பால் புதுமையரில் டெமி செக்ஷுவாலிட்டி (Demi sexuality) எனப்படும் ஒரு வகை உண்டு. இவர்கள் மிகவும் அன்பானவர்கள்; அன்புக்கு மட்டுமே நான் அடிமை என்பவர்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் ரேஷ்மா.
நபர்களும் அவர்கள் காட்டும் அன்பும்தான் முக்கியம் என்பதே ரேஷ்மாவின் வேதம்.
“நான் என்னை டெமி செக்ஷுவலாக உணர்கிறேன். எனக்கு ‘எமோஷனல் கனெக்ட்’ இல்லையென்றால், அவர்களோடு என்னால் பேசவே முடியாது. நாம் பணிபுரியும் இடத்தில்கூட நட்புடன் கூடிய அணுகுமுறை தேவைப்படும். அது பணியைத் திறமையாகச் செய்வதற்குப் பயன்படும், அவ்வளவுதான். ‘எமோஷனல் கனெக்ட்’ என்பது ஓரிரு நாளில் வந்துவிடாது. பழகும் விதம், பரஸ்பர அன்பு எல்லாம் சேர்ந்து அமைவது அது.
ஒரு சமூகச் செயற்பாட்டாளராக செக்ஸ் குறித்துப் பேசினாலே, ‘இவரை எளிதாக அணுகிவிடலாம்’ என்று நினைப்பவர்கள் இங்கே அதிகம். ஆனால், நான் அப்படியல்ல. என் பாலின அடையாளம் குறித்த புரிதல் ஏற்படுவதற்கே எனக்குப் பல ஆண்டுகள் ஆயின.
டிரான்ஸ் மேன், டிரான்ஸ் வுமன் ஆகியோருடனும் நான் அன்பாகத்தான் இருப்பேன். என் தலையில் ‘பாலினம்’ என்ற குழப்பம் இல்லை. ஆனால், எதிரில் இருப்பவர் ஒரு முடிவுக்கு வருவது அவரது உரிமை. யார் எந்தப் பாலினத்தை விரும்புகிறார்களோ அவர்களை அப்படியே ஏற்றுக்கொள்வதுதான் என் பழக்கம்” என்கிறார் ரேஷ்மா.
சித்தப்பா எனும் பெண்ணியவாதி
மாற்றுப் பாலினத்தவர் உரிமைகள் பற்றிய விவாதங்களின்போது, பாலினம் குறித்த அடையாளங்களோடுதான் இவர் பிரச்சினைகளை அணுகுகிறார். அப்போதுதான் ஒரு எல்.ஜி.பி.டி. செயற்பாட்டாளராகத் தன்னுடைய பணி நிறைவேறும் என்கிறார் ரேஷ்மா.
“வீட்டில் செயற்பாட்டாளராக என்னை நன்கு அறிவார்கள். ஆனால், அதே நேரத்தில் எனக்குக் குடும்பத்தில் பெரிய நெருக்கடிகள் கிடையாது. என் சித்தப்பாதான் என்னை வளர்த்தார். எல்லா விஷயத்திலும் முற்போக்காக வளர்த்தார். என் அம்மாவை நான் ஆண் என்பேன். சித்தப்பாவை அம்மா என்பேன். அவரை மிகச் சிறந்த பெண்ணியவாதியாகப் பார்க்கிறேன். ‘உன் முடிவுகளை நீ எடு. உனக்கு நான் ஆதரவாக இருக்கிறேன்’ என்பதுதான் அவர் எனக்குச் சொல்லும் ஆலோசனை.
என் அனுபவத்திலிருந்து சொல்கிறேன். இது பால் புதுமை சமூக மக்களுக்கு மட்டுமல்ல. எல்லோருக்கும் பொருந்தும். ஒரு சிஸ்டத்தை நம் தலைக்குள் ஏற்றுகிறார்கள். இந்த சிஸ்டத்தை துறந்துவிட்டால் நீ அவ்வளவுதான் என்பதுதான் அது. படிக்க வேண்டும், வேலைக்குப் போக வேண்டும், ஒரு பெண்ணை அல்லது ஆணைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும், குழந்தை பிறக்க வேண்டும்... இதுதான் அந்த ஃபிரேம். அந்த ஃபிரேமுக்குள் பொருந்தாதவர்களால், ‘ஏன் அவர்களால் பொருந்திப் போக முடியவில்லை’ என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்தப் பிரச்சினை பால் புதுமையரின் வாழ்விலும் அவர்களை விரும்பும் பொதுச் சமூகத்திலிருந்து வருபவர்களுக்கும் ஏற்படுகிறது. சின்ன வயதிலிருந்தே ஒரு இணை தேவை என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்லி வளர்கிறார்கள். குடும்பங்கள் தங்கள் குழந்தைகளின் தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும். ஆண் பெண்ணைச் சார்ந்தோ, பெண் ஆணைச் சார்ந்தோதான் வாழ வேண்டும் என்று நினைப்பதால் பாதுகாப்பற்ற உணர்வு வருகிறது. எல்லோரின் மனத்திலும் மாற்றம் வர வேண்டும். அப்போதுதான் இதற்கான தீர்வு கிடைக்கும்” என்கிறார் ரேஷ்மா.
