை... பிடிக்கலை…” என்று தட்டிக்கழித்துக்கொண்டே இருந்தாள். யாரையாவது விரும்புகிறாளா என்று விசாரியுங்களேன் என்று ‘க்ளூ’ கொடுத்தேன். அதெல்லாம் இன்னுமா கேட்காமல் இருக்கேன். அப்படி எதுவும் இல்லை என்று சொல்லிவிட்டாள்.
அவருடைய துணைவியாரும் ஆரம்பத்தில் இவர் சொன்னபடி மகளிடம் பேசி வந்த மாப்பிள்ளைகளை ஒப்புக்கொள்ள வைக்க முயன்றவர், இப்போது மகள் சொல்வது சரிதானே என்று பேச ஆரம்பித்துவிட்டார். “இந்தப் பொம்பளைங்களைப் புரிஞ்சுக்கவே முடியலிங்க சார்” என்று புலம்பினார்.
அப்பா டூ அம்மா
பொதுவாக, தகப்பன்மார்கள் பெண் குழந்தைகள் மீது உயிரையே வைத்திருப்பார்கள். அம்மாவிடம் ஒட்டுவதைவிட அப்பாவிடம் ஒட்டிக் கொள்ளும் மகள்கள்தாம் அதிகம். ஆனால், வளர்ந்து பெரியவர்கள் ஆகும்போது, இயல்பாக அம்மாவிடமும் பாட்டியிடமும் நெருக்கமாகிவிடுவார்கள். உடல்சார் மாற்றங்களையெல்லாம் அப்பாக்களிடம் பகிர்ந்துகொள்ள முடியாத மனத்தடைகளை நம் சமூகம் உருவாக்கி வைத்திருப்பதால் இந்த அப்பா டூ அம்மா மடைமாற்றம் நிகழ்ந்துவிடுகிறது.
பத்து வயதுக்குப் பிறகான மகளின் மன ஓட்டங்களைத் தந்தையர் சமூகம் அறிவதில்லை. எல்லாமே அறிவியல்தான், எல்லாமே பகிர்ந்துகொள்ள வேண்டியவைதாம். தேவையற்ற கலாச்சாரத் தடைகள் காரணமாக ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உரையாடல் ஒரு கட்டத்துக்கு மேல் இல்லாமல் போகிறது.
அம்மாவுடனான உரையாடல்
எனக்கும் காலமாகிவிட்ட என் அம்மாவுக்கும் இடையிலான உரையாடல்களை ஒருநாள் நினைத்து நினைத்து எழுதிப் பார்த்தேன். இரண்டு மூன்று பக்கங்களுக்கு மேல் அது போகவில்லை. அதிலும் அதிகம் அவரோடு பேசிய வார்த்தைகளாகக் கீழ்க்கண்டவையே இருந்தன:
“போதும்மா”
“கொஞ்சம் சாம்பார் ஊத்துங்க”
“இன்னிக்கு வர லேட்டாகும்”
“போயிட்டு வரேன்மா”
நாடெல்லாம் போய் மைக் பிடித்துப் பேசும் என் கதை இதுவெனில், மற்றவர்களைக் குறைசொல்ல என்னிடம் ஒன்றுமில்லை. நீண்டகாலம் மாதவிடாய்ப் பிரச்சினையால் என் அம்மா அவதிப்பட்டிருந்த செய்திகூட எனக்குத் திருமணமாகி என் இணையர் வழியாகவே எனக்குத் தெரியவந்தது. மகனிடம் சொல்லக்கூடியவை சொல்லக் கூடாதவை என்ற எழுதப்படாத கலாச்சார விதிகளால் நாம் கட்டுண்டு கிடக்கிறோம். முன்னமே தெரிந்திருந்தால் இன்னும் சற்று ஆதரவாகவும் ஆறுதலாகவும் பிள்ளைகள் நடந்துகொண்டிருந்திருப்போமே என்ற வருத்தம்தான்.
அப்பாக்களின் துக்கம்
நேற்றுவரை அப்பாவின் கையைப் பிடித்துக்கொண்டே திரியும் மகள்கள் பெரியவர்களானதும் ‘டக்’கென்று அப்பாவின் கைகளிலிருந்து தம் கைகளை விடுவித்துக்கொள்வதன் இழப்பையும் துக்கத்தையும் அப்பாக்கள் மட்டுமே அறிவார்கள். இப்படிப் பகிர்தல் இல்லாத ஒரு பண்பாட்டுக்குள் சிக்கிக்கொண்டு ‘பெண்ணின் மனம் கடலைவிட ஆழமானது’ என்று சொல்வதைப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது.
