அன்று 1984 மே 23. தனது கனவும் லட்சியமும் நிறைவேறும் தருணத்தை நினைத்து அந்தப் பெண் மலையில் முன்னேறிக்கொண்டிருந்தார். காத்திருந்த அந்தத் தருணம் கைகூடியதும் கையோடு கொண்டுவந்திருந்த தேசியக் கொடியை உயரே பறக்கவிட்ட பெருமிதத்தோடு உற்சாகக் குரல் எழுப்பினார். அவர், உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் முதன்முதலில் ஏறிச் சாதனை படைத்த இந்தியப் பெண்ணான பச்சேந்திரி பால்.
சிறு வயது ஆசை
‘விளையும் பயிர் முளையிலேயே தெரியும்’ என்ற பழமொழிக்கு ஏற்ப சிறு வயதிலேயே மலையேற்றம் மீது பச்சேந்திரி பாலுக்கு ஆர்வம் ஏற்பட்டுவிட்டது. அதற்கு அவர் பிறந்த உத்தரகாண்ட் மாநிலம் நகுரி என்ற கிராமும் ஒரு காரணம். இமயமலை அருகே அந்தக் கிராமம் இருந்ததால் மலை மீது ஏறி இறங்குவது அவரது வாழ்க்கையில் ஓர் அங்கமாகவே இருந்தது. சிறு வயதிலிருந்தே பச்சேந்திரி பால் வித்தியாசமானவர். எப்போதும் எதையாவது செய்தபடி துறுதுறுவென இருப்பார்.
மலையேற்றம் மீது காதல்
பச்சேந்திரிக்கு 12 வயதாக இருந்தபோது பள்ளியில் மலையேற்றம் சென்றார்கள். அந்தக் குழுவில் அவரும் இடம்பிடித்தார். 4 ஆயிரம் மீட்டர் உயரம் கொண்ட மலையை ஏறிவர முயன்றார் பச்சேந்திரி. அப்போதுதான் மலையேற்றம் என்ற சாகச விளையாட்டு குறித்த புரிதல் அவருக்கு ஏற்பட்டது. மலையேற்றம் மீதான ஆர்வம் அவருக்கு அதிகம் ஏற்பட்டாலும், அதையெல்லாம் படிப்புக்காக மூட்டைகட்டி வைத்தார்.
கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்ற பிறகு நகுரி கிராமத்தில் பட்டம் பெற்ற முதல் பெண் என்ற பெருமையும் பச்சேந்திரி பாலுக்குக் கிடைத்தது. அவரை ஆசிரியராக்கி அழகு பார்க்க அவரது குடும்பத்தினர் விரும்பினர். ஆனால், பச்சேந்திரி பாலுக்கோ படிப்புக்காக இத்தனை நாட்களாக ஒதுக்கிவைத்திருந்த மலையேற்ற சாகச விளையாட்டின் மீதுதான் தீவிரக் காதல் இருந்தது.
முதல் மலையேற்றம்
மலையேற்றத்தை முறைப்படி கற்க விரும்பினார். இதற்காக மலையேறும் கலையைக் கற்றுத்தரும் பள்ளியில் சேர்ந்தார். மலையேற்றத்தின் நெளிவு சுளிவுகளைக் கற்ற பிறகு மலையேற்ற சாகசத்தில் ஈடுபடத் தொடங்கினார். 1982-ல் கங்கோத்திரி மலையில் 6,675 மீட்டர் உயரத்தையும் ருத்ரகரியா மலையில் 5,818 மீட்டர் உயரத்தையும் மலையேற்றம் மூலம் எட்டினார்.
வெற்றிகரமாகச் செய்துகாட்டிய இந்த மலையேற்றம் மூலம் பச்சேந்திரி பாலுக்கு நேஷனல் அட்வென்ச்சர் ஃபவுண்டேஷனில் வேலை தேடிவந்தது. இங்கே அவருக்குக் கிடைத்தது பயிற்றுநர் வேலை. மலையேற்றம் செய்ய விரும்பும் பெண்களுக்கு அதன் நுணுக்கங்களைப் பயிற்றுவித்தார்.
எவரெஸ்ட்டுக்குப் பயணம்
இந்தப் பணிக்கு இடையே சிறு சிறு மலையேற்றங்களிலும் அவர் ஈடுபட்டார். சிறு சிறு மலைகளை ஏறித் தன்னுடைய தன்னம்பிக்கையை வளர்ந்துவந்தார். தொடர்ந்து மலையேற்ற சாகசத்தில் நிபுணத்துவம் பெற்றதால், 1984 மார்ச்சில் உலகின் உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் மகளிர் குழுவில் அவருக்கு வாய்ப்புக் கிடைத்தது. 6 பெண்கள், 11 ஆண்கள் இதற்காகத் தேர்வு செய்யப்பட்டார்கள். இவர்களில் பச்சேந்திரியும் ஒருவர். இது மிகப் பெரிய, சவால் மிக்க பணி என்பதால், அதற்கான முன்னேற்பாடுகளில் இறங்கினார் பச்சேந்திரி பால்.
அவர்கள் சென்ற குழுவில் பலருக்கும் காயம் ஏற்பட்டது. நோய் தாக்குதல் போன்ற உடல் நலப் பிரச்சினைகள் ஏற்பட்டன. ஒரு கட்டத்தில் பச்சேந்திரி பாலுக்கும் தலையில் காயம் ஏற்பட்டது. ஆனால், அவர் மன உறுதியோடு பயணத்தைத் தொடர்ந்தார். மைனஸ் 40 டிகிரி செல்சியஸ் குளிரைத் தாங்கிக்கொண்டு முன்னேறினார். பல இடங்களில் கடுமையான பனிமலை முகடுகளைத் தாண்ட வேண்டியிருந்தது. அவற்றையெல்லாம் தாண்டி எவரெஸ்ட்டை நெருங்கினார்.
சிகரத்தில் பிறந்த நாள்
தொடக்கம் முதலே மன உறுதி குலையாமல் முன்னேறிய பச்சேந்திரி பால், 1984 மே 23 மதியம் 1:07 மணி அளவில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தார். கையோடு கொண்டுவந்திருந்த தேசியக் கொடியை உயரே பறக்கவிட்டார். தடைகளையும் வலிகளையும் தாண்டி அவர் பதித்த அந்தத் தடத்தின் மூலம், எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் இந்தியப் பெண் என்ற அழியாப் புகழைத் தேடிகொண்டார். மே மாதம் 24-ம் தேதி அவரது 31-வது பிறந்த நாளுக்கு முன்பாக இந்தச் சாதனையை அவர் செய்தது இன்னொரு முத்தான அம்சம். தனது பிறந்த நாளையும் எவரெஸ்ட் சிகரத்திலேயே கொண்டாடினார் பச்சேந்திரி பால்.
நிற்காத பயணம்
இந்த மலையேற்றத்தோடு அவர் நின்றுவிடவில்லை. 1985-ல் மற்றொரு குழுவுடன் தனது மலையேற்றதைத் தொடங்கினார். பெண்கள் மட்டுமே பங்கேற்ற மலையேற்றக் குழுவுக்குத் தலைமைதாங்கி சியாச்சின் மலைப் பகுதி வழியாக சுமார் 4,500 மீட்டர் உயரம் இமயமலைப் பகுதியில் சாகச மலையேற்றப் பயணம் செய்தார். 1993-ல் இந்திய - நேபாளப் பெண்களைக் கொண்ட குழுவுடன் எவரெஸ்ட்டில் மீண்டும் ஏறினார். இதில் அவரோடு சேர்ந்து 7 பெண்கள் எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்டார்கள்.
நீர் சாகசம்
1994-ல் வேறொரு சாகசத்தில் பச்சேந்திரி பால், 18 பெண்களைக் கொண்ட குழுவுக்குத் தலைமையேற்று நீர் சாகசப் பயணம் மேற்கொண்டார். கங்கை நதியிலிருந்து புறப்பட்டு ஹரித்வார், கொல்கத்தா நகரங்களை உள்ளடக்கிய நீர் மிதவைப் பயணத்தை வெற்றிகரமாகச் செய்துமுடித்தார். 39 நாட்களில் 2,155 கிலோ மீட்டர் தூரத்தை இந்த வழியாகக் கடந்து சென்றார் பச்சேந்திரி பால்.
இதேபோல 1997-ல் எட்டுப் பேர் கொண்ட பெண்கள் குழுவுடன் மலையேற்றப் பயணத்தை இமயமலையில் தொடங்கினார். அருணாச்சலப் பிரதேசத்திலிருந்து தொடங்கிய இந்த மலையேற்றப் பயணத்தை சியாச்சினில் உள்ள இந்திரா முகடு என்ற இடத்தில் நிறைவு செய்தார். இதன் பிறகும்கூட பச்சேந்திரி பாலின் மலையேற்ற சாகசப் பயணம் முடிவுறாமல் நீண்டுகொண்டே சென்றது.
விருதுகள்
மலையேற்றத்தில் பச்சேந்திரி பால் செய்த சாதனைகளுக்காக அவர் பெறாத விருதுகளே இல்லை. அவரது சாதனையை அங்கீகரிக்கும் வகையில் 1984-ல் பத்ம விருது வழங்கப்பட்டது. அடுத்தடுத்து தொடர்ந்து மலையேற்றத்தில் சாதனையை நிகழ்த்தியதால், விளையாட்டில் சிறந்து விளங்குவோருக்கு வழங்கப்படும் அர்ஜுனா விருது 1986-ல் வழங்கப்பட்டது.
1990-ல் எவரெஸ்ட்டை அடைந்த முதல் இந்தியப் பெண் என்று உலக கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் லிம்கா சாதனைப் புத்தகத்திலும் இடம்பிடித்தார். பல்வேறு மாநில அரசுகளின் வீரதீர சாகச விருதுகளையும் பச்சேந்திரி பால் பெற்றிருக்கிறார்.
மலையேற்றத்தை ஆண்களுக்கான சாகச விளையாட்டாக நினைத்த காலம் ஒன்று இருந்தது. அதை மாற்றிக்காட்டியவர் பச்சேந்திரி பால். அவர் வெற்றிகரமாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த பிறகு ஏராளமான பெண்கள் மலையேற்றத்தில் ஆர்வம் கொண்டார்கள். இன்றும் ஏராளமான பெண்கள் மலையேற்றத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். அவர்களுக்கெல்லாம் பச்சேந்திரி பால்தான் வழிகாட்டி.
தற்போது 64 வயதாகும் பச்சேந்திரி பால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மலையேற்றப் பயிற்சி அளிக்கும் பணியை விடாமல் செய்துவருகிறார்.
(வருவார்கள் வெல்வார்கள்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: karthikeyan.di@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago