பார்வை: ‘அம்மா’ மகள்களின் பக்கம் அல்ல

By ஆர்.ஜெய்குமார்

 

லையாளத் திரைப்பட நடிகர் சங்கமான ‘அம்மா’வின் (Association of Malayalam Movie Artists) பொதுக்குழுக் கூட்டத்தில் அரங்கேற்றப்பட்ட ‘நடிகர் திலீபைத் திரும்ப அழைக்கும் தீர்மான’ நாடகம், இளம் நடிகைகள் நால்வரின் ராஜினாமா போராட்டத்தால் பெரும் தோல்வியில் முடிந்திருக்கிறது.

14 மாதங்களுக்கு முன்பு கொச்சியில் நடிகர் மம்மூட்டியின் வீட்டில் செயற்குழுக் கூட்டத்தில், நடிகையைக் கடத்தி, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் திலீபை, ‘அம்மா’வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த வழக்கின் விசாரணை இன்னும் முடிவடையாத நிலையில் ‘அம்மா’ இப்படியோர் அவசரமான தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறது. இது வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை, நிரபராதி எனத் தீர்ப்பு அளிப்பதற்கு நிகரானது. 485 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு சங்கத்தின் தனிப்பட்ட விஷயம் என்பதைத் தாண்டி இது பொதுவெளியில் விவாதப் பொருளாகி இருக்கிறது.

விவாதத்தை உருவாக்கியவர்கள் நடிகைகள். டபிள்யூ.சி.சி. (Women in Cinema Collective) என்னும் அமைப்பைச் சேர்ந்த நடிகைகள் ரம்யா நம்பீசன், கீது மோகன்தாஸ், ரிமா கல்லிங்கல் ஆகிய மூவரும் ‘அம்மா’விலிருந்து வெளியேறினர். அதற்கு முன்பாகப் பாதிக்கப்பட்ட நடிகையும் விலகுவதாக அறிவித்திருந்தார்.

இவர்களின் ராஜினாமாவைத் தொடர்ந்து இந்த விஷயம் கேரளத்தின் முக்கியப் பிரச்சினைகளுள் ஒன்றாக எல்லாத் தரப்பிலும் விவாதத்தை ஏற்படுத்தியது. ‘அவள்கொப்பம்’ என்னும் பெயரில் இந்தப் போராட்டத்தை டபிள்யூ.சி.சி ஒரு பிரச்சாரமாக முன்னெடுத்தது.

கேரள மகளிர் ஆணையம் ‘அம்மா’வின் இந்தத் தீர்மானத்தைக் கண்டித்து, ராஜினாமா செய்த நடிகைகளுக்கு ஆதரவு தெரிவித்தது. “இந்தப் பிரச்சினையில் மவுனம் காக்கும் நடிகை மஞ்சு வாரியர் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. துணிச்சலுடன் வெளியே வந்து தனது கருத்துகளைச் சொல்ல வேண்டும்” என்றும் அந்த ஆணையத் தலைவர் எம்.சி.ஜோஸபைன் தெரிவித்துள்ளார். கேரள மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான வி.எஸ்.அச்சுதானந்தன், “ ‘அம்மா’வின் முடிவு தவறானது” என விமர்சித்தார்.

அந்தக் கட்சியின் தேசியத் தலைவர்களுள் ஒருவரான பிருந்தா காரத், “ ‘அம்மா’வின் தீர்மானம் பெண்களுக்கு எதிரானது. இது அந்தச் சங்கத்தில் இருக்கிற ஆண் எதேச்சாதிகாரத்தின் வெளிப்பாடு” எனக் கருத்துத் தெரிவித்தார். கேரள காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான எம்.எம். ஹசன், “பெண்களுக்கு எதிராகத் தீர்மானம் எடுத்த ‘அம்மா’வை, இனி அச்சன் (அப்பன்) என்றுதான் விளிக்க வேண்டும்” எனச் சொன்னார்.

கேரள காங்கிரஸின் மாணவர் இயக்கமான கே.எஸ்.க்யூ., ‘அம்மா’வின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மோகன்லாலுக்கு எதிராகப் போராட்டக் கொடியை உயர்த்தியுள்ளது. சிபிஐயின் அகில இந்திய இளைஞர் கூட்டமைப்பு (AIYF) ஒருபடி மேலே சென்று மோகன்லாலின் உருவ பொம்மையை எரித்துத் தங்கள் எதிர்ப்பைப் பதிவுசெய்தது. இன்னும் பல முக்கிய ஆளுமைகள் ‘அம்மா’வின் இந்த நடவடிக்கையை விமர்சித்துள்ளனர். பெண் பத்திரிகையாளர் கூட்டமைப்பு உட்பட சில அமைப்புகள் இதைக் கண்டித்துக் கூட்டம் நடத்தின. கன்னட ஃபிலிம் இண்டஸ்ட்ரி உட்பட இரு கன்னட சினிமா அமைப்புகள் இந்தத் தீர்மானத்தைக் கண்டித்து அம்மாவுக்குக் கடிதம் எழுதியுள்ளன.

‘அம்மா’வுக்கு முன்பே ‘ஃபெஃப்கா’ என்னும் மலையாளத் திரைப்படத் தொழிலாளர் சங்கம் திலீபைத் திரும்ப அழைக்கும் முயற்சியில் இருந்ததாக, அதன் உறுப்பினரான இயக்குநர் ஆஷிக் அபு தனது பேஸ்புக் பக்கத்தில் குற்றம் சாட்டியிருந்தார். அதன் பொதுச்செயலாளரான பி.உண்ணிகிருஷ்ணன் அந்த முயற்சியை மேற்கொண்டுவருவதாகவும் அவர் சொல்லியிருந்தார். பொதுத்தளத்தில் ஆஷிக் அபுவுக்குக் கிடைத்த ஆதரவைக் கண்ட ‘ஃபெஃப்கா’ அதிலிருந்து பின்வாங்கியதாகச் சொல்லப்படுகிறது.

அதனால் அதன் பிறகு கூடிய ‘ஃபெஃப்கா’வின் பொதுக்குழுக் கூட்டம் திலீப் மீது நிலுவையிலுள்ள தடையை உறுதிசெய்தது. ஆனால், ‘அம்மா’ துணிச்சலாக திலீபைச் சுவீகரித்துக்கொண்டது. ஆனால், நடிகைகளின் இந்த ராஜினாமா போராட்டத்தை எதிர்பார்க்காத ‘அம்மா’ இப்போது பொதுவெளியில் அம்பலப்பட்டுவிட்டது.

வேறு வழியில்லாமல் இப்போது திலீபே ‘வழக்கிலிருந்து விடுதலையாகாதவரை ‘அம்மா’வுக்குத் திரும்பப் போவதில்லை’ எனக் கடிதம் அனுப்பியிருக்கிறார். இது நாடகத்தின் எதிர்பாராத திருப்புமுனை. திலீபைக் காப்பாற்ற நினைத்த ‘அம்மா’வை, இப்போது திலீப் காப்பாற்றும் பரிதாபகரமான சூழல் ஏற்பட்டுள்ளதாக மலையாளத் திரைப்படப் பத்திரிகையாளர் பல்லிசேரி ஒரு பத்திரிக்கைக்கு அளித்த நேர்காணலில் சொன்னார்.

நடிகைகளின் துணிச்சலான ராஜினாமா போராட்டத்தைத் தொடர்ந்து டபிள்யூ.சி.சி-யின் மற்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்யாதது ஏன் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த டபிள்யூ.சி.சி. உறுப்பினரும் இயக்குநருமான விது வின்செண்ட், “சிலர் ராஜினாமா செய்ய வேண்டும். மற்றவர்கள் உள்ளிருந்து செயல்பட வேண்டும் எனத் தீர்மானித்துதான் இதில் இறங்கினோம்” என்கிறார். இதிலிருந்து ராஜினாமா என்பதை இந்தப் பெண்கள் ஒரு போராட்டமாகக் கையில் ஏந்தியுள்ளனர் என்பது தெளிவாகிறது.

