பசுமை போர்த்திய நிலத்தின் குறுக்கும் நெடுக்குமாக நடந்தபடி சிலர் அளவெடுக்கிறார்கள். கண்ணைப் போல் காத்துவந்த நிலம் கண்ணெதிரில் துண்டாடப்பட இருப்பதை நினைத்து கைலாசம் நிலைகுலைந்து போய், எங்கேயோ வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருக்கிறார். அவருடைய மனைவி அமராவதிதான் பேசுகிறார். “எங்களுக்குத் தெரிஞ்சது விவசாயம் மட்டும்தான். எங்க நிலம் ஏக்கர் 40 லட்சம் ரூபாய்க்கு மேல போகும். ஆனா கவர்மெண்ட்ல ஏக்கருக்கு 8 லட்சம்தான் தருவாங்களாம்.
நாங்க கனவுலகூட விக்க நினைக்காத எங்க பூமிய அவுங்களா வந்தாங்க, அளந்தாங்க… அவுங்களே வெலைய நிர்ணயிச்சிட்டுப் போயிட்டாங்க. 50 வருஷத்துக்கு முன்னாடி நிலத்தை விட்டு வந்தப்பகூட இவ்ளோ வேதனையில்லை. ஆனா, இந்த வயசுக்கு மேல இருக்கிற வீட்டையும் சோறு போடுற நிலத்தையும் விட்டுட்டு எங்க போறதுன்னே தெரியலே” என்று அமராவதி பேசும்போதே அவரது கண்கள் கலங்குகின்றன.
தொடரும் துயரம்
69 வயதான கைலாசம் சேலத்தைச் சேர்ந்தவர். 40 ஆண்டுகளுக்கு முன் சேலத்தில் மத்திய அரசு சார்பில் இரும்பாலை அமைக்கப்பட்டபோது கைலாசம் தனக்குச் சொந்தமான 25 ஏக்கர் நிலத்தை அரசுக்குக் கொடுத்துவிட்டு வெள்ளியம்பட்டிக்குக் குடிபெயர்ந்தார். அப்போது அவருடைய குழந்தைகள் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தார்கள். மனைவி அமராவதியின் துணையோடு விவசாயத்தில் ஈடுபட்டுக் குடும்பத்தைக் காப்பாற்றினார். கைலாசத்துக்கு இணையாக அமரவாதியும் பாடுபட, தரிசு நிலம் செழிப்பான விளைநிலமானது. இப்போது இருக்கும் நிலமும் வீடும் கிணறும் தென்னை மரங்களும் கைலாசமும் அவருடைய மனைவி அமராவதியும் ஓடாய் உழைத்து உருவாக்கியவை. அப்படி உழைப்பால் உருவான நிலம்தான் இன்று சேலம் - சென்னை எட்டுவழிச் சாலைக்கு இரையாக்கப்பட உள்ளது.
முட்டுப்போடும் முட்டுக்கல்
கைலாசத்தின் நிலத்துக்கு அருகே கூப்பிடு தொலைவில் இருக்கிறது முருகேசனின் (62) விளைநிலம். அவருக்குச் சொந்தமான நிலத்தில் முக்கால் ஏக்கர், பசுமைவழிச் சாலைக்காகக் கையகப்படுத்தப்பட உள்ளது. நிலமாகப் பார்த்தால் அவருக்கு இழப்பு குறைவாக இருப்பதுபோலத் தோன்றும். ஆனால், அந்த முக்கால் ஏக்கரில் முருகேசனின் வீடு, அவருடைய இரண்டு மகன்களின் வீடு, மரங்கள் எனச் சகமுலம் பசுமைவழிச் சாலைக்காக மண்ணோடு மண்ணாகப் புதையப்போகின்றன. முருகேசன் குடும்பத்தில் அவருடைய மனைவி, இரண்டு மகன்கள், மருமகள்கள், பேத்தி என அனைவருக்குமே விவசாயம் மட்டுமே தெரியும். குழந்தைகளையும் கால்நடைகளையும் வைத்து எளிமையாக வாழ்ந்துவரும் அவர்களை சுனாமியாகச் சுருட்டிப்போட்டுள்ளது இந்தத் திட்ட அறிவிப்பு. முட்டுக்கல்லைப் போட்டுவிட்டுச் சென்ற விநாடி முதல் அவர்கள் அனைவரும் பிரமை பிடித்தவர்களைப் போல இருக்கிறார்கள்.
பள்ளிகளும் விலக்கல்ல
இவர்களது ஊரை அடுத்துள்ள காட்டூரில் வெங்கடாசலம் என்பவரது நிலத்துக்குள் போலீஸார் புடைசூழ வருவாய்த் துறையினர் நுழைந்தனர். ‘திபுதிபு’வெனத் தங்கள் நிலத்துக்குள் புகுந்த கூட்டத்தை வெங்கடாசலத்தின் மனைவியும் பிள்ளைகளும் மிரட்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தனர். வருவாய்த் துறையினர் வெங்கடாசலத்தின் வீட்டைப் பாதியாக வெட்டுவதுபோல அளவீடு செய்து நிலத்தில் முட்டுக்கல்லை நட்டுவிட்டு, அடுத்த இலக்கை நோக்கிச் சென்றனர். அவர்கள் வந்தார்கள், நிலமும் வீடும் இனி உங்களுக்கு இல்லை என்பதைக் குறிப்பால் உணர்த்திவிட்டுச் சென்றார்கள். செய்வதறியாமல் திகைத்து நிற்பதைத் தவிர வெங்கடாசலம் குடும்பத்தினரால் வேறெதுவும் செய்ய முடியவில்லை.
அதிகாரிகள் அடுத்து ராமலிங்கபுரம் கிராமத்துக்குச் சென்றனர். பத்து ஆண்டுகளுக்கு முன்னர் சேலம்-சென்னை இடையே நான்குவழிச் சாலை அமைக்கப்பட்டபோது உருக்குலைக்கப்பட்ட கிராமத்தில் தற்போது எட்டுவழிச் சாலைக்காக மீண்டும் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்தக் கிராமத்தில் மக்கள் சொந்தச் செலவில் கட்டிய அரசுப் பள்ளி, கோயில் ஆகியவை மொத்தமாகக் கையகப்படுத்தப்படுகின்றன. புதிதாகக் கட்டப்பட இருக்கும் பள்ளிக்குச் செல்ல மாணவர்கள் 4 கி.மீ. தொலைவு நடக்க வேண்டும். ஆனால், அதைப் பற்றியெல்லாம் சிந்திக்கும் நிலையில் யாரும் இல்லை.
பறிபோகும் பொருளாதாரம்
சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகளும் பெண்களும் சேலம்-சென்னை பசுமைவழிச் சாலைத் திட்டம் தங்களின் எதிர்காலத்துக்கு வைக்கப்படும் முற்றுப்புள்ளி என்றே கூறுகின்றனர். விவசாயத்தின் எதிர்காலத்தையும் கிராமப் பெண்களின் பொருளாதாரத்தையும் கணக்கில் கொள்ளாமல் தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் இடங்களில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் உறைந்து போய் கிடக்கின்றனர்.
விவசாயம் சார்ந்த குடும்பங்களின் உயர்வுக்கு முதன்மையாக இருப்பது அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களே. அந்த அளவுக்குப் பெண்களின் உழைப்பு விவசாயத்தில் பெரும்பங்கு வகிக்கிறது. பெண்களே விளைநிலத்தில் பாடுபடுவது, கால்நடைகளைப் பராமரிப்பது என முழுநேரப் பணியாளர்களாக உழைக்கிறார்கள். இதேபோல, கிராமங்களில் நிலமற்ற பெண்களுக்கும் விவசாயம்தான் பொருளாதாரத் திறவுகோல். ஏழைக் குடும்பங்களில் விவசாயக் கூலி வேலைக்குச் செல்லும் பெண்கள்தான் குடும்பத்தைத் தாங்கி நிற்கும் தூண்களாக இருந்துவருகின்றனர். இன்றைக்கும் கிராமங்களில் ஐ.டி. நிறுவனங்களோ அரசு நிறுவனங்களோ வேலைவாய்ப்பு அளிப்பதில்லை. ஆண்கள், பெண்கள், படித்தவர்கள், படிக்காதவர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் வேலைவாய்ப்பு அளித்துவருவது விவசாயம் மட்டுமே.
இந்த நிலையில்தான் விவசாயத்தை முதன்மைத் தொழிலாகக் கொண்ட சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் விவசாயம் சார்ந்த குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்குப் பேரிடியாக வந்து விழுந்துள்ளது சேலம் - சென்னை பசுமைவழிச் சாலை. பொருளாதார வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு பசுமைவழிச் சாலை அமைக்கப்படுகிறது என்று சொல்லப்பட்டாலும், கிராமங்கள், விளைநிலத்தின் வழியாக அமைக்கப்படவுள்ள பசுமைவழிச் சாலை அங்குள்ள பெண்களை உணர்வுரீதியாக நிலைகுலைய வைத்துள்ளது.
யாருக்கு வளர்ச்சி?
பசுமைவழிச் சாலைக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டுவரும் இடங்களில் பெண்கள் கண்ணீர் விட்டுக் கதறுகின்றனர். விளை நிலத்தில் முட்டுக்கல் பதிக்கும் வருவாய்த் துறை அதிகாரிகளைக் கடவுள்போல கருதி, “ஐயா, நாங்க தாயா மதிக்குற எங்க மண்ணை எங்ககிட்ட இருந்து பறிச்சிடாதீங்க. எங்க உயிரும் உதிரமும் இந்த மண்ணில் கலந்திருக்கு” எனக் கைகூப்பி, கதறியழுத பெண்கள் ஏராளம். விளைநிலத்தில் முட்டுக்கல் பதிக்கப்பட்டபோது ஆண்களைவிட அதிகமாகத் துடித்து வேதனையை அனுபவித்தவர்கள் பெண்களே.
கிராம மக்களின் பொருளாதாரம் விவசாயத்தை நம்பியே இருக்கிறது. ஆனால், 7,237 பேரிடம் இருந்து நிலம் கையகப்படுத்த இருக்கிறது. இந்த எண்ணிக்கை நிலத்தின் ஒரு உரிமையாளரை மட்டுமே குறிக்கிறது. ஆனால், உரிமையாளர் மட்டுமே குடும்பமல்லவே. அமராவதியின் குடும்பத்தைப் போல எத்தனையோ குடும்பங்கள் தங்கள் இருப்பிடத்தையும் வேலைவாய்ப்பையும் இழக்கப்போகின்றன. அவர்களது விளைநிலத்தில் கூலி வேலை செய்துவந்த பல ஆயிரம் பேருக்கு இனி வேலையில்லை. பசுமைவழிச் சாலை அமைப்பதால் புதிதாக எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதை அறுதியிட்டுச் சொல்ல முடியாது. ஆனால், நேரடியாக 20 ஆயிரம் பேரும் முறைமுகமாக இன்னும் அதிகமானோரும் வேலைவாய்ப்பை இழக்கப்போவது உறுதி. அவர்கள் வேலைவாய்ப்பை இழப்பது மட்டுமே நம் கண்களுக்குத் தெரிகிறது. அவர்களது கடின உழைப்பால் நமக்குக் கிடைத்துவரும் நெல், கரும்பு, நிலக்கடலை, கேழ்வரகு, மரவள்ளிக் கிழங்கு எனப் பல ஆயிரம் டன் உணவுப் பொருட்கள் இனிக் கிடைக்காது என்பதே நிதர்சனம்.
தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதற்கு எதிராகப் போராடும் பெண்களை அரசு கைதுசெய்கிறது. மக்களின் நலனுக்காகவே சாலை அமைப்பதாகச் சொல்லும் அரசு, மக்களின் அச்சத்தைப் போக்கி அவர்களுக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க வேண்டும். அவர்களுக்கு வேலையையும் வாழ்வாதாரத்தையும் உறுதிசெய்ய வேண்டும். இழப்பீடு வழங்குவதைக் காட்டிலும் கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு ஏற்ற விளைநிலத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும். கண் முன் இருக்கும் பசுமை பரப்பை அழித்துப் பசுமைவழிச் சாலை அமைப்பதா என்ற கேள்வியை எளிதில் புறந்தள்ளிவிட முடியாது. காரணம் ஆயிரக்கணக்கான மரங்களின் வேரறுத்து, மக்களின் வாழ்வாதாரத்தின் மேலேதான் அந்தச் சாலை அமையப்போகிறது.
படங்கள்: எஸ்.குருபிரசாத்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
18 mins ago
சிறப்புப் பக்கம்
59 mins ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago