குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், பள்ளிப் படிவம், குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை என நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பல இடங்களில் வீட்டின் முகவரியை எழுதியிருப்போம். ஆனால், என்றாவது ஒருநாள் நாம் வாழும் தெருவின் பெயர்க் காரணத்தை யோசித்திருப்போமா?
இந்த ஊருக்கு ஏன் இப்படிப் பெயர் வைத்திருக்கிறார்கள் என நினைத்திருப்போமா? வீட்டைவிட்டு வெளியே வந்தால் குதிரைக்குக் கண்பட்டை கட்டியதுபோல் அவரவர் வேலைகளில் மூழ்கிவிடுகிறோம். ஆனால், தனது பரபரப்பான வேலைகளுக்கு நடுவே தான் வாழும் பகுதியைப் பற்றியும் ஊரைப் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற முனைப்போடு பயணத்தைத் தொடங்கியவர் கட்டிடக்கலை நிபுணர் திருபுரசுந்தரி செவ்வேள். இன்றைக்கு சென்னையை அடையாளப்படுத்தும் ஆளுமைகளில் ஒருவராக அவர் மாறியுள்ளார்.
தேடலுக்குக் கிடைத்த பரிசு
ஆட்சி மொழிக் காவலர் கீ. ராமலிங்கனாரின் கொள்ளுப்பேத்தியான திருபுரசுந்தரி செவ்வேள் மெட்ராஸ் இலக்கியச் சங்கத்தின் கவுரவச் செயலராகவும் உள்ளார். தன்னுடைய மேற்படிப்புக்காக பிரான்ஸ் நாட்டில் உள்ள ‘பிரான்சுவா ராபேலாஸ் த டூர்ஸ்’
பல்கலைக்கழகத்தில் நகர்புறம் மற்றும் நகர்புறம் சார்ந்த கட்டிடத் திட்டமிடுதலில் பட்டம் பெற்றுள்ளார். பொதுவாக, வெளிநாட்டுக்குச் சென்று படித்துவிட்டு வருவோர் சொந்த ஊருக்கு வந்தவுடன் கைநிறையச் சம்பளம், நல்ல வேலை என செட்டிலாகிவிடுவார்கள். ஆனால், திருபுரசுந்தரியின் சிந்தனை வேறு விதமாக இருந்துள்ளது.
“பிரான்ஸ் நாட்டில் உள்ள புராதனக் கட்டிடங்களைப் பராமரிப்பதில் அந்நாட்டு மக்களும் அரசும் மிகுந்த அக்கறை எடுத்துக்கொள்கிறார்கள். தங்களது நாட்டில் உள்ள பழமையான கட்டிடங்கள் ஒவ்வொன்றும் அவர்களைப் பொறுத்தவரையில் அந்நாட்டின் அடையாளமாகக் கருதப்படுகின்றன. அந்தச் சிந்தனைதான் நான் வாழ்ந்துவரும் அண்ணாநகர் பகுதியைக் குறித்து தெரிந்துகொள்ளவும் ஆவணப்படுத்தவும் தூண்டுகோலாக அமைந்தது.
சிறியதாக தொடங்கிய என் தேடலின் பயணத்தில் கிடைத்த தகவல்கள் ஏராளம். குறிப்பாக, சென்னையின் முக்கியப் பகுதியாக இருக்கும் அண்ணாநகர் முன்னர் நடுவக்கரை என்ற கிராமமாக இருந்துள்ளது. அதேபோல் பிரபலக் கட்டிடக்கலை நிபுணரான லாரி பேக்கர் (Laurie Baker) கேரளாவைத் தவிர்த்து வெளிமாநிலம் ஒன்றைப் பற்றி வரைபடம் வரைந்தார் என்றால் அது சென்னை அண்ணாநகர் பகுதிதான். இதுபோன்ற எண்ணில் அடங்கா தகவல்கள் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தின” என்கிறார் அவர்.
‘நம் வீடு, நம் ஊர், நம் கதை’
திருபுரசுந்தரியின் தேடலின் ஒருபகுதியாக சிறு பத்திரிகை ஒன்றில் மாணவர்களுக்கான ஓவியப் போட்டி, வினா விடை, புகைப்படக் கண்காட்சி குறித்து விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளார். “இந்தச் சிறு விளம்பரம் எந்த அளவுக்கு மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் என யோசித்துக் கொண்டிருந்த போதுதான் நாங்கள் ஏற்பாடு செய்திருந்த புகைப்படக் கண்காட்சிக்கு வயதானவர்கள் சிலர் வந்திருந்தார்கள். அவர்களுக்கு வயது எண்பது இருக்கும். அவர்கள் கண்காட்சியைப் பார்க்கத்தான் வந்திருக்கிறார்கள் என முதலில் நினைத்தேன்.
ஆனால், வந்திருந்தவர்கள் அண்ணாநகரின் நகரத் திட்டமிடலில் பணிபுரிந்தவர்கள். அண்ணாநகரை ஆவணப்படுத்த வேண்டும் என்ற என்னுடைய முயற்சியைப் பாராட்டி அவர்களிடமிருந்த பழைய வரைபடங்கள், அரிய புகைப்படங்களை எனக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார்கள்.