மாற்றுப் பாலினத்தவர் மற்றும் பால் புதுமையர் தங்கள் உடல் நலன் மற்றும் சட்ட ஆலோசனைகளுக்கு யாரை அணுகுவது என்று தெரியாமல் கண்களைக் கட்டி காட்டில் விட்டதுபோல் இருப்பார்கள். அவர்களுக்கு உதவும் இணைய சேவையைத் தொடங்கியிருக்கிறது கொல்கத்தாவைச் சேர்ந்த வார்தா அறக்கட்டளை. இதன் நிறுவனரும் எல்.ஜி.பி.டி. செயற்பாட்டாளருமான பவன் தாலிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்:
குறிப்பாக எந்தெந்த தென் மாநிலங்களில் உடல் நலன் மற்றும் சட்ட ஆலோசனைக்கான இந்த இணையதள சேவையைக் கொண்டு பயனடைய முடியும்?
தென் மாநிலங்களில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, தெலங்கானா ஆகிய மாநிலங்களும் இந்தியா முழுவதும் பதினைந்து மாநிலங்களில் இருக்கும் மாற்றுப் பாலினத்தவர், பால் புதுமையருக்கான உடல் நலன், சட்ட ஆலோசனை மையங்கள் குறித்த விவரங்களைப் பெறலாம். நாளுக்கு நாள் இந்தத் தளத்தில் தகவல்களைச் சேர்த்துக்கொண்டே இருக்கிறோம். மீதி இருக்கும் மாநிலங்களையும் இதில் உடனுக்குடன் சேர்ப்போம்.
எந்த மாநிலத்தில் எத்தகைய பிரச்சினைகளுக்காக அணுகி இருக்கிறார்கள்?
தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில்தான் இந்த சர்வீஸ் புரொவைடரில் உடல் நலன், சட்ட ஆலோசனை வழங்கும் நிபுணர்கள் அதிகம். தங்களின் பாலினம் குறித்த குழப்பத்துடன் இருப் பவர்களுக்கும் அவர்களின் குடும்பத் தினருக்கும் இது குறித்த ஆலோசனைகளைப் பெறுவதற்காகத் தொடங்கப் பட்டதுதான் இந்த இணையதளம். அவர்கள் எந்தப் பிரச்சினைக்காக அணுகுகிறார்கள் என்பதில் நாங்கள் தலையிடுவதில்லை. அவர்களின் தனிமனித உரிமையை நாங்கள் மதிக்கிறோம்.
எந்த மாதிரியான சட்ட ஆலோசனைக்காக உங்களை அதிகம் நாடுகின்றனர். மாற்றுப் பாலினத்தவருக்குப் பயன்படும் வகையில் காப்பீடு, வாரிசு நியமிப்பது போன்ற பிரச்சினைகளில் சட்ட உதவி கிடைக்குமா?
பாலின அடையாளத்தை மாற்றுவதில் இருக்கும் பிரச்சினைகள், வீட்டில் நடக்கும் வன்முறை, பிளாக்மெயில் போன்ற பிரச்சினைகள், வலுக்கட்டாயமாக நடக்கும் திருமணங்கள், தன்பாலின உறவில் நடக்கும் திருமணங்கள், சொத்து மாற்றுவதில் இருக்கும் சிக்கல்கள் போன்றவை குறித்துப் பலர் சட்ட ஆலோசனைகள் கேட்கின்றனர்.
தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் இந்த வசதி கிடைக்குமா?
தமிழகத்தைப் பொறுத்தவரை இந்தத் தளத்தில் இருக்கும் பெரும்பாலான மாவட்டங்களின் தரவுகளைப் பார்க்கலாம். ஒரு சில மாவட்டங்களின் தரவுகளை இனிமேல்தான் கொடுக்க வேண்டும்.
எந்த விதமான அடையாள அட்டையும் இல்லாமலேயே மருத்துவ ஆலோசனை, சட்ட ஆலோசனை வழங்குவதாகச் சொல்கிறீர்கள். அப்படி என்றால் யாருக்கு, என்ன விதமான ஆலோசனை வழங்கப்பட்டது என்ற தகவல்களை எப்படிப் பராமரிப்பீர்கள்?
குயர் ஃபிரெண்ட்லி லொகேட்டர் பணியைத்தான் நாங்கள் செய்கிறோம். நாங்களே எந்த சேவையையும் தருவதில்லை. அதனால் தனிப்பட்ட ஒருவரின் ஆதாரங்களை நாங்கள் கேட்க வேண்டிய அவசியமே இல்லை. 18 வயதுக்கு மேல் இருக்கும் எவரும் இதைப் பயன்படுத்தலாம். பலரிடமிருந்து ஆலோசனைகளையும் கேட்கிறோம். இன்னும் எந்தெந்த விஷயங்களைச் சேர்க்க வேண்டும் என்பதையும் பயன்படுத்துபவர்களே சொல்லலாம்.
இணையதள முகவரி: http://www.vartagensex.org/reachout.php
(புரிந்துகொள்ள முயல்வோம்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: ravikumar.cv@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago