பெண் இன்று

வாசகியரின் ஆரவாரத்தால் களைகட்டிய கடலூர்

க.ரமேஷ்

‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘பெண் இன்று’ சார்பில் மார்ச் 1 அன்று கடலூரில் நடைபெற்ற மகளிர் திருவிழாவில் ஏராளமான வாசகியர் பங்கேற்று கொண்டாடி மகிழ்ந்தனர்.

கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள புனித அன்னாள் பள்ளி (சிபிஎஸ்இ) வளாகத்தில் நடைபெற்ற மகளிர் திருவிழாவில் பேசிய கடலூர் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் தீபா, “சர்வதேச மகளிர் நாளைக் கொண்டாட ஒவ்வோர் ஆண்டும் ஒரு கருப்பொருளைச் சொல்வார்கள். இந்த ஆண்டு பெண்கள் சேமிப்பை அதிகப்படுத்த வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். எவ்வளவு சிறிய தொகையாக இருந்தாலும் பெண்கள் தங்களுக்கென்று சேமிக்கத் தொடங்க வேண்டும். கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் உண்டு. எனவே, குடும்பத்தில் ஆண் பிள்ளையை ஒரு மாதிரியாகவும் பெண் பிள்ளையை ஒரு மாதிரியாகவும் வளர்க்கக் கூடாது” என்றார். தன் பேச்சுக்கு நடுவில் கவிதைகளைச் சொல்லியும் பாடல்களைப் பாடியும் வாசகியரைக் கவர்ந்தார். தன்னை வளர்த்து ஆளாக்கிய தன் சித்தியை மேடைக்கு அழைத்துப் பெருமிதப்படுத்தியது வாசகியரை நெகிழச் செய்தது.

சிதம்பரம் அருள் நர்சிங் ஹோம் மகப்பேறு மருத்துவர் டாக்டர் பா. பவித்ரா மணிகண்டராஜன் பேசுகையில், “பெண்கள் ஆறு மாதத்திற்கு ஒருமுறை ரத்த சோகை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இதை நாம் சரியாகச் செய்யவில்லை என்றால் பல்வேறு நோய்களுக்கு ஆளாவோம். தினமும் ஆரோக்கியமான உணவைச் சாப்பிட வேண்டும். மனநலம் தெளிவாக இருக்க வேண்டும். தினந்தோறும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை மார்பகப் புற்றுநோய், கருப்பை மற்றும் கருப்பை வாய்ப் புற்றுநோய்க்கான பரிசோதனைகளைச் செய்துகொள்ள வேண்டும்” என்றவர், பெண்ணால் எல்லாம் முடியும் என்கிற உறுதிமொழியை வாசிக்க, கூட்டத்திலிருந்த அனைத்துப் பெண்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி வேதியியல் துறைத்தலைவர் முனைவர் க. காதம்பரி பேசுகையில், “இந்து தமிழ் திசை நாளிதழ் தொடங்கியதிலிருந்து தொடர்ந்து அதனுடன் பயணித்து வருகிறேன். இதில் வரும் செய்திகள் கண்ணியமான நடையில் வெளியிடப்படுகின்றன. பெண்களுக்குள்ள வலிமை ஆண்களுக்கு இல்லை. கடந்த காலத்தில் நமது பாட்டி புலியை முறத்தால் அடித்தார் என்று கூறுவார்கள் ஆனால், தற்போது ஒரு பெண் முழு நேரக் குடிகாரிடம் 3 பிள்ளைகளைப் பெற்று, அந்தப் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குவதே 10 புலிகளை அடித்து விரட்டுவதற்கு இணையான மனதைரியமாகும். பெண்கள் அனைவரும் கல்வி கற்க வேண்டும்” என்றார்.

கலைநிகழ்ச்சிகள்

முன்னதாக, கடலூர் செம்மண்டலம் பகுதியைச் சேர்ந்த சிறுமி மோகன சங்கரியின் பரத நாட்டியம் அனைவரையும் கவர்ந்தது. கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி மாணவியரின் நடனமும் மௌன நடிப்பும் சிந்திக்கத் தூண்டும் வகையில் அமைந்தன. பறையாட்டம் வாசகியரை உற்சாகப்படுத்தியது.

வுமன் ஆஃப் சப்ஸ்டன்ஸ்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் வட்டம், வடமூர் கிராமத்தைச் சேர்ந்த ராதா வாய்க்கால் பாசன சங்கத் தலைவர் ரங்கநாயகிக்கும், சிதம்பரம் காமாட்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கவரிங் நகை தொழில் செய்யும் இந்திராவுக்கும் உஜாலா லிக்விட் டிடர்ஜென்ட் ‘வுமன் ஆஃப் சப்ஸ்டன்ஸ்’ விருது வழங்கப்பட்டது. “20 வருடங்களுக்கு முன்பு என் கணவர் காலமானார். நான் சொந்த ஊரான வடமூருக்கு வந்துவிட்டேன். அப்போது என் தந்தை ஒரு ஆண் பிள்ளைக்கு எப்படி விவசாயத்தைக் கற்றுக் கொடுப்பாரோ அதேபோல் விவசாயத்தில் உள்ள நிறை குறைகளைக் கற்றுத் தந்தார். எனக்கு விவசாயத்தைப் பாடமாக எடுத்த என் தந்தைதான் எனக்கு விவசாயக் கடவுள்” என ரங்கநாயகி கண்கலங்கியது வாசகியரையும் கலங்கச் செய்தது.

போட்டியில் கலக்கிய பெண்கள்

வாசகியருக்கு பலூன் ஊதுதல், கயிறு இழுத்தல், பலூன் உடைத்தல், லெமன் அண்டு ஸ்பூன், ஃபேஷன் ஷோ எனப் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. வயது வேறுபாடின்றி அனைவரும் போட்டி போட்டுப் பங்கேற்று உடனுக்குடன் பரிசுகளைப் பெற்றனர். மூன்று பேருக்கு பம்பர் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியைச் சின்னத்திரை தொகுப்பாளினி தேவி கிருபா தொகுத்து வழங்கினார்.

கடலூர் மகளிர் திருவிழாவை உஜாலா நிறுவனத்துடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நடத்தியது. வடலூர் டிஆர்எம் சாந்தி பர்னிச்சர்ஸ், பாண்டி ராம் தங்கநகை மாளிகை, புதுச்சேரி கோல்டு பிரியம் சமையல் எண்ணெய், புதுச்சேரி எல்பி ஸ்டுடியோஸ், கடலூர் சூப்பர் டீ கபே, சூரியன் எப்எம், சென்னை கோபுரம் மஞ்சள் தூள் & குங்குமம் நிறுவனம், கடலூர் ஆனந்த பவன் ஓட்டல், டோம்ஸ் ஸ்டேஷனரி உள்ளிட்ட நிறுவனங்களும் நிகழ்ச்சியை இணைந்து வழங்கின.

விழாவில் கடலூர் புனித அன்னாள் பள்ளி (சிபிஎஸ்இ) முதல்வர் டாக்டர் ஆரோக்கிய மேரி வாசகியருக்கு மகளிர் நாள் வாழ்த்துக் கவிதை வாசித்தார். கடலூர் மாவட்டக் குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் இளங்கோவன், குழந்தைகள் உதவி எண் 1098 குறித்துப் பேசினார். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் மதிய உணவுடன் பரிசுகள் வழங்கப்பட்டன. வாசகியரின் ஆரவார நடனத்துடன் விழா இனிதே நிறைவடைந்தது.

SCROLL FOR NEXT