என் நண்பரின் மகளைப் போல, “இந்த மாப்பிள்ளையைப் பிடிக்கலை. காரணம் கேட்டால் சொல்லத் தெரியாது” என்ற நிலையில் பல பெண் பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பதைப் பார்த்திருக்கிறேன். பார்த்த முதல் பார்வையில் பிடிக்கணுமல்லவா? அதுக்கெல்லாம் காரண காரியம் தேட முடியுமா என்ன? இதைப் பெற்றவர்கள், பெரியவர்கள் புரிந்துகொள்வதில்லை. நல்ல குணம், நல்ல சம்பளம், நல்ல குடும்பம், வரதட்சிணை கேட்கவில்லை அப்புறம் ஏன் வேண்டாம்னு சொல்றே?
ஆழத்தில் அமுக்கப்படும் விருப்புகள்
பெண் குழந்தைகள் வளர வளர அவர்களின் உலகம் விரிகிறது. அவர்கள் விரும்பும் எல்லாமே அவர்களுக்குக் கிடைத்து விடுவதில்லை. விரும்பிய பாடத்தை விரும்பிய கல்லூரியில் படிப்பது, விரும்பிய உடை அணிவது, விரும்பிய இணையைத் தேடிக்கொள்வது, விரும்பிய பிறந்த வீட்டு வாழ்வு என மறுக்கப்பட்ட எல்லாமே அவள் மனக்கிணற்றில் விழுந்துகொண்டே இருக்கின்றன. என்றைக்குமே கேட்கப்படாத அந்த நிராசைகள் ஆழத்தில் ஆழத்தில் என்று அமிழ்ந்துகொண்டே போய் விடுகின்றன. என்றைக்காவது அக்கிணறு தூர்வாரப் படுமானால் எல்லாம் வெளியில் வந்து விழத்தான் செய்யும். செய்வதையெல்லாம் செய்துவிட்டுக் கடலின் ஆழத்தைவிடப் பெண் மனம் ஆழமென்றால் எங்கே போய் முட்டிக்கொள்வது?
பேசுவது தவறா?
ஒரு முறை பேருந்தில் போய்க் கொண்டிருந்தேன். அதன் நடத்துநர், பேசிக்கொண்டிருந்த சில பெண்களைப் பார்த்து, “ஏம்மா... இத்தனை ஆம்பளைங்க இருக்காங்க ஒரு சத்தம் வருதா நாலு பொம்பளைங்க இருந்துக்கிட்டு என்னா சள சளப்பு பண்றீங்க” என்று ஒரு கமெண்ட் அடித்தார். அதை ஆமோதிப்பது போலவும் இந்தப் பொம்பளைங்களே இப்படித்தான் சார்... என்று அடிக்கோடிடுவது போலவும் பேருந்தில் இருந்த ஒட்டுமொத்த ஆண்களும் கொல்லெனச் சிரித்தனர்.
வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தும், வேலை வேலை என்று எந்நேரமும் செக்குமாடாகச் சுழன்றதுமான அயர்ச்சி அழுத்தினாலும், அவை எல்லாவற்றிலுமிருந்து விட்டு விடுதலையாகி நாலு பெண்கள் ஓரிடத்தில் கூடும்போது மகிழ்வார்கள். அந்த மகிழ்ச்சியில் சற்றே அளவளாவிப் புத்துணர்ச்சி பெறுவார்கள்.
அவர்களைப் பேசவிட வேண்டும். பன்னெடுங்காலத்து மனக்குகை மௌனம் பேசிப்பேசிக் கரைய வேண்டும். கரவொலி எழுப்பி வரவேற்க வேண்டிய இதையும் ஒரு குற்றச்சாட்டாக மாற்றுவது ஆணாதிக்கத்தின் குரூரம்தான்.
புதிய கோலங்கள்
‘கடலின் ஆழத்தைக்கூட அளந்துவிடலாம். பெண் மனத்தின் ஆழத்தை யாராலும் அளக்க முடியாது’ என்றொரு ‘ஆண்பேச்சு’ அல்லது பழமொழி நம் சமூகத்தில் நீண்ட காலமாகவே உண்டு. பெண்ணைப் பற்றி நம் சமூகம் கட்டமைத்திருக்கும் எண்ணற்ற பிம்பங்கள், கற்பிதங்களில் இதுவும் ஒன்று. பெண்களுக்கே உரியவை என்று நம் சமூகம் சித்தரிக்கும் இத்தகைய கோலங்களையும் குணாம்சங்களையும் அறிவியல்பூர்வமான கேள்விகளால் நாம் கலைத்து, அழித்துப் போட வேண்டும். அவற்றைத் திருத்திப் புதிய கோலங்களாக வரைய வேண்டும்.
(தொடர்ந்து பேசித்தான் ஆக வேண்டும்)
கட்டுரையாளர், எழுத்தாளர்தொடர்புக்கு: tamizh53@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago