ஒருபக்கம் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், அடுத்த பக்கம் அவை எதுவுமே நடவடிக்கை எடுக்கப்படாமல் குற்றவாளிகளுக்குச் சாதகமாக இருக்கக்கூடிய நிலைமை. இதைத்தான் நாம் இவ்வளவு காலம் பேசிவந்திருக்கிறோம். ஆனால், இப்போது நிலைமை மாறியிருக்கிறது. சமீபத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தன்னைக் காதலிக்க மறுத்த 15 வயது சிறுமியை ஒருவன் நேரிலும் தொலைபேசியிலும் மிரட்டுகிறான். உடனே அவன் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டு அடுத்த நாளே கைதாகிறான்.
ஆனால், நம் நாட்டில்தான் அருணா ஷான்பாக் நியாயமே கிடைக்காமல் 41 வருடங்களாகக் கிட்டத்தட்ட ஒரு ஜடத்தைப் போல இருந்திருக்கிறார். அவரைக் கருணைக் கொலை செய்யச் சொல்லி அவருடைய நலம் விரும்பி பிங்கி விரானி என்னும் பத்திரிகையாளர் நீதிமன்றத்தில் மனு கொடுத்தும் அது நிராகரிக்கப்பட்டது. அருகில் போய் பேசினால் மட்டுமே கண்ணீர் வழியும் கன்னங்களுடன் அருணா எத்தனையோ வருடங்கள் உணர்வற்ற நிலையில் படுக்கையில் இருந்து இறந்துபோனார்.
பாராட்டுக்குரிய சட்டத் திருத்தம்: இப்படித்தான் நம் நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைச் சட்டமும் காவல்துறையும் கையாண்டு இருக்கின்றன. பெரும்பாலும் பெண்களைக் குற்றம்சாட்டித்தான் சமூக வலைதளங்களில் விவாதங்கள் நடைபெறும். இதுபோல் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுவது என்பது ஆச்சரியமானது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் காவல் நிலையத்துக்கு உள்பட்ட வளாகத்தில் முப்பது வயதுக்கு உள்பட்ட பெண்ணை ஒருவன் பாலியல் வன்முறைக்கு ஆளாக்க சைகைகள் காட்டியதற்காகக் கைது செய்யப்பட்டிருக்கிறான்.
அது மட்டுமல்ல, ஓராண்டுக்குப் பாதுகாப்புச் சட்டத்தின்படி எந்த விதத்திலும் அவன் மேற்கொண்டு, அப்பெண்ணை அணுக தடைபோடப்பட்டு மீறினால் மறுபடி கைது செய்யப்படுவான் என எச்சரிக்கப்பட்டுள்ளது. காரணம், சட்டத்தில் தமிழக அரசு கொண்டுவந்திருக்கும் மாற்றங்கள்!
1998இல் கொண்டுவரப்பட்ட பெண்களுக்கு எதிரான வன்முறை தடுப்புச் சட்டத்தில் மாற்றங்கள் செய்து, பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்திருக்கிறது தமிழக அரசு. இந்தப் பாதுகாப்பு இணையம் மூலமாகப் பெண்களை அணுகுவதையும் அழுத்தம் கொடுப்பதையும் உள்ளடக்கியது.
தற்போதைய பெண்கள் பாதுகாப்புச் சட்டத்தின் 7சி பிரிவுபடி இச்சட்டத்தின் 4ஆவது சட்டப்பிரிவை முன்வைத்தோ, பாரதிய நியாய சன்ஹிதா, 2023 (மத்தியச் சட்டம்) சட்டப் பிரிவுகள் 74,75,76,77,78,79 ஆகியவற்றை முன்வைத்தோ ஒரு பாதுகாப்பு ஆணையின் மூலம் அப்பெண்ணை அணுகவோ தொல்லை கொடுக் கவோ விடாமல் தடுக்கலாம். மீறும்பட்சத்தில் மூன்று வருடச் சிறைத் தண்டனையும் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.
விவாதம் அவசியம்: இந்தச் சட்டம் அமலுக்கு வந்திருப்பது பெரும்பாலான மக்களிடம் பரவலாகக் கொண்டு செல்லப்படவில்லை. தமிழக அரசு இதை முன்னெடுத்து செய்தது பாராட்டுக்குரியது. இந்தியாவில் முதன் முறையாக இந்தச் சட்டம் திருத்தப்பட்டு, அமலுக்கு வந்து பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளது.
குடும்பச் சூழலிலும் பெண்களுக்கு இத்தகைய பாலியல் அழுத்தங்கள் இருப்பதை நாம் கவனித்தே ஆக வேண்டும். இரண்டு வாரங்களுக்கு முன் தன் கணவனுக்கு உணவு சமைத்து வைத்திருப்பதாகவும் அதைச் சாப்பிடச் சொல்லியும் குறிப்பு எழுதிவைத்துவிட்டு இறந்து போன ஆசிரியரைப் பற்றி நாம் அவ்வளவு அக்கறைப்படவில்லை.
எவ்வளவு மன அழுத்தத்துக்கு உள்ளாகி இருந்தால் அவர் அப்படிப்பட்ட ஒரு முடிவைத் தேர்ந்தெடுத்திருப்பார் என்று நாம் யோசிக்க வேண்டும் - உரையாட வேண்டும் - விவாதிக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் தற்கொலை செய்துகொள்வது முட்டாள்தனம் என்று தத்துவரீதியான தர்க்கங்களை முன்வைத்து அதைக் கடந்து சென்றுவிடுவதால் பெண்களின் துயர்களுக்கும் ரணங்களுக்கும் விடை கிடைக்காமல் போய்விடும்.
(உரையாடுவோம்)
- dhamayanthihfm@gmail.com