பெண்களுக்கான 33 சதவீத அரசியல் பிரதிநிதித்துவம் குறித்துப் பல ஆண்டுகளாகக் கேட்டுக்கொண்டே இருக்கிறோம். ஆனால், இந்தச் சட்ட வரைவு இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இந்த விஷயத்தில் மட்டும் அரசியல் கட்சிகள் ஒரே நிலைப்பாட்டில் இருக்கின்றன. நாட்டின் நலத் திட்டங்களில் பெண்களுக்குப் பிரநிதித்துவம் கிடைக்க அவர்களின் அரசியல் பிரதிநிதித்துவம் அவசியம். இந்தப் பின்னணியில் பெண்களின் அரசியல் பிரவேசம் முக்கியத்துவம் வாய்ந்தது. அப்படிப்பட்ட அரசியல் பிரவேசத்தின் சாட்சிதான் எழுத்தாளர் இந்திரா.
தனது அரசியல் பிரவேசத்தை ‘நீர் பிறக்கும் முன்’ என்ற தன்னனுபவப் பகிர்வின் மூலம் வெளிக்கொணர்ந்தார் இந்திரா. அவர், ‘சித்திரக் கூடு’ என்ற நாவலும் ‘ஒற்றை வாசனை’ என்ற சிறுகதைத் தொகுப்பும் எழுதியிருக்கிறார்.
இந்திரா இந்த மூன்று நூல்களிலும் ஒரு பொதுவான உரைநடையையும் வட்டார வழக்கையும் தனது விவரிப்பு மொழியாகக் கொண்டுள்ளார். இடையிடையே ஒரு சூழலையும் காதலையும் சொல்லக் கவித்துவ விவரிப்பைப் பயன்படுத்திப் பார்க்கிறார். இந்திராவின் இந்த மொழியின் பலம் அதன் அபரிமிதமான எள்ளல் தொனி. அது வாசகர்களை வாய்விட்டுச் சிரிக்கவைக்கிறது.
பகடி மொழி
ஒன்றிய கவுன்சிலர்களின் வாக்குகளின் அடிப்படையில் சேர்மன் தேர்ந்தெடுக்கப்படுவார். அதனால் குதிரை பேரம் நடக்கிறது. இந்திராவும் கவுன்சிலராக வெற்றிபெற்றவர். அவரிடம் நடந்த பேரம் பற்றி இப்படிச் சொல்கிறார், ‘வாழ்வின் தத்துவங்களையும் பணத்தின் அருமை பெருமைகளையும் போதிப்பதில் அவர்கள் திருவள்ளுவரையும் மிஞ்சியிருந்தார்கள்’.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு நடந்த முதல் கவுன்சிலர் கூட்டத்தில், மக்களின் பிரச்சினைகளைப் பேசுவதற்குப் பதிலாக எதிர்க்கட்சித் தலைவரின் ஒளிப்படம் மன்றத்தில் இல்லாததற்கு நடந்த வாக்குவாதத்தை அரசியல் பகடியுடன் விவரித்துள்ளார். கவுன்சிலர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தலைவர் படத்தை முன்மொழிகிறார்கள். சட்டமன்றத்தைக் கற்பனைசெய்து வந்த இந்திராவுக்கு அவர்களது பொறுப்பற்ற விவாதம் ஏமாற்றமாக இருந்திருக்கிறது.
“ஒருத்தருக்காவது காந்தி பேரைச் சொல்லணும்னு தோணலியா?” என்ற ஒரு கேள்வியை அந்தக் கூட்டத்தில் தூக்கிப்போடுகிறார் கவுன்சிலர் ஒருவர். எல்லோருக்கும் குற்றவுணர்வு. இந்திரா சொல்கிறார், ‘காந்திகூட அந்த இடத்தில் இருந்திருந்தால் புல்லரித்துப் போயிருப்பார்’ என்று.
பொதுவாகத் தன்னனுபவப் பதிவுகளில் தென்படும் கழிவிரக்கம் இவரது மொழியில் இல்லை. மூன்றாவது நபரைப் போல் தன்னையும் கேலிக்குள்ளாக்குகிறார். பலவீனங்களை விமர்சிக்கிறார். ‘உலகில் கஷ்டம் என்பதே இல்லாமல் எல்லோரும் என்னைப் போல் சந்தோஷமாக இருப்பதாகவே நம்பிக்கொண்டிருந்தேன்’ என்கிறார். பிறகு அது எவ்வளவு வெட்கக்கேடான விஷயம் என விமர்சித்துக்கொள்கிறார்.
கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ எம்ஜிஆராகத் தன்னைக் கற்பனை செய்துகொண்டதாகத் தன்னையே அடிக்கடி பரிகசித்துக்கொள்கிறார். அசோகமித்திரனின் சுயஎள்ளலுடன் ஒப்பிடத்தகுந்த ஓர் அம்சம் இந்த நூல் முழுவதும் விரவிக்கிடக்கிறது. தலித் குடியிருப்புக்குத் தண்ணீர் தருவதற்காகத் தரப்படும் வாக்குறுதிகளை வெகுளியாக நம்பியதை நூலில் கேலியாக்குகிறார்.
ஜனநாயகத்தின் இடம்
இந்த அனுபவத்தை மூன்று விதமாகப் பிரித்துப் பார்க்கலாம். அரசியலில் ஈடுபட விரும்பும் பெண்ணுக்கு ஏற்படும் பிரச்சினைகள் என்ற வகையில் அணுகலாம். இன்னொன்று தேர்தல் ஜனநாயகத்தின் பலவீனங்கள். இறுதியாகத் தலித்துகளுக்கு எதிரான ஆதிக்க சாதியின் மூர்க்கம்.
இந்த மூன்று அம்சங்களைக் கொண்டே இந்த நூல் எழுதப்பட்டுள்ளதாகச் சொல்லலாம். முதலில் பெண்ணாகத் தேர்தலில் ஈடுபட முடிவெடுத்ததையும் அதைச் சுற்றத்தார் எதிர்கொண்டதையும் சொல்லிச் செல்கிறார். ஒருவழியாக எல்லோரும் சம்மதித்த பிறகு ஒரு தேர்தலுக்கு என்ன செலவாகும் எனக் கணக்கிடுகிறார்கள்.
வாக்குக்கு விலை நிர்ணயிக்கிறார்கள். ஜனநாயகம் காஸ்ட்லியாகிவிட்டதைச் சொல்லிச் செல்கிறார். காசில்லாமல் ஏன் வாக்களிக்க வேண்டும் என ஒரு மூத்த மனுஷி கேட்பதை ஜனநாயகம் எங்கே வந்துசேர்ந்திருக்கிறது என்பதற்கான ஆதாரமாக இந்திரா இந்த நூலில் முன்வைக்கிறார்.
நடுநிலைப் பள்ளி ஒன்றின் வகுப்பறையைப் போன்ற ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்ட அறை எப்படி மிக்சர், டீ சாப்பிடுவதற்குமான இடமாக மாறுகிறது என்பதைச் சிறிது சிறிதாக விவரிக்கிறார். சேர்மன், தங்களுக்கு கமிஷன் தரவில்லை என்பதை கவுன்சிலர்கள் கூட்டத்தில் வெளிப்படையாகச் சொல்லும் அளவுக்குத்தான் நமது ஜனநாயகம் இருக்கிறது என்பதை அம்பலப்படுத்துகிறார். பிற்பாதியில் தலித்துகளுக்கான தண்ணீர்த் திட்டத்தைத் தனது அணியின் சேர்மனே எதிர்ப்பதைக் கண்டு விசனப்படுகிறார். ஆனால், அவரையும் எதிர்த்து அரசியல் பழகுகிறார் இந்திரா.
சுமையாகிப்போன அடையாளம்
‘கவுரமான குடும்பத்துப் பெண்’ என்ற அடையாளத்துடன் அரசியலில் நுழைந்த இந்திராவுக்கு அந்த அடையாளம் எப்படி மிகப் பெரிய சுமையாகிப்போனது என்பதைச் சம்பவங்களால் விளக்கியுள்ளார். இந்த அடையாளத்தால் தேர்தலில் போட்டியிடவே அவரது உறவுகளிடமிருந்தே எதிர்ப்பு வந்துள்ளது. ‘இதுக்குத்தேம் பொட்டப் புள்ளைகள நெறையப் படிக்க வெக்கப்படாதுங்கறது. நல்லா சோறு கொளம்பு ஆக்கப் பழக்கி சமஞ்சதும் ஒருத்தங் கைல புடிச்சுக் குடுத்திருந்தா இப்ப ஒரு பிரச்சினையும் இருக்காதுல்ல’ என்றிருக்கிறார்கள்.
இந்திராவின் வெற்றிக்காக அவரது சொந்த பந்தங்கள் கூடி வேலை பார்த்துள்ளனர். ஆனால், ஏதோ பெண் பிள்ளையின் விளையாட்டுத்தனமான விருப்பம் என்றே அவர்கள் அந்தத் தேர்தலைக் கருதியிருக்கிறார்கள். அவர்களை எதிர்த்துத் தலித் குடியிருப்புகளுக்கான தண்ணீருக்காகப் போராடும்போது அவர்கள் பகைவர்கள் ஆகியுள்ளனர். பெண்ணைப் பலவீனப்படுத்த அவளை வேசி என்று அழைப்பதே போதுமானது. அதுவரை அது போன்ற வார்த்தைகளைச் சந்திக்காத இந்திராவை அது முடக்கியுள்ளது. பொது அரசியலில் ஈடுபடும் பெண்களைக் குறித்தான இந்தக் கதைகளால் அரசியலில் இருந்து காணாமல்போன பெண்களைப் பற்றியும் இந்திரா இந்த இடத்தில் குறிப்பிடுகிறார்.
ஆனால், இந்திரா மீண்டு வருகிறார். அவருடைய அம்மாவும் மயிலாத்தாவும் அதைச் சாத்தியப்படுத்தியுள்ளனர். பெண் என்ற அடிப்படையில் அவரது கருத்துகள் மதிக்கப்படாமல் இருந்திருக்கின்றன. தனது மக்களுக்கான கோரிக்கையுடன் செல்லும்போதெல்லாம் அதிகாரிகளும் அரசியல் பிரநிதிகளும் குழந்தைகளைச் சமாதானப்படுத்துவதுபோல் ‘சீக்கிரம் முடிச்சிரலாம்’ எனச் சொல்லி அனுப்பியுள்ளனர். அந்த வாக்குறுதிகளையெல்லாம் நம்பவும் செய்துள்ளார் இந்திரா. உண்ணாவிரதம் என்ற போராட்டத்தைக் கையிலெடுத்த பிறகுதான், தலித் குடியிருப்புக்கான தண்ணீர் பைப் லைனுக்கான கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
ஆனாலும் ஒப்பந்தம் எடுக்க யாரும் முன்வரவில்லை. ஒப்பந்தம் எடுத்து வேலையைத் தொடர்ந்தால் ஊழியர்கள் தாக்கப்பட்டுள்ளனர். போலீஸ் வழக்கம்போல் புகார் வாங்க மறுத்துள்ளனர். மதுரையில் கவுன்சிலர் லீலாவதி இதே போன்ற ஒரு போராட்டத்தில் கொல்லப்பட்ட அதே காலகட்டத்தில்தான் ஜோதிமணி என்ற இந்திராவும் கரூர் அருகே காளிப்பாளையத்தில் காவல் நிலையம் முன்பு தனி மனுஷியாக உண்ணாவிரதம் இருந்துள்ளார் என்பது பதற்றம் தருகிறது.
மிகச் சிறிய வயதில் ஒரு பெண்ணாக ஜனநாயகத் தேர்தலில் போட்டியிட முடிவெடுத்ததிலிருந்து கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது வரையிலான தனது அனுபவத்தை இந்திரா இதில் பகிர்ந்துள்ளார். கவுன்சிலராக்கப்பட்ட பிறகு எதிர்கொண்ட பிரச்சினைகளையும் உறவினர்கள் பகைவர்களான கதையையும் சொல்கிறார். வெகுளிப் பெண்ணிலிருந்து தான் அடைந்துவந்த மாற்றத்தை, குத்துச் செடியிலிருந்த மரம், நிழல் தருமளவு உறுதியுடன் கிளை பரப்பியதைப் போன்று விவரித்திருக்கிறார். மரத்தைப் போல் கல்லடிகளையும் வாங்கியுள்ளார். இந்திராவின் இந்த நூல் பொது வாழ்வில் ஈடுபடவிருக்கும் பெண்களுக்கு நல்ல முன்னுதாரணம்.
(பாதைகள் நீளும்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: jeyakumar.r@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago