முகங்கள்: முகங்கள்ஆற்றுப்படுத்துதல் எனும் அருமருந்து

By நீரை மகேந்திரன்

மருத்துவத்தால் கைவிடப்பட்ட நோயாளிகளுக்கு வாழ்க்கை இன்னும் கொஞ்சம் மிச்சம் இருக்கிறது என்பதை உணரவைப்பதையே வேலையாகக் கொண்டிருக்கிறார் ரிபப்ளிகா. சென்னை தியாகராய நகரில் ஆர்.எம்.டி. என்ற பெயரில் மருத்துவ மையம் நடத்திவரும் இவர், அலோபதி மருத்துவத்தில் பிற மருத்துவர்கள் ஏற்கத் தயங்கும் ‘பாலியேட்டிவ் கேர்’ மருத்துவத்தில் நிபுணர்.

பாலியேட்டிவ் கேர் என்பது மருத்துவத்தால் கைவிடப்பட்ட நோயாளிகளை ஆற்றுப் படுத்துதல், பராமரித்தல், வலி நீக்கம் மற்றும் வலி தெரியாமல் பராமரித்தல் போன்றவை கொண்ட நவீன சிகிச்சை முறை.

“பொதுவாகப் புற்றுநோய் பரவியதற்குப் பின்னர் அதன் வலி அதிகமாகிவிடும். சிலர் வலி தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொள்வதும் உண்டு. போதிய விழிப்புணர்வு இல்லாததால் நோய் முற்றிய நிலையில்தான் சிலர் மருத்துவமனைக்கே வருவார்கள். இவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்தாலும்,  எலும்பில், நுரையீரலில் புற்றுநோய் பரவிவிட்டால் சிகிச்சையாலும் குணப்படுத்த முடியாது. இந்தக் கட்டத்தில் வலி உயிர் போய்விடும்.

mugangal 2jpg

இது போன்ற நோயாளிகளின் இறுதிக் காலம் வலி நிறைந்ததாக இருக்கும். இவர்களுக்கு வலியை நீக்கும் கொடுத்து ஆற்றுப்படுத்துவதும் இந்த மருத்துவத்தின் அங்கம்” என்கிறார் ரிபப்ளிகா.

அதேபோன்று குணப்படுத்த முடியாத பக்கவாதம்,  நரம்புத் தளர்ச்சி, விபத்தில் சிக்கி கோமா நிலையில் இருப்பவர்கள், சிறுநீரகச் செயலிழப்பு போன்ற நோய்களுக்கும் இந்த மருத்துவம் அவசியமாக உள்ளது. இந்த நோயாளிகளை வலி தெரியாமல் பராமரிக்கும்போது, நம்மால் மீண்டு வர முடியும் என்கிற நம்பிக்கையை இவர்களுக்கு உருவாக்க முடியும்.

“பாலியேட்டிவ் கேர் சிகிச்சையில் இறப்பு விகிதம் அதிகம்.  அதனால்தான் பெரிய மருத்துவமனைகள் இந்தச் சிகிச்சைக்கு முக்கியம் அளிப்பதில்லை. நோய் முற்றித் தீர்க்க முடியாத நிலையில் நோயாளிகளை வீட்டிலேயே பராமரிக்க அனுப்பிவிடுவார்கள். கடந்த 15 ஆண்டுகளாகத்தான் இந்தியாவில் இந்தத் துறை குறித்து புரிதல் உருவாகியுள்ளது.

முக்கியமாக இந்தச் சிகிச்சைக்கு நோயாளிகளை அழைத்து வருபவர்கள், அதற்குமுன்  முடிந்தவரை செலவு செய்திருப்பார்கள். எல்லாவற்றையும் இழந்த நிலையில் செலவு செய்ய பணம் இருக்காது.

வயதானவர்கள் என்றால் கவனிக்கக்கூட ஆள் இருக்காது. ஆரம்பத்தில் வீட்டுக்கே சென்று பொது மருத்துவம் பார்த்துக்கொண்டிருந்த அனுபவம்தான் இதற்கெனத் தனியாக சிகிச்சை மையம் தொடங்கலாம் என்கிற யோசனையை உருவாக்கியது” என்கிறார் ரிபப்ளிகா.

இவர்களது சிகிச்சை மையம் சார்பில்  கிராமங்களுக்குச் சென்று படுத்த படுக்கையாக உள்ள நோயாளிகளுக்கு இலவச சிகிச்சையும் அளித்துவருகின்றனர்.

ஆறுதல் தரும் சிகிச்சை

இரண்டு மூன்று நாட்களில் இறந்துவிடுவார் என்ற கைவிடப்பட்ட நோயாளிகள்கூட இந்தச் சிகிச்சை மூலம் ஓரளவு மீண்டு வரமுடியும் என்கிறார் ரிபப்ளிகா.

மருத்துவமனைகளில் இனிமேல் சிகிச்சை அளித்துப் பயனில்லை, கூட்டிக்கொண்டு செல்லுங்கள் என்று சொல்லும்போது குடும்பத்தினருக்கும் என்ன செய்வது என்று தெரியாது. அவர்களை எப்படிப் பராமரிக்க வேண்டும் என்பதும் தெரியாது. நோயாளியின் நிலைமை ஒருபக்கம், குடும்பத்தினர் வேதனை ஒருபக்கம்.  இந்த நிலையில் பாலியேட்டிவ் கேர் கிசிச்சை அவர்களுக்கு மிகப் பெரிய ஆறுதலை அளிக்கக் கூடியது.

“நோய் முற்றிவிட்டால் எல்லாருமே இறந்துவிடுவார்கள் என அவர்களை விட்டுவிடக் கூடாது. குணப்படுத்த முடியாத நிலைக்குப் போய்விட்டால்கூட, அவர்கள் இருக்கும் காலம்வரை பராமரித்து சிகிச்சை கொடுக்க முடியும் என்பதை பாலியேட்டிவ் கேர் நிரூபித்துள்ளது. இதுவரை 25 ஆயிரம் நோயாளிகளுக்கு மேல் சிகி்ச்சை அளித்துள்ளோம். இப்போது பெரிய மருத்துவமனைகளில் இருந்தும் பாலியேட்டி கேர் சிகிச்சைக்கு நோயாளிகளை இங்கு அனுப்பி வைக்கிறார்கள்.

நோயைக் குணப்படுத்த முடியவில்லை யெனில் அவர்களுக்கு மேற்கொண்டு எந்த சிகிச்சையும் அளிக்க முடியாது என்ற முடிவுக்கு வரத் தேவையில்லை. பாலியேட்டிவ் கேர் இருக்கிறது என்கிற நம்பிக்கை உருவாக வேண்டும்.  தற்போது அந்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது” என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் ரிபப்ளிகா. சாகும் நாள் தெரிந்துவிட்டால், வாழும் காலம் நரகமாகிவிடும் என்று சொல்வார்கள். வாழும் நாளை வலியின்றிக் கடப்பதுதான் சாகும் நாளை அறிந்தவர்களுக்கான நிம்மதி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்