எசப்பாட்டு 42: பெண்ணை வசைபாடும் சொலவடைகள்

By ச.தமிழ்ச்செல்வன்

எழுதப்பட்ட இலக்கியம் ஆணை ஆணாகவும் பெண்ணைப் பெண்ணாகவும் இருக்க வலியுறுத்துகிறது, வளர்த்தெடுக்கிறது, செதுக்குகிறது, தகவமைக்கிறது. ஆண்மையையும் பெண்மையையும் அது கட்டமைக்கிறது. இப்படி எழுதப்பட்ட இலக்கியம் படிப்பறிவில்லாத மக்களை எட்டுவதில்லை. நல்லவேளை என நாம் மகிழ்ச்சியடைய முடியாது. அவர்களின் இலக்கியமான நாட்டுப்புற இலக்கியம் இந்தப் பணியை அவர்கள் மத்தியில் செய்கிறது.

‘எழுதாக் கிளவி’ என்று சொல்லப்படும் வாய்மொழி இலக்கியம் கல்வியறிவு கிட்டாத மக்களின் வாழ்க்கைக் கண்ணோட்டத்தைச் சுமந்துநிற்கிறது. நிலவும் ஆணாதிக்கச் சமூகம் நிரந்தரமானது, சரியானது; அத்துடன் இணைந்து வாழ்வதே பெண்ணால் ஆகக் கூடியது என்ற கருத்தியலை அது வாய் மொழியாகவே பரப்பிக்கொண்டிருக்கிறது.

வாழ்மொழி இலக்கியம்

‘கழி கிண்டும் துடுப்பே

உனக்கென்ன விறைப்பே’

என்றும்

‘ராஜா வீட்டு நாய் சிம்மாசனம் ஏறுதுன்னு

வண்ணான் வீட்டு நாய் வெள்ளாவியில் ஏறலாமா?’

என்றும் சொல்லி ஒடுக்கப்பட்ட மக்களையும் பெண்களையும் அவரவர் இடத்தில் உட்காரவைக்கும் உளவியலை உருவாக்குகிறது.

‘என் வீட்டுக் கிணற்றில் எப்போதும் உப்புத் தண்ணீர், அது என்ன?’ என்று விடுகதை போட்டு, கண்ணீர் என விடை சொல்லிப் பெண்களும் கண்ணீரும் பிரிக்க முடியாதவை என்று நம்பும் மனநிலையைச் செதுக்குகிறது.

நாங்கள் மதுரையில் கருத்துக் கூட்டத்தின் வழியாக நாட்டுப்புற இலக்கியங்களை ஊர் ஊராகப் போய்ச் சேகரித்துத் தொகுத்தபோது, சொலவடைகள் தொகுப்பில் நான் ஈடுபட்டேன். விடுகதைகள், பழமொழிகள் ஆகியவற்றைப் போல அல்லாமல் சொலவடை என்பது இலக்கணச் சுத்தமாகச் செதுக்கப்படாத ஒரு மொழியில் இருக்கிறது. அதனால் அது பெண்களின் மனத்திலிருந்து அப்படியே குதித்துவந்த உயிர்த்துடிப்போடு இருப்பதைக் காண முடிந்தது.

நாட்டுப்புறக் கதைகள், கதைப் பாடல்கள், தாலாட்டு, ஒப்பாரி, விடுகதை போன்ற எல்லா வாய்மொழி இலக்கிய வகையும் கிராமப்புறப் பெண்களின் மனங்களில்தான் புதைந்து கிடக்கின்றன. ஆகவே, சரிபாதியாக இருக்கும் பெண்களின் உளவியலை வடிவமைப்பதில் இவை முக்கியப் பங்காற்றுகின்றன. பிறந்த குழந்தையின் பச்சை வாசனையுடன் உள்ள வடிவம் சொலவடைதான்.

‘பெத்தவ வயித்தப் பாப்பா.. பெஞ்சாதி மடியைப் பாப்பா’

‘கடுப்பெடுத்த மாமியா துடுப்பெடுத்து வந்தாளாம்’

‘புதுசா வந்த மருமக எரவாணம் எல்லாம் தூத்துத் தெளிச்சாளாம்’ ( எரவாணம் - தாழ்வாரக் கூரை)

- பெண்ணுக்குப் பெண்ணே எதிரி என்ற கருத்தியலை அணைந்துவிடாமல் தலைமுறை தலை முறைக்கும் ஊதி ஊதிக் கனன்றுகொண்டிருக்க உதவும் சொலவடைகள் இவை.

பெண்ணுக்குக் கோபம் இல்லையா?

கிட்டத்தட்ட 3,000 சொலவடைகளை உணர்வுகளின் அடிப்படையில் நாங்கள் பிரித்துப் பார்த்தோம். சோகமான சொலவடைகள், நக்கலான சொலவடைகள், கிண்டலான சொலவடைகள் எனப் பிரித்தோம்.கோபமான சொலவடைகள்தாம் மிக மிகக் குறைவாக இருந்தன. நம் பெண் மக்களுக்குக் கோபமே வரவில்லையா என்ற கேள்வி எழுந்தது.

தங்கள் இருப்பு குறித்த தன்னுணர்வு அவர்களுக்கு இருப்பதை இந்தச் சொலவடைகள் காட்டுகின்றன:

‘குமரின்னு இல்லாம வாக்கப்பட்டுக்கிட்டேன்

மலடுன்னு இல்லாம பிள்ளைப் பெத்துக்கிட்டேன்’

‘செக்கு கண்ட எடத்திலே எண்ணெ தேச்சு

சுக்கு கண்ட எடத்திலே புள்ளப் பெத்துக் கிடக்கேன்’

‘தட்டிப்போட்ட ரொட்டி

பெரட்டிப் போட நாதியில்லே’

- அவ்வளவுதான், அதுக்கு மேலே சொல்ல என்ன இருக்கு என் வாழ்க்கையிலே என்ற கேள்வியும் தோற்ற மனநிலையும் இந்தச் சொலவடைகளுக்குப் பின்னால் ஒளிந்திருக்கின்றன.

‘சோத்துப்பானை உடைஞ்சா மாத்துப்பானை இல்லே

மறைச்சுக் கட்ட மாத்துப்புடவையும் இல்லே’

‘கடுகு இல்லாம கறிதாளிப்பு!

வெங்காயம் இல்லாம வெறுந்தாளிப்பு’

என்று தங்கள் பொருளாதார நிலையைச் சொல்லும்போதும் சோகத்தில்தான் சொற்களை வடிக்கிறார்கள். ஆண் சொல்வதாக வரும் சொலவடையும் கூட,

‘நடக்காத மாட்டோட நான் படுதேன் பாடு

ஈரப் புழுங்கலோட எம் பொண்டாட்டி

என்ன பாடு படுதாளோ?’

என்று அங்கலாய்ப்பாகத்தான் வந்து விழுகிறது.

வாழ்க்கையின் பிரதிபலிப்பு

கணவன் குறித்துப் பெண்கள் சொல்லும் சொலவடைகள் இவ்வாறு செல்கின்றன:

‘என்னிலும் கதி கெட்டவன் என்னைய வந்து மாலையிட்டான்’

‘வாக்கப்பட ஆசை, வளைவி போடப் பேராசை

கொண்டவனைக் காங்(ண்)கையில கொடலைப் பெரட்டுதம்மா’

‘பேய்க்கு வாக்கப்பட்டா பிடுங்கு பட்டுத்தான் சாகணும்’

- வாய்த்த வாழ்க்கையை, ‘தலையில எழுதின எழுத்துக்குத் தாய நொந்து என்ன செய்ய’ என்று தனக்குள் புலம்பி அந்த வாழ்க்கையை விமர்சனமின்றி ஏற்றுக்கொண்டு ‘அடுப்பே வனவாசம் கடுப்பே கைலாசம்’ என நம் பெண்கள் காலம் காலமாக வாழ்ந்துவருகிறார்கள் என்பதைச் சொலவடைகள் உணர்த்துகின்றன.

‘ஏர் பிடிச்சவன் என்ன செய்வான்? எல்லாம் பானை பிடிச்சவ பாக்கியம்’ என்றும் ‘மூதேவி முகங்கழுவப் போனாளாம்! மூணு கிணறும் பாழுங் கெணறாப்போச்சாம்” என்றும் எல்லாக் கேட்டுக்கும் காரணம் பெண்தான் என்ற ஆணாதிக்கக் கருத்தை நிலைநாட்டுபவையாகவும் இவை இருக்கின்றன.

இத்தாலி நாட்டு மார்க்சிய அறிஞர் அந்தோனியோ கிராம்சி, நாட்டுப்புறவியல் குறித்து ஆழமாக யோசித்தவர்.

“நாட்டுப்புறவியல் என்பது வெகுமக்களின் உலகக் கண்ணோட்டத்தை உள்ளுறையாகக் கொண்டுள்ளது. மக்களிடம் புழங்கும் முற்போக்கு மற்றும் பிற்போக்கான கருத்தியல்களின் அருங்காட்சியகமாக அது திகழ்கிறது. நிலவும் ஆதிக்கப் பண்பாட்டுடன் தன்னை வேகமாக இணைத்துக்கொண்டு ஆதிக்கத்துக்கு அனுசரணையான உளவியலைத் தகவமைக்க அது உதவுகிறது” என்றார் அவர். மக்களின் பொதுப்புத்தி எனப்படும் உள்ளுணர்வை வடிவமைக்க அது உதவுகிறது.

கணக்கிலடங்காத வசைச் சொற்கள்

சோகமான வாழ்நிலையை அப்படியே ஏற்கவைக்கும் சொலவடைகள் ஒருபுறம் எனில், தங்கள் வாழ்க்கையை மறந்து தங்களுக்குள் கேலியும் கிண்டலுமாகப் பேசி, இருக்கும் வாழ்க்கையை நகர்த்திக்கொண்டு போகவும் சொலவடைகள் உதவுகின்றன.

‘அடுத்த வீட்டுக் குழம்பை நம்பி ஆறு மரக்கா கம்பு இடிச்சாளாம்’

‘மதுரைக்குத் திருடப் போறவன் மானாமதுரையிலேயே பம்மல் போட்டானாம்’

‘வாழ்றா வாழ்றான்னு மதுரையெல்லாம் பேரு அவ ஆக்கித்திங்கிற பானை அம்பத்திரண்டு ஓட்டை’

‘பட்ட பட்ட பாடெல்லாம் பாய்க்கு அடியிலே போட்டுட்டுச் சம்பா நெல்லுக் குத்திப் பொங்கவைக்கப் போறாளாம்!’

கேட்கச் சிரிப்பாக இருந்தாலும், ‘கொடுமையைச் சிரிச்சுதான் கழிக்கணும்’ என்று அதற்கும் ஒரு சொலவடை சொல்லிச் சிரித்துவிட்டுப் போய்விடுவார்கள். தம் வாழ்வின் மீது விமர்சனம் வைக்க மாட்டார்கள். சொலவடைகளைத் தொகுத்த பேரசிரியர் ச.மாடசாமி, “தமிழ்ச் சொலவடைகளில் இடம்பெற்றுள்ள பெண் வசைச் சொற்கள் கணக்கிலடங்காதவை. அவிசாரி, மூளி, அறுதலி, மூதேவி, முண்டை, மொட்டச்சி, கூத்தியா, தேவடியா, தாசி, நீலி, கள்ளி, சிறுக்கி போன்றவை அவற்றுள் சில” என்று எழுதியிருக்கிறார். கெட்ட வார்த்தைகள் எல்லாமே பெண்ணின் உடல் உறுப்புடனோ தாயுடனோ தமக்கையுடனோ தொடர்புபட்டவையாகவே இருக்கின்றன.

பெண்களை அணிதிரட்டக் களம் புகுவோர் இவற்றையெல்லாம் கணக்கில்கொள்ளாமல் அவர்களின் உளவியலில் மாற்றத்தைக் கொண்டுவர முடியாது.

(தொடர்ந்து பேசித்தான் ஆக வேண்டும்)
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: tamizh53@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்