இத்துடன் நின்றுவிடாமல் அடுத்த நடவடிக்கையாக ரஞ்சனி, அமலா, சஜிதா மடத்தில் உள்ளிட்ட டபிள்யூ.சி.சி. நடிகைகள் 14 பேர் ‘அம்மா’வின் நடவடிக்கைக்கு எதிராகக் கூட்டறிக்கையை வெளியிட்டனர். “பாதிக்கப்பட்ட நடிகையின் பக்கம் நிற்பதற்குப் பதிலாகக் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக இருக்கும் ‘அம்மா’வில் உறுப்பினராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நடிகர்களுக்கு ஒரு நீதி, நடிகைகளுக்கு ஒரு நீதி என்பது சரியல்ல” என அந்தக் கூட்டறிக்கையில் கடும் ஆட்சேபனையைத் தெரிவித்திருந்தனர். ஆனாலும் ‘அம்மா’ தன் மகனை திரும்ப அழைக்கும் முடிவைத் திரும்பப் பெற்றுக்கொள்ளவே இல்லை.

நடிகைகள் ரேவதி, பார்வதி, பத்மப்ரியா மூவரும் ‘அம்மா’வின் தீர்மானத்துக்கு எதிராகச் செயற்குழுவின் அவசரநிலைக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் எனக் கடிதம் கொடுத்துள்ளனர். முதலில் மூன்று பேருக்காகச் செயற்குழுவைக் கூட்ட முடியாது என ‘அம்மா’ சார்பில் நடிகர் மகேஷ் தெரிவித்தார். டபிள்யூ சி.சி. தனது அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கியது. நடிகர்கள் விநாயகன், அலென்சியர், இயக்குநர்கள் ஆஷிக் அபு, திலீஷ் போத்தன், ராஜீவ் ரவி, அன்வர் ரஷீத், டாக்டர் பிஜூ, வேணு உள்ளிட்ட சினிமா ஆளுமைகள் 100 பேர் ‘அம்மா’வுக்கு எதிராகக் கூட்டறிக்கை வெளியிட்டனர். “பெண்களுக்கு எதிராகச் செயல்படுவதை அலங்காரமாகப் பார்க்கும் சங்கம் ‘அம்மா’” என அதில் குற்றம் சாட்டினர்.

parvahi

டபிள்யூ.சி.சி.யின் இவ்வளவு உறுதியான போராட்டத்துக்குப் பிறகு அம்மாவின் தலைவர் மோகன்லால், நடிகைகள் ரேவதி, பத்மப்ரியா, பார்வதி ஆகியோரின் கோரிக்கையை ஏற்று செயற்குழு கூட்டப்படும் என அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார். ஜூலை 19 அன்று இந்தக் கூட்டம் கொச்சியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் நடிகைகள் நால்வரின் ராஜினாமா குறித்தும் நிறைவேற்றப்பட்ட திலீபைத் திரும்ப அழைக்கும் தீர்மானம் குறித்தும் விவாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்துக்கு டபிள்யூ சி.சி. உறுப்பினர்கள் அழைக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது டபிள்யூ.சி.சி. எனும் பெயரில் ஒன்று திரண்டுள்ள பெண்களின் கூட்டு முயற்சிக்குக் கிடைத்த வெற்றி.

பார்வதி போட்டியிடத் தடை?

நடிகை சுசித்ராவுக்கு (‘கோபுர வாசலிலே’ நாயகி) ‘அம்மா’வின் கூடுதல் செயலாளர் என்ற கவுரப் பொறுப்பு கொடுக்கப்பட்டது. அவர் அல்லாது 25 ஆண்டுக் கால வரலாறுகொண்ட இந்த ‘அம்மா’ நடிகர் சங்கத்தின் முக்கிய நிர்வாகியாக ஒரு நடிகையும் இருந்ததில்லை. செயற்குழு உறுப்பினர்களாகவும் ஆண் நிர்வாகிகளுக்குச் சாதகமான குக்கூ பரமேஸ்வரன் போன்ற குறிப்பிட்ட நடிகைகளே தொடர்ந்து நியமிக்கப்பட்டுள்ளனர்.

குக்கூ பரமேஸ்வரன் மட்டும் 12 ஆண்டுகளுக்கு மேலாக அந்தப் பதவியை வகித்துள்ளார். இந்த முறை நடக்கவிருந்த தேர்தலில் நடிகை பார்வதி போட்டியிட விண்ணப்பம் அளிக்க முன்வந்தபோது, அது தடுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. தேர்தல் விதிக்குப் புறம்பாக இப்போது நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் நடிகைகள் பார்வதியும் பத்மப்ரியாவும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்