எங்கள் பகுதியில் இருக்கும் ஒரு குடும்பத்தில் மிகப்பெரிய சண்டை அந்தக் குடும்பத் தலைவரின் மனைவி வேறொரு திருமணம் செய்துகொண்டு போய்விட்டதால் அவர் தன்னுடைய பால்ய சிநேகிதியை மணந்துகொண்டார். அந்தப் பெண்ணும் ஏற்கெனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர்.
வதைக்கும் சொல்: அந்தக் குடும்பத் தலைவனின் சகோதரிகள், அக்காவின் கணவர் உள்ளிட்டோர் இந்தப் பெண்ணை எப்போதுமே அவளுடைய கற்பு குறித்த கெட்ட வார்த்தையைச் சொல்லி கூப்பிடுவார்கள். எப்படி அந்தப் பெண் இதையெல்லாம் சகித்துக்கொள்கிறார் என்று நான் பலமுறை யோசித்திருக்கிறேன். ஆனால், அவர் அதைப் பற்றித் துளியும் கவலைப்படாமல் அந்தக் குடும்பத் தலைவருடைய அம்மாவைக்கூட அவரது கடைசிக் காலத்தில் பார்த்துக்கொண்டார். ஆனால், அவர் தன் உடலை வியாபார நோக்கில் கையாள்கிறாள் என்று சில நாள்களுக்கு முன் அவர்கள் சொன்ன வார்த்தையைச் சகித்துக்கொள்ள முடியாமல் திரும்பப் பேச, அவர்கள் மீண்டும் மீண்டும் அதே வார்த்தையைச் சொல்லி அவரை வதைத்தார்கள், காயப்படுத்தினார்கள், அவமானப்படுத்தினார்கள்.
அந்தப் பெண்ணின் கணவர் அவரது பக்கம் நின்றால்கூட அந்த வார்த்தை எவ்வளவு காலத்துக்கு அந்தப் பெண்ணின் மனதைக் காயப்படுத்தி இருக்கும் என்று யோசிக்கிறேன். ஒரு பெண்ணைத் தரம் தாழ்த்த வேண்டும் என்றாலோ காயப்படுத்த வேண்டும் என்றாலோ அவளுடைய நடத்தை பற்றிய அந்த வார்த்தையைச் சொல்ல வேண்டும் என்கிற சிந்தனை எங்கிருந்து கிளை விட்டிருக்கக்கூடும்?
ஓர் ஆணை ஒருபோதும் இந்தச் சமூகம் இதுபோன்ற இழிசொற்களால் அழைத்ததே இல்லை. ஒருவரது வாழ்க்கைக்கு அடுத்தவர் நீதிபதியாகவும், விமர்சனகர்த்தாவாகவும் இருக்கிற சூழல்தான் இங்கே நிலவுகிறது. யார் எந்தப் பாதையைக் கடந்து வந்திருக்கிறார்கள், அதில் எத்தனை முள்கள் இருந்தன, அதை அவர்கள் எப்படித் தாங்கிக்கொண்டு பயணித்தார்கள் என்பதைப் பற்றி எல்லாம் யாரும் கவலைப்படுவதில்லை.
சமூகத்தின் மனநிலை: தன் வீட்டுப் பெண்கள் மற்ற ஆண்களிடம் பேசினால் அது ‘இயல்பான பேச்சு’; ஆனால், தனக்குப் பிடிக்காத பெண் இன்னொருவரோடு பேசினால் அது ‘மோசமான தொடர்பு’. இப்படியான ஒரு மனநிலையில் நம் சமூகம் பல காலமாகச் சிக்கித் தவிக்கிறது. இதற்கு வேறொரு வேர்க்காரணமும் உண்டு. குறிப்பாக எல்லாரது மனங்களிலும் நிலம் சார்ந்த ஒரு பிடிமானம் அதிகம். குடும்பங்களில் இரண்டு விதமான பிரச்சினைகள் உள்ளன. ஒன்று சொத்து - நிலம் குறித்த பிரச்சினை. இரண்டாவது பெரும்பாலும் மாமியார் - மருமகள் பிரச்சினை. இரண்டுமே ஒன்றோடு மற்றொன்று பிணைந்து மூன்றாம் நிலையிலான ஒரு பிரச்சினையும் இங்கே இருக்கிறது. இது எல்லாவற்றிற்கும் ஒட்டுமொத்தமான குற்றச்சாட்டில் அதிகமாக இடம்பெறும் ஓர் அவச்சொல், பெண்களின் கற்பு குறித்துப் பேசப்படும் வார்த்தையே.
நான் மேலே குறிப்பிட்ட குடும்பத்தில் தங்கள் அண்ணனின் சொத்தில் அவரை மணந்து கொண்டு வந்திருக்கிற பெண்ணுக்கும் உரிமை வந்துவிடும் என்கிற பயம்தான் அந்தப் பெண்ணை அவமானப்படுத்தும் செயலில் அவர்களை இறங்க வைத்தது. இப்படிக் குரூரமாகப் பேசுவது கொலையைக் காட்டிலும் மோசமானது. இதுபோன்ற பேச்சுக்குச் சட்டப்படி தண்டனை உண்டு. ஆனால், இப்படி ஒரு சட்டம் இருப்பதே பலருக்குத் தெரியாது.
நான் ஒரு தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றிய போது ‘டாஸ்மாக்’ பற்றிய ஆவணப்படத்துக்காக ஒரு பெண்ணிடம் பேசினேன். தன் கணவன் குடித்துவிட்டு வந்து தன்னை என்னென்ன அவப்பெயரால் அழைப்பார் என்று அவர் சொன்னார். அந்தச் சொல்லைக் கேட்டுக்கேட்டுத் தன் பெயரே மறந்துவிட்டதாகச் சொல்லி பெருமூச்சுவிட்டார். அந்தப் பெருமூச்சு அவருடைய கணவனின் ஆன்மாவை ஊடுருவி கேள்வி கேட்பதாக இருந்தது. இனி யாராவது வேறொரு பெண்ணைக் கெட்ட வார்த்தையால் சிதிலமடையச் செய்து கொண்டிருந்தால் தயவுசெய்து அதைக் கடந்து போய் விடாதீர்கள். சட்டத்தின் துணையோடு அவர்களால் அதை வென்றெடுக்க முடியும் என்று மட்டும் சொல்லுங்கள்.
(உரையாடுவோம் )