வண்ணங்கள் ஏழு 11: இதுவும் காதலே!

By வா.ரவிக்குமார்

கண்ணான கட்டழகுக் கண்ணா…

உன்னைக் காணாத

கண்ணும் ஒரு கண்ணா…

- இந்த வரிகளை ஒரு பெண்தான் ஆணைப் பார்த்துப் பாடவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஓர் ஆணின் கம்பீரம் இன்னோர் ஆணை ஈர்ப்பதும் இயற்கைதான், இயல்புதான் என்பது தன்பால் ஈர்ப்பு கொண்ட ஆண்களின் வாதம்.

விருப்பத்தை வெளிப்படுத்திய தருணம்

உலகம் தழுவிய மாற்றுப் பாலினத்தவருக்கான உரிமைகளைப் பேசும் இணையதளம் மூவ்ஸ் (MOOVZ). இதன் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டிருப்பவர் 23 வயது நக்ஷத்ரா பாக்வே. மும்பைப் பல்கலைக்கழகத்தில் விளம்பரத் துறையை முதன்மைப் பாடமாக எடுத்துப் பட்டம் பெற்றவர். நடிகர், இயக்குநர், எடிட்டர், வசனகர்த்தா எனப் பல முகங்கள் இவருக்கு உண்டு. வசதியான குடும்பத்தில் பிறந்த நக்‌ஷத்ரா, தனக்கு எதிர்ப்பாலினமான பெண்கள் மீது ஈர்ப்பு இல்லை என்பதை உணர்ந்தார்.

தன் பாலிர்ப்பை மையப்படுத்தி இவர் இயக்கி நடித்த ‘லாக்கிங் அவுட்’, ‘புக் ஆஃப் லவ்’, ‘கர்டெய்ன்ஸ்’ போன்ற குறும்படங்கள் மாற்றுப் பாலினத்தவர் மத்தியில் மட்டுமல்லாமல் பொதுச் சமூகத்திலும் வரவேற்பு பெற்றன. மும்பை இண்டர்நேஷனல் க்வீர் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் சிறந்த குறும்படமாக ‘லாக்கிங் அவுட்’ தேர்ந்தெடுக்கப்பட்டது. நியூயார்க்கின் ‘குயின்ஸ் மியூஸியம் ஆஃப் ஆர்ட்ஸ்’, லண்டனின் ‘தி ஓல்ட் சினிமா’ போன்ற புகழ்பெற்ற அரங்குகளிலும் அது திரையிடப்பட்டது. இவர் நடித்திருக்கும் ‘ஹார்ட்ஸ்’ ஆங்கிலப் படம் விரைவில் வெளிவரவிருக்கிறது.

தங்கள் மகன் மீடியா தொடர்பாகப் படித்ததால் படம் எடுப்பதாகத்தான் நக்ஷத்ராவின் குடும்பத்தினர் முதலில் நினைத்தனர். ஆனால், அவர் தொடர்ந்து எல்.ஜி.பி.டி. சமூகத்துக்கு ஆதரவாகவே படம் எடுப்பதும் அதுபோன்ற படங்களில் நடிப்பதும் வித்தியாசமாகத் தோன்றியது.

தனக்கு ஆணின் மீதுதான் ஈர்ப்பு ஏற்படுகிறது என்பதை ஒரு சுபயோக சுபதினத்தில் குடும்பத்தினருடன் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது தெரிவித்ததாக ‘மூவ்ஸ்’ இணையதளம் நடத்திய #coming out பதிவில் நக்ஷத்ரா குறிப்பிட்டிருக்கிறார்.

மகனோடு சேர்ந்து போராடிய தாய்

தன் மகன் தன்பால் உறவாளர் என்று அறிந்ததும் அவருடைய தாய் ஸ்வாதி பாக்வே முதலில் அதிர்ந்தார். இதுவும் இயற்கையான ஓர் உணர்வுதான் என்பதை நக்ஷத்ரா பல்வேறு உதாரணங்களைக் கூறி விளக்கினார். மகனைப் புரிந்துகொண்ட ஸ்வாதி, அவரை ஏற்றுக்கொண்டார். அதோடு நின்றுவிடாமல் எல்.ஜி.பி.டி. விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் மகனுடன் சென்று பங்கேற்கத் தொடங்கினார். “உங்கள் குழந்தைகளின் பால் ஈர்ப்பைக் காரணம் காட்டி, அவர்களை வெறுக்காதீர்கள். அவர்கள் எப்படி இருந்தாலும் உங்களுடைய பிள்ளைகளே” என்று தான் பங்கேற்கும் கூட்டங்களில் உணர்ச்சிபூர்வமாகப் பேசினார்.

குஜராத்தில் முதன்முதலாக எல்.ஜி.பி.டி. பிரிவினருக்கான வானவில் பேரணியை நடத்தியது, ஆசிய அளவில் நடத்தப்பட்ட எல்.ஜி.பி.டி. ஃபிளாஷ்மாப் பேரணிகளில் பங்கேற்றது என நக்ஷத்ராவின் புகழும் அவருடைய தாயின் புகழும் நாடெங்கும் பரவின. ஆமிர்கான் தொகுத்து வழங்கிய ‘சத்யமேவ ஜயதே’ தொலைக்காட்சித் தொடரில் தாயும் மகனும் பங்கேற்றுப் பேசினார்கள். மாற்றுப் பாலினத்தவரிடையே ஒரு முன்னுதாரணத் தாயாக ஸ்வாதி பாக்வே கொண்டாடப்பட்டார். எதிர்பாராத விதமாக நக்ஷத்ராவின் அம்மா புற்றுநோயால் இறந்துவிட, மாற்றுப் பாலினத்தவரின் உரிமைகளுக்காக நக்‌ஷத்ராவின் குரல் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கிறது.

காலண்டரில் ஆண் மாடல்கள்

தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாகத் தன்பாலின ஈர்ப்புக் கொண்டவர்கள், மூன்றாம் பாலினச் சமூக மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் ‘சகோதரன்’ அமைப்பை நிறுவி அதன் இயக்குநராக இருப்பவர் சுனில் மேனன். இவர் மாடல் கோ ஆர்டினேட்டராகவும் ஃபேஷன் கொரியோகிராபராகவும் இருக்கிறார். 2010-ம் ஆண்டு முதல் ஆண் மாடல்களை மட்டுமே வைத்து காலண்டர்களை வெளியிட்டுவருகிறார்.

கடந்த ஆண்டில் வெளிவந்த காலண்டரில் ஆட்டோ டிரைவர் ஒருவரும் இடம்பெற்றிருக்கிறார். இவர் ‘மிஸ்டர் கேரளா’ போட்டியில் வென்றவர். ‘சகோதரன்’ சார்பாக விற்பனையாகும் இந்த காலண்டர்களின் மூலம் கிடைக்கும் வருமானத்தை எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் வேறு நற்பணிகளுக்கும் இந்த அமைப்பினர் பயன்படுத்துகின்றனர்.

ஆர்லாண்டோ பயங்கரம்

இது போன்ற பல்வேறு செயல்பாடுகள் மூலம் மாற்றுப் பாலினத்தவர்கள், பொதுச் சமூகத்தினரோடு இணைந்து செயல்பட நினைக்கும் வேளையில் தன்பால் உறவாளர்களைச் சிறுமைப்படுத்துவதும் அவர்களைத் தனிமைப்படுத்தப்படுத்துவதும் அதிகபட்சமாகக் கொலை செய்வதும் நடக்கின்றன. அமெரிக்காவின் ஆர்லாண்டோ நகரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அப்படியொரு சம்பவம் நடந்தது. ஆர்லாண்டோ நகரத்திலுள்ள மாற்றுப் பால் ஈர்ப்பு உள்ளவர்கள் கூடியிருந்த ஒரு மதுக்கூடத்தில், ஒருவர் கண்மூடித்தனமாகச் சுட்டதில் 40-க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தைக் கண்டித்து அமெரிக்காவில் மிகப் பெரிய அளவில் மாற்றுப் பாலின சமுதாயத்தினரோடு பொதுமக்களும் இணைந்து போராடினார்கள். மாற்றுப் பாலினத்தவரின் சுயமரியாதை பேரணி நடக்கவிருக்கும் இந்த மாதத்தில் இதுபோன்ற சம்பவங்களை நினைவுகூர்வதோடு மாற்றுப் பாலினத்தவருக்கான உரிமையும் மனித உரிமையே என்பதை நாம் உணர வேண்டும்.

அதிர்வை உண்டாக்கிய ‘மேட்’

வியோமிங் பல்கலைக்கழகத்தில் படித்த அமெரிக்க இளைஞர் மேட் ஷெப்பர்ட், கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். காரணம், அவர் தன்பால் உறவாளர். இந்தத் துயரச் சம்பவம் 1998-ல் நடந்தது. அது மாணவர்களையும் சமூகத்தில் பலதரப்பட்ட மக்களையும் பாலினச் சமத்துவத்துக்காக வெள்ளை மாளிகையின் முன்னால் திரண்டு போராடவைத்தது. தேசிய அளவில் பாலினச் சிறுபான்மை சமூகத்துக்கு எதிராகத் தொடுக்கப்படும் பயங்கரவாதத்துக்கு எதிரான குரலாக அது ஒலித்தது.

2009-ல் (Matthew Shepard and James Byrd, Jr. Hate Crimes Prevention Act) பாலினச் சிறுபான்மையினரைத் துன்புறுத்துவதைத் தடுக்கும் சட்டம் அமெரிக்காவில் அமல்படுத்தப்பட்டது. மேட் ஷெப்பர்டின் தாயார் ஜூடி ஷெப்பர்ட், ‘மேட் ஷெப்பர்ட் அறக்கட்டளை’யை நிறுவி பாலினச் சமத்துவத்துக்காகப் போராடிவருகிறார். மேட் ஷெப்பர்டின் தோழி மிச்ஷேல் ஜோஸுவின் இயக்கத்தில் ஜூடி ஷெப்பர்ட் தயாரித்திருக்கும் ஆவணப்படம் ‘Matt Shepard is a Friend of Mine’. உலக அளவில் நடைபெறும் திரைப்பட விழாக்களில் ஆவணப்பட வரிசையில் அதிர்வை ஏற்படுத்திய படம் இது.

(புரிந்துகொள்ள முயல்வோம்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: ravikumar.cv@thehindutamil.co.in

 

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்