அவற்றைப் பார்த்து வியந்துபோனேன். அதேபோல்தான் என்னுடைய முதல் விழிப்புணர்வு நடையும் அமைந்தது. என்னுடைய பாட்டி, தங்கை, கல்லூரி நண்பர்கள், பூக்கார பெண்களின் குழந்தைகள், ஆட்டோ ஓட்டுநர்கள் என 22 பேர்தான் நான் ஏற்பாடு செய்திருந்த அண்ணாநகர் பற்றி அரிய தகவல்களை விளக்கும் நடைப்பயணத்தில் முதன்முதலில் கலந்துகொண்டனர்” என்கிறார் அவர்.
வெறும் 22 பேரைக் கொண்டு தொடங்கப்பட்ட திருபுரசுந்தரியின் நடைப்பயணம் கடந்த 2014-ம் ஆண்டு ‘நம் வீடு, நம் ஊர், நம் கதை’ என்ற தன்னார்வ அமைப்பாக உருமாறியது. இவரின் இந்த அமைப்பில் தற்போது 200க்கும் மேற்பட்டவர்கள் தன்னார்வலர்களாக உள்ளனர். அண்ணாநகரின் வரலாற்றைத் தெரிந்துகொள்வதற்காக சாதாரண மக்கள் முதல் வரலாற்று அறிஞர்கள் என 100க்கும் மேற்பட்டவர்களிடம் பேட்டி எடுத்திருக்கிறார்கள்.
“நான் இந்த அமைப்பைத் தொடங்கியபோது கருத்தரங்கு நடத்துவதற்குக்கூட அரங்குகள் கிடைக்கவில்லை. பின்னர் குடும்பத்தினர் உதவினார்கள். ஆனால், தொடர் முயற்சியின் காரணமாக எங்களால் இந்த நிலைக்கு வரமுடிந்துள்ளது. வெறும் கட்டிடங்களின் வரலாற்றைச் சொல்வதைவிட அந்தக் கட்டிடம் கட்ட எந்த மாதிரியான கட்டுமானப் பொருட்கள் பயண்படுத்தப்பட்டுள்ளன; அப்பகுதி எப்படி இருந்தது; எப்படிப்பட்ட மக்கள் அங்கு வாழ்ந்தார்கள்; அன்றைய சூழ்நிலை ஆகிய தகவல்களைக் கதைபோல் எங்களின் விழிப்புணர்வு நடைப்பயணத்தில் கலந்துகொள்பவர்களிடம் எடுத்துச் சொல்கிறோம்.
பாரம்பரியக் கட்டிடக்கலை, பண்டைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட கட்டுமானப் பொருட்கள் குறித்து கட்டிடக்கலை படிக்கும் மாணவர்களுக்குப் பயிலரங்கு நடத்துகிறோம்.”
துடிப்பான இளைஞர்களைக் கொண்டு செயல்படும் ‘நம் வீடு, நம் ஊர், நம் கதை’ அமைப்பு நடத்தும் விழிப்புணர்வு நடைப்பயணங்கள், புகைப்படக் கண்காட்சிகள், கருத்தரங்குகள் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 22 அன்று கொண்டாடப்படும் ‘சென்னை தினம்’ முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்நிலையில் இன்று ஆகஸ்ட் 19 அண்ணாநகரில் உள்ள ‘ஜஸ்ட் புக் அரங்க'த்தில் பழமையான பொருட்கள் கண்காட்சி, பழைய அண்ணாநகர் குறித்த கருத்தரங்கு காலை முதல் மாலைவரை நடைபெறுகிறது”.
‘நடுவக்கரை முதல் அண்ணாநகர் வரை சுதந்திரத்துக்குப் பிறகு சென்னையில் மேற்கொள்ளப்பட்ட கட்டுமானத் திட்டங்கள் கதை வடிவில்’, ‘நம் வீடு, நம் ஊர், நம் கதையின் கதை’ ஆகிய இரண்டு புத்தகங்களை திருபுரசுந்தரி எழுதியுள்ளார். இந்தப் புத்தகங்களை வெளியிடப் பதிப்பாளர்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.
“பெண் குழந்தை என்றால் அவர்கள் இதைத்தான் செய்ய வேண்டும். இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் என் விருப்பத்துக்குத் துணை நின்றவர்கள் என் குடும்பத்தினர்தான். அவர்களின் துணையால்தான் என் பயணம் இந்த நிலையை அடைந்துள்ளது. சென்னை நகரம் பற்றிய பல வரலாற்றுத் தகவல்களை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு செல்வதுதான் எங்களின் இலக்கு” என்கிறார் அவர். தனிமனிதர்கள் எடுக்கும் சிறு முயற்சியும் சமுதாய முன்னேற்றத்துக்குப் பக்கபலமாக இருக்கும் என்பதற்கு உதாரணமாக உள்ளார் திருபுரசுந்தரி.
தொடர்புக்கு: tsarchi2007@gmail.com
திருபுரசுந்தரி செவ்வேள்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago