ம
ணிப்பூர் மாநிலத்திலிருந்து ஏராளமானோர் விளையாட்டுத் துறையில் உச்சம் தொட்டிருக்கிறார்கள். 1980-களில் நூற்றுக்கணக்கான இளம் வீரர்களும் வீராங்கனைகளும் மணிப்பூரிலிருந்து தேசிய அளவிலான விளையாட்டுகளில் காலடி எடுத்துவைத்தனர். அவர்களில் சர்வதேச அளவில் தனது வெற்றிக்கொடியை உயரப் பறக்கவிட்டவர் குஞ்சராணி தேவி.
பளு தூக்குதலில் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் ஆதிக்கம் செலுத்திய இவர், பளு தூக்குதலில் இந்தியாவின் முகமாக நீண்ட காலம் ஜொலித்தவர்.
வித்திட்ட விளையாட்டு
இம்பாலில் பிறந்த குஞ்சராணி தேவிக்குச் சிறு வயதிலிருந்தே விளையாட்டு மீது ஆர்வம். கால்பந்து, தடகளம் போன்றவை பிடித்தமானவை. நேரம் கிடைக்கும்போது, அருகில் உள்ள மையங்களுக்குச் சென்று பளு தூக்குவதை விளையாட்டாகச் செய்துவந்தார். பல விளையாட்டுகளில் ஈடுபட்டிருந்த குஞ்சராணிக்குத் திடீரெனப் பளு தூக்குதலில் ஈர்ப்பு அதிகமானது. ஒரு கட்டத்தில் பிற விளையாட்டுகளை ஒதுக்கிவைத்துவிட்டு, பளு தூக்குதலில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
குஞ்சராணி பளு தூக்கி விளையாடியது வீண் போகவில்லை. பள்ளி வாழ்க்கையை முடிப்பதற்கு முன்பே மணிப்பூரில் புகழ்பெறும் அளவுக்குப் பளு தூக்குதலில் முன்னேறியிருந்தார். குஞ்சராணிக்கு 17 வயதானபோது 1985-ல் தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டியில் களமிறங்கும் வாய்ப்புக் கிடைத்தது. முதல் போட்டியிலேயே பதக்கங்களை அள்ளினார். 44 கிலோ, 46 கிலோ, 48 கிலோ எடைப் பிரிவுகளில் பங்கேற்று இரண்டு பதக்கங்களைக் கைப்பற்றினார்.
அழுத்தமான சாதனை
கல்லூரிப் படிப்புக்குப் பிறகு அவரது பளு தூக்கும் பயணம் புதிய பாதையில் விரிந்தது. அந்தக் காலகட்டத்தில் அவர் பங்கேற்ற பெரும்பாலான பளு தூக்கும் போட்டிகளில் தங்கப் பதக்கங்களைத் தன்வசமாக்கினார். 1987-ல் திருவனந்தபுரத்தில் நடந்த தேசிய பளு தூக்கும் போட்டியில் அதிகபட்ச எடையைத் தூக்கி புதிய தேசிய சாதனையைப் படைத்தார். தேசிய அளவில் அவர் நிகழ்த்திய சாதனைகளும் பெற்ற பதக்கங்களும் சர்வதேசப் போட்டியில் அவர் பங்கேற்க உறுதுணையாயின. முதன்முறையாக 1989-ல் இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற உலக மகளிர் பளு தூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் குஞ்சராணி பங்கேற்றார். இந்தத் தொடரில் மூன்று விதமான எடைப் பிரிவுகளில் பங்கேற்றவர் மூன்றிலுமே வெள்ளிப் பதக்கங்களை வென்று முதல் முறையிலேயே அசத்தினார்.
இதன் பிறகு 1993-ம் ஆண்டைத் தவிர தொடர்ச்சியாக ஏழு முறை உலக மகளிர் பளு தூக்கும் போட்டியில் குஞ்சராணி பங்கேற்றிருக்கிறார். இந்தத் தொடர்களில் பதக்கம் பெறாமல் அவர் நாடு திரும்பியதே இல்லை. ஆனால், எல்லாப் போட்டிகளிலும் அவர் வெள்ளிப் பதக்கங்களை மட்டுமே வெல்ல முடிந்தது. தங்கம் வெல்லாவிட்டாலும் அவர் தொடர்ச்சியாகப் பெற்ற வெள்ளிப் பதக்கங்கள் அவரது பளு தூக்கும் பயணத்தில் முக்கிய மைல்கற்களாக அமைந்தன.
சர்வதேச வெற்றி
உலகப் பளு தூக்கும் போட்டிகள் மட்டுமல்ல; ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் அவர் வெண்கலப் பதக்கங்களோடு திருப்தியடைய வேண்டியிருந்தது. 1990 (பெய்ஜிங்), 1994 (ஹிரோஷிமா) ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலம் வென்ற குஞ்சராணி, 1998-ல் பதக்கம் வெல்லாமல் வெறுங்கையோடு திரும்பினார். ஆசிய விளையாட்டுப் போட்டி ஏமாற்றினாலும் ஆசிய பளு தூக்கும் சாம்பியன்ஷிப் போட்டி அவரை ஏமாற்றவில்லை. 1989-ல் (ஷாங்காய்) ஒரு வெள்ளி, இரண்டு வெண்கலப் பதக்கங்களையும் 1991-ல் (இந்தோனேசியா) மூன்று வெள்ளிப் பதக்கங்களையும் குஞ்சராணி வென்றார். 1995-ல் (தென் கொரியா) 46 கிலோ எடைப் பிரிவில் இரண்டு தங்கங்களை வென்ற அவர், ஒரு வெண்கலப் பதக்கத்தையும் வென்று அசத்தினார். 1996-ல் (ஜப்பான்) இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலப் பதங்கங்களை வென்று ஆசிய அளவில் தன் பலத்தை நிரூபித்தார்.
விளையாடத் தடை
1990-களின் இறுதிவரை பளு தூக்கும் போட்டிகளில் ஜொலித்துவந்த குஞ்சராணிக்குப் புத்தாயிரம் ஆண்டு திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்த்த வேளையில் அவரது பளு தூக்கும் வாழ்க்கையில் சறுக்கலாக ஒரு நிகழ்வு நடந்தேறியது. 2001-ல் தென் கொரியாவில் நடைபெற்ற சீனியர் ஆசிய பளு தூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் 48 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்றுத் தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.
ஆனால், அந்தத் தொடரின்போது அவருக்கு நடத்தப்பட்ட ஊக்க மருந்து பரிசோதனையில், தடைசெய்யப்பட்ட அனபாலிக் ஸ்டீராய்டை அவர் பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து அவர் வென்ற பதக்கம் பறிக்கப்பட்டது. பளு தூக்கும் போட்டியில் அவர் பங்கேற்க சர்வதேசப் பளு தூக்கும் கூட்டமைப்பு ஆறு மாதங்களுக்குத் தடைவிதித்தது. பளு தூக்குதலில் இந்தியாவுக்குத் தொடர்ச்சியாகப் பெருமை தேடித்தந்த குஞ்சராணியின் வாழ்க்கையில் இது ஒரு கரும்புள்ளி.
15CHDKN_KUNJARANI_NAMECRAKPAMநிறைவேறாத கனவு
ஆனால், அந்தத் தடை அவரைப் பளு தூக்குதலில் இருந்து தனிமைப்படுத்திவிடவில்லை. தடை நீங்கிய பிறகு மீண்டும் களமிறங்கியவர், தேசிய அளவில் முன்னைப் போலவே ஜொலித்தார். 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்று ஐந்தாம் இடத்தைப் பிடித்துப் பதக்கம் வெல்லும் வாய்ப்பைக் கோட்டைவிட்டார். ஆனால், ஒலிம்பிக்கில் அவர் விட்ட வாய்ப்பை இரண்டு ஆண்டுகள் கழித்து காமன்வெல்த் போட்டியில் சரியாகப் பயன்படுத்திக்கொண்டார்.
2006-ல் மெல்போர்னில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் 48 கிலோ எடைப் பிரிவில் ஒட்டுமொத்தமாக 166 கிலோ பளுவைத் தூக்கிப் புதிய உலக சாதனையைப் படைத்தார். அந்தப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று தனது ஃபார்மை நிரூபித்தார்.
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பது அவரது லட்சியமாக இருந்தது. சர்வதேச அளவில் 50-க்கும் மேற்பட்ட பதக்கங்களை குஞ்சராணி வென்றிருந்தாலும் ஒலிம்பிக் பதக்கத்தை மட்டும் அவரால் வெல்ல முடியவில்லை. பதின் பருவத்தில் தொடங்கிய அவரது விளையாட்டுப் பயணம் 43 வயதில் முடிவுக்கு வந்தது. பளு தூக்குதலில் சிறப்பாகச் செயல்பட்ட குஞ்சராணி தேவிக்கு 1990-ல் அர்ஜுனா விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது. 1996-ல் ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதும் வழங்கப்பட்டது. அதே ஆண்டில் கே.கே. பிர்லா ஸ்போர்ட்ஸ் விருதும் 2011-ல் பத்மஸ்ரீ விருதும் பெற்றார்.
தற்போது குஞ்சராணி தேவி மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கமாண்டர் ரேங்கில் பணிபுரிந்துவருகிறார். அவ்வப்போது இந்திய மகளிர் பளு தூக்கும் அணியின் பயிற்சியாளாராகவும் பணியாற்றிவருகிறார்.
(வருவார்கள் வெல்வார்கள்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: karthikeyan.di@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago