ஆடும் களம் 13: தீபா என்றால் தன்னம்பிக்கை

By டி. கார்த்திக்

அப்போது அந்தப் பெண்ணுக்கு  28 வயது. இனி, தன் வாழ்க்கை சக்கர நாற்காலியில் முடங்கிவிடும் என அவர் நினைத்திருக்க மாட்டார். ஆனால், அது நடந்தது.

முதுகு தண்டுவடத்தில் ஏற்பட்ட கட்டியை அகற்றுவதற்காக அவருக்கு மேற்கொள்ளப்பட அறுவை சிகிச்சைக்குப் பிறகு இடுப்புப் பகுதிக்குக் கீழே உறுப்புகள் செயலிழந்தன. அதைச் சரிசெய்ய மூன்று அறுவை சிகிச்சைகள், 183 தையல்கள் என அவரது உடல் ரணப்பட்டது.

வாழ்க்கையை மாற்றிய விபத்து

இத்தனை சிகிச்சைக்குப் பிறகும் அவரால் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியவில்லை. சக்கர நாற்காலியே கதியானது. இந்தத் திடீர் முடக்கம் அவரது தன்னம்பிக்கையை முடக்கவில்லை. தனக்குப் பிடித்த விளையாட்டுகளில் ஈடுபட ஆரம்பித்தார். கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி, இன்று சர்வதேச அளவில் இந்தியாவின் புகழை அவர் உயரப் பறக்கவிட்டிருக்கிறார். பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற சிறப்பைப் பெற்ற தீபா மாலிக்தான் அந்தச் சாதனைக்குச் சொந்தக்காரர்.

ஹரியாணாவைச் சேர்ந்த தீபா மாலிக், திட்டமிட்டு விளையாட்டு வீராங்கனையானவர் அல்ல. உடலில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்குப் பிறகு ஓரிடத்திலேயே முடங்கிப் போய்விடாமல் இருப்பதற்காகத் தனக்குள் இருந்த திறமைகளை வெளிக்கொண்டு வரவே விளையாட்டு வீராங்கனையானார்.

தீபா மாலிக், ராணுவ வீரர் விக்ராம் சிங் மாலிக்கை மணந்துகொண்டு இரண்டு குழந்தைகளுடன் நிம்மதியாக வாழ்ந்துவந்தவர்தான். 1999-ல் அவருக்கு உடலில் பிரச்சினை ஏற்பட்டது. முதுகு தண்டுவடக் கட்டியால் அவர் அவதிப்பட்டபோது, அவருடைய கணவர் கார்கில் போரில் ஈடுபட்டிருந்தார். மகளும் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். அந்தக் கடுமையான தருணங்களிலிருந்து மீண்டுதான்  இன்று விளையாட்டில் முத்திரை பதித்திருக்கிறார் தீபா மாலிக்.

36 வயதினிலே

உடல்ரீதியாகப் பாதிக்கப்படுவதற்கு முன்பே நீச்சல், தடகளம், சவால் நிறைந்த பயணம் போன்றவற்றில் தீபா ஈடுபட்டிருந்தார். இவற்றையெல்லாம் குடும்ப வாழ்க்கை கட்டிப்போட்டிருந்தாலும் சக்கர நாற்காலி வாழ்க்கை அவரது மனத்தைப் பெரிய அளவில் பாதித்தது. அதிலிருந்து மீண்டுவர தீபா விரும்பினார். தனக்குப் பிடித்த நீச்சல், தடகளம், சாகச கார் பயணம் போன்றவற்றில் ஈடுபட முடிவுசெய்தார். அதற்கு அவருடைய கணவரும் துணை நின்றார். பாரா விளையாட்டுகளில் ஈடுபடத் தொடங்கியபோது அவருக்கு 36 வயது.  பொதுவாக, விளையாட்டு வீராங்கனைகள் ஓய்வை அறிவிக்கும் வயதில்தான் தீபா விளையாட்டில் காலடி எடுத்துவைத்தார்.

deepajpg

வரலாற்றுச் சாதனை

தன் திறமையை நிரூபிக்க வயதைப் பொருட்படுத்தாமல் மாவட்ட, மாநில அள விலான போட்டிகளில் ஈடுபடத் தொடங்கினார். குண்டெறிதல், ஈட்டி எறிதல், வட்டெறிதல் ஆகியவற்றில் தேசிய அளவில் விளையாடினார். தேசிய அளவில் செய்த சாதனைகள்  அவரை, சர்வதேசப் போட்டிகளுக்குச் அழைத்துச் சென்றன. 2011-ல் நியூசிலாந்தில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டியில் முதன்முறையாகப் பங்கேற்றார். குண்டெறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் பிரேசில் தலைநகர் ரியோடி ஜெனிரோவில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டி அவரது திறமையை வெளிச்சம் போட்டுக்காட்டியது. குண்டெறிதல் எப்.53 பிரிவில் பங்கேற்ற தீபா, பஹ்ரைன், கிரீஸ் வீராங்கனைகளுக்குக் கடும் நெருக்கடி கொடுத்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன் மூலம், பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற வரலாற்றுச் சாதனையையும் அவர் நிகழ்த்தினார்.

2011-12-ம் ஆண்டில் உலகத் தரவரிசைப் பட்டியலில் குண்டெறிதலில் இரண்டாம் இடத்தையும் ஈட்டி எறிதல், வட்டெறிதலில் மூன்றாம் இடத்தையும் பிடித்து அசத்தினார். அதே ஆண்டில், ஆசிய தரவரிசைப் பட்டியலில் குண்டெறிதல், வட்டெறிதல், ஈட்டி எறிதல் மூன்றிலுமே முதல் இடத்தைப் பிடித்து அவர் சாதனை படைத்தார். வட்டெறிதல், குண்டெறிதல், ஈட்டி எறிதல் என மூன்று வகையான போட்டிகளில் ஈடுபட்டுத் தேசிய அளவில் 45 தங்கம், 5 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களை தீபா வென்றிருக்கிறார். இதே போட்டிப் பிரிவுகளில் சர்வதேச அளவில் 13 பதக்கங்களையும் குவித்துள்ளார்.

புதிய பாதையில் பயணம்

தீபா மாலிக், மோட்டார் பைக் பிரியை. இந்தியா முழுவதும் பைக்கில் சுற்றிவருபவர். கார் பந்தயத்திலும் ஆர்வம்கொண்டவர். மாற்றுத்திறனாளியாக இருந்தபோதும் ஹிமாலயன் மோட்டார் ரேஸில் இவர் பங்கேற்றிருக்கிறார்.

இந்தியாவிலேயே மிகவும் ஆபத்து நிறைந்த பயணம் இது. பாலைவனம் தொடங்கி இமயமலைவரை சுமார் 1,700 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட, சவால்களும் ஆபத்தும் நிறைந்த பந்தயம் இது. கடல் மட்டத்திலிருந்து 1,800 அடி உயரத்திலும் கார் ஓட்டக்கூடிய பாதை இது. இந்த கார் பந்தயத்திலும் தீபா கலந்துகொண்டு சாதனை படைத்திருக்கிறார். இவருக்கென பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட கார்களில்தான் பங்கேற்கிறார்.

மோட்டார் பிரியையான இவர் ‘ஃபெடரேஷன் ஆஃப் மோட்டார் ஸ்போர்ட்ஸ்’ இந்தியா அமைப்பிடமிருந்து சிறப்பு லைசென்ஸ் பெற்ற முதல் மாற்றுத் திறனாளி வீராங்கனையும்கூட.  2008-ல் யமுனை ஆற்றில் எதிர் நீரோட்டத்தில் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு நீச்சலடித்து லிம்கா சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்றார்.

இது போல  நான்கு முறை லிம்கா சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். 2011-ல் இந்தியாவின் உயரமான ஒன்பது இடங்களை ஒன்பது நாட்களில் கடந்த முதல் மாற்றுத் திறனாளிப் பெண் என்ற சாதனையையும் இவர் படைத்திருக்கிறார். 2013-ல் அதிகத் தொலைவு பயணம் செய்த மாற்றுத் திறனாளிப் பெண் (சென்னை - டெல்லி 3,278 கி.மீ.) என்ற சாதனைக்கும் இவர் சொந்தக்காரர்.

2012-ல் மத்திய அரசு தீபா மாலிக்குக்கு அர்ஜுனா விருது வழங்கிக் கவுரவித்தது. இந்த விருதைப் பெற்ற முதல் மாற்றுத் திறனாளி வீராங்கனையும் இவர்தான். 2017-ல் பத்ம விருதையும் இவர் பெற்றார். தற்போது 47 வயதாகும் தீபா மாலிக் அடுத்தடுத்த பாரா போட்டிகளில் களமிறங்கிப் பதக்கங்கள் வெல்ல உழைத்துக்கொண்டிருக்கிறார்.

(வருவார்கள் வெல்வார்கள்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: karthikeyan.di@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்